Sunday, 15 December 2024

கிறிஸ்து பிறப்பு நவநாள்

 (திருப்பலியில் பயன்படுத்தப்படும் கிறிஸ்து பிறப்பு நவநாள்)

கிறிஸ்து பிறப்பு பெருவிழா நவநாள் வழிபாடு

(டிசம்பர் 16 முதல் 24 வரை)

(மாலைத் திருப்புகழ்மாலையாக இருப்பின் பின்வருமாறு தொடங்கும்)

முதல்: இறைவா எமக்குத் துணைபுரிய வந்தருளும்
எல்: ஆண்டவரே எனக்குத் துணைபுரிய விரைந்து வந்தருளும்.
முதல்: தந்தைக்கும் மகனுக்கும்... 
எல்: தொடக்கத்தில் இருந்ததுபோல...

பாடல்
கருணைக்கடலே வா கதித்த தயாபரா வா
சுருதி மறையோர்க்கு சுடரொளியே வா

1. ஆதோனாயி ஆனந்தமே 
ஆவலுடன் காத்திருக்கும் அடியோர்களைச் சந்திக்க

2. இம்மானுவேல் இயேசு நாதா
எங்கள் பாவ தோசம் தீர ஏன் இன்னும் வர தாமதம்

3. பேய்மயக்கும் பாவ வழிப்
பீடையினால் வாடும் உந்தன் பிள்ளைகளின் மேலிரங்கி

4. பூபதியாம் தாவீதனின் 
பூங்கொடியே பூபதியே முன்னோர்களை நல்லோராக்க


(மாலைத் திருப்புகழ்மாலையாக இருப்பின் பின்வருவன முதல் திருப்பாடலாகவும் / திருப்பலியாக இருப்பின் பின்வரும் பாடல் வருகைப் பாடலாகவும் இருக்கும்)

அழைப்புத் திருப்பாடல்

தொடக்கம்: (நிற்கவும்)
இறைவாக்கினர்களின் பாடல்

1. மகளே சீயோன் அகமகிழ்வாய். / மகளே எருசலேம் பூரிப்படைவாய்.* / இதோ, மீட்பர்  வருவார். / அந்நாளில் பேரொளி வீசும். / மலைகள் இன்பம் துளிர்க்கும்.** / குன்றுகள் பாலும் தேனும் பொழியும். / ஏனெனில் மாபெரும் இறைவாக்கினர் வருவார். / அவர்  எருசலேமைச் சீராக்குவார். (செக் 9 : 9 / எசா 62 : 1-5 / திபா 72 : 3)

2. இதோ, தாவீதின் குலத்தினின்று / மனுமகன் வருவார்.* / அவர்  சிம்மாசனம் ஏறுவதைக் காண்பீர்.^ / அந்நாளில் நீங்கள் ஆனந்தம் கொள்வீர்கள்.  (திபா 2 : 7 / திப 13 : 33 / எபி 1 : 5 / எபி 5 : 5)

3. இதோ, நம் காவலரான ஆண்டவர்  வருவார். / அவர் சிரமதில் முடி சூடிய இஸ்ராயேலின் அரசர்.* / ஒரு கடல் முதல் மறுகடல்வரை, / பூமியின் ஒரு கோடி முதல் மறுகோடி வரை / யாவையும் அடக்கி அரசாளுவார். (செக் 9 : 9 / செக் 9 : 10 / திபா 72 : 8)

4. இதோ, ஆண்டவர்  தோன்றுவார். / அவர்  சொல்லோ பொய்யாகா* / அவர்  தாமதம் செய்தாலும் எதிர்பாருங்கள்.^ / ஏனெனில் தாமதிக்காமல் நிச்சயம் வருவார். (அபக் 2 : 3)

5. அன்று ஆட்டுத்தோல்மீது பெய்த பனிபோல் ஆண்டவர்  இறங்குவார்.* / அந்நாளில் நீதியும் அமைதியும் செழிக்கும். / பூமி ஆளும் மன்னர் எல்லோரும் அவரை வணங்குவர்.** மனிதர் எல்லோரும் / போற்றிப் பணிந்திடுவர். (நீத 6 : 37)

6. நமக்கென ஒரு குழந்தை பிறப்பார். / அவரை வல்லக் கடவுள் என்பர்.* / தம்முடைய தந்தை தாவீதின் அரியணை ஏறி அமர்ந்து / அவர்  செங்கோல் செலுத்துவார். ** / அவரது வல்லமையை / அவர்  தோளிலே காண்பீர்கள்.

7. உன்னத கடவுளின் நகரமான பெத்லகேமே, / உன்னிடமிருந்தே இஸ்ராயேலின் அதிபர் தோன்றுவார்.* / அவர்  வருகை என்றென்றுமுள நாள்களின் துவக்கத்திலிருந்தது போலாகும்.^ / அவரை உலகெல்லாம் போற்றிப் புகழும்.** / அவர்  வருங்கால் நம் நாட்டில் / அமைதியே நிலைக்கும். (மீக் 5 : 2, 5அ)

(டிசம்பர்  24, இயேசு பாலனின் பிறப்புக்கு முந்தின நாளில் தொடர்ந்து பாடவேண்டியது.)

8. நாளை பூமியில் பாவம் அழிந்தே தீரும். / உலக மீட்பர்  நம்மை / அரசாளுவார் பாரீர். (எசா 40:10)

9. அருகில் மீட்பராம் இறைவன் வந்துள்ளார். / வாரும் ஆராதிப்போமே!


திருப்பலி ஆரம்பம்
அ.ப. : தந்தை மகன் தூய ஆவியின்........ ஆண்டவரே இரக்கமாயிரும்

(மாலைத் திருப்புகழ்மாலையில் இத்திருகுழும மன்றாட்டு இறுதியாக சொல்லப்படும்)

திருக்குழும மன்றாட்டுக்கள்

டிசம்பர் 16 

இறைவா, உம் ஒரே திருமகன் வழியாக நீர் எங்களைப் புதுப் படைப்பாக்கியுள்ளீர்; உம் இரக்கச் செயல்கள், உம் திருமகனின் வருகை ஆகியவற்றை முன்னிட்டு எங்களைக் கனிவுடன் கண்ணோக்கியருளும்; எங்கள் பழைய வாழ்வின் மாசுகள் அனைத்திலிருந்தும் எங்களைத் தூய்மைப்படுத்துவீராக. உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்.


டிசம்பர் 17

இறைவா, மனித இயல்பை உண்டாக்கியவரும் மீட்டவரும் நீரே, என்றும் கன்னியான மரியாவின் வயிற்றில் உம் வார்த்தை மனித உடல் எடுக்க விரும்பினீர் எங்கள் வேண்டல்களைக் கனிவுடன் கண்ணோக்கி உம் ஒரே திருமகன் எங்கள் மனித இயல்பை ஏற்றதன் வழியாக அவரது இறை இயல்பில் பங்குகொள்ள எங்களைத் தகுதியுள்ளவர்கள் ஆக்குவாராக. உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்.


டிசம்பர் 18

எல்லாம் வல்ல இறைவா, பழைய அடிமைத்தனத்தினால் விளைந்த பாவச் சுமையால் நாங்கள் அழுத்தப்படுகின்றோம்; நாங்கள் எதிர்பார்த்திருக்கும் உம் ஒரே திருமகனின் புதுமையான பிறப்பால் விடுதலை பெற அருள்புரிவீராக. உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்.


டிசம்பர் 19

இறைவா, புனித கன்னியின் மகப்பேறு வழியாக உமது மாட்சியின் பேரொளியை உலகுக்கு வெளிப்படுத்தத் திருவுளமானீNர் அதனால் மனிதர் ஆன இவ்வியத்தகு மறைநிகழ்வை முழுமையான நம்பிக்கையோடு தொழுது, இறைப்பற்றுதலுடன் என்றும் கொண்டாட எங்களுக்கு அருள்புரிவீராக. உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்.


டிசம்பர் 20

நிலையான மாண்புள்ள இறைவா, விண்ணகத் தூதரின் அறிவிப்பால் மாசற்ற கன்னி சொல்லற்கரிய உமது வார்த்தையை ஏற்றுக்கொண்டார்; இறை இயல்பின் இல்லமாகி, தூய ஆவியாரின் ஒளியால் நிரப்பப்பட்ட அவரது முன்மாதிரியால் நாங்கள் உமது திருவுளத்தைப் பணிவுடன் பற்றிக்கொள்ள ஆற்றல் பெற அருள்புரிவீராக. உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்.


டிசம்பர் 21

ஆண்டவரே, உம் மக்களின் மன்றாட்டுகளை இரக்கமுடன் கேட்டருள உம்மை வேண்டுகின்றோம்: அதனால் எங்கள் மனித உடல் எடுத்து வரும் உம் ஒரே திருமகனின் வருகையில் மகிழ்வுறும் அவர்கள் அவர் தமது மாட்சியில் வரும்போது நிலைவாழ்வின் பரிசைப் பெற்றுக்கொள்வார்களாக. உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்.


டிசம்பர் 22

இறைவா, சாவுக்கு உட்பட்ட மனிதரைக் கண்ணுற்று உம் ஒரே திருமகனின் வருகையால் அவர்களை மீட்கத் திருவுளம் கொண்ட உம்மை நாங்கள் வேண்டுகின்றோம்: அவர் மனிதர் ஆனதைத் தாழ்ச்சிமிகு இறைப்பற்றுடன் அறிக்கையிடும் அவர்கள் மீட்பராகிய அவருடன் தோழமை கொள்ளவும் தகுதி பெறுவார்களாக. உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்.


டிசம்பர் 23

என்றென்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா, உம் திருமகன் மனிதர் ஆன பிறப்பு விழா நெருங்கி வருவதை உணர்ந்து உம்மை வேண்டுகின்றோம்: அதனால் கன்னி மரியாவிடமிருந்து மனிதராய்ப் பிறந்து எம்மிடையே குடி கொள்ளத் திருவுளமான எங்கள் ஆண்டவரும் இயேசு கிறிஸ்துவுமான வார்த்தை, உம் தகுதியற்ற அடியார்களாகிய எங்களுக்கு இரக்கத்தைத் தருவாராக. உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்.


டிசம்பர் 24

ஆண்டவரே இயேசுவே, காலம் தாழ்த்தாது விரைந்து வர உம்மை வேண்டுகின்றோம்: அதனால் உமது பரிவிரக்கத்தில் நம்பிக்கை கொள்வோர், உமது வருகையின் ஆறுதலால் தேற்றப்படுவார்களாக. தந்தையாகிய இறைவனோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்.


இறைவார்த்தை வழிபாடு

முதல் வாசகம்: (பழைய ஏற்பாட்டிலிருந்து)

நாள் பழைய ஏற்பாட்டு வாசகம் முதல் வாசகம்
டிசம்பர் 16 எசா 35: 1-4
டிசம்பர் 17 எசா 40: 3-5 தொ.நூ 49: 1-2, 8-10
டிசம்பர் 18 எசா 9: 1-6 எரே 23: 5-8
டிசம்பர் 19 எசா 11: 1-6, 9 நீத 13: 2-7, 24-25
டிசம்பர் 20 எசா 61: 1-4 எசா 7: 10 - 14
டிசம்பர் 21 எசா 60: 1-5 இபா 2:8-14 / செப் 3: 14-17
டிசம்பர் 22 எசா 2: 2-3 1 சாமு 1: 24-28
டிசம்பர் 23 எசா 40: 9-11 மலா 3: 1-4, 4: 5-6
டிசம்பர் 24 எசா 7: 13-14 2 சாமு 7: 1-5, 8ஆ, 12-16

(மாலைத் திருப்புகழ்மாலையாக இருப்பின் பின்வருவன இரண்டாவது திருப்பாடலாகவும் / திருப்பலியாக இருப்பின் பின்வரும் பாடல் தியானப் பாடலாகவும் இருக்கும்)

பதிலுரைப் பாடல்: (நிற்கவும்)

1. வானமே மகிழ்வாய், பூமியே பூரிப்படைவாய். / மலைகளே ஆனந்தம் கொள்வீர்கள்.

2. மலைகள் இன்பம் பொழிவனவாக. / குன்றுகள் நீதியைத் தருவனவாக.

3. ஏனெனில் வருவார் நம் ஆண்டவர் / தம் எளியோர் மேல் இரக்கம் கொள்வார்.

4. வானங்களே! மேல் நின்று நீதிமானைப் பனிபோல் பெய்யுங்கள். / மேகங்களும் நீதிமானைப் பொழிக! / மாநிலம் திறந்து மீட்பரைப் பிறக்கச் செய்க!

5. ஆண்டவா! எங்களை நினைவு கூரும். / உமது மீட்புடன் எம்மைக் காண வாரும்.

6. ஆண்டவா! எங்கள் மேல் கருணைக் காட்டி / எம்மை ஈடேற்றும் சுவாமி.

7. உலகாளும் செம்மறிப்புருவையே / பாலைநிலப் பாறையினின்று / சீயோன் மகளின் மலைக்கனுப்பிடும் சுவாமி.

8. வல்லக் கடவுளாகிய ஆண்டவரே! / எம்மை விடுவிக்க வாரும். / உம் திருமுகத்தைக் காட்டும். / நாங்கள் ஈடேற்றம் அடைவோம்.

9. வாரும் ஆண்டவரே! / அமைதியில் எம்மைக் காண / உத்தம உள்ளமுடன் உம்மைக் கண்டுகளிப்போம்.

10. பூவுலகில் உம் திருவழிகளையும், / எல்லா நாட்டினர் மத்தியில் உமது மீட்பையும் கண்டறிவோம்.

11. வாரும் உமது வல்லமை எல்லாம் கொண்டு / எம்மை மீட்டுக் காத்திடும் சுவாமி.

12. ஆண்டவா காலதாமதம் செய்யாமல் வாரும். / உம் மக்களின் பாவக் கட்டவிழ்த்தருளும்.

13. வானைப் பிளந்து எந்நாள் எந்நாள் இறங்கி வருவீரோ, / உம் கனி முகத்தைக் கண்டாலோ, / மலைகளும் உருகிப் பாயுமே.

14. வானோர்க்கு மேல் வீற்றிருக்கும் இறைவா! / வாரும் உம் திருமுகத்தை எமக்குக் காண்பித்தருள்வீரே.

15. தந்தைக்கும், மகனுக்கும், தூய ஆவியாருக்கும் மாட்சிமை உண்டாகுக.

16. தொடக்கத்தில் இருந்ததுபோல் / இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக.


திருப்பலி தொடர்ந்தால் - நற்செய்திக்கும் முன் வாழ்த்தொலி பாடப்படும்

நற்கருணை ஆசீர் எனில் நற்கருணையை காட்சிப்படுத்துதல் நிகழும்


(மாலைத் திருப்புகழ்மாலையில் புதிய ஏற்பாட்டு வாசகமும் திருப்பலியில் நற்செய்தி வாசகமும் வாசிக்கப்படும்)

நற்செய்தி வாசகம்

நாள் புதிய ஏற்பாட்டு வாசகம் நற்செய்தி வாசகம்
டிசம்பர் 16 மத்தேயு 21:28-32
டிசம்பர் 17 1 தெச 5: 23-24 மத்தேயு 1:1-17
டிசம்பர் 18 பிலி 4: 4-5 மத்தேயு 1:18-24
டிசம்பர் 19 பிலி 3: 20-21 லூக்கா 1:5-25
டிசம்பர் 20 1 கொரி 1: 7-9 லூக்கா 1:26-38
டிசம்பர் 21 1 கொரி 4:5 லூக்கா 1:39-45
டிசம்பர் 22 யாக் 5: 7-8, 9அ லூக்கா 1:46-56
டிசம்பர் 23 2 பேதுரு 3: 8-9 லூக்கா 1:57-66
டிசம்பர் 24 கலா 4: 4-5 லூக்கா 7:67-69

 (வாசகத்திற்குப் பின் சிறிய விளக்கவுரை அல்லது மறையுரை வழங்கலாம்)

மரியாவின் பாடலுக்கான முன்மொழிகள்




இறை அன்னையின் புகழ் கீதம்

(புதிய வடிவில்)


ஆண்டவரை எனது உள்ளம்
போற்றிப் பெருமைப் படுத்துகின்றது.
என் மீட்பராம் கடவுளை நினைத்து
எனது மனம் பேருவகை கொள்கின்றது.

ஏனெனில் அவர் தம் அடிமையின் தாழ்நிலையைக் கண்ணோக்கினார்.
இதுமுதல் எல்லாத் தலைமுறையினரும் என்னைப் பேறுபெற்றவர் என்பர்.
ஏனெனில் வல்லவராம் கடவுள் எனக்கு அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார்.
தூயவர் என்பதே அவரது பெயராகும்.

அவருக்கு அஞ்சி நடப்போருக்குத் தலைமுறை தலைமுறையாக
அவர் இரக்கம் காட்டி வருகிறார்.
அவர் தம் தோள் வலிமையைக் காட்டியுள்ளார்;.
உள்ளத்தில் செருக்குடன் சிந்திப்போரைச் சிதறடித்து வருகிறார்.

வலியோரை அரியணையினின்று தூக்கி எறிந்துள்ளார்
தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகிறார்.
பசித்தோரை நலன்களால் நிரப்பியுள்ளார்;
செல்வரை வெறுங்கையராய் அனுப்பிவிடுகிறார்.

மூதாதையருக்கு உரைத்தபடியே அவர் ஆபிரகாமையும்
அவர்தம் வழி மரபினரையும்
என்றென்றும் இரக்கத்தோடு நினைவில் கொண்டுள்ளார்.
தம் ஊழியராகிய இஸ்ரயேலுக்குத் துணையாக இருந்து வருகிறார்.

தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் 
மாட்சிமை உண்டாகுக.
தொடக்கத்திலே இருந்தது போல இப்பொழுதும் எப்பொழுதும்
என்றென்றும் இருப்பதாக. ஆமென்.


(பழைய வடிவில்)

என் ஆத்துமா ஆண்டவரைப் புகழ்ந்து போற்றுகின்றது

எந்தன் மீட்பராம் கடவுள் தன்னில் என் உள்ளம் பூரித்தது.


ஏனென்றால் அடியாளின் தாழ்மையை கண்ணோக்கினார்

இதோ இனி எல்லாத் தலைமுறைகளும் என்னைப் பாக்கியவதி என்பார்;.

ஏனென்றால் வல்லவர் என்னில் மாண்புள்ளன  செய்தார்.

புனிதம் அவரது நாமம்.


அவர் தமக்கு அஞ்சிடுவோர் மீது 

தலைமுறை தலைமுறையாக தயை கூர்வார்.

தம்முடைய கை வலிமை காட்டி

அகம் பாவிகளை சிதறச் செய்தார்.


வலியோரை ஆட்சிப் பீடத்தினின்று தள்ளி

எளியோரை மேன்மையில் உயர்த்தினார்;.

பசித்தோரை நன்மைகளால் நிரப்பினார்

செல்வந்தரை வெறும் கையராய் அனுப்பினார்;.


தன் தயவை நினைந்து

இஸ்ராயேலை தம் தாசனாக ஏற்றுக்கொண்டார்.

எந்நாளுமே நம் முன்னோர் ஆபிரகாம்

அன்னார் சந்ததிக்கும் வாக்களித்தவாறு இதாகும்.


தந்தை, தனயன் தூய ஆவியானவர்

மூவர்க்குமே ஸ்தோத்திரம் உண்டாகுக

ஆதியில் இருந்ததுபோல இன்றும் என்றும்

முடிவில்லா காலமும் ஆகுக. ஆமென்.

மன்றாட்டுகள் 

இறைமக்களின் மன்றாட்டுகள் 1 (டிசம்பர் 16) 

அ.ப.: அன்பார்ந்த சகோதர சகோதரிகளே! அன்று கன்னி மரியாவின் திருவயிற்றில், தம் ஒரே மகனாம் மெசியா என்னும் இயேசு பிறக்கத் திருவுளமான தந்தைக் கடவுள், இன்று நம் உள்ளங்களில் அவரைப் பிறக்கச் செய்யுமாறு உருக்கமாக மன்றாடுவோமாக.

1. எல்லாம் வல்ல தந்தையே இறைவா! உமது திருமகனின் மறு வருகைக்காக, எங்கள் உள்ளங்களைத் தயார் செய்து வழிநடத்தும். எம் திருத்தந்தை, ஆயர்கள், அருள்பணியாளர்களின் பணியில் அவர்கள் வெற்றி காண வரம் அருள உம்மை மன்றாடுகின்றோம்.

எல்: ஆண்டவரே! எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.


2. அன்பே உருவான தந்தையே இறைவா! உம் திருமகன் இவ்வுலகிற்கு கொண்டுவந்த ஞான ஒளியை எங்கள் இந்திய நாட்டுத் தலைவர்களின் உள்ளங்களிலும் சுடராகப் பாய்ச்சியருள உம்மை மன்றாடுகின்றோம்.

3. தாயும் தந்தையுமான இறைவா! உமது திருமகனின் முதல் வருகைக்காக, இவ்வுலகில் தனது விருப்பத்தை முழுமையாக உமது விருப்பத்திற்கு விட்டுக்கொடுத்து அடிபணிந்த கன்னி மரியாவைப் போல, நாங்களும் எப்போதும் உமது விருப்பத்தை நிறைவேற்றும் மனத்தெளிவை எமக்கு அருளிட, உம்மை மன்றாடுகின்றோம்.

4. தாழ்ந்தோரை உயர்த்தும் இரக்கம் நிறைந்த இறைவா! உமது திருமகனின் இவ்வுலக வருகையை வரவேற்று முதன்முதலில் உலகிற்கு அறிவித்த கன்னி மரியாவைப் போல, நாங்களும் எங்கள் திருவருகைக் காலத்தில் நற்செய்தியை அறிவிக்கவும், பிறரன்பு என்ற புண்ணியத்தில் நாங்கள் வளரவும் அருள உம்மை மன்றாடுகின்றோம்.

5. இறைவா! உலக மக்கள் யாவரும் உம் திருமகனையே தங்கள் ஆண்டவராகவும், மீட்பராகவும் ஏற்றுக்கொள்ளும்படியாக உம்மை மன்றாடுகின்றோம்.

(நமது விண்ணப்பங்களை அமைதியாக எடுத்துரைப்போம்.)

அ.ப.: நம் வானகத் தந்தையை நோக்கி ஜெபிப்போம். 

விண்ணுலகில் இருக்கிற...


அ.ப.: மன்றாடுவோமாக

தந்தையே இறைவா! உம் அடியார்களாகிய நாங்கள் அனைவரும், எங்கள் வாழ்வின் இன்பங்களிலும் துன்பங்களிலும், விவேகமுள்ள கன்னியரைப் போல விழித்திருந்து உம் திருமகன் இயேசுவை வரவேற்க வரம் அருள உம்மை மன்றாடுகின்றோம்.

எல்: ஆமென்.



இறைமக்களின் மன்றாட்டுகள் 2 (டிசம்பர் 17) 

அ.ப.: அன்புள்ளம் கொண்ட சகோதர சகோதரிகளே! வாழ்வில் எதிர்கொள்ளும் நோய், நொடி, பசி போன்ற விபத்துக்களினின்று தங்களை விடுவிக்க, மகிழ்வுடன் வாழ வைக்க வலிமையுள்ள என உலக மக்கள் நாலாயிரம் வருடங்களாக எதிர்நோக்கியிருந்தனர். மீட்பரின் மறுவருகைக்காகக் காத்திருக்கும் நாமும் நம் உள்ளத்திலும் இல்லத்திலும் அவர் மீட்பராக வரவேண்டும் என் மன்றாடிக் கேட்போம்.


1. ஆண்டவரே இயேசுவே! அன்று கன்னிமரியா வயிற்றில் சிறு குழந்தையாக உருவாகத் திருவுளம் கொண்டீரே. உமது மறு வருகைக்காக காத்திருக்கும் எங்கள் மனத்திலும் மீட்பராக வரவேண்டுமென உம்மை மன்றாடுகின்றோம்.

எல்: வாரும்,  ஆண்டவராகிய இயேசுவே! வாரும்.


2. 'என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்?' என அன்று எலிசபெத் மகிழ்ந்து, இயேசுவே உம்மை வரவேற்றாரே! தகுதியற்றவர் என எங்களைத் தள்ளாமல் எங்கள் வீடுகளுக்கும், இயேசுவே நீர் எழுந்து வர வேண்டுமென உம்மை மன்றாடுகின்றோம்.

3. ஆண்டவரே இயேசுவே! கன்னமரியாவுடன் சேர்ந்து நாங்களும் உம்மைப் போற்றிப் பேருவகை கொள்ள எங்கள் நாட்டு அரசியல் தலைவர்கள் உள்ளத்திலும் நீர் எழுந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.

4. குழந்தை வடிவில் வந்த கடவுளே, இயேசுவே! உமது வருகையால் மாபெரும் மகிழ்ச்சியூட்டும் நல்வாழ்வை இடையர்கள் பெற்றனர். இந்த திருவருகைக் காலத்தில் காத்திருக்கும் எம் பங்கு மக்கள் மத்தியில் உமது மகிழ்வான வாழ்வு மலர நீர் பிறக்க வேண்டுமென உம்மை மன்றாடுகின்றோம்.

5. அன்புத் தந்தையே இறைவா! உம் திருமகன் மனிதராகப் பிறந்ததால் இடையர்கள், ஏழை எளிய மக்கள் மற்றும் எல்லோருமே விடுதலை வாழ்வு – மகிழ்ச்சியின் வாழ்வு பெற்றனர். எங்கள் உள்ளத்தில் இயேசு குழந்தையாகப் பிறக்க எளிய மனத்தை நாங்கள் பெற்றிட உமது சிறப்பான உதவியைத் தர வேண்டுமென உம்மை மன்றாடுகின்றோம்.

(நமது விண்ணப்பங்களை அமைதியாக எடுத்துரைப்போம்)

அ.ப.: விண்ணரசின் வருகையை ஆவலுடன் எதிர்நோக்கும் நாம் பணிந்து சொல்லுவோம்.

விண்ணுலகில் இருக்கிற...


அ.ப.: மன்றாடுவோமாக

என்றும் வாழும் எல்லாம் வல்ல இறைவா! உமது திருமகனின் வருகைக்கு எங்கள் ஆன்மாவை தயார் செய்து, அவர் தரவிருக்கும் வரங்களை மிகுதியாய் பெற வேண்டுமென எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

எல்: ஆமென்.


இறைமக்களின் மன்றாட்டுகள் 3 (டிசம்பர் 18) 

அ.ப.: அன்பார்ந்த சகோதர சகோதரிகளே! நம் ஆண்டவருடைய வருகைக்காகக் காத்திருக்கும் நாம் நமது மன்றாட்டுக்களை பரம தந்தையிடம் சமர்ப்பிப்போம்.


1. ஆண்டவரே இயேசுவே! உமது முதல் வருகைக்கு மக்களைத் தயாரித்த புனித திருமுழுக்கு யோவானை அடியொற்றி, உமது மறு வருகைக்காகக் காத்திருக்கும் எங்கள் உள்ளங்களை தக்கபடி தயாரிக்கும் எம் திருத்தந்தை, ஆயர்கள், அருள்பணியாளர்கள் தங்கள் பணியில் வெற்றி பெற்றிட உம்மை மன்றாடுகிறோம்.

எல்: வந்தருளும் ஆண்டவரே! எழுந்தே வந்தருளும்.


2. மனித மனங்களை அறிந்து ஆளுகிற இயேசுவே! எங்கள் உள்ளங்களில் உள்ள அகங்காரம் என்ற மலைகளைத் தாழ்த்தி, தாழ்வு மனம் என்ற பள்ளங்களை நிறைவு செய்யவும், நீரே எங்களை வழிநடத்திட வரவேண்டும் எனவும் உம்மை மன்றாடுகிறோம்.

3. நன்மையின் ஊற்றே இறைவா! நாங்கள் நற்கனி தரும் மரம்போல், உமது திரு அவையின் தோட்டத்தில் கனிதரும் மரமாகத் திகழவும், கனிதராத மரங்களுக்கு நாங்கள் எருவிட்டு, நீர்பாய்ச்சி மறைக்கல்வி வழியாகக் கனிதரும் மரங்களாக மாற்றவும் நீர் துணை செய்ய வேண்டுமென உம்மை மன்றாடுகின்றோம்.

4. ஒளியாக வந்து உலகை உய்வித்து ஒளிர்விக்கும் இயேசுவே! உலகின் ஒளி நீர்தாம் என்பதை உலகிற்கு அறிவித்த புனித திருமுழுக்கு யோவானைப் போல நாங்களும் இந்த திருவருகைக் காலத்துக்கேற்ற சிறு சிறு தவமுயற்சிகளை மேற்கொள்ள எம் உடனிருக்க உம்மை மன்றாடுகின்றோம்.

5. வாழ்வின் வழிகாட்டும் விண்மீனே ஆண்டவரே இறைவா! புனித திருமுழுக்கு யோவானைப் போல நாங்களும் ஆண்டவர் இயேசுவின் முன்னோடிகளாகத் திகழவும் உற்சாகமாக நாங்கள் மறைக்கல்வி கற்கவும், கற்பிக்கவும் வரம் தாரும்.

(நமது விண்ணப்பங்களை அமைதியாக எடுத்துரைப்போம்.)

அ.ப.: நம் விண்ணப்பங்களை இரக்கம் மிகுந்த நம் மீட்பரின் சொற்களில் மன்றாடுவோம்.

விண்ணுலகில் இருக்கிற...


அ.ப.: மன்றாடுவோமாக

என்றும் வாழும் எல்லாம் வல்ல இறைவா! அனைருக்கும் மீட்பளிக்கிற நீர் எவரும் அழிவுற விரும்புவதில்லை. உம் மக்களின் வேண்டுதலுக்கு செவி சாய்த்தருளும். உமது பராமரிப்பினால் உலகில் அமைதி நிலவுவதாக. உமது திரு அவையும் அமைதியுடன் வாழ்ந்து பக்தியில் சிறந்தோங்குவதாக. எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

எல்: ஆமென்.


இறைமக்களின் மன்றாட்டுகள் 4 (டிசம்பர் 19) 

அ.ப.: அன்புள்ளம் கொண்ட சகோதர சகோதரிகளே! பாவ இருள்சூழ் உலகில், வாழ்வு தரும் ஒளியாக நம் ஆண்டவர் இயேசு வந்தார். உலகு  அந்த ஒளியை ஏற்றுக்கொள்ள நம் தந்தையிடம் மன்றாடிக் கேட்போம். 


1. இருள் பரவியிருந்த இவ்வுலகின்மீது, உலகத் தொடக்கத்திலேயே ஒளியாக முதன்முதலில் தோன்றிய இயேசுவே! எங்கள் மத்தியில் இன்றும் இருளாக சூழ்ந்திருக்கும் அறியாமை, பிடிவாதம் என்ற தீமைகளை அகற்ற வந்தருளும் ஆண்டவரே.

எல்: ஒளியாய்ப் பிறந்தவனே! வழி என மொழிந்தவனே! எழுவாய் எம் வாழ்வினிலே!


2. அருளும் உண்மையும் நிறைந்து விளங்கும் இயேசுவே! நீர் பெத்லகேமில் குழந்தையாக வந்து உதித்த போது, அதிசய விண்மீன் உமது ஒளிளை உலகிற்கு எடுத்துக்காட்டியது. கீழ்த்திசை ஞானிகள் அதைப் பற்றி அறிய, உணர முயற்சிகளை மேற்கொண்டது போல நாங்களும் முயன்று உமது ஒளியில் வாழ வரம் தரவ வந்தருளும் ஆண்டவரே.

3. பொறுமையின் சிகரமே இயேசுவே! உமது ஒளி உலகெங்கும் பரவிட பல பயணங்களை மேற்கொள்ளும் எம் திருத்தந்தைக்கும், அவருடன் ஒத்துழைக்கும் ஆயர்களுக்கும் உமது ஒளியில் நடக்க உயர் ஞானத்தையும், வெற்றி காண பொறுமையையும் தந்திட எழுந்து வாரும்; ஆண்டவரே.

4. கடவுள் தன்மையை விட்டுக் கொடுத்து மனிதவுரு எடுத்து வந்த இயேசுவே! தீமையை வென்றிட பொறுமையையும் கீழ்ப்படிதலையும் கடைப்பிடித்த புனித யோசேப்பைப்போல நாங்கள் கீழ்ப்படிந்து இறைத்திருவுளத்தை நிறைவேற்ற வேண்டிய பொறுமையை எங்களுக்கும் அளித்திட எழுந்து வாரும் ஆண்டவரே.

5. அன்பே உருவான தந்தையே இறைவா! ஒளியாக நீர் இவ்வுலகிற்கு அனுப்பிய உம் திருமகன் இயேசுவின் ஒளியில் வாழ்ந்து நிலைவாழ்வு பெற எம் திருவருகைக் கால முயற்சிகளை ஏற்றருளும் ஆண்டவரே.

 (நமது விண்ணப்பங்களை அமைதியாக எடுத்துரைப்போம்.)

அ.ப.: நம் விண்ணப்பங்களுக்கு அடித்தளமிட்டு நம் மீட்பர் தந்த இறைவேண்டலை கூறுவோம்.

விண்ணுலகில் இருக்கிற...

 

அ.ப.: மன்றாடுவோடுமாக

என்றும் வாழும் எல்லாம் வல்ல இறைவா! உண்மையான மகிழ்ச்சியைத் தாரும் தந்தையே, வரவிருக்கும் கிறிஸ்மஸ் விழாவை பெரும் மகிழ்வோடு கொண்டாட வேண்டிய தூய உள்ளத்தைத் தருமாறு எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

எல்: ஆமென்.


இறைமக்களின் மன்றாட்டுகள் 5 (டிசம்பர் 20)

அ.ப.: அன்புள்ளம் கொண்ட சகோதர சகோதரிகளே! கிறிஸ்து பிறப்பு விழாவுக்காக தயாரித்துக் கொண்டு வரும் நம் உள்ளக்குடிலில் இயேசு வர வேண்டுமென மன்றாடுவோம்.


1. அன்பு தெய்வமே இயேசுவே! நீர் மாட்டுக்குடிலில் பிறந்தபோது, அக்கொட்டிலிலருந்த மாடுகளும் கழுதைகளும் வந்து தங்களின் தலைவராகிய உம்மை அறிந்து வணங்கின, உமது குளிர்போக்கின. நாங்களும் உம்மை எம் ஆண்டவர் என உணர்ந்து போற்றிட அறிவுத் தெளிவைத் தந்தருளும்.

எல்: வந்தருளும் ஆண்டவரே! எழுந்தே வந்தருளும்.


2. வாழ்வும் வழியுமான இயேசுவே! உமது ஒளிய பிறப்பின் உயரிய ஞானத்தை உலகம் உணர அசிசி நகர் புனித பிரான்சிஸ் உமக்கு முதலில் அழகிய குடில் அமைத்துக் கொண்டாடினார். எங்கள் உள்ளக்குடிலில் உம்மைப் பிறக்க வைக்க எம்மிடமுள்ள அழுக்காறு, பாவம் போன்ற தூசுகளை அகற்றிட நீரே அருள்தாரும் ஆண்டவரே.

3. குழந்தை இயேசுவே இறைவா! ஏழைக் குழந்தையாக நீர் பெத்லகேம் குடிலில் பிறந்தீர்! எளிமையான வாழ்வால் எம் உள்ளக் குடில் நிறைவு பெற்று அதனால் ஏழ்மை என்கிற பேறுபலனை அடைந்த அதனுள் நீர் பிறக்க வந்தருளும் ஆண்டவரே.

4. ஏழையரின் கூக்குரலை ஏறெடுத்துக் கேட்கும் இயேசுவே! உமது எளிய குடிலை நோக்கி எளிய மனிதர்களான இடையர்கள் வந்து உம்மை ஆராதித்து காணிக்கை செலுத்தினர். எளிய உள்ளத்துடன் தக்க காணிக்கைகளை நாங்கள் இந்த நாள்களில் தயாரித்துக் கொண்டுவந்து கொடுக்கும் மனநிலையையும் பொருளாதார வளத்தையும் எங்களுக்குத் தர வந்தருளும் ஆண்டவரே.

(நமது விண்ணப்பங்களை அமைதியாக எடுத்துரைப்போம்.)

அ.ப.: நம் விண்ணப்பங்களுக்கு அடித்தளமிட்டு நம் மீட்பர் கற்றுத்தந்த இறைவேண்டலை கூறுவோம்.

விண்ணுலகில் இருக்கிற...


அ.ப.: மன்றாடுவோடுமாக

எளிய மனத்தோரும் ஏழையரின் உள்ளத்தோரும் பேறுபெற்றோர் என வாழ்த்தும் தந்தையே இறைவா! எளிய குழந்தையாகப் பிறந்த உம் திருமகனை எம் நெஞ்சக்குடிலில் ஏற்கத் தக்க வாழ்வையும் வழியையும் எங்களுக்குத் தந்தளும். எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வழியாக மன்றாடிக் கேட்கிறோம். 

எல்: ஆமென்.


இறைமக்களின் மன்றாட்டுகள் 6 (டிசம்பர் 21)

அ.ப.: அன்புள்ள கிறிஸ்துவின் பிள்ளைகளே! பேரன்பு கொண்ட தந்தையாம் இறைவன் நம்மேல் கொண்டுள்ள அன்பை, கிறிஸ்து பிறப்பு நிகழ்ச்சியில் வெளிப்படுத்தியுள்ளார். இதை நாம் நன்குணர அருள்வேண்டிக் கேட்போம்.


1. பேரன்புள்ள தந்தையே இறைவா! அன்று உமக்குத் கீழ்ப்படியாமல் போன வானதூதர்களைத் தண்டித்துள்ளீர். கீழ்ப்படியாமல் போன முதல் மனிதரையோ – ஆதாம்-ஏவாளை தண்டிக்கவில்லை. அதுபோலவே, உமது மேலான கருணையை எங்கள்மீது தொடர்ந்து வைத்திட உம்மை மன்றாடுகின்றோம். 

எல்: ஆண்டவரே! எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.


2. பேரன்புள்ள தந்தையே இறைவா! பாவம் செய்து உமது மேலான அன்பைப் புறக்கணித்த மனித குலத்தின்மீது இரக்கம் கொண்டு, உமது ஒரே மகன் இயேசுவை எங்களுக்கு அனுப்பி வைத்தீரே, உமது அன்பை நாங்கள் எம் இயேசுவின் வழிகாட்டலில் கண்டுணர உம்மை மன்றாடுகிறோம்.

3. பேரன்புள்ள தந்தையே இறைவா! நாங்கள் அழிவுக்குள்ளாகாதவாறு மீட்புபெற, உம் ஒரே மகன் தமது கடவுள் தன்மையை விட்டுக் கொடுக்க மனம் இசைந்த அவரின் பெருந்தன்மையை நாங்கள் உணர உம்மை மன்றாடுகின்றோம். 

4. பேரன்புள்ள தந்தையே இறைவா! தன்னையே வெறுமையாக்கி மனிதவுரு ஏற்று உலகை உய்வித்த உம் திருமகனின் அருள் உறவில் நாங்கள் பங்கு கொள்ள உம்மை மன்றாடுகின்றோம்.

(நமது விண்ணப்பங்களை அமைதியாக எடுத்துரைப்போம்.)

அ.ப.: நம் விண்ணப்பங்களுக்கு அடித்தளமிட்டு நம் மீட்பர் கற்றுத்தந்த இறைவேண்டலை கூறுவோம். விண்ணுலகில் இருக்கிற...


அ.ப.: மன்றாடுவோடுமாக

பேரன்புள்ள தந்தையே இறைவா! உம் திருமகன் மீது நம்பிக்கைக் கொள்ளும் எவரும் வீணாகப் போகாதபடி மீட்டிட திருவுளங் கொண்டீரே! நாங்கள் அவரின் மனித உடல் ஏற்றலிலும் பிறப்பிலும் நம்பிக்கைக் கொண்டு, அதில் உறுதியாய் நிற்க வரம் அருளும். எங்கள் ஆண்டவராகிய உம் திருமகன் அதே கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

எல்: ஆமென்.


இறைமக்களின் மன்றாட்டுகள் 7 (டிசம்பர் 22)

அ.ப.: அன்புள்ள சகோதர சகோதரிகளே! அன்று புனித கன்னி மரியா தமது வயிற்றில் குழந்தை இயேசுவைத் தாங்கி பெற்றெடுக்கும் பேறுபெற்றாரே. நமது உள்ளத்திலும் இல்லத்திலும் அவரைத் தாங்கும் பேறுபெற்றிட வரம் கேட்டு மன்றாடுவோம்.


1. உலகைப் படைத்தாளும் பரமனே இறைவா! உமது திருமகன் புனித கன்னி மரியாவின் வயிற்றில் சிசுவாக உருவாகி வந்து தங்கினார். எங்கள் உள்ளத்திலும் வந்து தங்கிட தாழ்ந்து பணிந்து உமது அருளைக் கெஞ்சி கேட்கிறோம். 

எல்: ஆண்டவரே! எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.


2. உலகைப் படைத்து பராமரிக்கும் தந்தையே இறைவா! நாங்கள் புதுநன்மை பெற வெகுவாக பக்தியாக தயார் செய்தோம். ஒவ்வொரு நாளும் நற்கருணையில் அவரை எம் உள்ளத்தில் தாங்க தக்க விதமாக தயாரிக்க ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.

3. பரத்தைப் படைத்த பரமனே தந்தையே! உம் திருமகன் இயேசுவின் ஆட்சி எம் இந்திய நாட்டில் வந்திட புனித தோமா இந்தியாவுக்கு நெடும் பயணம் மேற்கொண்டார். போதித்து இரத்தம் சிந்தி உயிரை கொடுத்தார். நாங்களும் சில பயணங்களை மேற்கொண்டு இயேசுவை தாங்கிச் சென்று அறிவிக்க அருள்தர உம்மை மன்றாடுகிறோம்.

4. விண்ணுலகத் தந்தையே இறைவா! உம் திருமகனின் பிறப்பு தென்னிந்திய மக்களின் உள்ளத்தில் பிறக்கவும், ஆண்டவரின் மறுவருகைக்கு குறிப்பாக தென்னிந்திய மக்கள் தங்களை தயார் செய்து கொள்ளவும் புனித பிரான்சிஸ்கு சவேரியார் உழைத்தாரே! ஆண்டவரின் மறுவருகைக்காக நாங்கள் எங்களையும் பிற மனிதரையும் தயாரிக்க வரம் கேட்டு உம்மை மன்றாடுகின்றோம்.

(நமது விண்ணப்பங்களை அமைதியாக எடுத்துரைப்போம்.)

அ.ப.: நம் விண்ணப்பங்களுக்கு அடித்தளமிட்டு நம் மீட்பர் கற்றுத்தந்த இறைவேண்டலை கூறுவோம்.

விண்ணுலகில் இருக்கிற...


அ.ப.: மன்றாடுவோடுமாக

அன்புள்ளம் கொண்ட தந்தையே இறைவா! உம் திருமகனின் மறுவருகை எங்களில் மகிழ்ச்சியானதாக அமைய எங்கள் உள்ளங்களில் உமது மேலான அருளை வழங்கி வழிநடத்தியளுரும். எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

எல்: ஆமென்.


இறைமக்களின் மன்றாட்டுகள் 8 (டிசம்பர் 23)

அ.ப.: அன்புள்ளம் கொண்ட சகோதர சகோதரிகளே! கிறிஸ்து பிறப்பு விpழாவைக் கொண்டாடவிருக்கும் நாம், தம் ஒரே மகனை மனிதனாக இவ்வுலகிற்கு அனுப்பிய தந்தையாகிய கடவுளிடம் நாம் தகுதியான முறையில் இவ்விழாவைக் கொண்டாட அருள் வேண்டி மன்றாடுவோம்.


1. நல்லாயனாகிய இயேசுவே! நீர் இவ்வுலகில் கொணர்ந்த இறையாட்சி, திரு அவை வழியாக விரைவில் நிறைவாய்ப் பரவிடவும் நாங்கள் தக்கவிதமாய் இவ்விழாவைக் கொண்டாடத் தயாரித்துக் கொள்ளவும் வழிகாட்ட, எங்கள் மத்தியில் வாரும் என வேண்டுகிறோம்.

எல்: வாரும், ஆண்டவரே! தாமதம் செய்யாதேயும்.


2. இஸ்ரயேலின் அரசராக இவ்வுலகில் வந்த இயேசுவே! நாட்டை ஆள்பவர்களும் நாட்டு மக்களும் போர் பூசல்களிலிருந்து விலகிடவும், அமைதியின் அரசு எங்கும் நிலவிடவும் நீர் வர வேண்டும் என மன்றாடுகின்றோம்.

3. நற்செய்தியாக உலகில் வந்த இயேசுவே! உமது நற்செய்தியை நாங்கள் அறிவிக்கும் கருவியாகச் செயல்படவும், ஏழை எளியோர் வாழ்வும் ஆறுதல் பெறவும், எம் மத்தியில் நீர் வர அழைக்கிறோம்.

4. வாழ்வும் வழியுமான இயேசுவே! நாங்கள் ஒவ்வொருவரும் ஒருநாள் தனியாக நீதிபதியாக சந்திக்க வேண்டியுள்ளது. அந்த நாளுக்காகவும், மறு உலக வாழ்வுக்கும் தகுதியான முறையில் தயாரிக்க உம் உதவியை நாடி அழைக்கிறோம்.

(நமது விண்ணப்பங்களை அமைதியாக எடுத்துரைப்போம்.)

அ.ப.: நம் விண்ணப்பங்களுக்கு அடித்தளமிட்டு நம் மீட்பர் கற்றுத்தந்த இறைவேண்டலை கூறுவோம்.

விண்ணுலகில் இருக்கிற...


அ.ப.: மன்றாடுவோடுமாக

எல்லாம் வல்ல இறைவா! கிறிஸ்து பிறப்பு விழாவை மகிழ்வுடன் கொண்டாடுவதுடன் ஆண்டவர் இயேசுவின் மறு வருகைக்கு நாங்கள் தயாரிப்பதிலும் ஆர்வம் கொள்ள வரம் கேட்கிறோம். உம் திருமகன் இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.

எல்: ஆமென்.


இறைமக்களின் மன்றாட்டுகள் 9 (டிசம்பர் 24)

இறைமக்களின் மன்றாட்டுகள் 9 (டிசம்பர் 24)

அ.ப.: அன்புள்ளம் கொண்ட சகோதர சகோதரிகளே! கிறிஸ்து பிறப்புப் பெருவிழாவை மகிழ்ச்சியுடன் கொண்டாட இருக்கிறோம். எல்லோர் மனதிலும் அவர் பிறக்க வேண்டும் என்றும், அவர் உலகில் கொணர்ந்த அமைதியும் இறைவனுக்கு மாட்சிமையும் நிலைக்கவும் மன்றாடுவோம்.


1. அன்பினால் உலகைப் படைத்த தந்தையே இறைவா! உம் திருமகன் உலகிற்குக் கொணர்ந்த நல்மனம் - அமைதி – மகிழ்ச்சி ஆகியவை யாவும் உலகின் மாந்தர் அனைவரின் உள்ளத்திலும் நிலவ உம்மையே மன்றாடிக் கேட்கிறோம்.

எல்: ஆண்டவரே! எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.


2. உலகைப் பராமரிக்கும் தந்தையே இறைவா! அதிசயத்துக்குரிய விதத்தில் உம் திருமகன் கன்னி மரியாவின் திருவயிற்றில் கருவாக உருவாகச் செய்தீரே! எல்லாம் வல்லவர் நீரே, உலகின் பெரியவராக உம் திருமகன் வந்துள்ளார் என்பதை நாங்கள் உணர வரம் கேட்டு மன்றாடுகின்றோம்.

3. அன்பை வெளிப்படுத்தி எமை வாழ்விக்கும் தந்தையே இறைவா! நாங்கள் வாழ்வதற்கு வேண்டிய உலக உணவைத் தருவதுடன் ஆன்ம உணவாக, உம் திருமகன் இயேசுவையே தீவனத் தொட்டியில் தவழச் செய்தவரே! நற்கருணை வழியாக எங்களின் ஆன்ம உணவாக இயேசுவை எங்களுக்கு அளித்தீரே! தக்க விதத்தில் இந்த ஆன்ம உணவைப் பெற்றிட வரம் தர உம்மை வேண்டுகிறோம்.

4. விண்ணுலகத் தந்தையே இறைவா! கிறிஸ்து பிறப்பு விழாவைக் கொண்டாடும் எங்களுக்கு வேண்டிய அன்றாட ஆன்ம – உடல் உணவைத் தந்து, தீமைகளை வென்று உம் அரசில்; வந்து சேர வரம் அருள உம்மை மன்றாடுகின்றோம்.

(நமது விண்ணப்பங்களை அமைதியாக எடுத்துரைப்போம்.)

அ.ப.: நம் விண்ணப்பங்களுக்கு அடித்தளமிட்டு நம் மீட்பர் கற்றுத்தந்த இறைவேண்டலை கூறுவோம்.

விண்ணுலகில் இருக்கிற...


அ.ப.: மன்றாடுவோடுமாக

தந்தையே இறைவா! உணவாகவும் உயிராகவும் வாழ்வாகவும் இருந்து எங்களை இயக்கும் ஆண்டவர் இயேசுவின் பிறப்பு நிகழ்வு என்றென்றும் எல்லோரிலும் மகிழ்ச்சியை நிரப்ப வேண்டுமென உம் திருமகன் கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.

எல்: ஆமென்.


(திருப்பலி நடைபெறுமாயின் இங்கு காணிக்கைப் பாடல் பாடப்படும்)

(நற்கருணை ஆசீர் வழிபாடாயின் - மாண்புயர் பாடல்)


நற்கருணை ஆசி வழங்கல்

1. இறைவா, இந்த வியப்புக்குரிய அருளடையாளத்திலே உம்முடைய பாடுகளின் நினைவை எங்களுக்கு விட்டுச் சென்றீர். உமது திருவுடல், திரு இரத்தம் ஆகியவற்றின் மறைபொருளை வணங்கும் நாங்கள், உமது மீட்பின் பயனை இடைவிடாமல் துய்த்து உணர்ந்து மகிழ அருள்வீராக. தந்தையாகிய இறைவனோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்.

2. இறைவா உமது திருமகனின் பாஸ்கா மறைபொருள் வழியாக மானிடரின் மீட்புப் பணியை நிறைவேற்றினீர். இத்திருவருளடையாளத்தின் மூலம் அவருடைய இறப்பையும், உயிர்ப்பையும் நம்பிக்கையோடு அறிக்கையிடும் நாங்கள், உமது மீட்பின் பணியை இடைவிடாது உணரச் செய்தருளும். ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம். ஆமென்.

3. இறைவா! உமது திருமகன் கிறிஸ்துவை மானிடரின் தலைமைக் குருவாக நியமித்தீர். உமது நன்மைத்தனத்தினால் அவர் தமது திரு இரத்தத்தால் தமக்குச் சொந்தமாக்கிக் கொண்ட மக்கள், அவர் இறப்புத் திருப்பலியில் பங்கு கொண்டு அவரின் திருச்சிலுவை, உயிர்ப்பு இவைகளினால் ஆச்சரியத்துக்குரிய ஆன்மீக வலிமையைப் பெற அருள் புரியும். இவற்றை எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம். ஆமென்

4. ஆண்டவராகிய இயேசுவே! நற்கருணையை அருளடையாளமாகவும், ஒற்றுமையின் சின்னமாகவும், அன்பின் பிணைப்பாகவும் ஏற்படுத்தினீரே. உமது திரு அவைக்கு உம் அன்பின் கொடையை அளித்தருளும். பிரிந்துள்ள மக்களை இப்பலிப்பீடத்தைச் சுற்றி ஒன்று சேரச் செய்தருளும். என்றென்றும் வாழ்ந்து இறைவனிடம் ஆட்சி செய்கின்றவர் நீரே.

திருவருகைக் கால செபமாலை

1. அருள் நிறைந்த மரியே! நீர் திருமகனுக்கு அன்னையாக தேர்ந்துகொள்ளப்பட்ட நேரம் பேறுபெற்றது என்று எல்லோரும் ஆண்டவரைப் புகழ்வோம். (விண், அருள், மூஇபு)

2. அருள் நிறைந்த மரியே! நீர் உம் உறவினரான எலிசபெத்தைச் சந்தித்த நேரம் பேறுபெற்றது. எல்லா தலைமுறையினரும் உம்மைப் பேறுபெற்றவர் எனப் போற்றி ஆண்டவரைப் புகழ்வோம். (விண், அருள், மூஇபு)

3. அருள் நிறைந்த மரியே! நீர் உமது திருமகனைப் பெற்ற நேரம் பேறுபெற்றது என எல்லோரும் ஆண்டவரைப் புகழ்வோம். (விண், அருள், மூஇபு)

4. அருள் நிறைந்த மரியே! நீர் உமது திருமகனை முதல்முறை கட்டி அரவணைத்த நேரம் பேறுபெற்றது என எல்லோரும் ஆண்டவரைப் புகழ்வோம். (விண், அருள், மூஇபு).

5. அருள் நிறைந்த மரியே! நீர் உமது திருமகனுக்கு அமுதூட்டிய நேரம் பேறுபெற்றது என எல்லோரும் ஆண்டவரைப் புகழ்வோம். (விண், அருள், மூஇபு)


கிறிஸ்மஸ் செபம்

அன்புத் தந்தையே இறைவா! நாங்கள் உம் திருமகன் இயேசுவின் மனித உடலேற்பின் மறை உண்மையை முழுமையாகப் புரிந்துகொள்ளச் செய்தருளும். இதனால் நாங்கள் வானதூதர்களின் புகழ்ப் பாடலிலும், இடையர்களின் மகிழ்ச்சியிலும், ஞானிகளின் ஆராதனையிலும் பங்கு பெறுவோமாக! பகைமையின் கதவுகளை அடைத்துவிட்டு அன்பின் கதவுகளை உலகமெங்கும் திறக்கச் செய்தருளும். நாங்கள் அன்பாக அளிக்கும் கொடைகளும், வாழ்த்துகளும், அன்பினையும், நல்லெண்ணத்தையும் கொண்டிருப்பனவாக. குழந்தை இயேசு கொண்டுவரும் அருள்வரங்களால் தீமையிலிருந்து எங்களை விடுவித்தருளும். தூய்மையான இதயத்துடன் மகிழ்ச்சியாக இருக்க எங்களுக்குக் கற்பித்தருளும். கிறிஸ்து பிறப்பின் காலை வேளையில் உமது பிள்ளைகள் என்ற மகிழ்ச்சியால் எங்களை நிரப்பியருளும். கிறிஸ்து பிறப்பின் மாலை வேளையில் நன்றி நிறைந்த நினைவுடனும், மன்னித்தோம், மன்னிப்பைப் பெற்றோம் என்ற உணர்வுடனும் எங்களை உறங்கச் செய்தருளும். இந்த மன்றாட்டுக்களை எல்லாம் எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்.