Sunday, 16 August 2020

ஆகஸ்ட் மாத புனிதர்கள்

ஆகஸ்ட் மாத புனிதர்கள் (Click the Name)

✠ புனிதர் அல்ஃபோன்சஸ் மரிய லிகோரி ✠

(St. Alphonsus Maria Liguori)


உலக இரட்சகர் சபையின் நிறுவனர்/ ஆயர்/ மறைவல்லுநர்:

(Founder of Congregation of the Most Holy Redeemer (The Redemptorists)/ Bishop/ Doctor of the Church)


பிறப்பு: செப்டம்பர் 27, 1696 

மரியநெல்லா, கம்பானியா, நேப்பிள்ஸ் அரசு

(Marianella, Campania, Kingdom of Naples)


இறப்பு: ஆகஸ்ட் 01 , 1787 (அகவை 90) 

பாகனி, கம்பானியா, நேப்பிள்ஸ் அரசு 

(Pagani, Campania, Kingdom of Naples)


ஏற்கும் சமயம்:

ரோமன் கத்தோலிக்க திருச்சபை

(Roman Catholic Church)


அருளாளர் பட்டம்: செப்டம்பர் 15, 1816 

திருத்தந்தை ஏழாம் பயஸ்

(Pope Pius VII)


புனிதர் பட்டம்: மே 26, 1839 

திருத்தந்தை பதினாறாம் கிரகோரி

(Pope Gregory XVI)


பாதுகாவல்:

பேகனி நகர் (Pagani), கேன்செலோ நகர் (Cancello), நேபிள்ஸ் - இணை பாதுகாவலர் (Naples (co-patron), கீல்வாதம் (Arthritis), ஒப்புரவாளர்கள், தார்மீகவாதிகள்


நினைவுத் திருநாள்: ஆகஸ்ட் 1


புனிதர் அல்போன்சஸ் மரிய லிகோரி, ஒரு இத்தாலிய கத்தோலிக்க ஆயரும், ஆன்மீக எழுத்தாளரும், இசையமைப்பாளரும், இசைக்கலைஞரும், கலைஞரும், கவிஞரும், வழக்கறிஞரும், இடைக்கால மெய்யியலாளரும், இறையியலாளரும், உலக இரட்சகர் சபையின் நிறுவனரும் ஆவார். ஒரு வழமையான எழுத்தாளரான இவர், தமது வாழ்நாளில், “தார்மீக இறையியல்” (Moral Theology) எனும் புத்தகத்தின் ஒன்பது பதிப்புகளை வெளியிட்டார். “மரியாளின் மகிமைகள்” (The Glories of Mary) மற்றும் “சிலுவைப்பாதை” (The Way of the Cross ) ஆகியவை இவரது சிறப்பான புகழ்பெற்ற படைப்புகளாகும். இவரது படைப்பான சிலுவைப்பாதைகள், இன்றும் கத்தோலிக்க பங்குகளில் உபயோகப்படுத்தப்படுகின்றன.


இவருக்கு திருத்தந்தை பதினாறாம் கிரகோரி (Pope Gregory XVI) 1839ம் ஆண்டு புனிதர் பட்டம் அளித்தார். 1871ம் ஆண்டில் திருத்தந்தை ஒன்பதாம் பயஸ் (Pope Pius IX) இவரை திருச்சபையின் மறைவல்லுநர் (Doctor of the Church) என அறிவித்தார்.


வரலாறு:

இத்தாலியின் நேப்பிள்ஸ் நகருக்கு அருகிலுள்ள “மரியனெல்லா” (Marianella) என்ற ஊரில் 1696ம் ஆண்டு, செப்டம்பர் மாதம், 27ம் தேதி பிறந்தவர் அல்போன்சஸ் மரிய லிகோரி. “டான் ஜோசப் டி லிகோரி” மற்றும் “அன்னா” (Don Joseph de' Liguori and Anna Cavalieri Liguori) தம்பதியரின் எட்டு குழந்தைகளில் மூத்த குழந்தையாக பிறந்த இவருக்கு, இவர் பிறந்த இரண்டு தினங்களின் பின்னர் திருமுழுக்கு அளிக்கப்பட்டது. “அல்ஃபோன்சஸ் மரிய அந்தோனி ஜான் கொஸ்மஸ் டமியான் மைக்கேல் கஸ்பார்ட் டி லிகோரி” (Alphonsus Mary Anthony John Cosmas Damian Michael Gaspard de' Liguori) என்பது இவரது திருமுழுக்கு பெயராகும். இவரது தந்தை ஒரு கடற்படை அதிகாரி ஆவார். தாயார் ஒரு ஸ்பேனிஷ் பெண்மணியாவார்.


16 வயதில் சட்டம் பயின்று வழக்குரைஞரானார். இவர் எடுத்து நடத்திய வழக்குகள் எல்லாமே வெற்றியடைந்தன. ஆனால் தமது 27வது வயதில், 1723ம் ஆண்டில் நடந்த ஒரு சொத்து வழக்கில் அல்போன்சஸ், தனது எட்டு வருட வழக்குரைஞர் வாழ்க்கையில், முதல் முறையாக தோல்வியடைந்தார். இந்தத் தோல்வி அவரை பெரிதும் பாதித்தது. தமது எட்டு வருட வழக்குரைஞர் தொழிலை விட்டுவிட தீர்க்கமாக முடிவெடுத்தார். நீதிமன்றத்தை விட்டுக் கிளம்பினார். இந்தத் தோல்வி, இவர் தனது உலகப் பெருமைகளை உதறி இறைவனைப் பற்றிக்கொள்வதற்கு அவரிடமிருந்து அனுப்பப்பட்ட இகழ்ச்சியாக உணர்ந்தார். மேலும், “இவ்வுலகை விட்டுவிட்டு – உன்னை எமக்கு கையளி” என்ற குரல் அசரீரியாக அவருக்குள் ஒலித்துக்கொண்டேயிருந்தது.


தமது 27 வயதில் வழக்கறிஞர் தொழிலை விட்டுவிட்டு செபத்திலும் பிறரன்புப் பணிகளிலும் ஈடுபட்டார். மிகவும் வறிய நிலையிலிருந்த ஏழைகளுக்கு மறைப் பணியாற்றிய நேப்பிள்ஸ் பிரச்சாரம் என்ற அருட்பணியாளர்கள் அமைப்பால் கவரப்பட்டு அவர்களுக்கு உதவினார். 1726ம் ஆண்டில் அல்போன்சஸ் குருத்துவ அருட்பொழிவு பெற்றார். “பிறருடைய ஆன்மீகத் தேவைகளை நிறைவேற்றுவதில் ஆர்வமாய் இருப்பதே மிகவும் நேர்த்தியான பிறரன்பு” என்று இவர் சொல்வதுண்டு. தமது எளிய மற்றும் எளிமையான பிரசங்கங்களின் காரணமாக அவர் மிகவும் பிரபலமானார். “கூட்டத்திலுள்ள மிக வறி வயோதிக பெண்மணியால் புரிந்துகொள்ள முடியாத ஒரு பிரசங்கத்தை நான் ஒரு போதும் பிரசங்கித்ததில்லை” என்று அவர் அடிக்கடி கூறுவார்.


அவர், இளைஞர்களால் நிர்வகிக்கக்கூடிய மாலைநேர சிற்றாலயங்களை (Evening Chapels) நிறுவினார். இச்சிற்றாலயங்களில், செபம், பயபக்தி, பிரசங்கம், சமூகம், சமூக நடவடிக்கைகள் மற்றும் கல்வி ஆகியவை மையமாக இருந்தன. அவரது மரணத்தின்போது, பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்களை உள்ளடக்கிய 72 சிற்றாலயங்கள் இருந்தன.


அல்ஃபோன்சஸ், கி.பி. 1732ம் ஆண்டு, நவம்பர் மாதம், 9ம் தேதி, “உலக இரட்சகர் சபையைத்” (Congregation of the Most Holy Redeemer) தொடங்கினார். சுமார் 20 வருடங்கள் நேப்பிள்ஸ் மாநிலத்தில் பயணம் செய்து எண்ணற்ற மக்களை மனந்திருப்பினார். கி.பி. 1752ம் ஆண்டுக்குப் பின்னர் எழுதுவதில் தன்னை அர்ப்பணித்தார். இவர் படித்தவை, எழுதியவை அனைத்தும் எளிய மக்களும் எளிதில் புரிந்து கொண்டு ஆன்மீக வாழ்வில் முன்னேற வேண்டுமென்ற ஆவலைத் தூண்டியது என்பர்.


அல்போன்சஸ், கி.பி. 1762ம் ஆண்டு நேப்பிள்ஸ் மாநிலத்தில் “புனித அகத்தா டி கோட்டி” (Sant'Agata dei Goti) என்ற மறைமாவட்டத்தின் ஆயராக நியமிக்கப்பட்டார். இதற்கு இவர் இணங்க மறுத்ததால், திருத்தந்தை இவரை கீழ்ப்படிதல் வாக்குறுதியைக் கொண்டு, கட்டாயப்படுத்தி ஆயராக்கினார். 13 வருடங்கள் பணியாற்றி தமது மறைமாவட்டத்தைச் சீர்படுத்தினார்.


இறப்பு:

இவர் ஆயர் பணியாற்றிக்கொண்டிருக்கும்போதே கடும் காய்ச்சல் வந்து பக்கவாதத்தால் தாக்கப்பட்டார். திருத்தந்தை பதின்மூன்றாம் கிளமெண்ட் மற்றும் அவருக்கு பின்வந்த திருத்தந்தை பதினான்காம் கிளமெண்ட் ஆகியோர் இவரை நோயுற்றிருப்பினும் ஆயர் பதவியில் இருக்க கட்டாயப்படுத்தினர். 1775ல் தனது 79வது வயதில் செவித்திறனை இழந்தார். கண்பார்வையையும் இழந்தார். இவருக்கு குழாய் வழியாகவே உணவு கொடுக்க வேண்டியிருந்தது. ஆதனால் கி.பி. 1775ம் ஆண்டு, மே மாதம், திருத்தந்தை ஆறாம் பயஸ், இவர் ஓய்வு பெற அனுமதியளித்தார். இவரின் இறுதி நாட்களில் இவர் துவங்கிய சபையினில் பெரும் சிக்கலும் பிளவும் ஏற்பட்டன. இவரின் இறப்புக்குப் பின்னும் அவை நீடித்தன. இவர் கி.பி. 1787ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், முதல் தேதி, “பகானி” (Pagani) என்ற ஊரில் மரித்தார்.


படைப்புகள்:

அறநெறி இறையியல் பற்றி இவர் எழுதியவை, “அறநெறி இறையியலாளர்களின் இளவரசர்” என்ற பட்டத்தை இவருக்கு தேடித் தந்தது. இன்றும் ரோமில் அறநெறி இறையியல் கல்விக்கு இவரது உலக இரட்சகர் சபை நடத்தும் நிறுவனமே புகழ்பெற்றது.


இவர் நற்கருணை மற்றும் அன்னை மரியாள் மீதும் மிகுந்த பக்தி கொண்டிருந்தார். மரியாளின் பெருமை, திவ்யநற்கருணை சந்திப்பு, கிறிஸ்துவின் உண்மையான மணவாட்டி, சிலுவைப்பாதை போன்ற இவரது நூல்கள் புகழ் பெற்றவை. இவர் 111 நூல்களை எழுதியுள்ளார். அவை 60 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு 4000த்துக்கும் மேற்பட்ட பதிப்புக்களும் இடம் பெற்றுள்ளன.


✠  வெர்செல்லி நகர் புனித யூசேபியஸ் ✠

(St. Eusebius of Vercelli)


ஆயர்/ ஒப்புரவாளர்: (Bishop and Confessor)


பிறப்பு: மார்ச் 2, 283

சார்டினியா

(Sardinia) 


இறப்பு: ஆகஸ்டு 1, 371 (வயது 88)

வெர்செல்லி, பியேமொன்ட்

(Vercelli, Piemonte)


ஏற்கும் சமயம்:

ரோமன் கத்தோலிக்க திருச்சபை

(Roman Catholic Church)


நினைவுத் திருநாள்: ஆகஸ்ட் 2


பாதுகாவல்: வெர்செல்லி (Vercelli)


புனிதர் யூசேபியஸ், ஒரு இத்தாலியின் ஆயரும் புனிதரும் ஆவார். இவர், “புனிதர் அதானஸியசுடன்” (Athanasius) இணைந்து “ஆரியனிசத்துக்கு” (Arianism) எதிராக கிறிஸ்துவின் தெய்வீகத் தன்மையை உறுதிப்படுத்தினார்.


புனிதர் யூசேபியஸ், கி.பி. 283ம் ஆண்டு “சார்டினியா” (Sardinia) எனுமிடத்தில் பிறந்தவர் ஆவார். அங்கே, இவரது தந்தை மறைசாட்சியாக கொல்லப்பட்டதன் பிறகு, இவரது தாயாரால் ரோம் நகருக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.


சுமார் கி.பி. 340ம் ஆண்டுகளின் தொடக்கத்தில், இத்தாலியின் வடக்கு பிராந்தியத்திலுள்ள “வெர்செல்லி” (Vercelli) மறைமாவட்டத்திற்கு முதல் ஆயராக நியமனம் செய்யப்பட்டார். அவர் குருமார்களுடனேயே வாழ்ந்த முதல் ஆயர் ஆவார். அவர்களை பக்தி மற்றும் வைராக்கியத்தில் உருவாக்குவதற்கு அவர் தமது சிறந்த ஆற்றலை அர்ப்பணித்தார்.


கி.பி. 354ம் ஆண்டு, “அத்தனாசியஸ்” (Athanasius of Alexandria) அவர்களின் நிலைப்பாடு பற்றிய விவாதங்கள் மற்றும் “ஆரியனிச” (Arianism) பிரச்சனைகளை ஒரு முடிவுக்கு கொண்டுவருவதற்காகவும் கருத்து வேறுபாடுகளை களையவும் ஒரு மகா சபையை கூட்ட வேண்டி மிலன் (Milan) நகரிலுள்ள பேரரசர் “இரண்டாம் கான்ஸ்டான்ஷியஸ்” (Constantius II) அவர்களிடம் விண்ணப்பிப்பதற்காக, ஆயர் “லூசிஃபர்” (Bishop Lucifer of Cagliari) அவர்களுடன் இணைந்து செல்லுமாறு யூசேபியசை திருத்தந்தை “லிபேரியஸ்” (Pope Liberius) அவர்கள் பணித்தார்.


கி.பி. 355ம் ஆண்டு, “மிலன்” (Milan) நகரில் மகாசபை நடைபெற்றது. மகாசபையின் ஒரு பகுதி மட்டும் கலந்துகொண்ட யூசேபியஸ், அத்தனாசியசை கண்டனம் செய்ய மறுத்துவிட்டார். இதன் காரணமாக, யூசேபியஸ் உடனடியாக நாடு கடத்தப்பட்டார். முதலில், ஆரியன் ஆயர் “பட்ரோஃபிலசின்” (Arian Bishop Patrophilus) மேற்பார்வையில் சிரியாவிலுள்ள “சிதோபிலிஸ்” (Scythopolis in Syria) எனுமிடத்திற்கு நாடு கடத்தப்பட்டார். அங்கே, யூசேபியஸ் “பட்ரோஃபிலசை” (Patrophilus) தமது சிறைக்காவலர் (Jailer) என்றழைத்தார். அதன் பின்னர் “கப்படோசியாவிற்கு” (Cappadocia) நாடு கடத்தப்பட்ட இவர், இறுதியில் மேல் எகிப்திலுள்ள “தெபைட்” (Thebaid, in Upper Egypt) என்னுமிடத்திற்கு நாடு கடத்தப்பட்டார். நாடு கடத்தல்களின்போது மகாசபை பற்றி யூசேபியஸ் எழுதிய கடிதங்களில் சில இன்னமும் பாதுகாக்கப்படுகின்றன.


பேரரசர் “இரண்டாம் கான்ஸ்டான்ஷியஸின்” (Constantius II) ஆட்சியின்போது, யூசெபியஸ் அரைநிர்வாணமாக தெருத் தெருவாக இழுத்துச் செல்லப்பட்டார். பின்னர் பலவழிகளில் பலவிதமாக துன்புறுத்தப்பட்டார். இருப்பினும், யூசேபியஸ் தமது கத்தோலிக்க விசுவாசத்தை விட்டுவிட முன்வரவில்லை.


கி,பி, 362ம் ஆண்டு, பேரரசன் “இரண்டாம் கான்ஸ்டான்ஷியஸின்” (Constantius II) மரணத்தின் பின்னர் ஆட்சிக்கு வந்த “ஜூலியன்” (Julian), நாடு கடத்தப்பட்ட ஆயர்களை விடுதலை செய்து தத்தமது நாடுகளுக்கு திரும்ப அனுமதியளித்தான். அலெக்ஸாண்டிரியா வழியாக கடந்து வந்த யூசேபியஸ், கி.பி. 362ம் ஆண்டு, அதானிஸியஸின் ஆலோசனை சபையில் கலந்துகொண்டார். இச்சபையில், பரிசுத்த ஆவியின் (Holy Ghost) தெய்வீகத்தையும், கிறிஸ்துவின் அவதாரம் சம்பந்தமான மரபுவழி கோட்பாடுகளையும் உறுதிசெய்யப்பட்டன. இச்சபை, சீர்திருத்தவாதிகள் இருவருக்கும் மனநிறைவு அளித்தது. மனந்திரும்பிய ஆயர்கள் மீதுள்ள அழுத்தங்கள் அகற்றப்பட்டன. ஆரியனிச தலைவர்கள் மீது கடுமையான தண்டனைகளைச் சுமத்தினர்.


திருச்சபையின் பிரிவினைகளை சரி செய்ய இயலாத யூசேபியஸ், மரபுவழி விசுவாசத்தை பிரகடனப்படுத்தி செயல்படுத்தும் ஆர்வத்துடன் வழியில் பிற திருச்சபைகளை பார்வையிட்டவாரு பயணித்தார். கி.பி. 363ம் ஆண்டு “வெர்செல்லி” (Vercelli) வந்து சேர்ந்த இவர், மேற்கத்திய திருச்சபையில் “ஆரியனிசத்தை” (Arianism) எதிர்க்கும் போராட்டத்தை “புனிதர் ஹிலாரியுடன்” (Hilary of Poitiers) இணைந்து தலைமை தாங்கி நடத்தினார். இவர், “ஆரியன் ஆயர் ஔக்ஸென்ஷியஸ்” (Arian bishop Auxentius of Milan) என்பவரை எதிர்த்தவர்களுள் மிகவும் முக்கியமானவர் ஆவார். யூசேபியஸ் கி.பி. 371ம் ஆண்டு மரணமடைந்தார்.


✠ புனித பீட்டர் ஜூலியன் ஈமார்ட் ✠

(St. Peter Julian Eymard)


நற்கருணையின் திருத்தூதர்:

(Apostle of the Eucharist)


பிறப்பு: ஃபெப்ரவரி 4, 1811

லா மூர், க்ரெனோபுல், ஃபிரெஞ்ச் பேரரசு

(La Mure, Grenoble, French Empire)

 

இறப்பு: ஆகஸ்ட் 1, 1868 (வயது 57)

லா மூர், க்ரெனோபுல், ஃபிரெஞ்ச் பேரரசு

(La Mure, Grenoble, French Empire)


ஏற்கும் சமயம்: 

ரோமன் கத்தோலிக்க திருச்சபை

(Roman Catholic Church)


முக்திபேறு பட்டம்: ஜூலை 12, 1925

திருத்தந்தை பதினோராம் பயஸ்

(Pope Pius XI)


புனிதர் பட்டம்: டிசம்பர் 9, 1962

திருத்தந்தை 23ம் ஜான்

(Pope John XXIII)


முக்கிய திருத்தலம்:

சேன்டி கிளாடியோ ஈ ஏன்ட்ரியா டேய் போர்கொக்நோனி

(Santi Claudio e Andrea dei Borgognoni)


நினைவுத் திருவிழா: ஆகஸ்ட் 2


பாதுகாவல்:

நற்கருணை (Eucharist), நற்கருணைப் பாத்திரம் (Monstrance), நற்கருணை ஆராதனை (Eucharistic Adoration), நற்கருணை மகாசபை (Eucharistic Congress), ஆன்மீக ஆடை (Cope), ரோமன் கத்தோலிக்கம் மற்றும் சில லூதரன் மற்றும் ஆங்கிலிக்க திருச்சபைகளில் நற்கருணை ஆராதனையின்போது குருவால் அணியப்படும் ஆடை (Humeral Veil), ஆசீர்வதிக்கப்பட்ட நற்கருணையின் சபை (Congregation of the Blessed Sacrament)


புனிதர் பீட்டர் ஜூலியன் ஈமார்ட், ஒரு ஃபிரெஞ்ச் கத்தோலிக்க குருவும், புனிதரும் ஆவார். இவர், “ஆசீர்வதிக்கப்பட்ட நற்கருணையின் சபை” (Congregation of the Blessed Sacrament) என்ற ஆண்களுக்கான ஆன்மீக சபையையும், “ஆசீர்வதிக்கப்பட்ட நற்கருணையின் ஊழியர்கள்” (Servants of the Blessed Sacrament) என்ற பெண்களுக்கான ஆன்மீக சபையையும் நிறுவியவர் ஆவார்.


“நற்கருணையின் திருத்தூதர்” (Apostle of the Eucharist) என்ற சிறப்பு பெயரால் அழைக்கப்படும் இவரது நினைவுத் திருவிழா ஆகஸ்ட் மாதம், 3ம் தேதி ஆகும்.


தொடக்க காலம்:

பீட்டர் ஜூலியன் ஃபிரான்ஸ் நாட்டின் “லா மூர்” (La Mure) என்ற பகுதியில் 1811ம் ஆண்டு, ஃபெப்ரவரி மாதம், 4ம் நாள், பிறந்தார். இவர் சிறு வயது முதலே, இறைவனின் அதி தூய அன்னை மரியாளின் மீது பக்தி கொண்டிருந்தார். இவர் புதுநன்மை வாங்குவதற்கு முன்னமேயே, 1823ம் ஆண்டு, மார்ச் மாதம், 16ம் நாளன்று, “நோட்ரே-டேம் டு லாஸ்” (Notre-Dame du Laus) எனுமிடத்திலுள்ள அன்னை மரியாள் முதன்முதலாய் காட்சி தந்த புனித ஸ்தலமான “லாஸ் அன்னை அல்லது “பாவிகளின் அடைக்கலம்” (Our Lady of Laus or Refuge of Sinners) திருத்தலத்திற்கு நடைபயணமாகவே சென்றார். அதன் பின்னரே, “அன்னை லா சலேத்” (Notre-Dame de La Salette) திருத்தலத்தில் காட்சியளித்த சரிதம் பற்றி அறிந்தார். ஆன்ம புளகாங்கிதமடைந்த ஈமார்ட், ஃபிரான்ஸ் நாடு முழுதுமுள்ள அன்னை மரியாளின் பல்வேறு திருத்தலங்களுக்கு யாத்திரை சென்றார்.


கி.பி. 1828ம் ஆண்டு, இவரது தாயார் மரித்ததும், இவர் “மாசற்ற மரியாளின் துறவற சபையின்” (Oblates of Mary Immaculate) புகுமுக துறவற நிலையில் இணைந்தார். ஆனால், உடல் நலம் ஒத்துழைக்காததால் சபையில் இருந்து விலகினார். ஜூலியன் நலிவுற்ற உடல்நலம் கொண்டவராயிருந்தார். குறிப்பாக, சுவாசப்பைகளின்  பலவீனமானமும், கடுமையான ஒற்றைத்தலைவலியும் அவருக்கு இருந்தது.


பின்னர், அவரது தந்தை மரித்ததன் பின்னர், 1831ம் ஆண்டு, “க்ரெனோபுல்” மறைமாவட்டத்திலுள்ள (Diocese of Grenoble) குருத்துவ கல்லூரியில் பயிற்சி பெற்று 1834ம் ஆண்டு, ஜூலை மாதம், 20ம் தேதி, குருத்துவ அருட்பொழிவு பெற்றார். “ச்சாட்” (Chatte) எனும் நகரின் உதவி பங்குத் தந்தையாக மூன்று வருடங்கள் பணியாற்றினார். பின்னர், “மவுன்ட் செயின்ட் ஈனார்ட்” (Mount Saint-Eynard) பங்கின் பங்குத் தந்தையாக பணியாற்றினார். சில ஆண்டுகள் பணிக்குப் பிறகு, 1837ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், 20ம் தேதியன்று, “லியோன்” (Lyon) எனுமிடத்திலுள்ள “மரியாளின் துறவற சபையில்” (Marists (the Society of Mary) இணைந்தார். புனித மரியாளின் பக்தியையும், திவ்விய நற்கருணை நாதரின் பக்தியையும் பரப்பினார்.


சபை நிறுவனர்:

1857ம் ஆண்டு, ஜனவரி மாதம், 6ம் தேதியன்று, பீட்டர் ஜூலியன், “ஆசீர்வதிக்கப்பட்ட நற்கருணையின் சபை” (Congregation of the Blessed Sacrament) என்ற ஆண்களுக்கான ஆன்மீக சபையைத் தொடங்கினார். இந்த சபையைச் சார்ந்த துறவிகள், முதல்முறை நற்கருணை பெறத் தயார் செய்யும் சிறுவர்களுக்கு மறைக்கல்வி கற்பிப்பதில் ஆர்வமாக உழைத்தார்கள்.


மேலும் 1858ம் ஆண்டு, அருட்சகோதரி “மார்கரெட் குய்லோட்” (Marguerite Guillot) என்பவருடன் இணைந்து “ஆசீர்வதிக்கப்பட்ட நற்கருணையின் ஊழியர்கள்” (Servants of the Blessed Sacrament) என்ற பெண்களுக்கான ஆன்மீக சபையையை நிறுவினார்.


ஜூலியன் அடிக்கடி திவ்விய நற்கருணை உட்கொள்ளும் வழக்கத்தை கிறிஸ்தவர்கள் நடுவில் ஏற்படுத்த உழைத்தார்; திவ்விய நற்கருணை நாதரை அன்பு செய்ய மக்களுக்கு அறிவுரை வழங்கினார். வாரம் ஒருமுறையாவது நற்கருணை ஆராதனை செய்யும் பக்தி முயற்சியையும் இவர் மக்களிடையே பரப்பினார்.


அற்புதமான முறையில் திவ்விய நற்கருணையில் எழுந்தருளி இருக்கும் இயேசு கிறிஸ்துவுக்கு தமது வாழ்வை அர்ப்பணித்த பீட்டர் ஜூலியன் ஈமார்ட், கி.பி. 1868ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், 1ம் தேதியன்று, தமது ஐம்பத்தி ஏழு வயதில், பக்கவாதம் நோயின் சிக்கல்களின் காரணமாக, “லா மியூர்” (La Mure) நகரில் மரணம் அடைந்தார்.


இவர், 1908ம் ஆண்டு, வணக்கத்திற்குரியவராகவும், 1925ம் ஆண்டு அருளாளராகவும் உயர்த்தப்பட்டார். 1962ம் ஆண்டு, டிசம்பர் மாதம், 9ம் நாள், திருத்தந்தை “23ம் ஜான்” (Pope John XXIII) இவருக்கு புனிதர் பட்டம் வழங்கினார்.



புனித பீட்டர் ஜூலியன் ஐமார்ட் பாடல்👇



✠ தியத்தீரா நகர் புனித லிடியா ✠

(St. Lydia of Thyatira)


நினைவுத் திருநாள்: ஆகஸ்ட் 3


திருவிவிலிய குறிப்புகள்:

திருத்தூதர் பணிகள் 6:14-15, 40 & 17:1

பிலிப்பியர் 1:1-10


தியத்தீரா நகர் புனிதர் லிடியா என்பவர் விவிலியத்தின் புதிய ஏற்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு பெண் ஆவார். இவர், ஐரோப்பாவில் கிறிஸ்தவ மறைக்கு மாற்றப்பட்ட முதல் பெண் என்று ஆவணப்படுத்தப்பட்டவர். பல கிறிஸ்தவப் பிரிவுகள் இவரை புனிதராக ஏற்கின்றன.


பெயர் பொருள்:

ஒரு ஆசியராக (Asiatic) இருந்த லிடியா, தனது சொந்த நகரமான தியாதிரா அமைந்துள்ள எல்லைகளில் இருந்து தனது பெயரை நாட்டிலிருந்து பெற்றார். இது ஒரு அசல் கிரேக்க பெயர் அல்ல. "ஹோரேஸின்" (Readers of Horace) வாசகர்கள் பெண்களுக்கு பிரபலமான பெயராக லிடியாவை நன்கு அறிந்திருப்பார்கள். தியாதிரா லிடியாவின் நகரம் என்றும், அவரது தனிப்பட்ட பெயர் தெரியவில்லை என்றும் பார்த்தால், “தி லிடியன்” என்று பொருள் கொள்ளும் எழுத்தாளர்கள் உள்ளனர்.


லிடியா ஒரு தெளிவற்ற மற்றும் தாழ்மையான பெண் என்றாலும், இவரது திறந்த இதயத்தின் மூலம்தான் கடவுள் ஐரோப்பாவிற்குள் சென்றார். ஆண்டவராகிய இயேசு தன் இருதயத்திற்குள் நுழைவதற்கு முன்பே, லிடியா கடவுள் பக்தி கொண்ட பெண்ணாக இருந்தார். லிடியா, வியாபாரத்தில் விடாமுயற்சியுடன் இருந்த பெண் ஆவார்.


குடும்ப இணைப்புகள்:

லிடியாவின் பின்னணி குறித்த எந்த தகவலையும் திருவிவிலியம் வழங்கவில்லை, அவர் மாசிடோனிய காலனிகளில் (Macedonian colonies) ஒன்றான தியாதிராவில் வாழ்ந்தார். நினைவுச்சின்னங்களில் கண்டுபிடிக்கப்பட்ட பெயர்களில் இருந்து, இந்த நகரம் பல நாடுகளின் உருகும் பாத்திரமாக இருந்தது என்பதும், வழிபாட்டின் பிரதான பொருள் அப்பல்லோ (Apollo) என்பதும், அவர் டைரனஸ் (Tyrannus) என்ற பெயரில் சூரியக் கடவுளாக வணங்கப்பட்டார் என்பதும் தெளிவாகிறது. யெகோவா (Jehovah) மீது விசுவாசத்தைப் பேணும் ஒரு வலுவான யூதக் கூறு நகரத்தில் இருந்தது. தியாதிராவின் முக்கிய பெண்களில் ஒருவரான லிடியா எங்களுக்கு பல்வேறு வழிகளில் வழங்கப்படுகிறார்.


ஒரு பக்தியுள்ள பெண்ணாக:

லிடியா யூத வம்சாவளியைச் சேர்ந்தவரா என்பது உறுதியாகத் தெரியவில்லை என்றாலும், அவர் ஒரு யூத மதமாற்றக்காரர் என்பது தெளிவாகிறது. "அவள் கடவுளை வணங்கினாள்" என்று நமக்குக் கூறப்படுகிறது. பெரும்பாலும் வணிகர்கள் தங்கள் விவகாரங்களில் மூழ்கி, மதத்திற்கு நேரமில்லை. ஆனால் லிடியா, தனது அனைத்து மதச்சார்பற்ற கடமைகளையும் மீறி, யூத நம்பிக்கையின் படி வணங்க நேரம் கிடைத்தது. தினசரி அவள் ஆற்றங்கரைக்குச் சென்றாள், அங்கு பிரார்த்தனை செய்யப்படாது. பிலிப்பைன் வர்த்தகர்களின் கடுமையான போட்டியை வெற்றிகரமாக சந்திக்க, அவளுக்கு அருளும் அறிவும் தேவை என்பதை அவள் அறிந்தாள். அந்த ஆற்றங்கரை பிரார்த்தனைக் கூட்டத்தில், அவர் மற்ற யூத டையர்களைச் சந்தித்திருக்கலாம், அவர்களுடன் பவுல் மற்றும் அவருடைய தோழர்களின் ஊழியத்திற்காக ஆவலுடன் காத்திருந்தார்.


சமூக அந்தஸ்து:

லிடியாவின் சமூக நிலை குறித்து சில ஊகங்கள் உள்ளன. லிடியா ஒரு சுதந்திரமான பெண் அல்லது வேலைக்காரி என்பது குறித்து இறையியலாளர்கள் உடன்படவில்லை. "லிடியா ஒரு காலத்தில் அடிமையாக இருந்தாள் என்பதற்கு நேரடி ஆதாரங்கள் எதுவும் இல்லை, ஆனால் அவளுடைய பெயர் ஒரு தனிப்பட்ட பெயரைக் காட்டிலும் அவளுடைய சொந்த இடம் என்பதே இது குறைந்தபட்சம் ஒரு சாத்தியக்கூறு என்று கூறுகிறது". முதல் அல்லது இரண்டாம் நூற்றாண்டுகளில் இருந்து லிடியா என்ற உன்னத பெண்களின் பிற உதாரணங்களை அஸ்கோ (Ascough) மேற்கோள் காட்டுகிறார், எனவே அவர் உண்மையில் ஒரு அடிமை அல்லது வேலைக்காரியாக இருந்திருக்க வாய்ப்பில்லை.


திருமண நிலை:

நவீன பெண்களைப் போலவே பெண்களுக்கும் சம உரிமை இல்லை என்பதால், ஒரு ஆணின் அனுமதியின்றி வெளிநாட்டு ஆண்களின் குழுவை தனது வீட்டிற்கு அழைக்கும் திறன் லிடியாவுக்கு இருக்கும் என்பது அசாதாரணமானது. "ஒரு மனிதனைப் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை என்பது அவள் ஒரு விதவை என்று கருதுவதற்குப் பயன்படுத்தப்பட்டது, ஆனால் இது ஒரு ஆணாதிக்க விளக்கமாக சவால் செய்யப்பட்டுள்ளது". லிடியாவின் வெளிப்படையான சமூக சக்தி ஒரு வீட்டைக் கட்டுப்படுத்துவதன் மூலமும், ஒரு வீட்டின் உரிமையினாலும் எடுத்துக்காட்டுகிறது (இது தூய பவுலடிகளார் மற்றும் அவரது தோழர்களுக்கு அவர் வழங்கியது) அவர் பெரும்பாலும் ஒரு சுதந்திரமான பெண்மணி மற்றும் ஒரு விதவை என்று குறிக்கிறது.


பல கிறிஸ்தவ மதப்பிரிவுகள் தியாதிராவின் லிடியாவை ஒரு புனிதராக அங்கீகரிக்கின்றன. இருப்பினும் அவரது நினைவுத் திருநாள், பெரிதும் வேறுபடுகிறது. கத்தோலிக்க திருச்சபையில், அவரது நினைவுத் திருநாள் ஆகஸ்ட் 3 ஆகும்.


பக்தி:

ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் லத்தீன் சடங்கை விட (Latin Rite of the Roman Catholic Church), மரபுவழி திருச்சபையில் (Orthodox Church) புனித லிடியா மீதான பக்தி அதிகம். மேலும் இந்த பெண்ணை சித்தரிக்கும் எண்ணற்ற சின்னங்களால் இது தெளிவாகிறது. மரபுவழி திருச்சபைகள் அவளுக்கு "அப்போஸ்தலர்களுக்கு சமமானவர்" என்ற பட்டத்தை வழங்கியுள்ளன. இது அவளுடைய முக்கியத்துவத்தையும் புனிதத்தன்மையையும் குறிக்கிறது. பிலிப்பி (Philippi) நகரில் ஒரு தேவாலயம் உள்ளது. இது புனித லிடியாவின் கவுரவிப்பதற்காக கட்டப்பட்டதாக பலர் கருதுகின்றனர். ஒரு நவீன திருமுழுக்கு பாரம்பரிய தளத்தில் அமைந்துள்ளது. அங்கு, பிலிப்பி நகருக்கு அருகில், தூய பவுலடிகளார் லிடியாவுக்கு திருமுழுக்கு வழங்கினார்.



✠ புனித ஜான் வியான்னி ✠

(St. John Vianney)


மறைப்பணியாளர்/ குரு:

(Tertiary and Priest)


பிறப்பு: மே 8, 1786

டார்டில்லி, லியோன்னைஸ், ஃபிரான்ஸ் அரசு

(Dardilly, Lyonnais, Kingdom of France)


இறப்பு: ஆகஸ்ட் 4, 1859 (வயது 73)

ஆர்ஸ்-சுர்-ஃபார்மன்ஸ், எய்ன், ஃபிரான்ஸ்

(Ars-sur-Formans, Ain, France)


ஏற்கும் சமயம்: 

ரோமன் கத்தோலிக்க திருச்சபை

(Roman Catholic Church)


முக்திபேறு பட்டம்: ஜனவரி 8, 1905

திருத்தந்தை 10ம் பயஸ்

(Pope Pius X)


புனிதர் பட்டம்: 1925

திருத்தந்தை 11ம் பயஸ்

(Pope Pius XI)


முக்கிய திருத்தலங்கள்: 

புனித ஜான் வியான்னி திருத்தலம்; ஆர்ஸ்-சுர்-ஃபார்மன்ஸ், எய்ன், ஃபிரான்ஸ்

(Shrine of St. John Vianney Ars-sur-Formans, Ain, France)


நினைவுத் திருவிழா: ஆகஸ்ட் 4


பாதுகாவல்: 

பங்கு குருக்கள் (Parish Priests)

செயின்ட் ஜான் மேரி வைனென்னின் தனிப்பட்ட திருத்தூதுப்பணி நிர்வாகம் (Personal Apostolic Administration of Saint John Mary Vianney)

“டூபுக்” உயர்மறைமாவட்டம் (Archdiocese of Dubuque)

ஒப்புரவாளர்கள் (Confessors)

“கன்சாஸ் நகர்” உயர்மறைமாவட்டம் (Archdiocese of Kansas City)


புனிதர் ஜான் வியான்னி, ஃபிரான்ஸ் (France) நாட்டில் உள்ள “ஆர்ஸ்” (Ars) எனும் சிற்றூரின் பங்கு குருவாய் இருந்தவர். ஃபிரெஞ்சுப் புரட்சியின் (French Revolution) காரணமாக விசுவாசமும் இறை நம்பிக்கையும் குறைந்து போய் இருந்த அப்பங்கு, இவரின் கடின உழைப்பால் மனம் மாறியது என்பர். மரியன்னை மீதும் நற்கருணை மீதும் மிகுந்த பக்தி கொண்டிருந்த இவர், ஒப்புரவு அருட்சாதனத்தில் மிகுந்த நேரத்தை செலவிட்டார். இவர் கத்தோலிக்க குருக்களின் பாதுகாவலர் ஆவார்.


தொடக்க காலம்:

“புனிதர் ஜான் பாப்டிஸ்ட் மரிய வியான்னி” (St. John Baptist Mary Vianney) எனும் இயற்பெயர் கொண்ட இவர், ஆங்கிலத்தில் சுருக்கமாக “ஜான் வியான்னி” என்று அறியப்படுகிறவர் ஆவார். “லியோன்” (Lyon) நகருக்கு அருகில் “டார்டில்லி” (Dardilly) என்னும் இடத்தில், ஒரு விவசாயக் குடும்பத்தில் “மத்தேயு வியன்னி” (Matthieu Vianney) மேரி (Marie) என்ற பெற்றோரின் ஆறு குழந்தைகளில் நான்காவது மகனாக கி.பி. 1786ம் ஆண்டு, மே மாதம், 8ம் தேதி பிறந்தவர். இவரது குழந்தைப் பருவத்தில் அவருடைய பெற்றோர்கள் மட்டுமே மறைக்கல்வி கற்றுக்கொடுத்தனர். இவர் வாழ்ந்த சூழலில் திருப்பலியில் பங்கேற்பது அவ்வளவு எளிதானதாக இருக்கவில்லை. கி.பி. 1790ம் ஆண்டு, இவருக்கு 4 வயதாக இருக்கும்போது வெடித்த ஃபிரெஞ்சுப் புரட்சியின் (French Revolution) மறைப்பணியாளர்களுக்கு எதிரான பயங்கரவாத நிலை, கத்தோலிக்க விசுவாசமிக்க குருவானவர்கள் பலரை ஓடி ஒளியவைத்தது.


வியான்னி குடும்பத்தினர் திருப்பலியில் கலந்துகொள்வதற்காக தூர தொலைவுகளிலுள்ள பண்ணைகளுக்கு சென்றனர். பங்கு குருக்கள் ஒரு இடத்தில் நில்லாமல் ஓடியபடியே திருப்பலிகளும் நற்கருணை ஆராதனைகளும் நிகழ்த்தினர். அத்தகைய குருக்கள் நாள்தோறும் தமது உயிர்களை ஆபத்தில் சிக்க வைத்திருப்பதை ஜான் வியான்னி உணர்ந்துகொண்டிருந்தார். குருக்களை நாயகர்களாக பார்க்க ஆரம்பித்தார்.


கி.பி. 1799ம் ஆண்டு, இவருக்கு 13 வயது நடந்தபோது, இவர் புதுநன்மை பெற்றார். இரண்டு அருட்சகோதரிகள் வியான்னியின் முதல் நற்கருணை விருந்துக்கு ஏற்பாடு செய்தனர். அதிகாரிகளுக்குப் பயந்து மூடப்பட்ட ஓர் இல்லத்தில் நிகழ்ந்தது.


கி.பி. 1802ம் ஆண்டு, மாமன்னன் நெப்போலியன் (Napoleon) புரட்சியாளர்களைத் தோற்கடித்து, கத்தோலிக்க மறை ஃபிரான்ஸ் நாட்டில் மீண்டும் நிலைநிறுத்தினார். அப்பொழுது 16 வயதான வியான்னி, ஒரு குருவாக வேண்டும் என்று விரும்பினார்.


குருத்துவம்:

தனது பங்குத்தந்தையே நடத்தி வந்த வகுப்புகளுக்கு சென்று குருத்துவப் பயிற்சி பெற்றார். அங்கு பயின்றவர்களிலேயே வியான்னிக்குதான் வயது அதிகம்; படிப்பிலும் கடைசி நிலையில் இருந்தார். இலத்தீன் மொழி கற்பது இவருக்கு மிகவும் கடினமாக இருந்தது; தன் தாய் மொழியான ஃபிரெஞ்சு மொழியிலும் போதிய அறிவு இல்லை. இவருடைய ஞாபக சக்தியும் மிகவும் பலவீனமாக இருந்தது. எனவே புனித ஜான் ஃபிரான்சிஸ் ரெஜிஸ் என்பவருடைய திருத்தலத்திற்கு சென்று வேண்டினார். இவருடைய பங்குத்தந்தையின் ஆதரவே இவருக்கு ஊக்கம் ஊட்டியது.


கி.பி. 1809ம் ஆண்டு, பேரரசன் நெப்போலியன் ஸ்பெயின் நாட்டின்மீது படையெடுத்தார். அப்பொழுது 23 வயதான வியான்னி, படையில் சேர்ந்து யுத்தத்தில் கலந்து கொள்ளாமல் இருக்க விதி விலக்கு கேட்டார்; அது மறுக்கப்பட்டது. எனவே வீரர் உடை அணிவிக்கப்பட்டு பிரணி மலைக்கு அனுப்பப்பட்டார். அப்பொழுது அதிக மன வேதனை அடைந்தார். அங்கு இவர் உடல் நலம் இல்லாதிருந்தபோது படையெடுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது; படைகளுடன் சென்றபோது வழி தவறி நெப்போலியனுக்கு எதிரான மக்கள் வாழ்ந்த பகுதியில், “லெஸ் நோஸ்” (Les Noes) எனும் கிராமத்துக்கு செல்ல நேர்ந்தது. அங்கே, நான்கு குழந்தைகளுக்குத் தாயான “கிளாடின் ஃபேயோட்” (Claudine Fayot) எனும் விதவைப் பெண்ணின் பண்ணையிலிருந்த மாட்டுக் கொட்டிலில் மறைந்து, பதினான்கு மாதங்கள் தங்கிவிட்டார். அங்கே, தமது பெயரை “ஜெரோம் வின்சென்ட்” (Jerome Vincent) மாற்றிக்கொண்டார். அங்கே, ஒரு சிறு பள்ளியை நிறுவி, அங்குள்ள கிராமத்து சிறுவர்களுக்கு கல்வி கற்பித்தார். பின்பனர், 1810ம் ஆண்டு, மார்ச் மாதம், பிரகடனப்படுத்தப்பட்ட நெப்போலியனின் ஆணை, யுத்த காலத்தில் ஓடிப்போன அனைவருக்கும் மன்னிப்பு வழங்கியது. இதன் காரணமாக, வியன்னியும் 1811ம் ஆண்டு, வீடு திரும்பினார்.


இவருக்கு 25 வயதானபோது, உயர்நிலைப் பள்ளி கல்வி தொடங்கும் கட்டத்தில் இருந்தார். மீண்டும் தன் பங்குத் தந்தையிடம் சென்று குருத்துவப் பணிக்குத் தயாரித்தார். கி.பி. 1812ம் ஆண்டு, இளம் குரு மாணவர் இல்லத்தில் (Minor Seminary) சேர்ந்தார். அங்கு இருந்த 200 மாணவர்களில் இவரே கடைசியாக இருந்தார். பின்பு குருத்துவக் கல்லூரிக்குச் சென்று கற்க வேண்டியிருந்தது. ஆனால் பங்குத் தந்தையின் பரிந்துரையால் கி.பி. 1815ம் ஆண்டு, ஜூன் மாதம், திருத்தொண்டராக அருட்பொழிவு பெற்றார். 1815ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், 12ம் நாளன்று, குருத்துவ அருட்பொழிவு பெற்றார். தமது பங்குத் தந்தைக்கே உதவியாக இருந்து மூன்று ஆண்டுகள் பணி புரிந்தார்.


ஆர்சின் (Ars) குருவாக:

வியான்னியின் பங்குத் தந்தை இறந்த பின்பு இவரை எங்கு அனுப்புவது என்று தெரியவில்லை. இறுதியாக மக்கள் அதிகம் இல்லாத “ஆர்ஸ்” (Ars) என்ற கிராமத்தின் ஆலயத்துக்கு பங்குத்தந்தையாக அனுப்பப்பட்டார். அப்போது அந்த பங்கு ஆலயம் இடிந்து கிடந்தது. எனவே அதற்கு அருகில் இருந்த சிற்றாலயம் இவருடைய பங்கு ஆலயம் ஆனது. அந்த ஆலயத்தைச் சார்ந்தவர்கள் 200 பேர் மட்டுமே இருந்தனர். அவர்கள் அனைவரும் சமயப் பற்று இல்லாதவர்கள்.


அந்த மறைமாவட்டத்தின் தலைமை குரு வியான்னியிடம் அப்பணியைக் கொடுத்தபோது, “கடவுள் அன்பற்ற மக்களிடம், அவர் அன்பை உணரச் செய்வதே உமது பணியாகும்” என்று கூறினார். இத்தகைய மேலான ஆன்மீகப் பணியையே இவர் தனது உடனிருப்பாலும், போதனைகளாலும், தவ முயற்சிகளாலும் மக்களிடையே ஆற்றினார். அதிகாலையில் எழுந்து திருப்பலி நிறைவேற்றிவிட்டு ஒப்புரவு அருட்சாதன இருக்கையில் அமரும் இவரிடம், எண்ணற்றோர் ஒப்புரவு அருட்சாதனம் பெற வந்தனர்.


நாட்கள் உருண்டோடின. ஃபிரான்ஸ் நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் மக்கள் இவரைத் தேடி வந்தனர். உணவு உண்பதற்கும் நோயாளிகளைச் சந்திப்பதற்கும், மறைக்கல்வி வகுப்புகள் கற்றுக் கொடுப்பதற்கும் மட்டுமே வியான்னி சிறிது நேரம் ஒதுக்குவார்; மற்ற நேரங்களில் எல்லாம் ஒப்புரவு அருட்சாதனம் வழங்கிக் கொண்டே இருந்தார். இவருடைய மறையுரைகள், மக்கள் மனதை ஆழமாகத் தொட்டன. குறிப்பாக இவர் மக்களைப் பாதித்த பாவங்களைப் பற்றியே எடுத்துரைத்தார்; அங்கு வாழ்ந்த விவசாயக் குடும்பத்தினர் மத்தியில் பரவிக் கிடந்த குடிப் பழக்கம், இரவு நடனங்கள், பக்தியற்ற நிலைமை ஆகியவற்றை மிகவும் அழுத்தமாக மக்கள் மனதில் பதிய வைத்தார். மக்கள் படிப்படியாக மனம் மாறினர்.


புனித அல்போன்ஸ் லிகோரி எழுதிய அறநெறிப் பாடங்களைக் கற்று இவர் தன் பணியில் பயன்படுத்தினார். குருக்கள் மக்களுக்காகத் தவம் செய்ய வேண்டும் என்ற அவசியத்தை இவர் உணர்த்தினார். இவர் ஆன்மாக்களின் பாவங்களைக் கண்டுகொள்ளும் வரம் பெற்றிருந்ததால், பாவிகளிடம் கண்டிப்புடனும் கனிவுடனும் நடந்துகொண்டார். இவர் பாவிகளிடம் மிகவும் கனிவுடன் இருப்பதாக பல குருக்களின் குற்றச்சாட்டுக்கும் ஆளானார்.


புனிதர் பட்டம்:

வியான்னி பலவிதங்களில், சாத்தானின் துன்புறுத்தல்களுக்கு ஆளானார். ஏறத்தாழ 20 வருடங்கள் சாத்தான் இவரைத் தூங்கவிடாமல் தடுத்தான்; சில சமயங்களில் இவருடைய உடலை வதைத்தான்; இவருடைய பொருட்கள் பலவும் எரிந்து போகும்படி செய்தான்; இருப்பினும் விடாமுயற்சியுடனும், துணிவுடனும் போராடி இறையருளால் வெற்றி கண்டார்.


இறை ஞானத்தின் எளிய வடிவமாக விளங்கிய ஜான் மரிய வியான்னி, இறுதியாக கி.பி. 1859ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், 4ம் தேதி, மரணம் அடைந்தார். 1905ம் ஆண்டு, திருத்தந்தை 10ம் பயஸ் (Pope Pius X) இவருக்கு அருளாளர் பட்டம் வழங்கி இவரைப் ‘பங்குத்தந்தையரின் முன்மாதிரி’ என்று அறிக்கையிட்டார். 1925ம் ஆண்டில் இவருக்கு புனிதர் பட்டம் வழங்கிய திருத்தந்தை 11ம் பயஸ் (Pope Pius XI), 1929ம் ஆண்டு இவரை உலகளாவிய பங்குத்தந்தையரின் பாதுகாவலராக அறிவித்தார். புனித ஜான் மரிய வியான்னியின் அழியாத உடல் இன்றளவும் ஆர்ஸ் தேவாலயத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.


இவரது மறைவின் 150வது ஆண்டு நினைவை சிறப்பிக்கும் விதமாக, திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் (Pope Benedict XVI), 2009ம் ஆண்டு ஜூன் மாதம் முதல், 2010ம் ஆண்டு, ஜூன் மாதம் வரையான காலத்தை கத்தோலிக்க திருச்சபையில் குருக்களின் ஆண்டாக (Year of the Priest) அறிவித்தார். அச்சமயம் வத்திக்கான் இவரின் உருவம் கொண்ட தபால் தலையை வெளியிட்டு சிறப்பித்தது.

புனித ஜான் மரிய வியான்னி பாடல் 👇



  தூய மரியாளின் பெரிய பேராலய அர்ப்பணிப்பு திருவிழா ✠

(Dedication of the Basilica of St Mary Major)


திருவிழா நாள்: ஆகஸ்ட் 5


தூய மரியாளின் பெரிய பேராலய அர்ப்பணிப்பு திருவிழா, ஆண்டுதோறும், ஆகஸ்ட் மாதம், 5ம் நாளன்று, விருப்ப நினைவுத் திருவிழாவாக கொண்டாடப்படும் தினமாக, பொது ரோமன் நாள்காட்டியில் குறிக்கப்பட்டுள்ளது.


கி.பி. 1960களின் பிற்பகுதியில், பொது ரோமன் நாள்காட்டியின் முந்தைய பதிப்புகளில், இத்திருவிழாவானது, “பனிமய தூய மரியாளின் பேராலய அர்ப்பணிப்பு திருவிழா” என்று அழைக்கப்பட்டது. இது, பேராலய அஸ்திவாரத்தைப் பற்றின புகழ்பெற்ற கதையின் குறிப்பு ஆகும். இதே காரணத்திற்காகவே, இத்திருவிழாவானது, “பனிமய அன்னை திருவிழா” என்று பரவலாகவும் பிரபலமாகவும் அறியப்படுகின்றது. 1969ம் ஆண்டு பொது ரோமன் நாள்காட்டியின் திருத்தத்தில், இப்புராணக் குறிப்பு அகற்றப்பட்டது.


கி.பி. 1545ம் ஆண்டு முதல், 1563ம் ஆண்டு வரை நடந்த “ட்ரெண்ட்” மகா சபையின் (Council of Trent) வேண்டுகோளுக்கிணங்க, திருத்தந்தை ஐந்தாம் பயஸ் (Pope Pius V), கி.பி. 1568ம் ஆண்டு, இத்திருவிழாவினை ரோமன் நாள்காட்டியில் இணைத்தார். இதற்காக, ஆயர்கள், குருக்கள் மற்றும் திருத்தொண்டர்களின் தினசரி பயன்பாட்டிற்கான பொது அல்லது நியமன பிரார்த்தனைகள், பாடல்கள், சங்கீதம், வாசிப்பு மற்றும் குறிப்புகளுள்ள கத்தோலிக்க திருச்சபையின் லத்தீன் வழிபாட்டு சடங்கின் பிரார்த்தனை புத்தகத்தை (Roman Breviary) திருத்தி எழுதினர். இதற்கு முன்னர், கி.பி. 14ம் நூற்றாண்டில், ரோம நகரத்தின் அனைத்து சபைகளிலும், முதன்முதலில் தேவாலயத்தில் மட்டுமே இது கொண்டாடப்பட்டது.


தற்போதைய துருக்கி (Turke) நாட்டிலுள்ள “எபேசஸ்” (Ephesus) நகரில் நடந்து முடிந்த “முதலாம் ஆலோசனை சபையின்’ (First Council of Ephesus) பின்னர், அன்னையின் பேராலயத்தை (Basilica di Santa Maria Maggiore) மீண்டும் கட்டிய திருத்தந்தை மூன்றாம் சிக்ஸ்டஸின் (Pope Sixtus III) அர்ப்பணிப்பினை இத்திருவிழா நினைவுகூருகிறது. ரோமில், “எஸ்குய்லின்” (Esquiline Hill) குன்றின் உச்சியில் அமைந்துள்ள இந்த முக்கிய பேராலயம், “தூய மரியாளின் மக்கியோர் பேராலயம்” (Basilica of Santa Maria Maggiore) என்றழைக்கப்படுகின்றது. ஏனெனில், இதுவே ரோம் நகரிலுள்ள, அன்னை மரியாளுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள மிகப் பெரிய பேராலயமாகும்.


திருத்தந்தை மூன்றாம் சிக்ஸ்டஸ் (Pope Sixtus III) அவர்களால் திருத்தி கட்டப்பட்ட இப்பேராலயத்தின் அசல், திருத்தந்தை லிபெரியஸ் (Pope Liberius) காலத்தில் (கி.பி. 352–366) கட்டப்பட்டதாகும்.


✠ நார்தும்ரியா நகர் புனித ஒஸ்வால்ட் ✠

(St. Oswald of Northumbria)


நார்தும்ப்ரியா அரசன்:

(King of Northumbria)


பிறப்பு: கி.பி. 604

டேய்ரா, நார்தும்ப்ரியா

(Deira, Northumbria)


இறப்பு: ஆகஸ்ட் 5, 642


ஏற்கும் சமயம்:

ரோமன் கத்தோலிக்க திருச்சபை

(Roman Catholic Church)

கிழக்கு மரபுவழி திருச்சபை

(Eastern Orthodoxy)

ஆங்கிலிகன் சமூகம்

(Anglican Communion)


முக்கிய திருத்தலங்கள்:

பார்ட்னி மடாலயம், லிங்கன்ஷையர், இங்கிலாந்து

(Bardney Abbey, Lincolnshire, England)


பாதுகாவல்: ஆங்கிலேய அரசர்கள், காண்டோன் நகர்


நினைவுத் திருநாள்: ஆகஸ்ட் 5


புனிதர் ஒஸ்வால்ட், கி.பி. 634ம் ஆண்டு முதல், தமது மரணம் வரை “நார்தும்ப்ரியா” (King of Northumbria) நாட்டின் அரசராக இருந்தவரும், புனிதராக வணக்கத்திற்குரியவருமாவார். மத்திய காலங்களில் இவருக்கான ஒரு குறிப்பிட்ட வழிபாட்டு முறை இருந்தது.


இவர் “பெர்நீசியா” (Bernicia) நாட்டின் அரசன் “எத்தல்ஃபிரித் (Æthelfrith) என்பவரது மகன் ஆவார். சிறிது காலம் நாடு கடத்தப்பட்டிருந்த இவர், பிரிட்டிஷ் ஆட்சியாளர் “கேட்வல்லோன் அப் கெட்ஃபன்” (Cadwallon ap Cadfan) என்பவரை தோற்கடித்துவிட்டு ஆட்சிக்கு வந்தவராவார். “பெர்நீசியா” (Bernicia) மற்றும் “டேய்ரா” (Deira) ஆகிய இரண்டு நார்தும்ப்ரியன் அரசுகளை (Northumbrian kingdoms) மீண்டும் ஒரே குடையின்கீழே கொண்டுவந்தவர் ஆவார். நார்தும்ப்ரியா (Northumbria) நாட்டில் கிறிஸ்தவம் பரவ முழு காரணமாக இருந்தவர் இவரே ஆவார்.


தமது எட்டு ஆண்டு கால ஆட்சியில், பிரிட்டனின் மிகச் சக்திவாய்ந்த ஆட்சியாளராக மாறிய ஓஸ்வால்ட் “மேசர்ஃபீல்ட்” போரில் (Battle of Maserfield) கொல்லப்பட்டார். இவரது மரணத்தின் சுமார் நூறு ஆண்டுகளின் பின்னர், ஆங்கிலேயத் துறவியும், அறிஞரும், எழுத்தாளரும் ஆங்கிலேய சரித்திரத்தின் தந்தையுமான (The Father of English History) “வணக்கத்திற்குரிய புனிதர் பீட்” (St. Venerable Bede) என்பவர் எழுதிய “ஆங்கிலேயத் திருச்சபையின் வரலாறு” (Ecclesiastical History of the English People) எனும் புத்தகத்தில் மன்னர் ஒஸ்வால்ட் அவர்களை “புனிதரான அரசன்” (Saintly king) என்று வர்ணிக்கிறார். மேலும், இவர் பற்றின நேர்மறையான பல மதிப்பீடுகளை எழுதியிருந்தார். ஒஸ்வால்ட் பற்றின சிறிதளவேயான தகவல்களும் இப்புத்தகத்திலேயே உள்ளதாம்.


ஒஸ்வால்டின் தந்தை “எத்தல்ஃபிரித்” (Ethelfrith), “பெர்நீசியா” மற்றும் “டேய்ரா” (Bernicia and Deira) ஆகிய நாடுகளின் வெற்றிகரமான ஆட்சியாளராக இருந்தவர் ஆவார். இவரது தாயார் “அச்சா” (Acha of Deira) “டேய்ரா” அரச குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணாவார். “டேய்ராவை” (Deira) முற்றுகையிட்டு வெற்றிகொண்டபோது “எத்தல்ஃபிரித்” இவரை மணந்ததாக சரித்திர ஆசிரியர் “பீட்” கூறுகிறார்.


ஆதி பிரிட்டிஷ் குடிகளுக்கெதிரான போர்களில் வெற்றியாளரான “எத்தல்ஃபிரித்”, இறுதியில் கி.பி. 616ம் ஆண்டு “ஐடில்” (River Idle) ஆற்றங்கரையில் நடந்த போரில், “ரேட்வால்ட்” (Raedwald of East Anglia) எனும் “ஆங்கிலோ-சாக்ஸன்” (Anglo-Saxon) அரசனால் கொல்லப்பட்டார். இந்த தோல்வியால், “டேய்ரா” (Deiran royal line) அரச குடும்பத்தைச் சேர்ந்த “எட்வின்” (Edwin) (அச்சாவின் சகோதரர்) நார்தும்ப்ரியா அரசனானார். ஒஸ்வால்டும் அவரது சகோதரர்களும் வடக்கு பிரிட்டன் பிராந்தியங்களுக்கு நாடு கடத்தப்பட்டார்கள். ஒஸ்வால்ட் தமது இளமை காலத்தை வடக்கு பிரிட்டனின் “ஸ்காட்டிஷ்” அரசான “டல் ரியாடா” (Scottish kingdom of Dál Riata) எனுமிடத்தில் கழித்தார். இங்கேதான் கி.பி. 627ம் ஆண்டு இவர் கிறிஸ்தவராக மனம் மாறினார். இங்கேயிருந்த காலத்தில் இவர் அயர்லாந்தின் (Ireland) யுத்தங்களில் பங்குபெற்றார்.


கி.பி. 634ம் ஆண்டு, சிறு இராணுவ படை ஒன்றின் தலைவராக இருந்த ஒஸ்வால்ட், “ஹெக்ஸாம்” (Hexham) அருகேயுள்ள “ஹெவன்ஃபீல்ட்” (Heavenfield) எனுமிடத்தில் நடந்த யுத்தத்தில் எதிரியான “கேட்வெல்லோன்” (Cadwallon) என்பவனுடன் போரிட்டார். போர் ஆரம்பிக்கு முன்னர், மரத்தினாலான சிறு சிலுவை ஒன்றினை செய்து, அதன்முன் முழங்கால்படியிட்டு ஜெபித்தார். போரில் வெற்றி கண்டார்.


“ஹெவன்ஃபீல்ட்” (Heavenfield) போர் வெற்றியின் பிறகு, சிதறியிருந்த நார்தும்ப்ரியாவை ஒஸ்வால்ட் ஒருங்கிணைத்தார். ஏற்கனவே கி.பி. 627ம் ஆண்டு கிறிஸ்தவராக மனமாற்றம் பெற்றிருந்த இவர், வெற்றிகரமான, புனிதமான அரசை நிறுவினார். நார்தும்ப்ரியா முழுதும் கிறிஸ்தவம் பரவுவதற்கு மிகவும் அதிகமாக பாடுபட்டு உழைத்தார். மேற்கு ஸ்காட்லாந்து மற்றும் வடகிழக்கு அயர்லாந்து பகுதிகளை உள்ளடக்கிய “ஐரிஷ்” (Irish of Dál Riata) ஆட்சியாளர்களிடம், தமது மக்களின் மன மாற்றத்திற்காக ஆயர் ஒருவரை அனுப்புமாறு கேட்டுக்கொண்டார். ஆரம்பத்தில் அவர்கள் ஒரு கண்டிப்பான ஆயரை அனுப்பியிருந்தனர். ஆனால் அவரால் வெற்றிகரமாக பணியாற்ற இயலவில்லை. பின்னர் அவர்கள், ஆயர் “ஐடான்” (Saint Aidan of Lindisfarne) என்பவரை அனுப்பினர். இவர் வெற்றிகரமாக பணியாற்றினார். இவருடைய ஆன்மீக பணிகளுக்காக, ஒஸ்வால்ட் இவருக்கு “லிண்டிஸ்ஃபார்ன்” (Lindisfarne) எனும் தீவை அளித்தார். ஏழை மக்களின்பால் அன்பு கொண்டிருந்த இவர், ஜெபமும் தவமுமாக ஒரு தூய ஆட்சியை நடத்தியதாக அறிஞரும், எழுத்தாளருமான “வணக்கத்திற்குரிய புனிதர் பீட்” (St. Venerable Bede) கூறுகிறார்.


இங்கிலாந்தின் “ஒஸ்வெட்ரி” (Oswestry) எனுமிடத்தில் நடந்த “மேசர்ஃபீல்ட்” (Battle of Maserfield) போரில் “மெர்சியன்ஸ்” (Mercians) என்பவர்களால் கொல்லப்பட்ட ஒஸ்வால்ட், தமது போர்ப்படை வீரர்களுக்காக ஜெபிக்கும் வழக்கமுள்ளவர் ஆவார்.


✠ இயேசு தோற்றம் மாறுதல் ✠ ✠

(Transfiguration of Jesus)


திருவிழா நாள்: ஆகஸ்ட் 6


“இயேசு தோற்றம் மாறுதல்” என்பது, புதிய ஏற்பாட்டின்படி ஒரு மலையின்மீது இயேசு கிறித்து தோற்றம் மாறிய நிகழ்வினைக் குறிக்கும். ஒத்தமை நற்செய்தி நூல்கள் (மத்தேயு 17:1–9, மாற்கு 9:2-8, லூக்கா 9:28–36) மூன்றிலும் இந்நிகழ்வு குறிக்கப்பட்டுள்ளது. மேலும், பேதுரு எழுதிய இரண்டாம் திருமுகத்திலும் இது பற்றிய குறிப்பு உள்ளது (2 பேதுரு 1:16–18).


இவ்விவரிப்புகளின்படி, இயேசு பேதுருவையும், யாக்கோபையும், யோவானையும் அழைத்து, ஓர் உயர்ந்த மலைக்கு தனிமையாகக் கூட்டிக்கொண்டு போனார். அங்கே அவர்கள்முன் அவர் தோற்றம் மாறினார். அவருடைய ஆடைகள் வெள்ளை வெளேரென ஒளிவீசின. அவரது முகம் கதிரவனைப் போல் ஒளிர்ந்தது. அப்போது, எலியாவும், மோசேயும் அவர்களுக்குத் தோன்றினர். இருவரும் இயேசுவோடு உரையாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது, இயேசுவின் திருமுழுக்கின்போது நிகழ்ந்ததுபோலவே, தந்தையாம் கடவுள் மேகத்தினின்று, ″இவரே என் மைந்தர்; நான் தேர்ந்துகொண்டவர் இவரே. இவருக்குச் செவிசாயுங்கள்″ என்று கூறியதாக விவரிக்கப்பட்டுள்ளது.


இயேசு தோற்றம் மாறுதல் நிகழ்வு நற்செய்திகளில் விவரிக்கப்படுள்ள இயேசுவின் புதுமைகளில் ஒன்றாக கருதப்படுகின்றது. ஆயினும் இது இயேசுவிலேயே நிகழ்வதால் நற்செய்திகளின் பிற புதுமைகளைக் காட்டிலும் இது மாறுபட்டதாகும். தாமஸ் அக்குவைனஸ், இந்நிகழ்வை இயேசுவின் மிகப்பெரும் புதுமை என விவரித்துள்ளார். மேலும் அவர் இந்நிகழ்வு இயேசுவின் திருமுழுக்கின் நிறைவு என்றும் கிறிஸ்தவ வாழ்வின் இலக்கான விண்ணகத்தின் முழுமையான எடுத்துக்காட்டு என்றும் கூறியுள்ளார். இயேசுவின் தோற்றம் மாறும் நிகழ்வும் அவருடைய திருமுழுக்கு, சாவு, உயிர்ப்பு மற்றும் விண்ணேற்றம் ஆகியவற்றொடு சேர்த்து அவரின் இவ்வுலக வாழ்வில் நடந்த மிக முக்கிய நிகழ்வாக கருதப்படுகின்றது.


கிறிஸ்தவ இறையியலின்படி, இந்நிகழ்வு இயேசுவின் இறைத்தன்மையினை வெளிப்படுத்துவதாகவும், மனிதத்தையும் இறைவனையும் ஒன்றுபடுத்தும் பாலமாக இயேசு இருப்பதை எடுத்தியம்புவதாகவும் நம்பப்படுகின்றது.


புதிய ஏற்பாட்டில் இயேசுவின் உருமாற்றம் பற்றிய பாடங்கள்:

"என் அன்பார்ந்த மைந்தர் இவரே; இவருக்குச் செவிசாயுங்கள்”

~ மாற்கு 9:7


மத்தேயு, மாற்கு, லூக்கா ஆகிய நற்செய்திகளை உள்ளடக்கிய ஒத்தமை நற்செய்திகளில் இயேசு தோற்றம் மாறிய நிகழ்ச்சி நடுப்பகுதியில் விவரிக்கப்படுகிறது. காண்க:

மத்தேயு 17:1-9

மாற்கு 9:2-8

லூக்கா 9:28-36


அந்த நிகழ்ச்சி ஒத்தமை நற்செய்திகளில் ஒரு மைய நிகழ்ச்சியாக அமைக்கப்பட்டுள்ளது. அந்நிகழ்ச்சிக்குச் சற்று முன்னர்தான் மற்றொரு முக்கிய நிகழ்ச்சி நடந்திருந்தது. அதில் திருத்தூதர் பேதுரு “நான் யார்?” என்று இயேசு கேட்ட கேள்விக்குப் பதில்மொழியாக “நீர் மெசியா” என்று அறிக்கையிட்டிருந்தார். காண்க: மத்தேயு 16:16; மாற்கு 8:29; லூக்கா 9:20.


இயேசு தோற்றம் மாறிய நிகழ்ச்சி, அவர் யார் என்பதை வெளிப்படுத்துகின்ற மற்றொரு நிகழ்ச்சியாக உள்ளது. இயேசு உண்மையிலேயே “கடவுளின் மகன்” என்று அந்நிகழ்ச்சியின்போது திருத்தூதர்களுக்கு வெளிப்படுத்தப்பட்டது.


நற்செய்திகள் தருகின்ற தகவல்படி, இயேசு மூன்று சீடர்களை, அதாவது பேதுரு, யோவான், யாக்கோபு ஆகிய மூவரையும் அழைத்துக்கொண்டு ஒரு மலைக்கு ஏறிச் செல்கிறார். மலையின் பெயர் குறிப்பிடப்படவில்லை. அங்கே அம்மலையில் இயேசு தம் சீடர்கள் முன்னிலையில் “தோற்றம் மாறுகிறார்” (மத்தேயு 17:2). அப்போது “அவரது முகம் கதிரவனைப் போல் ஒளிர்ந்தது. அவருடைய ஆடைகள் ஒளிபோன்று வெண்மையாயின”. அந்நேரத்தில் பழைய ஏற்பாட்டு வரலாற்றில் சிறப்புமிகு தலைவர்களாயிருந்த மேசே, எலியா ஆகிய இருவரும் தோன்றி இயேசுவோடு உரையாடியதை சீடர்கள் காண்கின்றார்கள். 


லூக்கா நற்செய்தியில் இயேசுவின் தோற்றம் மாறியபோது, சீடர்கள் இயேசுவின் “மாட்சியை” கண்டதாகக் குறிக்கப்படுகிறது (லூக்கா 9:32).


இயேசுவின் தோற்றம் மாறிய காட்சியின்போது தோன்றிய மோசே, எலியா ஆகியோர் சீடர்களின் கண்களிலிருந்து மறையும் வேளையில் பேதுரு இயேசுவை நோக்கி, அவர்கள் தங்கியிருக்க கூடாரங்கள் அமைக்கலாமா என்று வினவுகின்றார். இயேசுவோடு பேசிக்கொண்டிருந்த மோசே, எலியா ஆகியோர் மேலும் சிறிது காலம் தங்கியிருக்கலாமே என்ற எண்ணத்தில் அவர் கேட்டதாகத் தெரிகிறது. ஆனால் அதற்கிடையில் ஒளீமயமான ஒரு மேகம் அவர்கள் மேல் நிழலிட்டது. அந்த மேகத்திலிருந்து ஒரு குரல் வெளிப்பட்டது: “என் அன்பார்ந்த மைந்தர் இவரே. இவர்பொருட்டு நான் பூரிப்படைகிறேன். இவருக்குச் செவிசாயுங்கள்.” இதைத் தொடர்ந்து சீடர்கள் முகங்குப்புற விழுந்தார்கள் அவர்களைப் பேரச்சம் மேற்கொண்டது. ஆனால் இயேசு அவர்களை அணுகிச் செல்கிறார். அவர்களைத் தொட்டு, “எழுந்திருங்கள், அஞ்சாதீர்கள்” என்றார். சீடர்கள் நிமிர்ந்து பார்க்கின்றனர். ஆனால் இப்போது அவர்கள் இயேசுவை மட்டுமே காண்கின்றனர்; மோசே, எலியா ஆகியோர் மறைந்துவிட்டனர் (மத்தேயு 17:5-8).


இயேசுவும் சீடர்களும் மலையிலிருந்து கீழே இறங்குகிறார்கள். இயேசு அவர்களைப் பார்த்து, “மானிட மகன் இறந்து உயிருடன் எழுப்பப்படும்வரை இக்காட்சியைப் பற்றி எவருக்கும் சொல்லக்கூடாது” என்று கட்டளையிடுகிறார். “இறந்து உயிர்த்தெழுதல்” என்பதன் பொருள் என்னவென்று விளங்காமல் சீடர்கள் ஒருவர் ஒருவரோடு பேசிக்கொண்டார்கள் என்று மாற்கு குறிப்பிடுகிறார் (மாற்கு 9:10).


மேலே தரப்பட்ட ஒத்தமை நற்செய்திகள் பகுதிகள் தவிர புதிய ஏற்பாட்டின் வேறு இடங்களிலும் இயேசுவின் தோற்ற மாற்றம் பற்றிய குறிப்புகள் உள்ளன. 2 பேதுரு 1:16-18: "நம் ஆண்டவர் இயேசு கிறித்துவின் வல்லமையையும் வருகையையும் பற்றி நாங்கள் உங்களுக்குத் தெரிவித்தபோது சூழ்ச்சியாகப் புனைந்த கதைகளை ஆதாரமாகக் கொண்டு பேசவில்லை. நாங்கள் அவரது மாண்பை நேரில் கண்டவர்கள். 'என் அன்பார்ந்த மைந்தர் இவரே. இவர் பொருட்டு நான் பூரிப்படைகிறேன்' என்று மாட்சிமிகு விண்ணகத்திலிருந்து அவரைப்பற்றிய குரல் ஒலித்தபோது, தந்தையாகிய கடவுளிடமிருந்து மதிப்பும் மாட்சியும் பெற்றார். தூய மலையில் அவரோடு இருந்தபோது விண்ணிலிருந்து வந்த இக்குரலொலியை நாங்களே கேட்டோம்." யோவான் நற்செய்தியில் 1:14: "வாக்கு மனிதர் ஆனார்; நம்மிடையே குடிகொண்டார். அவரது மாட்சியை நாங்கள் கண்டோம். அருளும் உண்மையும் நிறந்து விளங்கிய அவர் தந்தையின் ஒரே மகன் என்னும் நிலையில் இம்மாட்சியைப் பெற்றிருந்தார்" என்னும் பகுதியும் இயேசுவின் தோற்ற மாற்றத்தைக் குறிப்பதாகக் கொள்ளப்படுகிறது.


புதிய ஏற்பாட்டின் பிற பகுதிகளில் வரும் குறிப்புகளைக் கீழ்வருமாறு காட்டலாம். தூய பவுல் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்தில் "இப்போது நாம் அனைவரும் முக்காடு இல்லா முகத்தினராய் ஆண்டவரின் மாட்சியைப் பிரதிபலிக்கிறோம். இவ்வாறு மேன்மேலும் மாட்சிபெற்று, அவர் சாயலாக மாற்றமடைகிறோம். இவையெல்லாம் ஆவியாம் ஆண்டவரின் செயலே" (3:18) என்று கூறுகிறார். இயேசு கிறித்துவில் நம்பிக்கை கொண்டோர் "தோற்ற மாற்றம்" அடைவர் என்பது இங்கே குறிக்கப்படுகிறது. மேலும் அவர்கள் "ஆண்டவரின் மாட்சியைப் பிரதிபலிப்பர்." இயேசு தோற்றம் மாறியது, நம்பிக்கை கொண்டோர் தோற்றம் மாறுவதற்கு அடித்தளம் ஆகிறது.


மத்தேயு 17ம் அதிகாரத்தில், இயேசுவின் தோற்ற மாற்றத்தின்போது யோவான் கூட இருந்ததாகக் கூறப்படுகிறது. எனினும், யோவான் நற்செய்தியில் அக்குறிப்பு இல்லை.


இதிலிருந்து சிலர் யோவான் நற்செய்தியை எழுதியவர் யோவான் அல்ல என்ற முடிவுக்கு வருகின்றனர். வேறு சிலர் பல்வேறு விளக்கங்கள் தருகின்றனர். எடுத்துக்காட்டாக, நான்காம் நூற்றாண்டு கிறித்தவ ஆசிரியரான செசரியா யூசேபியஸ் என்பவர் விளக்கப்படி, யோவான் நற்செய்தியானது, பிற மூன்று நற்செய்திகளில் வரும் தகவல்களை அப்படியே மீண்டும் எடுத்துக் கூறவில்லை. மாறாக, அந்த மூன்று நற்செய்திகளிலும் காணப்படாத சிலபல விவரங்களை யோவான் தருகின்றார்.


மேலும், இயேசு இறுதி இராவுணவின்போது நற்கருணை ஏற்படுத்திய தகவல் யோவானில் இல்லை. மற்ற மூன்று நற்செய்திகளும் அதுபற்றி விரிவான தகவல்கள் தருகின்றன. இதிலிருந்து யோவான் ஓர் இறையியல் அளவீட்டைக் கொண்டு தம் நற்செய்தி நூலை அமைத்தார் என்றும், ஒரு சில மையக் கருத்துகளை வலியுறுத்த விரும்பினார் என்றும் தெளிவாகத் தெரிகிறது.


இறையியல் விளக்கம்:

இயேசு தோற்றம் மாறிய நிகழ்ச்சிக்கு கிறித்தவ இறையியல் மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறது. அந்நிகழ்ச்சி நடந்த இடம் ஒரு "மலை". கடவுளும் மனிதரும் சந்திக்கும் இடமாக "மலை" கருதப்பட்டது. மலைமீது இயேசு தோற்றம் மாறினார் என்பது கடவுளுக்கும் மனிதருக்கும் இடையே இயேசு பாலமாக உள்ளார் என்பதைக் காட்டுகிறது.


இயேசு யார் என்னும் கேள்விக்கு அவருடைய தோற்ற மாற்ற நிகழ்ச்சி பதிலிறுக்கிறது. அதாவது, இயேசு "கடவுளின் மகன்" என்னும் செய்தி வானிலிருந்து வந்ததோடு, "இவருக்குச் செவிசாயுங்கள்" என்னும் கட்டளையும் தரப்பட்டது. இதை ஒத்த விதத்தில் இயேசுவின் திருமுழுக்கு நிகழ்ச்சியும் அமைந்தது கவனிக்கத் தக்கது.


இயேசு தோற்றம் மாறிய நிகழ்ச்சியின்போது மோசே மற்றும் எலியா ஆகியோர் உடனிருந்தனர் என்னும் செய்தியிலும் இறையியல் அர்த்தம் உள்ளது. பழைய ஏற்பாட்டில் கடவுளின் செய்தியை மக்களுக்கு வழங்கிய தலைவர் மோசே. அதுபோலவே, எலியா என்னும் இறைவாக்கினரும் மக்களுக்கு இறைவனின் வார்த்தையை எடுத்துக் கூறிய தலைசிறந்த இறைவாக்கினராக இருந்தவர். அவர்களைவிடவும் மேலானவராக இயேசு வந்தார். ஏனென்றால் இயேசு உண்மையிலேயே "கடவுளின் மகன்". அந்த நிகழ்ச்சி இயேசுவின் மாட்சிமையையும் மதிப்பையும் வெளிப்படுத்தியது என்று 2 பேதுரு கூறுகிறது (காண்க: 2 பேதுரு 1:16-18).


இறப்புக்குப் பின்னரும் மனிதர் இயேசுவோடு மகிமை பெறுவர் என்னும் கருத்தும் இந்த நிகழ்ச்சியின் வழி தெரிகிறது. இறந்துபோன மோசே மற்றும் எலியா ஆகியோர் இயேசுவோடு மகிமை பெற்றதுபோல எல்லா மனிதரும் பேறு பெறுவர் என்னும் கருத்து இங்கே உள்ளடங்கியுள்ளது.


இறையியல் வரலாற்றில்:

திருச்சபையின் தொடக்க காலத்திலிருந்தே இயேசுவின் தோற்ற மாற்றம் இறையியல் பார்வையில் சிந்திக்கப்பட்டு வந்துள்ளது. இரண்டாம் நூற்றாண்டுத் திருச்சபைத் தந்தையான புனித இரனேயு என்பவர் பின்வருமாறு கூறுகிறார்: "கடவுளுக்கு மாட்சியாக அமைவது உயிரோட்டம் கொண்ட மனிதரே. உண்மையான மனித வாழ்வு கடவுளைக் காண்பதில் அடங்கும்."


பண்டைய திருச்சபைத் தந்தையருள் ஒருவரான ஓரிஜென் என்பவரின் இறையியல் சிந்தனை மிகுந்த தாக்கம் கொணர்ந்தது. இயேசு தம் சீடரை நோக்கி, "மனுமகன் இறந்தோரிடமிருந்து உயிர்பெற்றெழுகின்ற வரையிலும் நீங்கள் கண்ட காட்சியை யாரிடமும் கூறவேண்டாம்" என்று கூறியதிலிருந்து இயேசுவின் உயிர்த்தெழுதலுக்கும் அவருடைய தோற்ற மாற்றத்திற்கும் இடையே ஒரு தொடர்பு உளதை அறியலாம் என்று ஓரிஜென் கூறினார்.


இயேசுவின் தோற்ற மாற்றத்தின்போது அவர் ஒளிமயமாகத் தோன்றினார் என்னும் கருத்தின் அடிப்படையில் அந்த "ஒளி" எப்பொருளைக் குறிக்கிறது என்ற விளக்கம் பாலைநிலத் தந்தையர் (Desert Fathers) என்னும் தொடக்க கால இறையியலாரால் வழங்கப்பட்டது. இதிலிருந்து "ஒளி இறையியல்" என்னும் கருத்தாக்கம் உருவானது. இந்த இறையியல் பார்வையின் அடிப்படையில் இயேசுவின் தோற்ற மாற்றத்தைச் சித்தரிக்கின்ற திருவோவியங்கள் எழுந்தன. சீனாய் மலையில் உள்ள புனித கத்தரீனா துறவியர் இல்லத்தில் உள்ள திருவோவியம் இப்பாணியைச் சார்ந்ததே. இந்த திருவோவியம் மேலதிக இறையியல் விளக்கத்திற்கு அடிப்படையாக அமைந்திருக்கலாம்.


இயேசு தோற்றம் மாறிய வேளையில் அவருடைய ஒளிமிகு தோற்றத்தைக் கண்டு அதை உள்வாங்கும் வகையில் சீடர்களின் புலன்களும் ஒருவிதத்தில் ஒளிமயமாகி, உருமாற்றம் பெற்றன என்று புனித மாக்சிமுசு (Saint Maximus the Confessor) கூறுகிறார். "இப்போது நாம் அனைவரும் முக்காடு இல்லா முகத்தினராய் ஆண்டவரின் மாட்சியைப் பிரதிபலிக்கிறோம். இவ்வாறு மேன்மேலும் மாட்சிபெற்று, அவர் சாயலாக மாற்றமடைகிறோம். இவையெல்லாம் ஆவியாம் ஆண்டவரின் செயலே" (2 கொரிந்தியர் 3:18) என்று புனித பவுல் கூறுவதை ஒட்டி, தொடக்க கால இறையியலார் "இயேசு கிறித்துவை நம்பி ஏற்போர் கடவுள் பற்றிய அறிவைப் பெறுவர். அதுவே அவர்களுடைய உருமாற்றத்திற்கு அடித்தளம் ஆகும்" என்று விளக்கம் அளித்தனர்.


மேற்குத் திருச்சபை இயேசுவின் சிலுவைச் சாவை வலியுறுத்துவதாகவும், கீழைத் திருச்சபை இயேசு தோற்றம் மாறிய நிகழ்ச்சியை வலியுறுத்துவதாகவும் பொதுவாகக் கருதப்பட்டாலும், இரு திருச்சபைகளும் மேற்கூறிய இரு நிகழ்ச்சிகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்துள்ளன என்பதே உண்மை. என்றாலும், மேற்குத் திருச்சபை மரபைச் சார்ந்த புனிதர்களான புனித பிரான்சிசு, பியட்ரல்சினாவின் பியோ போன்றவர்கள் இயேசுவின் காயங்களைத் தம் உடலில் அடையாளமாகப் பெற்றதாக நம்பப்படுகிறது. ஆனால் கீழை மரபில், புனித செராபிம், சிலூவான் போன்றோர் உள்ளொளியால் உருமாற்றம் பெற்றனர் என்று நம்பப்படுகிறது. முதல் மரபு சிலுவையின் பொருளையும், இரண்டாம் மரபு உருமாற்ற ஒளியின் பொருளையும் ஏற்பது தெரிகிறது.


இயேசு தோற்றம் மாறிய இடம்:

இயேசு தோற்றம் மாறிய இடமாக, 3ஆம் நூற்றாண்டிலிருந்தே அடையாளம் காட்டப்படுவது தாபோர் மலை ஆகும்.


அம்மலை பல நூற்றாண்டுகளாகவே ஒரு திருத்தலமாக இருந்துவந்துள்ளது. எனினும் இயேசுவின் தோற்ற மாற்றம் நிகழ்ந்த இடமாக வேறு இடங்களும் அடையாளம் காட்டப்பட்டுள்ளன.


இயேசு தோற்றம் மாறிய நிகழ்வுத் திருவிழா:

பல கிறித்தவ திருச்சபைக் குழுக்கள் இயேசு தோற்றம் மாறிய விழாவைச் சிறப்பிக்கின்றன. 9ம் நூற்றாண்டளவில் இவ்விழா வெவ்வேறு வடிவங்களில் இருந்துவந்தது. ஆகஸ்ட் மாதம், 6ம் நாள் அவ்விழாவைக் கொண்டாடுமாறு திருத்தந்தை மூன்றாம் கலிஸ்டஸ் பணித்தார். அந்நாள் பெல்கிரேட் முற்றுகையின் (1456) நினைவாக நிர்ணயிக்கப்பட்டது. கத்தோலிக்க திருச்சபை, சிரிய மரபுவழி சபை, கிழக்கு மரபுவழி சபைகல், ஆங்கிலிக்க சபை போன்றவை இவ்விழாவை ஆகஸ்ட் 6ம் நாள் கடைப்பிடிக்கின்றன.


ரோமன் கத்தோலிக்க திருச்சபையில், இயேசு தோற்றம் மாறிய நிகழ்ச்சியை விவரிக்கின்ற நற்செய்திப் பகுதி தவக்காலத்தின் இரண்டாம் ஞாயிற்றுக் கிழமை அறிக்கையிடப்படுகிறது.


† இன்றைய புனிதர் †

(ஆகஸ்ட் 6)


✠ புனிதர் இரண்டாம் சிக்ஸ்டஸ் ✠

(St. Sixtus II)


24ம் திருத்தந்தை/ மறைசாட்சி:

(24th Pope/ Martyr)


பிறப்பு: தெரியவில்லை

கிரேக்க நாடு

(Greece)


இறப்பு: ஆகஸ்ட் 6, 258

ரோம்; ரோமப் பேரரசு

(Rome, Roman Empire)


ஏற்கும் சமயம்:

ரோமன் கத்தோலிக்க திருச்சபை

(Roman Catholic Church)


நினைவுத் திருவிழா: ஆகஸ்ட் 6


பாதுகாவல்: நம்பிக்கையுள்ள பெண்களுக்கு, திராட்சை மற்றும் பீன்ஸ் விளைச்சலுக்கு


திருத்தந்தை இரண்டாம் சிக்ஸ்டஸ் (Pope Sixtus II) ரோம் ஆயராகவும், 24ம் திருத்தந்தையாகவும், கி.பி. 257ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் 31ம் நாளிலிருந்து, கி.பி. 258ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் 6ம் நாள் வரை ஆட்சி செய்தார். ரோமப் பேரரசன் “வலேரியனின்” (Emperor Valerian) ஆட்சி காலத்தில், கி.பி. 258ம் ஆண்டு நடந்த கிறிஸ்தவ துன்புருத்தல்களின்போது “புனிதர் லாரன்ஸ்” (Lawrence of Rome) உள்ளிட்ட ஏழு திருத்தொண்டர்களுடன் மறைசாட்சியாக கொல்லப்பட்டார்.


இவருக்கு முன் பதவியிலிருந்தவர் திருத்தந்தை “முதலாம் ஸ்தேவான்” (Pope Stephen I) ஆவார். திருத்தந்தை “டையோனிசியஸ்” (Pope Dionysius) இவருக்குப் பிறகு பதவி வகித்தவர் ஆவார். திருத்தந்தை இரண்டாம் சிக்ஸ்டஸ் கத்தோலிக்க திருச்சபையின் 24ம் திருத்தந்தை ஆவார்.


பணிகள்:

திருத்தந்தை இரண்டாம் சிக்ஸ்டஸ் கிரேக்க நாட்டவர் என்று "திருத்தந்தையர் நூல்" (Liber Pontificalis) என்னும் பண்டைய ஏடு கூறுகிறது.


இரண்டாம் சிக்ஸ்டஸ் தமக்குமுன் பதவியிலிருந்த திருத்தந்தை “முதலாம் ஸ்தேவானின்” (Pope Stephen I) அணுகு முறையிலிருந்து வேறுபட்ட விதத்தில் செயல்பட்டு, திருச்சபைக்கு உள்ளே நிலவிய பூசல்களுக்குத் தீர்வுகள் கண்டார். குறிப்பாக, ரோம மன்னர்கள் கிறிஸ்தவ மறையைத் துன்புறுத்தியபோது தம் உயிரைக் காத்துக் கொள்வதற்காக சில கிறிஸ்தவர்கள் தம் மத நம்பிக்கையைக் கைவிட்டு, ரோம தெய்வங்களுக்குப் பலி செலுத்தியதால் அவர்களை மீண்டும் திருச்சபையில் ஏற்றுக்கொள்வது பற்றி கருத்து வேறுபாடு நிலவியது. அத்தகைய கிறிஸ்தவர்களுக்கு மீண்டும் ஒருமுறை திருமுழுக்கு கொடுக்க வேண்டியதில்லை என்று ரோமத் திருச்சபை கருதியது. ஆனால், வட ஆப்பிரிக்கா, சிறு ஆசியா ஆகிய பகுதிகளின் ஆயர்கள், குறிப்பாக கார்த்தேஜ் நகர் ஆயர் சிப்பிரியான், அக்கருத்தோடு உடன்படவில்லை. இதனால் திருச்சபைக்குள் குழப்பம் நிலவியது.


திருத்தந்தை இரண்டாம் சிக்ஸ்டஸ், புனித சிப்பிரியானோடும் பிற ஆயர்களோடும் தொடர்பு கொண்டு நல்லுறவு ஏற்படுத்தினார். இத்தகைய நல்லுறவு ஏற்படுவதற்கு அலெக்சாந்திரிய நகர் ஆயர் தியோனீசிஸ் (இறப்பு: 264/5) என்பவரும் பெரிதும் துணைநின்றார்.


மறைச்சாட்சியாக உயிர்துறத்தல்:

ரோம மன்னன் வலேரியன் முதலில் கிறிஸ்தவ சமயத்தின்பேரில் சகிப்புத்தன்மை காட்டினார். அதன் பின் அதனை மிகவும் கடுமையாகத் துன்புறுத்தலானார். பல ஆயர்களும் குருக்களும் கொல்லப்பட்டனர். கிறிஸ்தவர்கள் வெளிப்படையாகக் கல்லறைத் தோட்டங்களில் வழிபாடு நிகழ்த்துவது தடைசெய்யப்பட்டது. அரசு ஏற்பாடு செய்த வழிபாடுகளில் பங்கேற்று, ரோம தெய்வங்களுக்குப் பலிசெலுத்த கிறிஸ்தவர்கள் வற்புறுத்தப்பட்டார்கள். வலேரியனின் துன்புறுத்தல்களினால் எண்ணற்ற குருக்களும் ஆயர்களும் திருத்தொண்டர்களும் மறைசாட்சியாக கொல்லப்பட்டனர்.


கி.பி. 258ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், 6ம் நாள், கிறிஸ்தவர்கள் வழிபாடு நடத்தியபோது சிக்ஸ்டஸ் ஓர் இருக்கையில் அமர்ந்து மக்களுக்குப் போதித்துக் கொண்டிருந்தார். அப்போது அரச இராணுவத்தினர் திடீரென அங்கு நுழைந்து, திருத்தந்தை சிக்ஸ்டசையும் அவரோடு நான்கு திருத்தொண்டர்களையும் கழுத்தை வெட்டிக் கொன்றார்கள். ஒருசில நாட்களுக்குப் பின், மற்றும் மூன்று திருத்தொண்டர்கள் கிறிஸ்தவ நம்பிக்கைக்காகக் கொல்லப்பட்டார்கள். “ஜானுவரியஸ்” (Januarius), “வின்சென்ஷியஸ்” (Vincentius), “மேக்னஸ்” (Magnus), “ஸ்டீஃபன்” (Stephanus), “ஃபெலிசிஸ்ஸிமஸ்” (Felicissimus) “அகபிடஸ்” (Agapitus) மற்றும் “லாரன்ஸ்” (Lawrence of Rome) ஆகியோர் மறைசாட்சியாக கொல்லப்பட்ட ஏழு திருத்தொண்டர்கள் ஆவர்.


அடக்கம்:

மறைச்சாட்சியாக உயிர்துறந்த இரண்டாம் சிக்ஸ்டசின் உடல் ரோம் கலிஸ்டஸ் (Catacomb of Callixtus) கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது. அவர் கொல்லப்பட்டபோது அமர்ந்திருந்த, இரத்தம் தோய்ந்த இருக்கை அவருடைய கல்லறையின் பின்புறம் அமைக்கப்பட்ட சிறுகோவிலில் வைக்கப்பட்டது.


ஒரு நூற்றாண்டுக்குப் பின், திருத்தந்தை “முதலாம் டாமசஸ்” (Pope Damasus I) என்பவர் (ஆட்சி: 366-384) இரண்டாம் சிக்ஸ்டசின் கல்லறைமீது ஒரு கல்வெட்டு பதித்தார்.


திருவிழா:

புனிதர் இரண்டாம் சிக்ஸ்டசின் நினைவுத் திருவிழா, ஆகஸ்ட் மாதம், 6ம் நாள் கொண்டாடப்படுகிறது. அவருடைய பெயர் ரோம திருப்பலியின் நற்கருணை மன்றாட்டில் சேர்க்கப்பட்டது.

† இன்றைய புனிதர் †

(ஆகஸ்ட் 7)


✠ புனித கஜெட்டன் ✠

(St. Cajetan)


மத சீர்திருத்தவாதி/ ஒப்புரவாளர்:

(Religious Reformer/ Confessor)


பிறப்பு: அக்டோபர் 1, 1480

விசென்ஸா, வெனிட்டோ, வெனிஸ் குடியரசு, தற்போது இத்தாலி

(Vicenza, Veneto, Republic of Venice (Now Italy)


இறப்பு: ஆகஸ்ட் 7, 1547 (வயது 66)

நேப்பிள்ஸ், கம்பேனியா, நேப்பிள்ஸ் அரசு

(Naples, Campania, Kingdom of Naples)


ஏற்கும் சமயம்:

ரோமன் கத்தோலிக்க திருச்சபை

(Roman Catholic Church)


முக்திபேறு பட்டம்: அக்டோபர் 8, 1629

திருத்தந்தை எட்டாம் அர்பன்

(Pope Urban VIII)


புனிதர் பட்டம்: ஏப்ரல் 12, 1671 

திருத்தந்தை பத்தாம் கிளமெண்ட்

(Pope Clement X)


பாதுகாவல்: 

வங்கிப் பணியாளர், வேலையற்ற மக்கள், சூதாட்டம் ஆடுபவர்கள், வேலை தேடுபவர்கள், அல்பேனியா (Albania), இத்தாலி (Italy), ஹம்ருன் (மால்டா) (Ħamrun (Malta), அர்ஜென்ட்டினா (Argentina), பிரேசில் (Brazil), எல் சால்வடார் (El Salvador), குவாடேமலா (Guatemala)


நினைவுத் திருநாள்: ஆகஸ்ட் 7


புனிதர் கஜெட்டன், ஒரு இத்தாலிய கத்தோலிக்க குருவும், மத சீர்திருத்தவாதியும் ஆவார். இவர், “பௌலோ கான்சிக்லியேரி” (Paolo Consiglieri), “போனிஃபேசியோ ட கோல்” (Bonifacio da Colle) மற்றும் “கியோவன்னி பியெட்ரோ கரஃபா” (பின்னாளில் திருத்தந்தை நான்காம் பவுல்) (Giovanni Pietro Carafa (Afterwards Pope Paul IV) ஆகிய மூவருடன் இணைந்து “தியேடைன்ஸ்” – “தெய்வீக தரிசனத்தின் வழக்கமான கத்தோலிக்க சபை” (Theatines - Congregation of Clerics Regular of the Divine Providence) எனும் சபையை நிறுவியவர் ஆவார்.


“கேடனோ டேய் கோன்டி டி தியேன்” (Gaetano dei Conti di Thiene) எனும் இயற்பெயர் கொண்ட இவரது தந்தை, “தியேன்” (Thiene) என்ற இடத்தின் பிரபுவான “காஸ்பர்” (Gaspar) ஆவார். “மேரி போர்ட்டா” (Mary Porta) இவரது தாயார் ஆவார். இவருக்கு இரண்டு வயதாகையில் இவரது தந்தை மரித்துப் போனார். இவரது தாயார் இவரை பக்தி மார்க்கத்தில் வழி நடத்தினார்.


பதுவை நகரில் கல்வி கற்ற கஜெட்டன், தமது இருபத்துநான்கு வயதில் “சிவில் மற்றும் நியதிச் சட்டம்” ஆகியவற்றில் முனைவர் பட்டம் பெற்றார். கி.பி. 1506ம் ஆண்டு, திருத்தந்தை “இரண்டாம் ஜூலியசின்” (Pope Julius II) அரசியல் தூதராக பணியாற்றினார். “வெனிஸ் குடியரசை” (Republic of Venice) சமரசப்படுத்தும் பணியில் இவர் திருத்தந்தைக்கு உதவி புரிந்தார்.


கி.பி. 1513ம் ஆண்டு திருத்தந்தை “இரண்டாம் ஜூலியஸ்” மரணமடைந்ததும் திருத்தந்தையர் அலுவலக சபையிலிருந்து விலகினார். ஆனால், அதுவரை இவர் குருத்துவ அருட்பொழிவு பெறவில்லை. கி.பி. 1516ம் ஆண்டு, தமது முப்பத்தாறு வயதில் இவர் குருத்துவ அருட்பொழிவு பெற்றார். தமது தாயார் மரணமடைந்ததும் சொந்த ஊரான “விசென்ஸா” (Vicenza,) அழைக்கப்பட்ட இவர், அங்கே கி.பி. 1522ம் ஆண்டு குணப்படுத்த இயலாத நோயாளிகளுக்கென ஒரு மருத்துவமனையை நிறுவினார். கி.பி. 1523ம் ஆண்டு, “வெனிஸ்” (Venice) நகரிலும் அதேபோன்றதொரு மருத்துவமனையை நிறுவினார். மருத்துவ சிகிச்சைகளைவிட ஆன்மீக ரீதியான குணமாக்களில் அதிக ஈடுபாடு காட்டினார். ரோம் நகரிலுள்ள “தெய்வீக அன்பின் பிரசங்க கலை” (Oratory of Divine Love) என்றழைக்கப்படும் “தோழமைக் கூட்டுறவில்” (Confraternity) இணைந்தார்.


கி.பி. 1524ம் ஆண்டு, திருத்தந்தை “ஏழாம் கிளமென்ட்டின்” (Pope Clement VII) ஆலோசனையுடன் தமது மூன்று நண்பர்களுடன் இணைந்து “தியேடைன்ஸ்” – “தெய்வீக தரிசனத்தின் வழக்கமான கத்தோலிக்க சபை” (Theatines - Congregation of Clerks Regular of the Divine Providence) எனும் சபையை நிறுவினார். இவரது நண்பர்களில் ஒருவரான “கியோவன்னி பியெட்ரோ கரஃபா” (Giovanni Pietro Carafa) பின்னாளில் திருத்தந்தை “நான்காம் பவுல்” (Pope Paul IV) ஆனார். இவர்களது சபை மிதமான வேகத்தில் வளர்ச்சியடைந்தது. கி.பி. 1527ம் ஆண்டு, பன்னிரண்டு உறுப்பினர்கள் இருந்த நிலையில், ரோம் நகரிலிருந்த இவர்களது சபை அழிக்கப்பட்டது. ஸ்பேனிஷ் பேரரசன் “ஐந்தாம் சார்ளசின்” (Charles V) இராணுவத்தினர் கஜெட்டனை துன்புறுத்தினர். “தியேடைன்ஸ்” சபையின் உறுப்பினர்கள் “வெனிஸ்” (Venice) நாட்டுக்கு தப்பியோடினர்.


அங்கே அவர் புனிதர் “ஜெரோம் எமிளியானியை” (Jerome Emiliani) சந்தித்தார். அவருடன் இணைந்து “சோமாஸ்கன்ஸ்” (Somascans) என்று சுருக்கமாக அழைக்கப்படும் (Congregation of Clerks Regular) எனும் சபையை உருவாக்குவதில் உதவி புரிந்தார்.


கி.பி. 1533ம் ஆண்டு, “நேப்பிள்ஸ்” (Naples) நகரில் ஒரு இல்லம் அமைத்தார். கி.பி. 1540ம் ஆண்டு “வெனிஸ்” (Venice) நகரிலும், அதன்பின்னர் “வெரோனா” (Verona) நகருக்கும் தமது பணிகளை விரிவுபடுத்தினார். ஏழை மக்களுக்கு உதவுவதற்காக வங்கி ஒன்றினை நிறுவினார். அதுவே பின்னாளில் “நேப்பிள்ஸ் வங்கி” (Bank of Naples) என்றழைக்கப்படுகிறது.


கஜெட்டன், கி.பி. 1547ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், 7ம் நாளன்று, “நேப்பிள்ஸ்” (Naples) நகரில் மரணமடைந்தார்.

✠ டோமினிக் ✠

(St. Dominic)


குரு/ டோமினிக்கன் சபை நிறுவனர்:

(Priest/ Founder of the Dominican Order)


பிறப்பு: ஆகஸ்ட் 8, 1170

காலேருவேகா, கேஸ்டில் அரசு, (தற்போதைய ஸ்பெயின்)

(Caleruega, Kingdom of Castile (Present-day Castile-Leon, Spain)


இறப்பு: ஆகஸ்ட் 6, 1221

போலோக்னா, இத்தாலி

(Bologna (Present-day Emilia-Romagna, Italy)


ஏற்கும் சமயம்: 

ரோமன் கத்தோலிக்க திருச்சபை

(Roman Catholic Church)

ஆங்கிலிக்கன் திருச்சபை

(Anglican Church)

லூதரனியம்

(Lutheranism)


புனிதர் பட்டம்: ஜூலை 13, 1234

திருத்தந்தை ஒன்பதாம் கிரகோரி

(Pope Gregory IX)


முக்கிய திருத்தலங்கள்: 

புனித தோமினிக் பசிலிக்கா, போலோக்னா

(San Domenico, Bologna)


நினைவுத் திருவிழா: ஆகஸ்ட் 8


சித்தரிக்கப்படும் வகை

செபமாலை, நாய், விண்மீன், லில்லி மலர், தொமினிக்கன் சபை உடையில் புத்தகம் மற்றும் கைத்தடியோடு


பாதுகாவல்

சோதிடம் (Astronomy); சோதிடர்கள் (Astronomers); டொமினிக்கன் குடியரசு (Dominican Republic); “சேன்டோ டோமிங்கோ புயேப்லோ” (Santo Domingo Pueblo), “வலேட்டா” (Valletta), “பிர்கு” (மால்ட்டா) (Birgu (Malta), “மனகுவா” Managua


பழைய தமிழ் வழக்கில் “புனிதர் சாமிநாதர்” என்றழைக்கப்படும் புனிதர் டோமினிக், “கேஸ்டிலியன்” (Castilian) மொழி பேசும் ஒரு ஸ்பேனிஷ் (Spanish) குருவும் “டோமினிக்கன் சபையின்” (Dominican Order) நிறுவனரும் ஆவார்.


“டொமினிக் ஆஃப் ஆஸ்மா” (Dominic of Osma) என்றும், “டொமினிக் ஆஃப் கலேரிகா” (Dominic of Caleruega) என்றும், “டொமினிக் டி குஸ்மான்” (Dominic de Guzmán) என்றும், “டோமிங்கோ ஃபெலிக்ஸ் டி குஸ்மான்” (Domingo Félix de Guzmán) என்றும் பல பெயர்களில் அறியப்படும் இவர், கி.பி. 1170ம் ஆண்டு, ஸ்பெயின் நாட்டின் “கலேருகா” (Caleruega) என்ற ஊரில் பிறந்தவர் ஆவார். இவரது தந்தையின் பெயர், “ஃபெலிக்ஸ் கஸ்மன்” (Felix Guzman) ஆகும். “ஜுவன்னா” (Juanna of Aza) இவரது தாயார் ஆவார். (ஜுவன்னாவுக்கு, பின்னாளில், கி.பி. 1828ம் ஆண்டு, திருத்தந்தை “பன்னிரெண்டாம் லியோ” (Pope Leo XII) அவர்களால் முக்திபேறு பட்டம் அளிக்கப்பட்டது.) வெகு காலம் குழந்தைப் பாக்கியம் இல்லாது வருந்திய இவரது தாயார் ஜுவன்னா, தமது சொந்த ஊரான “கலேருகாவிலிருந்து” (Caleruega) சில மைல் தொலைவிலிருக்கும் “சிலோஸ்” (Silos) எனும் ஊரிலிருக்கும் “சிலோஸ்” நகர புனிதர் டோமினிக்” (Saint Dominic of Silos) அவர்களின் “பெனடிக்டைன்” (Benedictine abbey) துறவற மடத்திற்கு புனித யாத்திரை சென்றார். அங்கே, ஒரு நாய் தமது வயிற்றிலிருந்து குதித்தோடியதாகவும், அதன் வாயில் ஒரு தீப்பந்தம் இருந்ததாகவும் கனவு கண்டதாக கூறப்படுகிறது.


அதன்பின்னர் அவருக்கு பிறந்த குழந்தைக்கு “சிலோஸ்” நகர டோமினிக்கின்” நினைவாக “டோமினிக்” என்று பெயர் வைத்ததாக ஐதீகம். இலத்தீன் மொழியில், “டோமினி கனிஸ்” (Domini canis) என்றால் கடவுளின் நாய் என்றும் அர்த்தமாம். டோமினிக்கின் தாயார் “ஜுவன்னாவுக்கு” (Juanna of Aza) பிற்காலத்தில், கி.பி. 1828ம் ஆண்டு திருத்தந்தை “பன்னிரெண்டாம் லியோ” (Pope Leo XII) அவர்கள் முக்திபேறு பட்டமளித்தார்.


டோமினிக், “பலேன்சியா” (Palencia) பள்ளிகளில் கல்வி கற்றார். கி.பி. 1191ம் ஆண்டு, ஸ்பெயின் நாட்டில் பஞ்சம் தலைவிரித்தாடியபோது, தம்மிடமிருந்த விலையுயர்ந்த பொருட்கள், ஆடைகள் மற்றும் அனைத்தையும் விற்று பசித்தோர்க்கு உணவிட்டார். கி.பி. 1194ம் ஆண்டு, தமக்கு இருபத்துநான்கு வயதானபோது, “ஒஸ்மா” (Cathedral of Osma) நகர பேராலயத்திலுள்ள “அகுஸ்தினார்” (Saint Augustine) சபையில் இணைந்தார்.


டோமினிக், கி.பி. 1203 அல்லது 1204ம் ஆண்டு, “ஒஸ்மா” ஆயரான (Bishop of Osma) “டியேகோ” (Diego de Acebo) என்பவருடன் இணைந்து “கேஸ்டில்” அரசன் (King of Castile) “எட்டாம் அல்ஃபோன்சோவுக்காக” (Alfonso VIII) அரசு முறை பயணமாக “டென்மார்க்” நாட்டுக்கு பயணமானார். “இளவரசர் பெர்டினாண்டுக்கு” (Prince Ferdinand) டென்மார்க் நாட்டில் திருமணத்துக்கு பெண் பார்க்க செல்வதே இவர்களது பயணத்தின் நோக்கமாக இருந்தது. தூதர்கள், “அராகன்” மற்றும் “தென் ஃபிரான்ஸ்” (Aragon and the South of France) வழியாக டென்மார்க் பயணித்தனர். திருமண பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முடிவடைந்தன. ஆனால் இளவரசி “கேஸ்டிலுக்குப்” (Castile) போகும்முன் இறந்து போனார்.


டோமினிக்கும், ஆயர் “டியேகோவும்” (Diego de Acebo) இணைந்து, தென் ஃபிரான்ஸில் “கத்தார்” (Cathars) எனும் ஒரு இன மக்களை மனமாற்றம் செய்வதற்கான ஒரு திட்டத்தை வகுத்து செயலாக்கினர். (அக்காலத்தில், கி.பி. 12 மற்றும் 14ம் நூற்றாண்டுகளுக்கு இடையேயான காலகட்டத்தில், தென் ஐரோப்பியாவின் சில பகுதிகளில், குறிப்பாக தென் ஃபிரான்ஸில் “கத்தார்” (Catharism) எனும் ஞான மற்றும் இரட்டை நம்பிக்கைகள் கொண்ட கிறிஸ்தவ மத மறுமலர்ச்சி இயக்கம் செழித்தோங்கி இருந்தது. இவ்வியக்கம், கத்தோலிக்க திருச்சபைக்கு எதிரானதாக கருதப்பட்டது.) இதன் ஒரு பாகமாக, “வெர்ஃபில்” (Verfeil), “செர்வியன்” (Servian), “பமியெர்ஸ்” (Pamiers) “மாண்ட்ரியல்” (Montréal) மற்றும் பிற பகுதிகளில் “கத்தோலிக்க – கத்தார்” பொது விவாதங்கள் நடத்தப்பட்டன. உண்மையான புனிதத்தன்மை, மனத்தாழ்ச்சி மற்றும் துறவறம் ஆகியவை கொண்ட பிரசங்கிப்பாளர்களே “கத்தார்” இயக்கத்தினரை வெற்றிகொள்ள இயலும் என முடித்து வைத்தார். டொமினிக்கால் சில “கத்தார்” இயக்கத்தினரை மனமாற்றம் செய்விக்க முடிந்தது.


இவரைப் பின்பற்றும் பிரசங்கிப்பாளர்கள், ஒரு சமூகமாக மாறினார்கள். பின்னர், கி.பி. 1215ம் ஆண்டு, தம்மைப் பின்பற்றும் ஆறு பேர்களுடன் இணைந்து, (Toulouse) என்னுமிடத்தில் ஒரு இல்லத்தை அமைத்தார். அதுவே, பிரபல டோமினிக்கன் சபையின் தொடக்கமாகும். கி.பி. 1216ம் ஆண்டு, டிசம்பர் மாதம், மற்றும் கி.பி. 1217ம் ஆண்டு, ஜனவரி மாதம், புதிய திருத்தந்தை “மூன்றாம் ஹானரியஸ்” (Pope Honorius III) இச்சபைக்கு அங்கீகாரமளித்தார்.


டோமினிக், வளர்ந்து வரும் சகோதர துறவியரின் தொடர்புகளை தக்க வைத்துக் கொள்வதற்காக பரவலாக பயணங்கள் செய்தார். ரோம் நகரை தமது தலைமையகமாகக் கொண்டார்.


டோமினிக் புலால் உண்ணுவதை முழுமையாக விலக்கினார். நோன்பு மற்றும் மௌன விரதம் போன்றவற்றை கடைபிடித்தார். எங்கே சென்றாலும், எப்போதும் தாம் தங்குவதற்காக மோசமான இடவசதி மற்றும் சராசரி ஆடைகளையே தேர்ந்தெடுத்தார். ஆடம்பர படுக்கை வசதியை எப்போதுமே ஏற்றுக்கொண்டதில்லை. பயணங்களின்போது ஆன்மீக புத்தகங்களை படிப்பதிலும் செபிப்பதிலும் ஈடுபட்டார். நகரம் மற்றும் கிராம எல்லைகளை கடந்ததும் தமது காலணிகளை அவிழ்த்துவிட்டு வெறும் கால்களுடனேயே நடப்பார். மழை, புயல் போன்ற இயற்கை சீற்றங்களுக்காக எப்போதுமே முணுமுணுத்தது இல்லை; மாறாக, இறைவனை புகழ்வதிலேயே கருத்தாய் இருப்பார்.


டோமினிக், கி.பி. 1218ம் ஆண்டு, டிசம்பர் மாதம், 21ம் நாளன்று, வட இத்தாலியில், “ஃபுளோரன்ஸ்” (Florence) நகரின் வடகிழக்கிலுள்ள “போலோக்னா” (Bologna) வந்து சேர்ந்தார். கி.பி. 1221ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், 6ம் தேதியன்று, மதியம், தமது ஐம்பத்தொரு வயதில் டோமினிக் மரணமடைந்தார்.


✠ புனித சிலுவையின் தெரெசா பெனடிக்டா ✠

(St. Teresa Benedicta of the Cross)


கார்மேல் சபை அருட்சகோதரி மற்றும் மறைசாட்சி:

(Discalced Carmelite nun and Martyr)


பிறப்பு: அக்டோபர் 12, 1891

ப்ரெஸ்லவ் (சிலேசியா), ஜெர்மனி (தற்போது வ்ரோக்ளோ, போலந்து)

(Breslau, German Empire (Now Wrocław, Poland)


இறப்பு: ஆகஸ்ட் 9, 1942 (வயது 50)

ஔஸ்விட்ஸ் - சித்திரவதை முகாம், பொது அரசு (நாஜி-ஆக்கிரமிக்கப்பட்ட போலந்து)

(Auschwitz Concentration Camp, General Government (German-occupied Poland)


ஏற்கும் சமயம்: 

ரோமன் கத்தோலிக்க திருச்சபை

(Roman Catholic Church)


முக்திப்பேறு பட்டம்: மே 1, 1987 

திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுல்

(Pope John Paul II)

கோலோன், ஜெர்மனி

(Cologne, Germany)


புனிதர் பட்டம்: அக்டோபர் 11, 1998

திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுல்

(Pope John Paul II)


நினைவுத் திருவிழா: ஆகஸ்ட் 9


சித்தரிக்கப்படும் வகை: 

ஒரு புத்தகம் (A book), தீ நாக்கு (Flames), 

கார்மேல் பெண் துறவியின் ஆடையில் தாவீதின் மஞ்சள் நிற விண்மீன் (Yellow Star of David on a Discalced Carmelite nun's habit, Flames, a book)


பாதுகாவல்:

ஐரோப்பா (Europe), பெற்றோரை இழந்தோர் (Loss of Parents), மனம் மாறிய யூதர்கள் (Converted Jews), மறைசாட்சியர் (Martyrs), உலக இளைஞர் தினம் (World Youth Day)


“புனிதர் சிலுவையின் தெரெசா பெனடிக்டா” (St. Teresa Benedicta of the Cross), ரோமன் கத்தோலிக்க மதத்திற்கு மனம் மாறிய ஒரு ஜெர்மானிய - யூத தத்துவயியலாளர் (German Jewish Philosopher) ஆவார். 13 வயதில், யூத மதத்தின் மீது நம்பிக்கை இழந்ததாலும், கத்தோலிக்க திருச்சபையின் மீது கொண்ட உறுதியான விசுவாசத்தாலும், மறைகல்வி பயின்று 1 ஜனவரி 1922 அன்று கத்தோலிக்கராக திருமுழுக்கு பெற்றார். 1934ம் ஆண்டு, “தீவிர கட்டுப்பாடுகளைக் கொண்ட கார்மேல் சபையில்” (Discalced Carmelite) இணைந்து துறவு வாழ்வினை மேற்கொண்டார்.


வரலாறு:

“எடித் ஸ்டைன்” (Edith Stein) எனும் இயற்பெயர் கொண்ட இவர், கி.பி. 1891ம் ஆண்டு, அக்டோபர் மாதம், 12ம் நாள், அப்போதைய ஜெர்மனியின் “ப்ரெஸ்லவ்” (Breslau) நகரத்தில் யூதப் பெற்றோருக்கு 11வது குழந்தையாகப் பிறந்தார். இந்நகரம் தற்போது போலந்து நாட்டில் “வ்ரோக்ளோ” (Wrocław, Poland) என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. யூதர்களின் முக்கிய விழாவான “பிராயச்சித்த நாள்” விழாவின்போது (Day of Atonement) இவர் பிறந்தார். இவருக்கு 2 வயது நடந்த போது இவரின் தந்தை இறந்தார். 


எடித், மெய்யியல் படிப்பில் சிறந்து விளங்கினார். உண்மையைத் தேடுவதிலும் ஆர்வம் கொண்டிருந்தார். இவர் தனது 14வது வயதில் கடவுள் நம்பிக்கையை கைவிட்டார். தன்னை ஒரு நாத்திகர் என்றே அறிவித்தார். ஒரு சிறந்த கத்தோலிக்கப் பேராசிரியரின் விதவை மனைவிக்கு உதவிகள் செய்து வந்தார். இந்த விதவை, தனது அத்தனை துன்பங்களிலும் சிலுவையில் அறையுண்ட இயேசுவில் விசுவாசம் கொண்டிருந்தது இவருடைய வாழ்வை மாற்றியது. 


ஒருசமயம் தனது நண்பரின் இல்லம் சென்றிருந்த சமயத்தில் “புனிதர் அவிலாவின் தெரேசாவின்” (St. Teresa of Ávila) வாழ்க்கை வரலாறு புத்தகம் கிடைத்தது. அதையும் எடுத்து வாசித்தார் எடித். இது அவரது அகக் கண்களை திறந்தது. இதன் விளைவாக திருமறை விளக்க நூல் ஒன்றையும் திருப்பலி புத்தகம் ஒன்றையும் வாங்கி வாசித்தார். கத்தோலிக்க நம்பிக்கையினைத் தழுவினார். 1 ஜனவரி 1922 அன்று திருமுழுக்கு பெற்ற இவர், 1923 முதல் 1931 வரை “ஸ்பேயர்” (Speyer) எனுமிடத்திலுள்ள “டோமினிக்கன் அருட்சகோதரியர் பள்ளியில்” (Dominican nuns' school) கற்பிக்கும் பணி செய்தார்.


எடித் கற்பிக்கும் பணியை விட்டுவிடவேண்டுமென “நாசி அரசாங்கம்” (Nazi government) வற்புறுத்தியது. திருத்தந்தை “பதினோராம் பயஸ்” (Pope Pius XI) அவர்களுக்கு இவர் எழுதிய கடிதமொன்றில், நாஜி ஆட்சியை கண்டனம் செய்த இவர், கிறிஸ்துவின் பெயரைத் துஷ்பிரயோகம் செய்வதை நிறுத்துவதற்காக, நாஜி ஆட்சியை வெளிப்படையாக கண்டனம் செய்ய வேண்டினார். அவர் திருத்தந்தைக்கு எழுதிய இந்த நீண்ட கடிதத்திற்கு திருத்தந்தையிடமிருந்து பதிலேதும் வரவில்லை. கடிதத்தை திருத்தந்தை படித்தாரா என்பதே தெரியாது. (இருப்பினும், 1937ம் ஆண்டு, நாஜி ஆட்சியை கண்டித்து, ஜெர்மனி மொழியில் ஒரு சுற்றறிக்கையை திருத்தந்தை வெளியிட்டார்.)


இதனால் இவர் 1933ம் ஆண்டு அக்டோபர் 14ம் தேதி கொலோன் (Cologne) நகரிலுள்ள “சமாதானத்தின் அன்னை” (St. Maria vom Frieden (Our Lady of Peace) கார்மேல் துறவற (Discalced Carmelite monastery) சபையில் சேர்ந்தார். "சிலுவையின் தெரெசா பெனடிக்ட்டா" என்ற ஆன்மீக பெயரை ஏற்றார். திருச்சிலுவையினால் ஆசீர்வதிக்கப்பட்ட தெரெசா என்பது இதன் பொருள். 


அச்சமயத்தில், 1937ம் ஆண்டில், ஹிட்லரின் நாசிப் படையினர் ஜெர்மனியில் யூதர்களை சித்திரவதை செய்வது தலைதூக்கியது. ஜெர்மனியில் யூதர்களின் எண்ணிக்கை பெருகி வந்ததையும் அவர்களது வளமான வாழ்வையும் ஹிட்லரால் சகித்துக் கொள்ள முடியவில்லை. இதன் அடையாளமாக முதலில் கொலோன் யூதமதத் தொழுகைக் கூடத்தைத் தீக்கிரையாக்கினான் ஹிட்லர். 


எனவே எடித்தின் பாதுகாப்புக்காகவும், கத்தோலிக்கத்துக்கு மாறியிருந்த எடித்தின் இன்னொரு சகோதரி ரோசாவின் (Rosa) பாதுகாப்பிற்காகவும், இவர்களிருவரையும் நெதர்லாந்து நாட்டிலிருந்த “எச்ட்” (Echt, Netherlands) எனும் இடத்திலிருந்த துறவு மடத்துக்கு இவர்களது சபையினர் அனுப்பி வைத்தனர். இறுதியில் நெதர்லாந்திலும் அவர்களுக்கு பாதுகாப்பு இருக்கவில்லை. 


ஹிட்லரின் நாசிப் படைகள் 1940ம் ஆண்டில் நெதர்லாந்தை ஆக்கிரமித்தன. 2 ஆகஸ்ட் 1942 அன்று, தெரேசா, ரோசா மற்றும் பல யூதர்கள் கைது செய்யப்பட்டனர். முதலில் அவர்கள் “அமெர்ஸ்ஃபூர்ட்” மற்றும் “வெஸ்டேர்பொர்க்” (Amersfoort and Westerbork) ஆகிய சித்திரவதை முகாம்களில் அடைக்கப்பட்டனர். “வெஸ்டேர்பொர்க்” முகாமில், எடித்தின் விசுவாசம் மற்றும் அமைதியால் ஈர்க்கப்பட்ட “டட்ச்” அதிகாரி (A Dutch official) ஒருவர், சகோதரியர் இருவரும் தப்பிச் செல்ல ஒரு திட்டம் வகுத்து தந்தார். ஆனால், அதனை எடித் தீர்க்கமாகவும் கடுமையாகவும் அவரது உதவியை மறுத்துவிட்டார். அத்துடன், “இந்த கட்டத்தில் யாரோ ஒருவர் தலையிட்டு, அவரது ஆயிரக்கணக்கான சகோதர சகோதரிகளின் தலைவிதியினைப் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பை எடுத்துவிட்டால், அது முற்றிலும் நிர்மூலமான அழிவு ஆகும்” என்றார்.


1942ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், 7ம் நாளன்று, அதிகாலை, 987 யூதர்கள் “ஆஷ்விட்ஸ்” (Auschwitz) சித்திரவதை முகாமுக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அம்முகாமில் 1942ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், 9ம் தேதியன்று, புனிதர் சிலுவையின் தெரெசா பெனடிக்டாவும் அவரது சகோதரியும் இன்னும் பலரும் நச்சுவாயு அறைகளில் அடைக்கப்பட்டு இறந்தனர்.


திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் (Pope John Paul II), இவரை ஐரோப்பாவின் ஆறு பாதுகாவலர்களுல் ஒருவராகவும் அறிவித்தார்.

✠ புனித லாரன்ஸ் ✠

(St. Lawrence of Rome)


திருத்தொண்டர், மறைசாட்சி:

(Deacon and Martyr)


பிறப்பு: டிசம்பர் 26, 225

வலென்சியா அல்லது ஒஸ்கா, ஹிஸ்பானியா (தற்போதைய ஸ்பெயின்)

(Valencia or less likely Osca, Hispania (modern-day Spain)


இறப்பு: ஆகஸ்ட் 10, 258

ரோம் (Rome)


ஏற்கும் சமயம்: 

ரோமன் கத்தோலிக்க திருச்சபை

(Roman Catholic Church)

கிழக்கு மரபுவழி திருச்சபை

(Eastern Orthodoxy)

ஆங்கிலிகன் சமூகம்

(Anglican Communion)

லூதரனியம் 

(Lutheranism)


முக்கிய திருத்தலம்:

புனிதர் லாரன்ஸ் ஃபுவோரி லெ முரா பேராலய திருத்தலம், ரோம்

(Basilica di San Lorenzo fuori le Mura in Rome)


நினைவுத் திருவிழா: ஆகஸ்ட் 10


பாதுகாவல்: 

கனடா (Canada), இலங்கை (Sri Lanka), நகைச்சுவையாளர்கள் (Comedians), நூலகர்கள் (Librarians), மாணவர்கள் (students), சுரங்கத் தொழிலாளர்கள் (miners), சமையல்காரர்கள் (Chefs), ரோஸ்டர்ஸ் (Roasters), ரோம் (Rome), ரோடர்டாம் (நெதர்லாந்து) (Rotterdam (Netherlands), ஹூஸ்கா (ஸ்பெயின்) (Huesca (Spain), சான் லாரென்ஸ் (San Lawrenz), கோசோ மற்றும் பிர்யூ (மால்டா) (Gozo and Birgu (Malta), பாராங்கை சான் லோரென்சோ சான் பப்லோ (பிலிப்பைன்ஸ்) (Barangay San Lorenzo San Pablo (Philippines), ஏழை (Poor), தீயணைப்பு வீரர்கள் (Firefighters).


புனிதர் லாரன்ஸ், “திருத்தந்தை இரண்டாம் சிக்ஸ்டஸின்” (Pope Sixtus II) கீழே ரோம் நகரில் பணியாற்றி, ரோமப் பேரரசன் “வலேரியன்” (Roman Emperor Valerian) என்பவனது ஆட்சிக் காலத்தில் நடந்த கிறிஸ்தவ துன்புருத்தல்களின்போது கி.பி. 258ம் ஆண்டு கொல்லப்பட்ட ஏழு திருத்தொண்டர்களுள் (Deacon) ஒருவர் ஆவார்.


மரபுகளின்படி, மறைசாட்சிகள் – புனிதர் “ஒரேன்ஷியஸ்” (St Orentius) மற்றும் புனிதர் “பேஷியன்ஷியா” (St Patientia) ஆகியோர் இவரது பெற்றோர் என நம்பப்படுகிறது.


இவர், கிரேக்க குடியும், மிகவும் பிரபலமான மற்றும் மிகவும் மதிப்புமிக்க ஆசிரியர்களுல் ஒருவரும், எதிர்கால திருத்தந்தையுமான இரண்டாம் சிக்ஸ்டசை” (Pope Sixtus II) தற்போதைய “சரகோஸா” (Zaragoza) எனுமிடத்தில் சந்தித்தார். இறுதியில் இருவரும் ஸ்பெயின் (Spain) நாட்டை விட்டு, ரோம் (Rome) நகர் புறப்பட்டுச் சென்றனர். கி.பி. 257ம் ஆண்டு, சிக்ஸ்டஸ் திருத்தந்தையானபோது, அவர் லாரன்ஸையும் இன்னும் ஆறு பேரையும் திருத்தொண்டர்களாக (Deacon) அருட்பொழிவு செய்வித்தார். லாரன்ஸ் இளைஞராக இருப்பினும், அவர்களில் முதன்மைத் திருத்தொண்டராக (Archdeacon of Rome) நியமித்தார்.


ரோமானிய அதிகார வர்க்கம், விதிமுறை ஒன்றினை நிறுவியதாக “கர்தாஜ்” ஆயரான (Bishop of Carthage) “புனிதர் சைப்ரியன்” (St. Cyprian) குறிப்பிடுகிறார். அந்த விதிமுறையில், கண்டிக்கப்பட்ட அனைத்து கிறிஸ்தவர்களும் தூக்கிலிடப்பட வேண்டுமென்றும், அவர்களின் பொருட்கள் மற்றும் சொத்துக்கள் பேரரசின் கருவூலத்தால் பறிமுதல் செய்யப்பட வேண்டுமென்றும் குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறுகிறார்.


“பேரரசன் வலேரியன்” (Emperor Valerian), கி.பி. 258ம் ஆண்டு, ஆகஸ்ட் மாத தொடக்கத்தில், அனைத்து ஆயர்கள், குருக்கள் மற்றும் திருத்தொண்டர்கள் அனைவரும் உடனடியாக தூக்கிலடப்படவேண்டும் என்ற உத்தரவினை வெளியிட்டான். கி.பி. 258ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆறாம் தேதி, “புனிதர் கல்லிக்ஸ்டஸின்” (Cemetery of St Callixtus) கல்லறையில் வழிபாடு நடத்திக்கொண்டிருந்த திருத்தந்தை “இரண்டாம் சிக்ஸ்டஸ்” (Pope Sixtus II) பிடிக்கப்பட்டு, உடனடியாக தூக்கிலிடப்பட்டார்.


சிக்ஸ்டசின் மரணத்தின் பின்னர், திருச்சபையின் சொத்துக்கள் அனைத்தையும் திருப்பி ஒப்படைக்க வேண்டுமென ரோம தலைமை அதிகாரி (Prefect) கட்டளையிட்டான். சம்பவங்களின் ஆரம்ப ஆதாரமாக இருந்த புனிதர் “அம்ப்ரோஸ்” (St Ambrose), சொத்துக்களை ஒன்று திரட்ட தமக்கு மூன்று நாட்கள் அவகாசம் வேண்டுமென லாரன்ஸ் கேட்டதாகவும், இயன்றவரை சொத்துக்களை வேக வேகமாக ஏழைகளுக்கு பகிர்ந்தளித்ததாகவும் கூறுகிறார். சொத்துக்கள் ரோம தலைமை அதிகாரியின் (Prefect) கைகளுக்கு போய் விடக்கூடாதே என்ற அவசரம் அவரது வேகத்திலிருந்தது என்கிறார்.


மூன்றாவது நாள், ஒரு சிறு குழுவை தலைமை தாங்கி வந்த லாரன்ஸ், தலைமை அதிகாரி முன்னிலையில் ஆஜரானதாக கூறுகிறார். திருச்சபையின் சொத்துக்களை ஒப்படைக்குமாறு உத்தரவிடப்பட்டபோது, அவர் தம்முடன் வந்திருந்த எளியவர்கள், ஊனமுற்றோர், பார்வையற்றோர் மற்றும் வேதனையால் துன்புருவோரை அதிகாரியின் முன்னிறுத்தி, இவர்களே திருச்சபையின் உண்மையான சொத்துக்கள் என்றார். “திருச்சபை உண்மையிலேயே செல்வம் மிகுந்தது; உங்களுடைய பேரரசனை விட எவ்வளவோ செல்வம் உள்ளது” என்று, லாரன்ஸ் தலைமை அதிகாரியிடம் அறிக்கையிட்டார். இத்தகைய அறைகூவல், லாரன்ஸை நேரடியாக மரணத்தின் வாயிலுக்கு இட்டுச் சென்றது. கடும் கோபமடைந்த தலைமையதிகாரி, தாம் ஏற்கனவே தயாரித்து வைத்திருந்த, இறைச்சி போன்றவற்றை சுடுவதற்கு பயன்படும் கம்பி போன்ற பெரிய அளவிலான சூடான இரும்பு கம்பிகளில் லாரன்ஸை படுக்கவைத்தான். நெடு நேர வேதனை அனுபவித்த லாரன்ஸ், சிரித்த முகத்துடன், “இந்த பக்கம் வெந்துவிட்டது; மறுபக்கம் திருப்பி போடு” என்றார்.


மரபுப்படி, புனித லாரன்ஸை கௌரவிக்கும் விதமாக, பேரரசர் “முதலாம் கான்ஸ்டன்டைன்” (Emperor Constantine I) ஒரு சிற்றாலயம் அமைத்தார். இது ரோம் நகரின் ஏழு திருப்பயண ஆலயங்களுல் ஒன்றாக துவக்கக்காலம் முதலே கருதப்பட்டது. இவ்வாலயத்தை திருத்தந்தை “முதலாம் டமாஸ்கஸ்” (Pope Damasus I) சீரமைத்து “புனித லாரன்ஸ் பேராலயமாக” (Basilica di San Lorenzo fuori le Mura) மாற்றினார். புனிதர் லாரன்ஸ் மறைசாட்சியாக மரித்த இடத்தில், “புனித லாரன்ஸ் சிறு பசிலிக்கா” (Minor Basilica of San Lorenzo in Panisperna) உருவாக்கப்பட்டது. லாரன்ஸ் மறைசாட்சியாக உபயோகப்பட்ட இரும்புக்கம்பி, அங்கேயே வைக்கப்பட்டுள்ளது.


✠ அசிசியின் புனிதர் கிளாரா ✠

(St. Clare of Assisi)


கன்னியர்/ எளிய பெண்களின் ஆன்மீக துறவற சபை நிறுவனர்:

(Virgin/ Foundress of the Order of Poor Ladies)


பிறப்பு: ஜூலை 16, 1194

அசிசி, இத்தாலி

(Assise, Italy)


இறப்பு: ஆகஸ்ட் 11, 1253 (வயது 59)

அசிசி, இத்தாலி

(Assise, Italy)


ஏற்கும் சமயம்: 

ரோமன் கத்தோலிக்க திருச்சபை

(Roman Catholic Church)

ஆங்கிலிகன் சமூகம்

(Anglican Communion)

லூதரனியம்

(Lutheranism)


புனிதர் பட்டம்: செப்டம்பர் 26, 1255

திருத்தந்தை நான்காம் அலெக்சாண்டர்

(Pope Alexander IV)


முக்கிய திருத்தலங்கள்: 

புனித கிளாரா பேராலயம், அசிசி

(Basilica of Saint Clare, Assisi)


நினைவுத் திருவிழா: ஆகஸ்ட் 11


சித்தரிக்கப்படும் வகை: 

கதிர்ப்பாத்திரம் (Monstrance), பெட்டி (Pyx), எண்ணெய் விளக்கு (Lamp), கன்னியர் சீருடை (Habit of the Poor Clares)


பாதுகாவல்:

கண் நோய் (Eye disease), பொற்கொல்லர் (Goldsmiths), சலவையகம் (Laundry), தொலைக்காட்சி (Television), பின்னல் பணியாளர் (Embroiderers), நல்ல வானிலை, அலங்கார தையல் பணியாளர் (Needleworkers), சாண்டா கிளாரா ப்யூப்லோ (Santa Clara Pueblo), ஒபாண்டோ (Obando)


அசிசியின் புனிதர் கிளாரா, ஒரு இத்தாலிய கிறிஸ்தவ புனிதரும் (Italian Saint), “அசிசியின் புனிதர் ஃபிரான்சிஸ்” (Saint Francis of Assisi) அவர்களின் ஆரம்பகால சீடர்களுள் ஒருவருமாவார். இவர், ஆண்களுக்கான ஃபிரான்சிஸ்கன் சபை ஒழுங்குகளைத் தழுவி, “எளிய பெண்களின் ஆன்மீக துறவற சபையை” (Order of Poor Ladies) நிறுவினார். இவரால் எழுதப்பட்ட இவரது சபையின் சட்ட திட்டங்கள், முதன்முதலாக, ஒரு பெண்ணால் எழுதப்பட்ட சட்ட திட்டங்களாகும். “எளிய பெண்களின் சபை” (Order of Poor Ladies) எனும் பெயர் கொண்ட இவரது சபை, இவரது மரணத்தின் பின்னர், இவரை கௌரவிக்கும் விதமாக, “புனிதர் கிளாராவின் சபை” (Order of Saint Clare) என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. பொதுவாக, இச்சபையினர் “எளிய கிளாராக்கள்” (Poor Clares) என அறியப்படுகின்றனர்.


தொடக்க காலம்:

“சியாரா ஆஃரெடுஸியோ” (Chiara Offreduccio ) எனும் இயற்பெயர் கொண்ட புனிதர் கிளாரா, இத்தாலியின் அசிசி (Assisi) நகரில் பிரபுக்கள் குடும்பமொன்றில் கி.பி. 1194ம் ஆண்டு, ஜூலை மாதம், 16ம் தேதி, பிறந்தார். அசிசியின் “சஸ்ஸோ-ரொஸ்ஸோ” (Sasso-Rosso) பிராந்தியத்தின் பிரபுவான “ஃபேவரினோ ஸ்கிஃப்ஃபி” (Favorino Sciffi) இவரது தந்தை ஆவார். இவரது தாயாரின் பெயர், “ஒர்டோலனா” (Ortolana) ஆகும். 


இவரது தாயாரும் சகோதரியரும்:

கிளாராவின் தாயார் “ஒர்டோலனா” (Ortolana), பிற்காலத்தில் தமது சொந்த மகள் கிளாரா நிறுவிய “எளிய பெண்களின் சபையில்” இணைந்து துறவியானார். பின்னர், தமது கணவரின் மரணத்தின் பின்னர் “புனிதர் தமியான் துறவு மடத்தில்” (Monastery of San Damiano) இணைந்தார். இவர், “அருளாளர் அசிசியின் ஒர்டோலனா” (Blessed Ortolana of Assisi) என்று அறியப்படுகிறார். கிளாராவின் சகோதரியரான “பீட்ரிக்ஸ்” மற்றும் “கத்தரீனா” (Beatrix and Catarina) ஆகியோரும் கிளாராவின் சபையின் இணைந்தனர். இவர்களில் “கத்தரீனா”, புனிதர் “அசிசியின் அக்னேஸ்” (St. Agnes of Assisi) ஆவார்.


துறவற வாழ்வு:

ஆரம்பம் முதலே மிகவும் பக்தியுள்ள பெண்ணாக இவர் வளர்க்கப்பட்டார். இவருக்கு 18 வயது நடந்தபோது, அசிசியிலுள்ள புனித “ஜோர்ஜியோ” தேவாலயத்தில், அசிசியின் புனிதர் ஃபிரான்சிஸ் ஆற்றிய தவக்கால மறையுரையால் ஈர்க்கப்பட்டார். இறைவனின் நற்செய்திகளின்படி வாழ தமக்கு உதவுமாறு ஃபிரான்சிசை வேண்டினார். கி.பி. 1212ம் ஆண்டு, மார்ச் மாதம், 20ம் நாள், குருத்து ஞாயிறு அன்று, தனது அத்தையான “பியான்கா” (Bianca) மற்றும் ஒரு பெண் ஆகிய இரண்டு பேரின் துணையுடன் வீட்டை விட்டு வெளியேறி, ஃபிரான்சிசை சந்திப்பதற்காக “போர்ஸியுன்குலா” சிற்றாலயம் (Chapel of the Porziuncula) சென்றார். அங்கே, தமது அழகிய கூந்தலை மழித்தார். தமது அழகிய விலையுயர்ந்த ஆடைகளை களைந்து, வெற்று மேலங்கி மற்றும் முக்காடு ஆகியவற்றை பெற்றுக்கொண்டார்.


ஃபிரான்சிஸ், அவரை “பஸ்டியா” (Bastia) எனும் இடத்தின் அருகேயுள்ள “புனித பாலோவின் பெனடிக்டின் கன்னியாஸ்திரிகளின் பள்ளியில்” (Convent of the Benedictine nuns of San Paulo) தங்க வைத்தார். அங்கே வந்த கிளாராவின் தந்தை, அவரை வலுக்கட்டாயமாக வீட்டுக்கு அழைத்துச் செல்ல முயற்சித்தார். ஆனால், ஆலயத்தின் திருப்பலி பீடத்தினுள்ளே ஓடிப்போன கிளாரா, முக்காடை விலக்கி, தமது கூந்தலற்ற தலையை காட்டினார்.


ஃபிரான்சிஸ் அவரை மற்றுமொரு பெனடிக்டைன் கன்னியாஸ்திரிகள் மடாலயத்துக்கு (Monastery of the Benedictine Nuns) அனுப்பினார். விரைவில் அவரது தங்கை “கத்தரினாவும்” (Catarina) “அக்னேஸ்: (Agnes) என்ற பெயருடன் அவர்களுடன் இணைந்தார். “புனித தமியானோ தேவாலயத்தின்” (Church of San Damiano) அருகே, ஃபிரான்சிஸ் அவர்களுக்காக கட்டித்தந்த சிறிய குடியிருப்பில் தங்கினார்கள்.


அவர்களுடன் இன்னும் பிற பெண்களும் இணைந்தனர். அவர்கள், “புனித தமியானோவின் ஏழைப்பெண்கள்” (Poor Ladies of San Damiano) என்று அறியப்பட்டனர். கிளாரா, 40 ஆண்டுகள் கடுமையான துறவற தவ வாழ்வை மேற்கொண்டார். மிகுந்த எளிமை, தாழ்ச்சி, தொடர்ச்சியான உண்ணா நோன்பு, மாமிச உணவு உண்ணாமை, தொடர்ந்த மவுனம், காலணிகள் அணியாமை போன்ற கடுமையான தவ முயற்சிகளை மேற்கொண்டார். ஏழைகளின் புதல்வியர் சபை என்று பெயர் கொண்டிருந்த கிளாராவின் துறவற சபை, ஏழைப் பெண்களின் முன்னேற்றத்தையே முக்கிய நோக்கமாக கொண்டிருந்தது.


விசுவாசத் துறவி:

கி.பி. 1224ம் ஆண்டு, அரசன் “இரண்டாம் ஃபிரடெரிக்கின்” (Frederick II) இராணுவத்தினர் அசிசியை கொள்ளையிட வந்தனர். அப்போது, அர்ச்சிஷ்ட நற்கருணை ஆண்டவரை கையிலேந்தியபடி கிளாரா வெளியே வந்தார். நற்கருணை நாதரின் வல்லமையாலும், திடீரென நிகழ்ந்த அற்புதத்தாலும், அரச இராணுவத்தினர் எவருக்கும் யாதொரு துன்பமும் ஏற்படுத்தாமல் திரும்பிப் போனார்கள்.


கிளாரா, நற்கருணை நாதராம் கிறிஸ்து இயேசுவிடம் மிகுந்த அன்பு கொண்டிருந்தார். இவர் இயேசுவின் வல்லமையையும் அன்பையும் தனது வாழ்வில் எப்போதும் உணர்ந்து வாழ்ந்தார். நற்கருணையின் மதிப்பீடுகளான அன்பு, தியாகம் ஆகியவற்றை தனது வாழ்வில் கடைபிடித்து வாழ்ந்து வந்தார்.


"இறைவா, உம் விருப்பம் போல் என்னை நடத்தும்; என் மனம் என்னுடையதல்ல உமக்குரியது" என்று கிளாரா அடிக்கடி செபித்து வந்தார். தன்னோடு துறவற வாழ்வு மேற்கொண்டிருந்த பெண்கள் இறைவனின் அன்பில் வளர இவர் சிறந்த முன்மாதிரியாக விளங்கினார். ஏழை, எளியப் பெண்களின் வாழ்க்கை மேன்மை அடைய மிகவும் ஆர்வமாகவும் கடுமையாகவும் உழைத்தார்.


கி.பி. 1253ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், 11ம் தேதி மரித்த கிளாரா, இறைவனின் அமைதியில் உயிர்த்தார்.


✠ புனித ஜேன் ஃபிரான்செஸ் டி சான்ட்டல் ✠

(St. Jane Frances de Chantal)


நிறுவனர்:

(Foundress)


பிறப்பு: ஜனவரி 28, 1572

டிஜோன், பர்கண்டி, ஃபிரான்ஸ்

(Dijon, Burgundy, France)


இறப்பு: டிசம்பர் 13, 1641 (வயது 69)

மௌலின்ஸ், ஃபிரான்ஸ்

(Moulins, France)


ஏற்கும் சமயம்:

ரோமன் கத்தோலிக்க திருச்சபை

(Roman Catholic Church)


முக்திபேறு பட்டம்: நவம்பர் 21, 1751 

திருத்தந்தை 14ம் பெனடிக்ட்

(Pope Benedict XIV)


புனிதர்பட்டம்: ஜூலை 16, 1767 

திருத்தந்தை 13ம் கிளமென்ட்

(Pope Clement XIII)


முக்கிய திருத்தலங்கள்:

அன்னேஸி, சவோய்

(Annecy, Savoy)


நினைவுத் திருநாள்: ஆகஸ்ட் 12


பாதுகாவல்:

மறக்கப்பட்ட மக்கள்; மாமியார் பிரச்சினைகள்; காணாமல் போன பெற்றோர்;

பிள்ளைகளிடமிருந்து பிரிக்கப்பட்ட பெற்றோர்; விதவைகள்.


மனைவி, தாய், துறவி என பன்முகம் கொண்ட புனிதர் ஜேன் ஃபிரான்செஸ் டி சான்ட்டல், “தூய மரியாளின் திருவருகையின் அருட்சகோதரியர்” (Congregation of the Visitation) எனும் பெண்களுக்கான துறவற சபையின் நிறுவனரும், ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் புனிதரும் ஆவார்.


“பேரன் டி சான்ட்டல்” (Baronne de Chantal) எனும் இயற்பெயர் கொண்ட இவர், ஃபிரான்ஸ் (France) நாட்டின் “டிஜோன்” (Dijon) நகரில் பிறந்த ஜேன், “பர்கண்டி” (Burgundy) மாநில பாராளுமன்ற அரசவை தலைவரின் மகள் ஆவார். பதினெட்டு மாத குழந்தையாய் இருக்கையிலேயே தமது தாயை இழந்த இவர், தமது தந்தையால் கல்வி கற்பிக்கப்பட்டு, அழகும், உற்சாக குணமும் கொண்ட, மகிழ்ச்சியான பெண்ணாக வளர்ந்தார்.


இருபத்தொரு வயதில், “பேரோன் தெ சான்ட்டல்” (Baron de Chantal) என்ற அரச குடும்பத்தைச் சார்ந்த ஒருவருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டார். இருபத்தெட்டு வயதில், ஆறு குழந்தைகளுக்கு தாயானார். இதில் மூன்று குழந்தைகள், குழந்தைப் பருவத்திலேயே மரித்துப் போயின. கி.பி. 1601ம் ஆண்டு நடத்த ஒரு துப்பாக்கி சுடும் பயிற்சியின்போது, விபத்து காரணமாக, “பேரோன் தெ சான்ட்டல்” (Baron de Chantal) இறந்து போனார். ஜேன் அரண்மனையில் வாழ்ந்தபோதும், வரிசையாக தமது குடும்ப அங்கத்தினர்களின் மரணத்தால் மனமுடைந்து போனார். அவரது தாயார், வளர்ப்புத் தாயார், சகோதரி, தமது இரண்டு குழந்தைகள் - இப்போது தமது கணவர் என மரணங்கள் இவரை மனமுடைய வைத்தன.


இதனால் ஆன்மீகக் காரியங்களில் அக்கறைக்காட்டி வந்தார். கற்பு நிலைக்கான உறுதிப்பாடு எடுத்துக்கொண்டார். தாம் வசித்த வீட்டிலேயே தினமும் திருப்பலிகள் நிறைவேற்றும் வழக்கத்தினை ஏற்படுத்தினார். பல்வேறு தொண்டு பணிகளில் ஈடுபட்டார். 75 வயதான இவரது மாமனார், வீண் பிடிவாதமும், கொடூர, ஊதாரி குணமுள்ளவராய் இருந்தார். தமது வீட்டுக்கு திரும்பி வரவில்லையெனில் அவருடைய குழந்தைகளை பரித்துக்கொள்வதாக பயமுறுத்தினார். இத்தனைக்கும், ஜேன் இன்முகத்துடன் நடந்து கொண்டார்.


கி.பி. 1604ம் ஆண்டு, “டிஜொன் சிற்றாலயத்தில் (Sainte Chapelle in Dijon) பிரசங்கிக்க வந்திருந்த “ஜெனீவாவின்” ஆயரான (Bishop of Geneva) புனிதர் “ஃபிரான்சிஸ் டே சலேஸ்” (Francis de Sales) அவர்களை ஜேன் சந்தித்தார். ஆயரை ஜேன் தமது ஆன்மீக வழிகாட்டியாக ஏற்றுக்கொண்டார். தாம் துறவறம் ஏற்க வேண்டுமென்ற தமது விருப்பத்தை தெரிவித்தார். ஆனால், அந்த முடிவினை தாமதப்படுத்துமாறு “ஃபிரான்சிஸ் டே சலேஸ்” அறிவுறுத்தினார். ஜேன், மறுமணம் செய்துகொள்வதில்லை என்றும், தமது ஆன்மீக வழிகாட்டிக்கு கீழ்படிவதாகவும் உறுதி ஏற்றார்.


மூன்று வருடங்களின் பின்னர், “ஃபிரான்சிஸ் டே சலேஸ்” ஜேனிடம் தமது திட்டத்தை கூறினார். வயது, உடல்நிலை, மற்றும் பிற காரணங்களுக்காக ஏற்கனவேயுள்ள ஆன்மீக – துறவற சபைகளில் சேர இயலாத பெண்களுக்கான ஒரு ஆன்மீக துறவற சபையை தோற்றுவிப்பதே அத்திட்டமாகும். அங்கே கன்னியர்க்கான மடம் இருக்காது. ஆனால், ஆன்மிகம் மற்றும் இரக்கத்தின் இயல்பான பணிகள் செய்வதற்கான பூரண சுதந்திரம் இருக்கும் என்றார். எலிசபெத் அம்மாளைக் காண வந்த தூய மரியாளின் நற்குணங்களையும் நல்லொழுக்கங்களையும் முன்மாதிரியாக கொண்டிருக்க வேண்டும். ஆகவே, அவர்கள் தாழ்ச்சியும் சாந்த குணமும் நிறைந்த “திருவருகையின் அருட்சகோதரியர்” (Visitation Nuns) என்றழைக்கப்படுவர் என்றார்.


“திருவருகையின் அருட்சகோதரியர்” சபையை தொடங்குவதற்காக, தென் ஃபிரான்ஸில், ஜெனீவாவுக்கு (Geneva) 35 கிலோமீட்டர் தெற்கேயுள்ள “அன்னேசி” (Annecy) எனுமிடத்திற்கு ஜேன் பயணமானார். கி.பி. 1610ம் ஆண்டு, ஜூன் மாதம், 6ம் தேதி, திரித்துவ ஞாயிறு அன்று, “திருவருகையின் அருட்சகோதரியர் சபை” (Congregation of the Visitation) நிறுவப்பட்டது.


ஊழியங்களில் பெண்களுக்கெதிரான வழக்கமான எதிர்ப்பு இதிலும் இருந்தது. ஆகவே, புனித அகுஸ்தினாரின் (Rule of Saint Augustine) துறவற சட்ட திட்டங்களை இச்சமூகத்தினரிடையே “ஃபிரான்சிஸ் டே சலேஸ்” செயல் படுத்தினார். உடல் நலம் குறைந்த மற்றும் வயோதிக வயது பெண்களை சபையில் ஏற்றுக்கொள்வதற்காக மக்கள் அவரை விமர்சித்தபோது, "நான் என்ன செய்ய வேண்டும் என்று விரும்புகிறீர்கள்? நான் நோய்வாய்ப்பட்ட மக்களையே விரும்புகிறேன். நான் அவர்கள் பக்கத்திலேயே இருப்பேன் என்றார்.


புனிதர் ஃபிரான்சிஸ் டே சலேஸ் (Saint Francis de Sales) அவர்கள் மரித்தபோது, சபை பதின்மூன்று இல்லங்களைக் கொண்டிருந்தது. ஃபிரான்சிஸ் டே சலேஸ் மரணத்தின் பின்னர், “புனிதர் வின்சென்ட் டே பவுல்” (St. Vincent de Paul) இவரது ஆன்மீக வழிகாட்டியாக இருந்தார். “மௌலின்ஸ்” (Moulins) நகரிலுள்ள இவர்களது சபையின் இல்லத்தில், தமது 69 வயதில் ஜேன் மரணத்தின் முன்னர், இவர்களது சபைக்கு 86 இல்லங்கள் இருந்தன. கி.பி. 1767ம் ஆண்டு, சபைக்கு 164 இல்லங்கள் இருந்தன. ஜேன், இயேசுவின் தூய இருதய பக்தியிலும் மரியாளின் (Sacred Heart of Jesus and the Heart of Mary) தூய இருதய பக்தியிலும் மிகவும் ஆர்வமுள்ளவராய் விளங்கினார்.


† இன்றைய புனிதர் †

(ஆகஸ்ட் 13)


✠ புனித போன்டியன் ✠

(St. Pontian)


18ம் திருத்தந்தை:

(18th Pope)


பிறப்பு: கி.பி. 200

சர்டீனியா, ரோமப் பேரரசு

(Sardinia, Roman Empire)


இறப்பு: அக்டோபர் 235

சர்டீனியா, ரோமப் பேரரசு

(Sardinia, Roman Empire)


நினைவுத் திருவிழா: ஆகஸ்ட் 13


திருத்தந்தை போன்டியன் (Pope Pontian) ரோம் நகர (Bishop of Rome) ஆயராகவும், திருத்தந்தையாகவும் கி.பி. 230ம் ஆண்டு முதல், கி.பி. 235ம் ஆண்டு வரை ஆட்சி செய்தவர் ஆவார். அவருக்கு முன் பதவியிலிருந்தவர், திருத்தந்தை “முதலாம் அர்பன்” (Pope Urban I) ஆவார். திருத்தந்தை போன்டியன், கத்தோலிக்க திருச்சபையின் 18ம் திருத்தந்தை ஆவார்.


வரலாறு:

இவருக்கு முந்தைய திருத்தந்தையர்களை விடவும் இவரைப் பற்றி சிறிது அதிக தகவல்கள் கிடைத்துள்ளன. "லிபேரிய பட்டியல்" (Liberian Catalogue) என்னும் ஏட்டை நான்காம் நூற்றாண்டில் தொகுத்த ஆசிரியருக்கு அந்தக் கூடுதல் தகவல்கள் புதிதாக அப்போது கண்டுபிடிக்கப்பட்ட ஒரு திருத்தந்தைக் குறிப்பேட்டிலிருந்து கிடைத்தன.


“ரோம் நகர் ஹிப்போலிடஸ்” (Hippolytus of Rome) என்னும் புகழ்பெற்ற இறையிலார் போன்டியனுக்கு முந்தைய திருத்தந்தையர்கள் ஆட்சிக்காலத்தில் எதிர் – திருத்தந்தையாகச் (Antipope) செயல்பட்டுக் கொண்டிருந்தார். அவரும், போன்டியனும் வேறு திருச்சபைத் தலைவர்களும் திருச்சபைக்கு எதிராக இருந்த “மேக்ஸிமினஸ்” (Maximinus the Thracian) என்ற ரோமப் பேரரசனால் “சர்டீனியா” (Sardinia) தீவுக்கு நாடு கடத்தப்பட்டனர்.


எனவே, போன்டியன் கி.பி. 235ம் ஆண்டு, செப்டம்பர் மாதம், 25ம் நாள் (அல்லது 28ம் நாள்) தமது திருத்தந்தைப் பதவியைத் துறந்தார். ஹிப்போலிடஸ் (Hippolytus of Rome) என்ற எதிர் திருத்தந்தையால் திருச்சபையில் ஏற்பட்ட பிளவும் ஏறக்குறைய அதே சமயத்தில் முடிவுக்கு வந்தது. ஹிப்போலிடஸ் திருச்சபையோடு சமாதானம் செய்துகொண்டார்.


போன்டியன் எவ்வளவு காலம் நாடு கடத்தப்பட்டு வாழ்ந்தார் என்பது தெளிவாகத் தெரியவில்லை. "திருத்தந்தையர் நூல்" (Liber Pontificalis) என்னும் ஏட்டின்படி, போன்டியன் சர்டீனியாவில் உலோகச் சுரங்கங்களில் கட்டாய வேலை செய்ததாலும், கொடூரமாக நடத்தப்பட்டதாலும் இறந்தார். அவர் 'தாவொலாரா' என்னும் தீவில் இறந்ததாகவும் ஒரு மரபு உள்ளது.


உடல் அடக்கம்:

போன்டியனின் நினைவுத் திருவிழா நவம்பர் 19ஆக இருந்தது. பின்னர் போன்டியனுக்கும், ஹிப்போலிடஸுக்கும் ஒரே நாளில், ஆகஸ்ட் 13ம் நாள் விழாக் கொண்டாட தீர்மானிக்கப்பட்டது. அந்த நாளில்தான் அவருடைய உடலின் மீபொருள்கள் கலிஸ்டஸ் (Catacomb of Callixtus) சுரங்கக் கல்லறையில் வைக்கப்பட்டன.


போன்டியனின் மீபொருள்களைத் “திருத்தந்தை ஃபேபியன்” (Pope Fabian) (ஆட்சி: 236-250) என்பவர், ரோம் நகருக்குக் கொண்டு வந்து, கலிஸ்டஸ் (Catacomb of Callixtus) சுரங்கக் கல்லறையில் அடக்கம் செய்தார். அவரது கல்லறையில் வைக்கப்பட்ட கல்வெட்டு 1909ம் ஆண்டு, கண்டெடுக்கப்பட்டது. அதில் "PONTIANOS, EPISK" என்னும் சொற்கள் உள்ளன. அவற்றைத் தொடர்ந்து, "MARTUR" என்னும் சொல் வேறு ஒருவரால் சேர்க்கப்பட்டுள்ளது தெரிகிறது. இதற்கு, "ஆயரும் மறைச்சாட்சியுமான போன்டியன்" என்பது பொருள்.


✠ புனித ரேட்கண்ட் ✠

(St. Radegund)


இளவரசி/ அரசி/ நிறுவனர்:

(Princess/ Queen/ Foundress)


பிறப்பு: கி.பி. 520

துரிங்கியன் பழங்குடியினர்

(Thuringian tribes)


இறப்பு: ஆகஸ்ட் 13, 587 (வயது 66–67)

தூய திருச்சிலுவை மடம், போய்ட்டேர்ஸ், அகிட்டைன், ஃபிரேங்க்ஸ் அரசு

(Abbey of the Holy Cross, Poitiers, Aquitaine, Kingdom of the Franks)


ஏற்கும் சமயம்:

ரோமன் கத்தோலிக்க திருச்சபை

(Roman Catholic Church)

கிழக்கு மரபுவழி திருச்சபை

(Eastern Orthodox Church)


நினைவுத் திருவிழா: ஆகஸ்ட் 13


பாதுகாவல்:

இயேசு கல்லூரி (Jesus College), கேம்ப்ரிட்ஜ் பல்கலைகழகம் (Cambridge)


புனிதர் ரேட்கண்ட், ஒரு துரிங்கியன் இளவரசியும் (Thuringian Princess), ஃபிரேங்கிஷ் அரசியும் (Frankish Queen), போய்ட்டேர்ஸ் (Poitiers) நகரிலுள்ள “திருச்சிலுவை துறவு மடத்தை” (Abbey of the Holy Cross) நிறுவியவருமாவார். ஃபிரான்ஸ் (France) மற்றும் இங்கிலாந்து (England) நாடுகளிலுள்ள பல்வேறு ஆலயங்களின் பாதுகாவலரான இவர், கேம்ப்ரிட்ஜ் (Cambridge) பல்கலையின் இயேசு கல்லூரியின் (Jesus College) பாதுகாவலருமாவார்.


ரேட்கண்ட், ஜெர்மன் (German) நாட்டிலுள்ள, துரிங்கியன் (Thuringian) நிலத்தின் மூன்று அரசர்களில் ஒருவரான “பெர்டாச்சார்” (Bertachar) என்பவரது மகளாவார். ரேட்கண்ட்டின் மாமனான “ஹெர்மன்ஃபிரிட்” (Hermanfrid) என்பவர், “பெர்டாச்சாரை” (Bertachar) சண்டையிட்டு கொன்றுவிட்டு, ரெட்கண்ட்டை கைப்பற்றினான். ஃபிரேன்கிஷ் (Frankish King) அரசன் “தியோடெரிக்” (Theuderic) என்பவனுடன் இணைந்த பிறகு, தமது இன்னொரு சகோதரனான “படேரிக்” (Baderic) என்பவனையும் சண்டையிட்டு தோற்கடித்தான். இருப்பினும், அவரது சகோதரர்களை நசுக்கி, துரிங்கியாவின் கட்டுப்பாட்டை கைப்பற்றிய “ஹெர்மன்ஃபிரிட்”, அரசன் “தியோடெரிக்குடன்” (Theuderic) தத்துவார்த்தத்தைப் பகிர்ந்து கொள்வதற்கான உடன்படிக்கைக்கு மறுப்பு தெரிவித்தான்.


கி.பி. 531ம் ஆண்டு, “தியோடெரிக்”, தமது சகோதரன் “முதலாம் க்லோடேய்ர்” (Clotaire I) என்பவருடன் துரிங்கியா திரும்பினார். இருவரும் இணைந்து ஹெர்மன்ஃபிரிட்’டை தோற்கடித்து, அவரது இராச்சியத்தை வெற்றிகொண்டார்கள். ரேட்கண்ட்டை பொறுப்பேற்றுக்கொண்ட “முதலாம் க்லோடேய்ர்,” அவரை அங்கிருந்து திரும்ப “மெரோவிங்கியன் கௌல்” (Merovingian Gaul) அழைத்துச் சென்றார். ரேட்கண்ட், “முதலாம் க்லோடேய்ரின்” ஆறு மனைவியர் (Wives) அல்லது “திருமணமாகாமல் சேர்ந்து வாழும் பெண்களில்” (Concubines) ஒருவராவார். குழந்தைகள் பெற்றுக்கொள்ளாத ரேட்கண்ட்டின் தர்மசிந்தனை குறிப்பிடப்படுவதாகும்.


கி.பி. 550ம் ஆண்டு, துரிங்கியன் அரச குடும்பத்தின் எஞ்சிய கடைசி ஆண் உறுப்பினர், ரேட்கண்ட்டின் சகோதரர் ஆவார். “முதலாம் க்லோடேய்ர்” அவரையும் கொலை செய்தார். தமது இராச்சியத்தை விட்டு ஓடிப்போன ரேட்கண்ட், திருச்சபையின் பாதுகாப்பை கோரினார். “நோயோன்” (Noyon) ஆயரிடம், தம்மை ஒரு திருத்தொண்டராக (Deaconess) நியமிக்க வலியுறுத்தினார். கி.பி. 560ம் ஆண்டு, போய்ட்டேர்ஸ் (Poitiers) நகரில், “செயின்ட் க்ரோய்க்ஸ்” (Monastery of Sainte-Croix) துறவு மடத்தை நிறுவினார். அங்கே, நோயாளிகள்மீது அக்கறை செலுத்தினார். ரேட்கண்ட், பழம், மீன், முட்டை, இறைச்சி ஆகியவனவற்றை தவிர்த்து, அவரையினங்களையும் காய்கறிகளையுமே உண்டார். செபித்தல் மூலம் நோயாளிகளை குணமாக்கும் அற்புத சக்தி கொண்டிருந்தார் என்று பரவலாக நம்பப்பட்டார்.


அவரது துறவு மடம், கிறிஸ்துவின் உண்மையான திருச்சிலுவையின் மிச்சத்திற்கான பெயரிடப்பட்டது. இவர், உண்மையான திருச்சிலுவையின் மிச்சமொன்றினை, “பைசண்டைன் பேரரசர்” (Byzantine Emperor) “இரண்டாம் ஜஸ்டினிடமிருந்து” (Justin II) பெற்றதாக கூறப்படுகிறது. போய்ட்டேர்ஸ் (Poitiers) ஆயரான (Bishop of Poitiers) “மரோவியஸ்” (Maroveus) அதனை துறவு மடத்தில் ஸ்தாபிக்க மறுத்தும், ரேட்கண்ட்டின் வேண்டுகோளின்பேரில், “டூர்ஸ்” ஆயரான “யூஃப்ரோனியஸ்” (Eufronius of Tours) என்பவரை, அரசன் “சிக்பெர்ட்” (Sigebert) அனுப்பி அதனை ஸ்தாபிக்கச் செய்தார். 


ஆறாம் நூற்றாண்டின் கிறிஸ்தவ துறவியான “ஜூனியன்” (Junian of Maire), ரேட்கண்டின் நெருங்கிய நண்பராவார். நண்பர்களான இவர்கள் இருவருமே கி.பி. 587ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், 13ம் தேதி, ஒரே நாளில் மரித்ததாக கூறப்படுகிறது.


✠ புனித மாக்சிமிலியன் மேரிகோமேரி ✠

(St. Maximilian Mary Kolbe)


குரு, மறைசாட்சி, “அமலோற்பவ அன்னையின் படை” எனும் ஒரு உலகளாவிய கத்தோலிக்க சுவிசேஷ இயக்கத்தின் நிறுவனர்:

(Priest,Martyr and Founder of Militia Immaculatae, a Worldwide Catholic Evangelization Movement)


பிறப்பு: ஜனவரி 8, 1894

ஸுடுன்ஸ்கா வோலா, போலந்து அரசு, ரஷிய பேரரசு

(Zduńska Wola, Kingdom of Poland, Russian Empire)


இறப்பு: ஆகஸ்ட் 14, 1941 (வயது 47)

ஆஸ்விட்ஸ் நாசி இருட்டறை சிறை முகாம், போலந்து

(Auschwitz concentration camp, General Government)


ஏற்கும் சபை/ சமயம்: 

ரோமன் கத்தோலிக்க திருச்சபை

(Roman Catholic Church)

ஆங்கிலிக்கன் திருச்சபை

(Anglican Church)

லூதரன் திருச்சபை

(Lutheran Church)


முத்திபேறு பட்டம்: அக்டோபர் 17, 1971 

திருத்தந்தை ஆறாம் பவுல்

(Pope Paul VI)


புனிதர் பட்டம்: அக்டோபர் 10, 1982 

திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுல்

(Pope John Paul II)


நினைவுத் திருவிழா: ஆகஸ்ட் 14


பாதுகாவல்: 

போதை மருந்து அடிமைகளுக்கு எதிராக, போதை மருந்துப்பொருட்களின் அடிமைகள், குடும்பங்கள், சிறைவைக்கப்பட்ட மக்கள், பத்திரிகையாளர்கள், அரசியல் கைதிகள், சிறைக்கைதிகள், கருக்கலைப்பு மற்றும் கருணைக்கொலைக்கு எதிரான இயக்கம், “அமலோற்பவ அன்னையின் படை” எனும் ஒரு உலகளாவிய கத்தோலிக்க சுவிசேஷ இயக்கம் (Militia Immaculatae)


புனிதர் மாக்சிமிலியன் கோல்ப், போலந்து நாட்டைச் சார்ந்த, ஃபிரான்சிஸ்கன் (Polish Conventual Franciscan Friar) துறவியாவார். மரியாளின் மீது மிகுந்த பக்தி கொண்டிருந்த இவர், 1941ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், 14ம் தேதியன்று, இரண்டாம் உலகப்போரின்போது, ஜெர்மன் நாட்டினரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த போலந்து நாட்டிலுள்ள “ஆஸ்விட்ஸ் நாசி இருட்டறை சிறை முகாமில்” (Auschwitz Concentration Camp) அறிமுகமில்லாத இளைஞர் ஒருவருக்காய் தன் உயிரை கொடுத்தார். இவர், அமலோற்பவ அன்னை மரியாளின் பக்தியைப் பரப்புவதில் மிகவும் தீவிரமாய் இருந்தார். “வார்சாவ்” (Warsaw) எனும் இடத்திற்கருகே, “நியபோகலனோவ்” (Monastery of Niepokalanów) எனும் துறவு மடத்தை நிறுவி அதனை நிர்வாகம் செய்தார். ஒரு வானொலி நிலையத்தையும், இன்னபிற பதிப்பகங்களையும், நிறுவனங்களையும் நிறுவி நடத்தி வந்தார்.


1982ம் ஆண்டு, அக்டோபர் மாதம், 10ம் தேதியன்று, இவரை புனிதராக அருட்பொழிவு செய்வித்த திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுல் (Pope John Paul II) அவர்கள், கோல்பேயை “தொண்டுப்பணிகளின் மறைசாட்சி” (Martyr of Charity) என்றும், “எமது கடினமான நூற்றாண்டின் பாதுகாவலர்” (The Patron Saint of Our Difficult Century) என்றும் அறிவித்தார்.


அன்றைய ரஷிய பேரரசின் (Russian Empire) பாகமான போலந்து அரசின் (Kingdom of Poland) “ஸ்டுன்ஸ்க வோலா” (Zduńska Wola) எனும் இடத்தில் 1894ம் ஆண்டு, ஜனவரி மாதம், 8ம் தேதியன்று, பிறந்த கோல்ப், “ஜூலியஸ் கோல்ப்” (Julius Kolbe) எனும் ஜெர்மன் இன நெசவுத் தொழிலாளியின் இரண்டாவது மகன் ஆவார். “போலிஷ்” (Polish) மருத்துவச்சியான (Midwife) “மரியா” (Maria Dąbrowska) இவரது தாயார் ஆவார். இவருக்கு நான்கு சகோதரர்கள் இருந்தனர். இவர் பிறந்த சிறிது காலத்திலேயே இவர்களது குடும்பம் மத்திய போலந்திலுள்ள “பபியானிஸ்” (Pabianice) எனும் நகருக்கு குடி பெயர்ந்து சென்றது. 


1906ம் ஆண்டு, கோல்ப் சிறுவனாக இருந்தபோது இவருக்கு காணக்கிடைத்த அன்னை மரியாளின் திருக்காட்சி, இவரது வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. பின்னாளில், அவர் அதனை பின்வருமாறு வர்ணிக்கிறார்:

“அந்த இரவு, இறைவனின் தூய அன்னையிடம், ‘எனக்கு என்ன ஆகும்; அல்லது நான் என்ன ஆவேன்’ என்று கேட்டேன். பின்னர், அன்னை இரண்டு கிரீடங்களை கைகளில் ஏந்தியபடி என்னிடம் வந்தார்கள். ஒரு கிரீடத்தின் நிறம் வெண்மை; மற்றொன்றின் நிறம் சிகப்பு. இந்த இரண்டு கிரீடங்களில் ஏதாவது ஒன்றினை ஏற்க தயாராக இருக்கிறாயா என்றார்கள். வெண்ணிற கிரீடத்தை ஏற்றுக்கொண்டால் நான் தூய்மையில் உறுதியாக இருக்க வேண்டும் என்றும், சிகப்பு நிற கிரீடத்தை ஏற்றுக்கொண்டால் நான் ஒரு மறைசாட்சியாக வேண்டும் என்றும் அன்னை சொன்னார்கள். நான், இரண்டையும் ஏற்றுக்கொள்வதாக சொன்னேன்.”


1907ம் ஆண்டு, கோல்பும், அவரது மூத்த சகோதரரான ஃபிரான்சிசும் ஃபிரான்சிஸ்கன் இளம் துறவியர் (Conventual Franciscans) பள்ளியில் இணைந்தனர். 1910ம் ஆண்டு, கோல்ப் புகுமுக துறவறத்தில் (Novitiate) இணைய அனுமதிக்கப்பட்டார். அங்கே, “மாக்சிமிலியன்” (Maximilian) எனும் பெயரை தமது ஆன்மீக பெயராக ஏற்றுக்கொண்டார். தமது முதல் உறுதிப்பாடுகளை 1911ம் ஆண்டிலும், இறுதி உறுதிப்பாடுகளை 1914ம் ஆண்டிலும் ஏற்றார். “மரியா” (Maria) என்ற கூடுதல் பெயரையும் ஏற்றுக்கொண்டார்.


1912ம் ஆண்டு ரோம் (Rome) அனுப்பப்பட்ட கோல்ப், “திருத்தந்தையர் கிரகோரியன் பல்கலைகழகத்தில்” (Pontifical Gregorian University) கல்வி கற்று, 1915ம் ஆண்டு தத்துவ பாடத்தில் முனைவர் பட்டம் வென்றார். 1919ம் ஆண்டு, “புனிதர் பொனவென்சூர் திருத்தந்தையர் பல்கலைகழகத்தில்” (Pontifical University of St. Bonaventure) இறையியலில் முனைவர் (Doctorate in Theology) பட்டம் வென்றார்.


1917ம் ஆண்டு, அக்டோபர் மாதம், 16ம் நாளன்று, பாவிகளையும், கத்தோலிக்க திருச்சபையின் எதிரிகளையும் அன்னை மரியாளின் பரிந்துரை மூலம் மனமாற்றம் செய்விப்பதற்கான “அமலோற்பவ அன்னையின் படை” (Militia Immaculatae) எனும் ஒரு உலகளாவிய கத்தோலிக்க சுவிசேஷ இயக்கத்தினை நிறுவினார்.


கோல்ப் 1918ம் ஆண்டு குருத்துவ அருட்பொழிவு பெற்றார். 1919ம் ஆண்டு, ஜூலை மாதம், புதிதாய் சுதந்திரம் பெற்ற போலந்து (Newly Independent Poland) நாட்டுக்கு திரும்பிச் சென்றார். அங்கே, அமலோற்பவ அன்னை கன்னி மரியாளின் பக்தி முயற்சிகளை பரப்புவதில் தீவிரமாக ஈடுபட்டார். 1919 முதல் 1922ம் ஆண்டு வரையான காலத்தில், “க்ரகோவ் குருத்துவ பள்ளியில்” (Kraków seminary) கற்பிக்கும் பணியாற்றினார். இக்கால கட்டத்தில், இவர் காசநோயால் (Tuberculosis) பாதிக்கப்பட்டார். 1927ம் ஆண்டு, “நியபோகலனோவ்” (Niepokalanów) எனுமிடத்தில் புதியதொரு ஃபிரான்சிஸ்கன் துறவு மடம் ஒன்றினை நிறுவினார்.


1930ம் ஆண்டு முதல் 1936ம் ஆண்டு வரையான காலத்தில், கோல்ப் கிழக்காசிய (East Asia) நாடுகளில் தொடர் மறைப்பணியாற்றினார். முதலில் சீன நாட்டிலுள்ள “ஷங்காய்” (Shanghai, China) சென்றார். அங்கே தமது மறைப்பணிகளில் வெற்றி காண இயலாத கோல்ப், ஜப்பான் (Japan) நாட்டுக்கு சென்றார். அங்கே, ஜப்பானின் “நாகசாகி” (Nagasaki) நகரின் புறநகர் பகுதியில், 1931ம் ஆண்டு ஒரு துறவு மடத்தை நிறுவினார். 1932ம் ஆண்டின் மத்தியில் இவர் இந்தியாவின் மலபார் (Malabar) பகுதிகளுக்கு பயணித்தார். அங்கேயும் அவர் ஒரு துறவு மடத்தை நிறுவினார். ஆனால், சிறிது காலத்தின் பின்னர், அது மூடப்பட்டது.


மிகவும் நலிந்த உடல் நலம் காரணமாக, கோல்ப் 1936ம் ஆண்டு போலந்து திரும்பினார். இரண்டு வருடங்களின் பின்னர், 1938ம் ஆண்டு, “நியபோகலனோவ்” (Niepokalanów) எனுமிடத்தில் ஒரு வானொலி நிலையம் தொடங்கினார்.


ஜெர்மனியின் போலந்து (The Invasion of Poland by Germany) படையெடுப்புடன் இரண்டாம் உலகப்போர் (World War II) தொடங்கியது. கோல்ப் தங்கியிருந்த துறவு மடத்தில் தம்முடன் இருந்த சில துறவியர் உதவியுடன் ஒரு தற்காலிக மருத்துவமனையை நிறுவினார். அவருடைய நகரம் ஜெர்மன் காரர்களால் பிடிபட்ட பிறகு, 1939ம் ஆண்டு, செப்டம்பர் மாதம், 19ம் தேதி, கோல்ப் கைது செய்யப்பட்டார். ஆனால், டிசம்பர் மாதம், 8ம் தேதி, விடுவிக்கப்பட்டார். அவர் ஜெர்மன் குடிமக்களைப் போலவே தனது ஜெர்மனிய வம்சாவளியை அங்கீகரிப்பதற்காக ஜெர்மன் குடிமக்களுக்கு ஒத்த உரிமைகள் வழங்கிய “டட்ச் வோல்க்ஸ்லிஸ்டில்” (Deutsche Volksliste) கையெழுத்திட மறுத்துவிட்டார். விடுவிக்கப்பட்ட கோல்ப், தமது சகா துறவியருடன் இணைந்து, பெரிய போலந்திலிருந்து (Greater Poland) வந்த அகதிகளுக்கு அடைக்கலம் தந்து தங்கவைத்தனர். ஜெர்மானிய துன்புருத்தல்களிலிருந்து சுமார் இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட யூதர்களையும் தமது துறவு மடத்தில் மறைத்து வைத்தனர். இவர்களது துறவு மடம், ஜெர்மானிய நாசிக்களுக்கு எதிரான துண்டுப் பிரசுரங்களை அச்சிடும் அச்சுக்கூடமாகவும் செயல்பட்டது. இவர்களது துறவு மடம், 1941ம் ஆண்டு, ஃபெப்ரவரி மாதம், 17ம் தேதியன்று, ஜெர்மன் அதிகாரிகளால் மூடப்பட்டது. அன்றைய தினமே, கோல்பும் நான்கு துறவியரும் “கெஸ்டபோ” (German Gestapo) என்றழைக்கப்படும் ஜெர்மனிய நாஸி இரகசிய போலீசாரால் கைது செய்யப்பட்டு, “பவியாக்” (Pawiak Prison) சிறையில் அடைக்கப்பட்டனர். மே மாதம், 28ம் தேதி, அங்கிருந்து “ஆசுவிட்ஸ்” (Auschwitz) சித்திரவதை முகாமுக்கு (கைதி # 16670) மாற்றப்பட்டார். அங்கேயும் குருவாக தொடர்ந்து செயல்பட்டதால், கோல்ப் வன்முறைத் துன்புறுத்தலுக்கு ஆளானார்.


1941ம் ஆண்டு, ஜூலை மாத இறுதியில், மூன்று கைதிகள் அங்கிருந்து தப்பித்து சென்றனர். இதனால் கடும் கோபமுற்ற சிறையின் தலைமை அதிகாரி, மேலும் தப்பிக்கும் முயற்சிகளை தடுப்பதற்காக, பத்து கைதிகளை தேர்ந்தெடுத்து, நிலத்தடி பதுங்கு குழிகளில் அடைத்து கொல்ல உத்தரவிட்டான். அவர்களுள் ஒருவரான “ஃபிரான்சிஸ்செக்” (Franciszek Gajowniczek) என்பவர், தமது குடும்பத்தினரை நினைத்து, “என் மனைவி, என் குழந்தைகள்” என்று கதறி அழுதார். இவருக்காக மனமிரங்கிய கோல்ப், அவருக்குப் பதிலாக தாம் செல்ல முன்வந்தார். நீரும் உணவுமின்றி பதுங்கு குழிகளில் அடைபட்டவர்களை கோல்ப் அன்னை மரியாளிடம் செபிக்க தூண்டினார். நீரும் உணவுமின்றி இரண்டு வாரங்கள் கழிந்தபின்னர், கோல்ப் மட்டுமே அங்கே உயிருடன் இருந்தார். மீதமுள்ள எட்டு பேரும் மரித்துப் போனார்கள். காவலர்கள் பதுங்கு குழியை காலி செய்ய எண்ணினார். ஆகவே, “கார்போலிக் அமிலம்” (carbolic acid) என்னும் விஷ ஊசி போட்டு கொல்ல முடிவெடுத்தனர். கோல்ப், அமைதியாக தமது இடது கையை உயர்த்தி விஷ ஊசியை வாங்கிக்கொண்டார்.


✠ புனித டார்ஸிசியஸ் ✠

(St. Tarcisius)


நற்கருணை மறைசாட்சி:

(Martyr of the Eucharist)


பிறப்பு: தெரியவில்லை


இறப்பு: கி.பி. 3ம் நூற்றாண்டு

ரோம் (Rome)


ஏற்கும் சபைகள்:

ரோமன் கத்தோலிக்க திருச்சபை

(Roman Catholic Church)

கிழக்கு மரபுவழி திருச்சபை

(Eastern Orthodox Church)

ஆங்கிலிக்கன் ஒன்றியம்

(Anglicanism)


முக்கிய திருத்தலம்:

கேபிட்டில் இருக்கும் சான் சில்வெஸ்ட்ரோ, ரோம்

(San Silvestro in Capite, Rome)


நினைவுத் திருநாள்: ஆகஸ்ட் 15 (ரோமன் தியாகவியல்)


பாதுகாவல்: பலிபீட சிறுவர்கள் (Altar Servers) மற்றும் புதுநன்மை அல்லது, முதல் நற்கருணை (First Communicants) வாங்குவோர்


புனிதர் டார்ஸிசியஸ், கி.பி. 3ஆம் நூற்றாண்டில் வாழ்ந்திருந்த, ஆதிகால கிறிஸ்தவ திருச்சபையின் மறைசாட்சி ஆவார். அவரைப் பற்றி அதிகம் அறியப்படவில்லை எனினும், கி.பி. 4ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஆட்சிபுரிந்த,  "திருத்தந்தை முதலாம் டமாஸஸ்" (Pope Damasus I) அவர்களது கவிதைத் தொகுப்புக்களிலிருந்து இவரைப்பற்றின விபரங்கள் வெளிப்பட்டன.


டார்ஸிசியஸ் ஒரு சிறுவனாக இருந்தபோது, ரோமப் பேரரசு, பேரரசன் வலேரியன் (Valerian) என்பவனால் ஆளப்பட்டது. கிறிஸ்தவர்கள் இயேசுவை நேசிப்பதாலும், அவருடைய போதனையினாலும் அவர் வெறுத்தார். நிலைமைகள் மோசமாக இருந்த அழுக்கு சிறைகளில் அவர்கள் தூக்கி எறியப்பட்டனர். தியாகிகளாக இருந்த அவர்களில் பலர், அவர்களின் கிறிஸ்தவ நம்பிக்கைகளுக்காக கொல்லப்பட்டனர்.


இந்த கிறிஸ்தவர்கள் எவ்வாறு மறைசாட்சிகள் ஆனார்கள்? அவர்களில் சிலர் அடித்து கொல்லப்பட்டனர். மற்றவர்கள் எரிக்கப்பட்டனர். மற்றும், அனைத்தையும் விட மிகக் கொடூரமானது, அவர்களில் பலர் "கொலிசியம்" (Coliseum) என்று அழைக்கப்படும் ஒரு பெரிய அரங்கில் வீசப்பட்டனர் (இது இன்றும் உள்ளது). அங்கே அவர்கள் சிங்கங்களால் உண்ணப்பட்டனர். இந்த கொடூரமான கொடுமையைப் பார்த்து அதை ரசித்த சக்கரவர்த்திக்கும் அவரது நண்பர்களுக்கும் இது ஒரு விளையாட்டு போல இருந்தது. இருப்பினும், கிறிஸ்தவர்கள் இயேசுவை விசுவாசிப்பதனால், இவை அனைத்தையும் சகித்தார்கள்.


பேரரசனின் ஆட்களிடம் பிடிபடுவதைத் தவிர்ப்பதற்கு, கிறிஸ்தவர்கள் ஜெபிக்க விரும்பினால், தங்கள் வீடுகளில் ரகசியமாக சந்திக்க வேண்டியிருந்தது. நிலைமை மிகவும் ஆபத்தானதாக மாறியபோது, அவர்கள் நிலத்தடி அறைகள் மற்றும் "கேடகோம்ப்ஸ்" (Catacombs) எனப்படும் பத்திகளைக் கட்டினர். இதனால் அவர்கள் பாதுகாப்புடன், ஒன்றாக சந்திக்க முடிந்தது. திருப்பலிகளை ரகசியமாக கொண்டாட, அவர்கள் "கிரிப்ட்கள்" (Crypts) என்று அழைக்கப்படும் தரையில் கீழே பெரிய அறைகளை கட்ட வேண்டியிருந்தது. அங்கு அவர்கள் இறந்தவர்களையும் அடக்கம் செய்தனர்.


கேடகோம்ப்களுக்கான நுழைவாயில்கள் மறைக்கப்பட்டிருந்தன. அவை வழக்கமாக நகரத்திற்கு வெளியே கிறிஸ்தவர்களுக்கு மட்டுமே தெரிந்த தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் இருந்தன. இதே கேடகோம்ப்கள் இன்றும் உள்ளன. அவற்றை ரோம் செல்லும் பார்வையாளர்கள் காணலாம்.


அங்கேதான் அவர்கள் ஜெபிக்கவும், தங்கள் விசுவாசத்தைப் படிக்கவும், திருப்பலி கேட்கவும், புனித ஒற்றுமையைப் பெறவும் கூடினர். தைரியமான ஆயர்கள் மற்றும் பாதிரியார்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்ததால் இது சாத்தியமானது. இதனால் மக்கள் இயேசுவின் உடலையும் இரத்தத்தையும் நற்கருணைக்குள் பெற முடிந்தது. கேடகோம்ப்களின் நுழைவாயில்களை அறிவதை இரகசியமாக பாதுகாப்பதில் கிறிஸ்தவர்கள் எவ்வளவு கவனமாக இருந்தபோதிலும், சில சமயங்களில் புறமதத்தினர் அவற்றைக் கண்டுபிடித்தனர். எனவே, ஏராளமான கிறிஸ்தவர்கள் பிடிபட்டனர் அல்லது சிறையில் அடைக்கப்பட்டனர். அங்கு, ஒவ்வொரு நாளும், அவர்கள் கொல்லப்படுவார்கள் என்று எதிர்பார்த்தார்கள். அவர்கள் அனுபவித்த துன்பங்கள் ஏராளமாக இருந்தபோதிலும், அவர்கள் நற்கருணை இயேசுவைப் பெற விரும்பினார்கள்.


ஒரு நாள், ஆயர் ஒருவர், இதுபோன்ற ஒரு கேடகோம்ப்பில், ஒரு மாபெரும் புனித திருப்பலியினை கொண்டாடவிருந்தபோது, சிறையில் கைதிகளாயிருந்த அவரது சக ஆயர்கள் மற்றும் பாதிரியார்களிடமிருந்து அவருக்கு ஒரு கடிதம் வந்தது. தயவுசெய்து புனித நற்கருணையை அவர்களுக்கு அனுப்புமாறு கேட்டுக்கொண்டனர். இயேசு அவர்களுடன் இருந்தால், அவர்களது அச்சம் குறைவாக இருக்கும், அவரை நேசிக்கும் காரணத்துக்காக ஒரு தியாகியின் மரணத்தை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வார்கள் என்பதை அவர்கள் அறிந்தார்கள். புனித நற்கருணையை கைதிகளிடமும் நோயுற்றவர்களிடமும் எடுத்துச் செல்வது மிகவும் ஆபத்தானது என்பதால், ஆயருக்கு இது ஒரு பிரச்சினையாக இருந்தது.


புனித திருப்பலியினை தொடங்குவதற்கு முன், ஆயர் அங்குள்ள மக்களிடம், நற்கருணை இயேசுவை கைதிகளுக்கு எடுத்துச் செல்ல சிறந்த நபரைத் தேர்வுசெய்ய ஜெபிக்கும்படி கேட்டார். பாதிரியார்கள் அவ்வாறு செய்வது இப்போதுள்ள காலகட்டத்தில் மிகவும் ஆபத்தானது என்பதால், சந்தேகத்தைத் தூண்டாத வேறு சில நல்லவர்களைத் தேர்ந்தெடுப்பது முக்கியம் என்றார்.


திருப்பலி முடிந்தவுடன், ஆயர், ‘இந்த துணிச்சலான பணியை யார் செய்ய தயாராக இருக்கிறீர்கள்’ என்று கேட்டார்.  டார்ஸிசியஸ் என்ற பலிபீட சேவை சிறுவன் ஒருவன் எழுந்து நின்று, “என்னை அனுப்புங்கள்” என்றான். சிறுவன் மிகவும் இளமையாக இருந்ததால், அது ஆபத்தில் முடியக்கூடும் என்று ஆயர் நினைத்தார். ஆனால் டார்ஸிசியஸ், தாம் மிகவும் இளமையாக இருப்பதால் யாரும் தம்மை சந்தேகிக்க மாட்டார்கள் என்று, ஆயரை நம்ப வைத்தான். நற்கருணையில் வாழும் இயேசுவிடம் டார்ஸிசியஸ் வைத்திருந்த ஆழ்ந்த அன்பை எல்லா கிறிஸ்தவர்களும் அறிந்திருந்தனர். எனவே ஆயர், சிறுவனின் வாய்ப்பை தர ஒப்புக்கொண்டார்.


ஒரு துணியில் பொதியப்பட்டு, சிறு பேழை ஒன்றினுள் வைக்கப்பட்ட சில நற்கருணைகள்,  டார்ஸிசியசிடம் ஒப்படைக்கப்பட்டன. டார்ஸிசியஸ் அதனை, தமது மார்புக்கு மேலாக உள்ள அங்கியினுள்ளே மறைத்துக்கொண்டார். தன்னுடைய பராமரிப்பில் ஒப்படைக்கப்பட்ட பரலோக பொக்கிஷங்களை நினைவில் கொள்ளும்படி ஆயர் கேட்டுக்கொண்டார். உண்மையாகவே இயேசு வாழும் இந்த புனிதமான அருட்பிரசாதனங்களை உண்மையுடனும் பாத்திரமாகவும் பாதுகாக்க, நெரிசலான தெருக்களைத் தவிர்க்குமாறு வேண்டினார். அவற்றை விட்டுவிடுவதைவிட,  தாம் தமது உயிரையே விட்டுவிடுவதாக கூறிய டார்ஸிசியஸ் புனிதப் புதையலான அவற்றை பற்றிக்கொண்டு சிறை நோக்கி புறப்பட்டார்.


"நோட்ரே டேமின்" (Notre Dame) அருட்சகோதரி ஒருவர், இங்கிருந்து கதையை எடுத்துக்கொள்கிறார்:


ஓ, எங்கள் ஆசீர்வதிக்கப்பட்ட இறைவனை தனது இதயத்திற்கு மிக நெருக்கமாக சுமந்தபோது டார்ஸிசியஸ் எவ்வளவு மகிழ்ச்சியையும், பெருமையையும் உணர்ந்தார்! அவர் கடந்து வந்த இடங்களையோ மக்களையோ விட்டுவிடும் எண்ணங்கள் அவருக்கு இல்லை. அவர் சுமந்த இயேசுவைப் பற்றி மட்டுமே நினைத்திருந்தார்.


"ஓ, அன்புள்ள இயேசுவே, நான் உன்னை எப்படி நேசிக்கிறேன்," என்று அவர் கிசுகிசுத்தார். "உங்கள் சின்னஞ்சிறிய தூதராக என்னைத் தேர்ந்தெடுத்திருப்பது எவ்வளவு நல்லது. சிறையில் இருக்கும் இந்த நல்ல மனிதர்களைப் போல நானும் உங்களுக்காக எவ்வளவு வேண்டுமானாலும் மனமுவந்து துன்பப்படுவேன், இறப்பேன். ஒருவேளை, ஒரு நாள், நீங்களும் என் உயிரை உங்களுக்காக அர்ப்பணிக்க அனுமதிப்பீர்கள்.”


இது போன்ற நேசமிகு வார்த்தைகளை கிசுகிசுத்தவாறு, அவர் விரைவாகச் சென்றார். அவர் இப்போது நெடுஞ்சாலையிலிருந்து வெளியேறி கேடகோம்ப் சாலையில் இருந்தார். அங்கு அவர் தனது பள்ளித் தோழர்கள் உள்ள ஒரு குழுவைக் கடந்தார். விளையாடுவதற்கு ஒரு அணியை உருவாக்க எண்ணிய அவர்களுக்கு ஒரே ஒரு நபர் தேவைப்பட்டார். டார்ஸிசியஸைப் பார்த்த அவர்கள், அவரை நிறுத்தி அவர்களுடன் சேர அழைத்தனர்.


"நான் வருந்துகிறேன், ஆனால் நான் ஒரு முக்கியமான செய்தி கொண்டுபோகிறேன்" என்ற அவர், விரைந்து சென்றார். ஆனால் அவரைப் பிடித்துக்கொண்ட சிறுவர்கள், அவரை விட மறுத்தனர்.


டார்ஸிசியஸ் தனது கைகளை மார்பகத்துடன் இறுக்கமாகப் பிடித்திருப்பதைப் பார்த்த ஒருவன், "உன்னிடம் என்ன இருக்கிறது நான் பார்க்கிறேன்" என்றான்.


"இல்லை, இல்லை," என்று டார்ஸிசியஸ் அழுதார். தன்னை விடுவிக்க போராடினார். அவரது கவலை அவர்கள் அனைவரையும் ஆர்வமாக்கியது. மேலும் அவர்கள் அனைவரும் ஒன்றாக அவரது கைகளை இழுக்க முயன்றனர்.


"என் இயேசுவே, என்னை பலப்படுத்துங்கள்" என்று டார்ஸிசியஸ் கிட்டத்தட்ட மூச்சைப் பிடித்து முணுமுணுத்தார். ஆனால், அவரது வார்த்தைகளைக் கேட்டுவிட்ட ஒரு சிறுவன், “அவன் ஒரு கிறிஸ்தவன். அவன் மர்மமான ஏதோ சில கிறிஸ்தவ பொருளை அங்கே மறைக்கிறான்” என்று, மற்றவர்களிடம் கூக்குரலிட்டான்.


இதனால் ஆர்வம் அதிகமான சிறுவர்கள், டார்ஸிசியஸ் என்னதான் வைத்திருக்கிறார் என்று பார்த்துவிடுவது என்று தீர்மானித்தார்கள். எனவே அவர்கள் கல்லெறிந்து, உதைத்து, அவரைத் தாக்கினார்கள். அவருடைய கைகளை விலக்க தங்களால் முடிந்ததைச் செய்தார்கள். ஆனால் அவர்களால் அவரது பிடியைத் தளர்த்த முடியவில்லை.


அந்த வழியாகச் சென்ற வழிப்போக்கன் ஒருவர், என்ன விஷயம் என்று கேட்டார். "அவன் ஒரு கிறிஸ்தவன், மர்மமான சில கிறிஸ்தவ பொருளை சுமந்து வருகிறான். நாங்கள் அவனிடமிருந்து அதைப் பெற முயற்சிக்கிறோம்" என்று சிறுவர்களில் ஒருவன் கத்தினான்.


"அவன் ஒரு கிறிஸ்தவன் என்றா சொன்னாய்?" என்ற வழிப்போக்கன், டார்ஸிசியஸை கொடூரமாக அடித்து கீழே தள்ளினான்.


இந்த தருணத்தில், அந்த வழியாக வந்த ஒரு படை வீரன், கூட்டத்தை நோக்கி விரைந்து சென்று, அவர்களை வலது மற்றும் இடதுபுறமாக சிதறடித்து விரட்டினான். பின்னர், குனிந்து டார்ஸிசியஸை தனது கைகளில் தூக்கினான்.


"கோழைகளே” என்று கத்திய படை வீரன், "ஒரு சிறிய பையனை எல்லாரும் சேர்ந்து அடிக்கிறீர்களே" என்ற அவர் விரைவாக வீதியில் இறங்கி அமைதியான பாதையில் விரைந்தார். டார்ஸிசியஸின் தலைமுடியை கோதிய அவர், "டார்ஸிசியஸ் பையா" என்று செல்லமாக அழைத்தார். கண்களைத் திறந்து பார்த்த டார்ஸிசியஸ், அவர், கேட்டக்கோம்பில் தாம் அடிக்கடி சந்தித்துள்ள ஒரு கிறிஸ்தவர் என்பதை உணர்ந்தார்.


"நான் இறந்து கொண்டிருக்கிறேன், ஆனால் நான் என் கடவுளை அவர்களிடமிருந்து பாதுகாத்துவிட்டேன்" என்று அவர் கூறினார். அவர் தனது விலைமதிப்பற்ற புதையலை படைவீரனிடம் ஒப்படைத்தார். அவர் அதை தனது அங்கிக்குள் பயபக்தியுடன் வைத்துக்கொண்டார். "எனக்காக அவரை சிறைக்குள் அழைத்துச் செல்லுங்கள்" என்று டார்ஸிசியஸ் கூறினார். ஒரு மென்மையான பெருமூச்சுடன் அவர் மீண்டும் சிப்பாயின் கைகளில் விழுந்தார். அவருடைய சிறிய ஆத்மா ஏற்கனவே கடவுளோடு ஒன்றிப்போயிருந்தது. அவருக்காக அவர் விருப்பத்துடன் தமது உயிரைக் கொடுத்தார். ஏனென்றால், "ஒரு மனிதன் தன் நண்பனுக்காக உயிரைக் கொடுப்பதைவிட, பெரிய அன்பு வேறு எதுவுமில்லை" என்று இயேசு ஒருமுறை சொல்லியிருக்கிறார்.


சின்னஞ்சிறு டார்ஸிசியஸ் நண்பர்களின் நண்பரான இயேசு கிறிஸ்துவுக்காக தனது உயிரைக் கொடுத்தார்!


டமாஸிசியஸை, திருத்தொண்டர் புனிதர் ஸ்தேவானுடன் (Deacon, Protomartyr of The Faith, Saint Stephen) ஒப்பிடும் திருத்தந்தை முதலாம் டமாசுஸ், (Pope Damasus I), "ஸ்தேவான் ஒரு கூட்டத்தினரால் கல்லெறியப்பட்டு கொல்லப்பட்டதை போலவே, டமாஸிசியஸும் ஆசீர்வதிக்கப்பட்ட நற்கருணையைச் சுமந்த காரணத்துக்காக கல்லெறியப்பட்டு கொல்லப்பட்டார்" என்கிறார்.


ஆகஸ்ட் மாதம் 15ம் நாளன்று இவரது நினைவுத் திருநாள் நினைவுகூரப்படுகிறது. இந்நாளானது, அன்னை மரியாளுடைய (Feast of the Assumption) விண்ணேற்பு தின விழாவாக கொண்டாடப்படுவதால், இவருடைய நினைவுத் திருநாள், பொது ரோமானிய நாட்காட்டியில் (General Roman Calendar) குறிப்பிடப்படவில்லை. ஆனால் ரோமானிய தியாகவியலில் (Roman Martyrology) மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது.


✠ தூய கன்னி மரியாளின் விண்ணேற்பு ✠

(The Assumption of Mary)


திருவிழா நாள்: ஆகஸ்ட் 15


அன்னை மரியாள் ஆன்மாவோடும் உடலோடும் விண்ணக மகிமைக்குள் எடுத்துக் கொள்ளப்பட்டதை சற்று ஆராய்வோம்.


பூலோகத்தில் பெற்ற தாயைப் போற்றாத ஜீவன் இல்லை. தாயை மதிப்பதாலேயே தாய் நாடு என்றும் தாய் வீடு என்றும் சொல்கிறோம். தாயிற் சிறந்ததொரு கோயில் இல்லை என்றும், அன்னை ஓர் ஆலயம் என்றும் பெருமை பாராட்டித் தாயைத் மதிக்கிறோம். இந்த தாய்களுக்கெல்லாம் தாயாக விளங்குபவர் அன்னை மரியாள். மண்ணகத் தாய் இம்மண்ணகத்தில் மட்டும்தான் தாய். ஆனால், தாய் மரியாளோ மண்ணகத்திற்கும் விண்ணகத்திற்கும் தாய். அவர் என்றும் வாழும் தாய்! அன்னை மரியாள் இறைவன் தேர்ந்து கொண்ட ஆலயம். இறை இயேசு உறைந்த ஆலயம். மாசு மருவற்ற பரிசுத்த ஆலயம்.


தம் இறை மகனாம் இயேசுவின் வாழ்க்கையை ஜெபமாலையாக்கி தியானிக்கச் செய்த ஜெபமாலை மாதா. பாவச் சேற்றில் விழும் மாந்தர் பரமனிடம் சென்று யாசிக்கப் பயப்படும்போது வலிமையுள்ள மிகச் சிறந்த பரிந்துரையாளர்தான் நம் தாய் மரியாள்.


வரலாற்றில், விவிலியப் பக்கங்களில், மரியாள் பற்றிய ஆதார தகவல்கள் மிக சொற்பமே. மரியன்னை தம் தாழ்ச்சியினால் உலகிற்கு மறைக்கப்பட்டு இருந்தார்கள். ஏன் நற்செய்தியாளர்கள் லூக்கா உட்பட அன்னையை முழுமையாக அறிந்திருக்கவில்லை. நாமும் அன்னையைப் பற்றி முழுமையாய் அறியவில்லை. எனவே தான் திருச்சபையும் புனிதர்களும் அவரை "மறைந்த இரகசிய அன்னை" என அழைக்கின்றனர்.


எனினும், மீட்பு வரலாற்றில் அவரின்ன் இடம் நிகரற்றதே. இறைவன் தமது திருச்சபையின் ஊடக அன்னையை பெருமைப்படுத்த திருவுளம் கொண்டார். திருச்சபைக்கு தாம் கொடுத்த அதிகாரத்திற்கு அமைய மண்ணுலகில் அன்னையின் "வணக்கம்" அனுமதிக்கப்பட்டது. எனவே விண்ணுலகிலும் அனுமதிக்கப்பட்டது. எனவே அன்னை மரியாள் திருச்சபைக்கு தாயாகவும், உலகிற்கு தாயாகவும், குடும்பத்திற்கு தாயாகவும் உயர்த்தப்பட்டார்.


ஏனோக், எலியா போன்ற சிலர் மண்ணுலக வாழ்விலிருந்து விண்ணுலக வாழ்விற்கு எடுத்துக்கொள்ளப்பட்டதாக விவிலியம் கூறுகிறது. மரியாளின் விண்ணேற்பு பற்றி விவிலியம் தெளிவுறக் கூறாவிடினும் அது மனிதரின் முடிவில்லா வாழ்வு பற்றிய படிப்பினைக்கு உரியதே. (யோவா 6 : 54, 11 : 27) என்பதில் சந்தேகமில்லை. இவற்றில் எல்லாம் உலகில் இறுதி நாளில் நிகழவிருக்கின்ற மனிதரின் உயிர்ப்பைப் பற்றித்தான் சொல்லப்படுகிறது. எனவேதான் யோவான் நற்செய்தியாளர் கூறுகையில், எல்லாவற்றையும் ஒவ்வொன்றாக எழுதினால் இந்நூலை இவ்வுலகமே கொள்ளாது என்றார். (யோவான் 21 : 25)


இதனால்தான் ஏறக்குறைய கி. பி. 3ம் நூற்றாண்டில் தொடங்கிய இந்த நம்பிக்கை கி. பி. 20ம் நூற்றாண்டில்தான் (1950) திருச்சபையால் விசுவாச உண்மையாக அறிவிக்கப்பட்டது. விசுவாசக் கண்கொண்டு நோக்கினால் மரியாளின் விண்ணேற்பிற்குப் பல காரணங்கள் புலப்படும்.


பாவ மாசு எதுவுமின்றி அன்னை மரியாள் பிறந்ததால், சாவிலும் அது அவரை தன் பிடிக்குள் வைத்திருக்க இயலவில்லை. பாவத்தின் விளைவான சாவும் அழிவும் அவரை அண்ட முடியவில்லை.


கருவறை தொடங்கி கல்லறைவரை கடவுளின் விருப்பத்தை நிறைவேற்றினார் அன்னை மரியாள். இயேசு தம் சிலுவைச் சாவால் பெற்றுத் தந்த மீட்பின் பலனை அனுபவிக்கும் முதற் கனியாக அன்னை மரியாள் விளங்குகிறார்.


வான தூதர் கபிரியேலின் வாழ்த்துச் செய்தியைக் கேட்ட மரியாள் "ஆகட்டும்" என்று கூறி இறை மகனை தன்னில் ஏற்றுக்கொண்டார். வார்த்தையானவரின் மண்ணக வாழ்வு தொடங்கியது இவ்வாறே. மரியின் மண்ணக வாழ்வு நிறைவுற்றபோது, இறைமகனும் "ஆகட்டும்" என்று கூறி தம் அன்னையை விண்ணில் ஏற்றுக்கொண்டார்.


மரியாளின் விண்ணக வாழ்வு தொடங்கியது. ஆக இயேசுவின் இந்த ‘ஆகட்டும்’ என்பது மரியாளின் ‘ஆகட்டும்’ என்பதன் எதிரொலி.


இவ்வாறு இறைவிருப்பத்திற்குத் தன்னை ஒப்படைத்த மரியாள் வார்த்தையானவர். மனுவுடலேற்பதற்குத் தேவையான உடலைக் கொடுத்தார். வார்தையையே தம் கருவில் சுமந்தார். ‘ஆகட்டும்’ என்ற நாளிலிருந்து கிறிஸ்துவின் பிறந்தநாள் வரை மரியாளின் உடலும் மாபரன் கிறிஸ்துவின் உடலும் ஈருயிர் ஓருடலாய் இருந்தன.


இவ்வாறு மரியாளிடமிருந்து உதித்த இயேசுவின் உடல் உயிர்ப்பின் மகிமையடைந்து விண்ணக மாட்சியில் வீற்றிருக்கும்போது இங்கு மரியாளின் உடல் மட்டும் கல்லறையில் கறையான்களால் அரிக்கப்படுமா என்ன?


இறைமகன் இயேசுவிற்கு தம் வாழ்வை அர்ப்பணித்து புனித வாழ்கை வாழ்ந்த புனிதர்களின் உடலையே அழியாது காத்து பெருமைப்படுத்திய இறைவன், இறைமகன் இயேசுவையே தம் கருவில் சுமந்த மரியாளின் உடல் மட்டும் கல்லறையில் கறையான்களால் அரிக்கப்படுமா என்ன?


பழைய ஏவாளால் உலகில் நுழைந்தது சாவு. புதிய ஏவாள் மரியாளால் உலகில் நுழைந்தது வாழ்வு. வாழ்வின் ஊற்றாய் அமைந்தவரை சாவிற்கே சாவு மணியடித்தவரை ஈன்ற தாயின் உடல் சாவின் பிடியில் சிக்கிச் சீரழிவது சாத்தியமா என்ன?


விண்ணேற்பு விழாவை நாம் பின்நோக்கிப் பார்க்கும் போது இறைவனின் தாய் என்ற சிறப்புடன் கி. பி. ஐந்தாம் நூற்றாண்டின் மையத்திலிருந்து எபேசு நகரிலும் ரோமிலும் நம் அன்னைக்கு ஆலயங்கள் உள்ளன என்பது வரலாற்று உண்மை. கி. பி 370 லேயே அந்தியோக் நகரில் என்றும் கன்னியான தேவனின் தாய்க்குரிய சிறப்புத் திருவழிபாடுகள் நடைமுறையில் இருந்து வந்துள்ளன. அப்பொழுதெல்லாம் ‘மரியாளின் வானகப்பிறப்பு’ என்ற தலைப்பில் மட்டுமே நிகழ்வுகள் நடைபெற்றிருக்கின்றன. மெல்ல மெல்ல இவ்விழாவிற்குப் ‘பிறந்தநாள்’ எனவும் ‘துயில் கொள்ளல்’ எனவும் ‘சென்றுவிட்டார்’ எனவும் ‘விண்ணேற்பு’ எனவும் பெயர்கள் சூட்டப்பட்டன. எனவே மரியன்னை ஆன்மாவோடும் உடலோடும் விண்ணகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டார் என்று விசுவாச சத்தியமாக அறிவிக்கப்பட்டது.


"அன்னை மரியாளை அதிகம் அன்பு செய்வது பற்றி ஒருபோதும் பயப்பட வேண்டாம். இயேசுவைவிட அதிகமாக நீங்கள் அவரை ஒருபோதும் அன்பு செய்ய முடியாது."


✠ ஹங்கேரியின் புனித முதலாம் ஸ்டீஃபன்  ✠

(St. Stephen I of Hungary)


ஹங்கேரியின் அரசர்:

(King of Hungary)


பிறப்பு: கி.பி. 975

எஸ்டர்காம், ஹங்கேரி

(Esztergom, Principality of Hungary)


இறப்பு : ஆகஸ்டு 15, 1038,

எஸ்டர்காம், ஹங்கேரி அரசு

(Esztergom or Székesfehérvár, Kingdom of Hungary)


புனிதர் பட்டம் : 1083

திருத்தந்தை ஏழாம் கிரகோரி

(Pope Gregory VII)


பாதுகாவல்: ஹங்கேரி


நினைவுத் திருநாள் : ஆகஸ்ட் 16


புனிதர் முதலாம் ஸ்டீஃபன், கி.பி. 997ம் ஆண்டு முதல் கி.பி. 1000 அல்லது 1001ம் ஆண்டு வரையான காலத்தில் பதவியிலிருந்த ஹங்கேரியர்களின் கடைசி மகா இளவரசரும் (Grand Prince of the Hungarians), கி.பி. 1000 அல்லது 1001ம் ஆண்டு முதல், 1038ம் ஆண்டில் அவர் இறக்கும் வரை ஆட்சியிலிருந்த ஹங்கேரியின் முதல் அரசனும் (First King of Hungary) ஆவார். இவர் பிறந்தபோது, இவருக்கு பேகனிய பெயரான (Pagan name) “வஜ்க்” (Vajk) என்ற பெயர் இடப்பட்டது. இவரது திருமுழுக்கு பற்றின விவரங்கள் தெரியவில்லை. ஹங்கேரி நாட்டின் மகா இளவரசர் “கேஸா” மற்றும் “சரோல்ட்” (Grand Prince Géza and Sarolt) ஆகியோர் இவரது பெற்றோர் ஆவர். இவரது பெற்றோர் இருவருமே திருமுழுக்கு பெற்றிருப்பினும், இவர்களது குடும்ப உறுப்பினர்களில், பக்தியுள்ள கிறிஸ்தவரான முதல் உறுப்பினர் ஸ்டீஃபன் ஆவார். தூய ரோம பேரரசன் “இரண்டாம் ஹென்றியின்” (Henry II, Holy Roman Emperor) சகோதரியான “கிசேலாவை” (Gisela of Bavaria) திருமணம் செய்துகொண்டார்.


கி.பி. 997ம் ஆண்டு, தமது தந்தை இறந்ததன் பிறகு, ஆட்சி கட்டிலில் அமர்வதற்காக (Pagan warriors) என்ற படை வீரர்களின் துணை கொண்டிருந்த 'கொப்பாணி' (Koppány) என்ற தமது உறவினர்களுக்கெதிராக போராட வேண்டியிருந்தது. தமது உறவினர்களான கொப்பாணியை வென்ற ஸ்டீஃபன், திருத்தந்தை இரண்டாம் சில்வெஸ்ட்டர் (Pope Sylvester II) அவர்கள் அனுப்பிய கிரீடத்தை அணிந்து ஹங்கேரி நாட்டு மன்னராக முடிசூட்டப்பட்டார். ஹங்கேரி நாட்டின் கடைசி இளவரசரும் முதலாம் அரசரும் இவரேயாவார்.


தன் தந்தையின் மரணத்தின்பின் "மாகியர்" (Magiar) என்ற சாதியினருக்கு தலைவராக பொறுப்பேற்றார். தம் மக்களை ஆட்சி புரிவதில் நீதியும், நல்லிணக்கமும், இறைப்பற்றும் கொண்டு விளங்கினார். திருச்சபையின் சட்டதிட்டங்களை மிக நுணுக்கமாக கடைபிடித்தார். தன் நாட்டு மக்களின் நலனில் அக்கறை கொண்டு, அவர்களின் தேவைகளை நிறைவேற்றி வாழ்ந்தார்.


இவர் அமைதியின்றி தவித்த மற்ற நாடுகளுடன் தொடர்புகொண்டு, அமைதியை ஏற்படுத்தினார். தன் நாட்டு மக்களை இறையுணர்வில் வளர்த்தெடுத்தார். நாடு முழுவதும் பல புதிய மறைமாவட்டங்களையும், மூன்று பெனடிக்டின் மடாலயங்களையும் உருவாக்கினார். பல துறவற சபையினரை தன் நாட்டிற்கு வரவழைத்து, கிறிஸ்தவ விசுவாசத்தைப் பரப்பினார். பல துறவற மடங்களையும், ஆலயங்களையும் கட்டினார். தன் நாட்டு மக்கள் அனைவரும் கிறிஸ்தவர்களாக வாழ வழிவகுத்தார். கிறிஸ்தவர் அல்லாதவர்களுடன் தொடர்புகொள்வதை தடுத்தார். செபம், தவம், இவைகளில் வளர நாட்டு மக்களை துறவிகள், குருக்களின் வழியாக தூண்டினார்.


ஸ்டீஃபன் தன் நாடு முழுவதிலும் பல குருக்களையும், கன்னியர்களையும், ஆயர்களையும் உருவாக்கினார். நாடு முழுவதிலுமே திருச்சபையின் வாழ்வை பெரிதும் ஊக்கப்படுத்தி வளர்த்தார். ஹங்கேரி நாட்டில் திருச்சபை வளர அன்று இவர் இட்ட உரமானது. இன்றும் தளைத்து வளர்ந்து கிறிஸ்தவ நாடாக திகழ்கின்றது. இவரிடம் இறைவன் ஒப்படைத்த மக்களை, அவர் வழியில் நடத்தி சென்றார். தன் வாழ்நாள் முழுவதுமே தாழ்ச்சியிலும், நீதியை கடைப்பிடிப்பதிலும், அமைதியிலும் மிகச் சிறந்தவராக திகழ்ந்தார். 


கி.பி. 1038ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், 15ம் நாளன்று மரித்த ஸ்டீஃபன், “ஸ்செக்ஸ்ஃபெர்வர்” (Székesfehérvár) எனுமிடத்தில் கட்டப்பட்டு, அன்னை மரியாளுக்கு அர்ப்பணித்திருந்த பேராலயத்தில் அடக்கம் செய்யப்பட்டார். அவருடைய இறப்பு, பல தசாப்தங்களாக நீடித்த உள்நாட்டுப் போர்களை ஏற்படுத்தியது. கி.பி. 1083ம் ஆண்டில், முதலாம் ஸ்டீஃபனும், அவரது மகனான “எமெரிக்கும்” (Emeric), “க்ஸனாட்” (Csanád) மறைமாவட்டத்தின் ஆயர் “கெரார்ட்” (Gerard) ஆகிய மூவரும் திருத்தந்தை “ஏழாம் கிரகோரியால்” (Pope Gregory VII) புனிதர்களாக அருட்பொழிவு செய்விக்கப்பட்டனர். ஸ்டீஃபன், ஹங்கேரி மற்றும் அண்டை பிரதேசங்களில் பிரபலமான புனிதர் ஆவார். ஹங்கேரியில், அவருடைய நினைவுத் திருவிழா (ஆகஸ்ட் 20 அன்று கொண்டாடப்படுகிறது) மாநிலம் உருவாக்கப்பட்டதை நினைவுகூரும் ஒரு பொது விடுமுறை நாளுமாகும்.

✠ புனித ஆரோக்கியநாதர் ✠

(St. Roch)


ஒப்புரவாளர்/ யாத்திரி :

(Confesser/ Pilgrim)


பிறப்பு: கி.பி 1348

மான்ட்பெல்லியர், மஜோர்கா இராச்சியம்

(Montpellier, Kingdom of Majorca)


இறப்பு: ஆகஸ்ட் 16, 1376/1379

வோகெரா, சவோய் கவுண்டி

(Voghera, County of Savoy)


ஏற்கும் சமயம்/ சபை:

கத்தோலிக்க திருச்சபை (தூய ஃபிரான்சிஸின் மூன்றாம் வரிசை)

(Catholic Church (Third Order of Saint Francis))

ஆங்கிலிக்கன் ஒன்றியம்

(Anglican Communion)

அக்லிபயன் திருச்சபை

(Aglipayan Church)


புனிதர் பட்டம்:

பிரபலமான ஆர்வத்தால்; திருத்தந்தை பதினான்காம் கிரகோரி (Pope Gregory XIV) அவர்களால் "ரோமானிய தியாகவியலில்" (Roman Martyrology) சேர்க்கப்பட்டது


முக்கிய திருத்தலம்: சான் ரோகோ (San Rocco), வெனிஸ் (Venice), இத்தாலி (Italy)


நினைவுத் திருநாள்: ஆகஸ்ட் 16


பாதுகாவல்:

சர்மாடோ (Sarmato), அல்தரே இ கிரிஃபல்கோ (Altare e Girifalco), இத்தாலி (Italy). காலரா (Invoked against Cholera), தொற்றுநோய் (Epidemics), முழங்கால் பிரச்சினைகள் (Knee problems), பிளேக் (Plague), தோல் நோய்கள் (Skin diseases. மணமாகாத இளைஞர்களின் பாதுகாவலர் (Patron Saint of Bachelors), நோயுற்ற கால்நடைகள் (Diseased cattle), நாய்கள் (Dogs), பொய்யாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் (Falsely accused people), செல்லாதவை (Invalids), இஸ்தான்புல் (Istanbul), அறுவை சிகிச்சை நிபுணர்கள் (Surgeons), ஓடு தயாரிப்பாளர்கள் (Tile-makers), கல்லறைகள் (Gravediggers), பழைய பொருட்கள் விற்பனையாளர்கள் (Second-hand dealers), யாத்ரீகர்கள் (Pilgrims), வக்கீல்கள் (Apothecaries), கலூக்கன் ரோமன் கத்தோலிக்க மறைமாவட்டம் (Roman Catholic Diocese of Kalookan)


புனிதர் ஆரோக்கியநாதர் அல்லது புனிதர் ரோச் அல்லது புனிதர் ராக், ஒரு கிறிஸ்தவப் புனிதர் ஆவார். இவரின் விழா நாள் ஆகஸ்ட் மாதம், 16ம் நாளாகும். ஆங்கிலத்தில் இவரை ராக் என்றும் கிளாஸ்கோ என்றும்,, ஸ்காட்லாந்தில் ரோலோக்ஸ் என்றும் அழைப்பர். இவர் குறிப்பாக கறுப்புச் சாவுக்கு எதிராகப்பாதுகாவல் அளிப்பவராக நம்பப்படுகின்றார். மேலும் இவர் நாய்களுக்கும், தவறாகக்குற்றம் சாட்டப்பட்டோருக்கும் பாதுகாவலராவார்.


வாழ்க்கைச் சுருக்கம்:

இவர் மஜோர்க்கா பேரரசின் (Kingdom of Majorca) மொன்ட் பெலியரில் (Montpellier) கி.பி. சுமார் 1295ம் ஆண்டு பிறந்திருக்கக்கூடும். இவரின் தந்தை அந்த நகரின் ஆளுனராவார். இவரின் பிறப்பின்போது இவரின் மார்பில் ஒரு சிலுவை வடிவில் சிவப்பு நிற மச்சம் இருந்ததாக நம்பப்படுகின்றது. இவரின் இருபதாம் அகவைக்குள் இவரின் பெற்றோர் இருவரும் இறந்தனர். இவரின் தந்தை, தாம் இறப்பதற்கு முன், இவரை நகரின் ஆளுனராக்கினார். ஆயினும் தந்தையின் இறப்புக்குப்பின்பு தன் சொத்துக்களை விற்று ஏழைகளுக்கு அளித்தார். தனது ஆளுனர் பதவியினை தன் மாமாவுக்கு அளித்துவிட்டு இத்தாலிக்கு திருப்பயணம் மேற்கொண்டார். அச்சமயம் இத்தாலி கறுப்புச் சாவினால் பாதிக்கப்பட்டிருந்தது. அங்கே பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு இவர் பணிபுரிந்தார். பலரை அச்சமயத்தில் சிலுவை அடையாளம் வரைந்து குணமாக்கினார் என்பர். இத்தாலியினை சுற்றியுள்ள பல ஊர்களில் இவர் சேவை செய்தார்.


பியாசென்சா (Piacenza) என்னும் ஊரில் பணியாற்றியபோது இவருக்கு அந்த நோய் பிடித்தது. இதனால் இவர் ஊருக்கு வெளியே காட்டில் வனவாசியாக வாழ்ந்தார். ஒரு புதுமையால் இவரின் வசிப்பிடத்தை அறிந்த காத்ஹார்ட் (Gothard Palastrelli) என்பவர் இவருக்கு உதவினார். நலமடைந்தப்பின்னர், தன் சொந்த ஊர் திரும்பினார். அங்கே தாம் யார் என வெளிப்படுத்தாததால் அவரை ஒற்றர் என தவறாகக் கருதிய அவரின் மாமா இவரை சிறையிலடைத்தார். அச்சிறையிலேயே ஐந்தாண்டுகளுக்குப்பின்னர் இவர் இறந்தார். இவரின் மார்பில் இருந்த மச்சமும், இவரிடம் இருந்த ஒரு ஆவணமும் இவரை நகர மக்களுக்கு அடையாளம் காட்டியது. இவரின் அடக்கச்சடங்கு பொதுநிகழ்வாக நடத்தப்பட்டது. இவரின் இறப்புக்குப்பின்பு பல புதுமைகள் இவரின் பெயரால் நிகழ்ந்தன என்பர்.


கி.பி. 1414ம் ஆண்டு, காண்ஸ்தான்சு பொதுச்சங்கம் (Council of Constance) கூடியபோது பிளேக் (Plague) நோய் அந்த நகரினை தாக்கியது. அதனால் அச்சங்கத்தினர் மக்கள் அனைவரும் இவரை நோக்கி மன்றாடப்பணித்தனர். இதனால் விரைவாக நோய் நீங்கியது என்பர். 1485ம் ஆண்டு, இவரின் மீப்பொருட்கள் வெனிஸ் (Venice ) நகருக்கு கொணரப்பட்டது. அங்கேயே அவை இன்றளவும் உள்ளது.


இவர் பொதுவாக ஃபிரான்சிஸ்கன் மூன்றாம் (Third Order of Saint Francis) சபையின் உறுப்பினர் எனக்கருதப்பட்டாலும், அதனை நிருவ எவ்வகைச்சான்றும் இல்லை. உரோமை புனிதர்கள் பட்டியலில் இவரின் பெயர் திருத்தந்தை பதினான்காம் கிரகோரியால் (Pope Gregory XIV) சேர்க்கப்பட்டது. ஆகஸ்ட் மாதம், 16ம் தேதிக்கான திருப்புகழ்மாலையில் இவருக்குறியப்பகுதிக்கு அனுமதியளித்தார்.


நமது நாட்டில், தமிழ்நாடு, கேரளம், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இவரது பெயரால் தேவாலயங்கள் உள்ளன.


✠ போலந்தின் புனிதர் ஹயாஸிந்த் ✠

(St. Hyacinth of Poland)


மறைப்பணியாளர், குரு, ஒப்புரவாளர், வடக்கின் அப்போஸ்தலர்:

(Religious, Priest, Confessor and Apostle of the North)


பிறப்பு: கி.பி. 1185

கமியேன் ஸ்லஸ்கி, சிலேஸியா, போலந்து

(Kamień Śląski, Silesia, Poland)


இறப்பு: ஆகஸ்ட் 15, 1257

க்ரகோவ், போலந்து

(Kraków, Poland)


ஏற்கும் சமயம்:

ரோமன் கத்தோலிக்க திருச்சபை

(Roman Catholic Church)

அக்லிபயன் திருச்சபை

(Aglipayan Church)


புனிதர் பட்டம்: ஏப்ரல் 17, 1594

திருத்தந்தை எட்டாம் கிளமென்ட்

(Pope Clement VIII)


நினைவுத் திருநாள்: ஆகஸ்ட் 17


பாதுகாவல்:

“சாண்டோ டோமஸ் பல்கலைக்கழகம் - சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் மேலாண்மை கல்லூரி” (University of Santo Tomas-College of Tourism and Hospitality Management), மூழ்கிவிடக்கூடிய ஆபத்து உள்ளவர்கள் (Invoked by those in Danger of Drowning); ஹயாசிந்த் பேராலயம் (Basilica of St. Hyacinth), லித்துவானியா (Lithuania)


போலந்து (Poland) நாட்டைச் சேர்ந்த கத்தோலிக்க குருவான புனிதர் ஹயாஸிந்த், தமது சொந்த நாட்டிலுள்ள மகளிர் மடாலயங்களை சீர்திருத்தப் பணிபுரிந்தவர் ஆவார். பாரிஸ் (Paris) மற்றும் “போலோக்னா” (Bologna) ஆகிய நகரங்களில் கல்வி கற்ற இவர், “அருட்சாதன ஆய்வுகளின் மறைவல்லுனர்” (Doctor of Sacred Studies) ஆவார்.


வடக்கின் அப்போஸ்தலர் (Apostle of the North) என்றழைக்கப்பட்ட இவர், “ஒட்ரோவாஸ்” எனும் பிரபுக்கள் குடும்பத்தைச் (Noble family of Odrowąż) சேர்ந்த “யூஸ்டாச்சியஸ் கொன்ஸ்கி” (Eustachius Konski) என்பவரது மகனாவார்.


போலந்து நாட்டின் சிலேஸியா (Silesia) பிராந்தியத்தில், கி.பி. 1185ம் ஆண்டு பிறந்த இவர், “அருளாளர் செஸ்லாஸ்” (Blessed Ceslaus) என்பவரது நெருங்கிய உறவு முறையாவார். “க்ரகோவ்” (Kraków), “ப்ராக்” (Prague), மற்றும் “போலோக்னா” (Bologna) போன்ற குறிப்பிடத்தக்க நகரங்களில் கல்வி பயின்ற இவர், போலோக்னா நகரில் சட்டம் மற்றும் தெய்வீக ஆய்வுகளுக்கான (Doctor of Law and Divinity) முனைவர் பட்டம் பெற்றார். நாடு திரும்பிய இவருக்கு, போலந்தின் தென்கிழக்கு பிராந்தியமான “சண்டோமிர்” (Sandomir) எனுமிடத்தில் (Prebend) எனப்படும் கிறிஸ்தவக் கோயிலின் உறுப்பினருக்கு அளிக்கப்படும் மானியம் அல்லது உதவித்தொகை வழங்கப்பட்டது. அவர் பின்னர், தமது மாமனான, க்ரகோவ் ஆயர் (Bishop of Kraków) “இவோ கோண்ஸ்கி” (Ivo Konski) என்பவருடன் இணைந்து, ரோம் பயணித்தார்.


ரோம் நகரில் இருக்கும்போது, புனிதர் டோமினிக் (Saint Dominic) நிகழ்த்திய அற்புதம் ஒன்றினைக் கண்ட இவர், “அருளாளர் செஸ்லாஸ்” (Blessed Ceslaus) மற்றும் க்ரகோவ் ஆயரின் இரண்டு உதவியாளர்களான – “ஹெர்மன்” (Herman) மற்றும் “ஹென்றி” (Henry) ஆகியோருடன் சேர்ந்து, “டோமினிக்கன் துறவி” (Dominican Friar) ஆனார்.


கி.பி. 1219ம் ஆண்டு வரை, புனிதர் டோமினிக்கும், அவரது சீடர்களும், “சேன் சிச்டோ வெக்ஹியோ” (San Sisto Vecchio) சிறு பேராலய இல்லத்தில் தற்காலிகமாக தங்கியிருந்தனர். திருத்தந்தை “மூன்றாம் ஹோனரியஸ்” (Pope Honorius III) அவர்களை அழைத்து, பண்டைய “சேன்ட சபினா” ரோம பேராலய” (Roman basilica of Santa Sabina) இல்லத்தினை பெற்றுக்கொள்ள வருமாறு அழைத்தார். கி.பி. 1220ம் ஆண்டின் தொடக்கம் முதல் அவர்கள் அங்கே தங்கினார்கள். ஹயாசிந்தும் அவரது நண்பர்களுமே அங்கே பிரவேசித்த முதல் துறவியர் ஆவர். ஒரு சுருக்கமான புதுமுக பயிற்சியின் (Novitiate) பின்னர், ஹயாஸிந்தும் அவரது தோழர்களும் 1220ம் ஆண்டு, புனிதர் டொமினிக்கிடமிருந்து சபையின் சீருடைகளைப் பெற்றார்கள்.


அதன் பின்னர், இளம் துறவியர் அனைவரும் தத்தமது சொந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். போலந்து (Poland) மற்றும் உக்ரைன் (Ukraine) நாட்டின் தலைநகரான “கியூ” (Kiev) நகரில் டோமினிக்க சபையினை ஸ்தாபிக்கும் பணி அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது. ஹயாஸிந்தும் அவரது மூன்று துணைவர்களும் “க்ரகோவ்” (Kraków) நோக்கி பயணித்தனர். வழி நெடுக்கும் துறவு மடங்களை நிறுவிய அவர், அவற்றுக்கு தமது நண்பர்களை தலைவர்களாக நியமித்தவண்ணம் சென்றார். இறுதியில் க்ரகோவ் சென்றடைந்தபோது அவர் மட்டுமே இருந்தார். ஹயாஸிந்த், வட ஐரோப்பா முழுதும் பயணித்து கத்தோலிக்க விசுவாசத்தை பரவச் செய்தார். கத்தோலிக்க விசுவாசத்தை பரப்புவதற்காக அவர் பயணித்த நாடுகளில், ஸ்வீடன் (Sweden), நார்வே (Norway), டென்மார்க் (Denmark), ஸ்காட்லாந்து (Scotland), ரஷியா (Russia), துருக்கி (Turkey) மற்றும் கிரேக்கம் (Greece) ஆகிய நாடுகளும் அடக்கம் என்று பாரம்பரியங்கள் கூறுகின்றன.


கி.பி. 1257ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், 15ம் நாளன்று, ஹயாஸிந்த் மரித்தார்.


✠ மோன்டேஃபல்கோ நகர் புனிதர் கிளாரா ✠

(St. Clare of Montefalco)


அகஸ்தீனியன் சபை துறவி மற்றும் மடாதிபதி:

(Augustinian Nun and Abbess)


பிறப்பு: கி.பி. 1268

மோன்டேஃபல்கோ, உம்ப்ரியா, இத்தாலி

(Montefalco, Umbria, Italy)


இறப்பு: ஆகஸ்ட் 18, 1308

மோன்டேஃபல்கோ, உம்ப்ரியா, இத்தாலி

(Montefalco, Umbria, Italy)


ஏற்கும் சமயம்:

ரோமன் கத்தோலிக்க திருச்சபை

(Roman Catholic Church)


முக்திபேறு பட்டம்: ஏப்ரல் 1, 1828

திருத்தந்தை பன்னிரெண்டாம் கிளமென்ட்

(Pope Clement XII)


புனிதர் பட்டம்: டிசம்பர் 8, 1881

திருத்தந்தை பதின்மூன்றாம் லியோ

(Pope Leo XIII)


முக்கிய திருத்தலம்:

புனித கிளாரா தேவாலயம், மோன்டேஃபல்கோ

(Church of Saint Clare, Montefalco)


நினைவுத் திருநாள்: ஆகஸ்ட் 17


பாதுகாவல்: மோன்டேஃபல்கோ (Montefalco)


“மோன்டேஃபல்கோ” நகரின் புனிதர் கிளாரா (St. Clare of Montefalco) என அழைக்கப்படும் இப்புனிதர், “சிலுவையின் புனிதர் கிளாரா” (Saint Clare of the Cross) என்றும் அழைக்கப்படுவதுண்டு. அகஸ்தீனியன் சபையின் துறவியும் மடாதிபதியுமான (Augustinian Nun and Abbess) இவர், “புனிதர் ஃபிரான்ஸிசின் மூன்றாம் நிலை சபையின்” (Third Order of St. Francis (Secular) உறுப்பினராக இருந்தவர் ஆவார்.


இத்தாலியின் “ஊம்ப்ரியா” (Umbria) மாநிலத்தின் “மோன்டேஃபல்கோ” (Montefalco) நகரில் வசதியான ஒரு குடும்பத்தில் கி.பி. 1268ம் ஆண்டு பிறந்த இவரது பெற்றோர் “டமியானோ” மற்றும் “லகோபா” (Damiano and Iacopa Vengente) ஆவர். இவருடைய தந்தை, உள்ளூரிலே துறவியர்க்கான ஒரு ஆசிரமத்தை (Hermitage) கட்டியிருந்தார். கிளாராவின் மூத்த சகோதரி “ஜோனும்” (Joan) அவரது சிநேகிதியான “அன்றேலாவும்” (Andreola) “பிரான்சிஸ்கன் மூன்றாம் நிலை” (Franciscan tertiaries) உறுப்பினர்களாக அங்கே தங்கியிருந்தனர். கி.பி. 1278ம் ஆண்டு, கிளாராவும் இவர்களுடன் இனைந்தார். அத்துடன், போதுமான அளவு வளர்ச்சியடைந்திருந்த இவர்களது சமூகம், நகரின் வெளியே தமக்காக பெரிய அளவிலான மடம் ஒன்றினை கட்ட வேண்டியிருந்தது.


கி.பி. 1290ம் ஆண்டு, கிளாராவும், அவரது சகோதரி ஜோனும் மற்றும் அவர்களது சிநேகிதிகளும் இன்னும் கடுமையான விதத்தில் துறவு வாழ்க்கை வாழ முயற்சி செய்தனர். “ஸ்பொலேடோ” ஆயரிடம் (Bishop of Spoleto) அதற்கென விண்ணப்பித்தனர். ஃபிரான்சிஸ்கன் மூன்றாம் நிலை (Third Order of St. Francis (Regular) சபை அதுவரை நிறுவப்பட்டிருக்கவில்லையாதலால், ஏற்கனவே அவர்களிடமிருந்த துறவு மடத்தில் “புனிதர் அகஸ்தீனியர்” (Rule of St. Augustine) சட்ட திட்டங்களை புகுத்தினார். எளிமை, கற்புநிலை, மற்றும் கீழ்ப்படிதல் ஆகியவற்றில் உறுதிப்பாடு பிரமாணம் எடுத்துக்கொண்ட கிளாரா, அகஸ்தீனிய (Augustinian Nun) துறவியானார். அவரது மூத்த சகோதரி ஜோன், மடாதிபதியாக தேர்வு செய்யப்பட்டார். கி.பி. 1291ம் ஆண்டு, நவம்பர் மாதம், 22ம் நாளன்று, ஜோன் மரணமடைந்தார். அதன்பின்னர், கிளாரா மடாதிபதியாக தேர்வு செய்யப்பட்டார். ஆனால், ஆரம்பத்தில் கிளாரா இதனை ஏற்கவில்லை. பின்னர், “ஸ்பொலேடோ” ஆயரின் (Bishop of Spoleto) தலையீட்டின் பின்னர் மடாதிபதியாக பொறுப்பேற்றார்.


கி.பி. 1294ம் ஆண்டு, கிளாராவின் ஆன்மீக வாழ்வில் ஒரு தீர்க்கமான, உறுதியான முடிவு செய்யும் ஆண்டாக அமைந்தது. ஒருமுறை, கிறிஸ்துவின் வெளிப்படுதல் (Epiphany) கொண்டாட்டங்களின்போது, தமது சக துறவியர் அனைவரினதும் முன்னிலையில் ஒரு போது ஒப்புரவு அருட்சாதனம் பெற்ற இவர், திடீரென ஒரு மெய்மறந்த பரவச நிலையில் வீழ்ந்தார். தொடர்ந்து பல வாரங்களுக்கு அதே நிலையிலேயே இருந்தார். இக்கால கட்டத்தில் ஏதும் உண்ணவும் இயலாத கிளாராவுக்கு அவரது சக துறவியர் சர்க்கரை கரைசல் நீரை புகட்டினர். இந்தக் காலத்தில், கிளாரா கடவுளின் தரிசனத்தைக் கண்டதாகவும், அதில் அவர் கடவுளுக்கு முன் நியாயந்தீர்க்கப்பட்டதாகவும் கூறுகின்றனர்.


பின்னர், கிளாரா மீண்டும் கடவுளின் தரிசனம் கிட்டியதாகவும் அதில் இறைவன் ஒரு ஏழை பயணியாக வந்ததாகவும், அவர் தமது சிலுவையை சுமக்க கஷ்டப்பட்டதாகவும் கூறுகிறார். தமது சிலுவையை வைக்க இவ்வுலகில் தோதுவான இடம் கிடைக்கவில்லை என்று கூறிய கிறிஸ்து இயேசுவிடம், தாம் அவருக்கு உதவுவதாக கூறினாராம். பின்னர் இறைவன், தமது சிலுவையை கிளாராவின் இருதயத்தில் வைத்துவிட்டு சென்றதாக கூறுகின்றனர். இவ்வகையான் தரிசனங்களை கிளாரா தீவிரமாக விசுவசித்தார். தமது மீதியுள்ள வாழ்க்கை முழுவதையும் வலி வேதனைகளிலேயே கழித்தார். இருப்பினும், ஒரு மடாதிபதியாக, ஆசிரியையாக, தாயாக, தமது கன்னியாஸ்திரிகளின் ஆன்மீக வழிகாட்டியாக தமது கடமைகளை மிகவும் சரிவர செய்தார். புனிதத்தன்மை மற்றும் ஞானத்திற்கான கிளாராவின் புகழ், தூய திருச்சிலுவையின் மடாலயத்திற்கு பார்வையாளர்களை ஈர்த்தது.


கி.பி. 1303ம் ஆண்டு, கிளாரா தமது நகரிலே ஒரு தேவாலயத்தைக் கட்டினார். இத்தேவாலயம், தமது கன்னியாஸ்திரிகளுக்கு மட்டுமல்லாது, பொதுமக்களுக்காகவும் அர்ப்பணிக்கப்பட்டது. ஜூன் மாதம், 24ம் தேதி, “ஸ்பொலேடோ” ஆயரால் (Bishop of Spoleto) முதல் கல் அர்ச்சிக்கப்பட்டது. பின்னர், இத்தேவாலயம் தூய திருச்சிலுவைக்கு அர்ப்பணிக்கப்பட்டது.


பதினாறு வருடங்கள் மடாதிபதியாக பணியாற்றிய கிளாரா, கி.பி. 1308ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், நோயில் வீழ்ந்தார். படுத்த படுக்கையானார். பதினைந்தாம் தேதி இறுதி நற்கருணை வாங்கினார். 17ம் தேதி இறுதி ஒப்புரவு அருட்சாதனம் பெற்றார். 18ம் தேதி, மடத்தின் பள்ளியில் மரித்தார்.


✠ புனிதர் ஹெலெனா ✠

(St. Helena)


ரோமப் பேரரசி:

(Empress of the Roman Empire)


பிறப்பு: கி.பி. 246/50

ட்ரேபனும், பித்தினியா மற்றும் போண்டஸ்

(Drepanum, Bithynia and Pontus)


இறப்பு: கி.பி. 327/30 (வயது 80)

ரோம், டுஸ்கனியா எட் உம்ப்ரியா

(Rome, Tuscania et Umbria)


ஏற்கும் சமயம்:

ரோமன் கத்தோலிக்க திருச்சபை

(Roman Catholic Church)

கிழக்கு மரபுவழி திருச்சபை

(Eastern Orthodox Church)

ஓரியண்டல் மரபுவழி திருச்சபை

(Oriental Orthodoxy)

ஆங்கிலிக்கன் சமூகம்

(Anglican Communion)

லூதரன் திருச்சபை

(Lutheran Church)


முக்கிய திருத்தலம்:

புனிதர் ஹெலெனா திருத்தலத்திற்கு புனிதர் பேதுரு பேராலயம்

(The shrine to Saint Helena in St. Peter's Basilica)


நினைவுத் திருநாள்: ஆகஸ்ட் 18


புனித ஹெலெனா, ரோமப் பேரரசின் பேரரசியும், பேரரசர் “பெரிய கான்ஸ்டன்டைண்” (Emperor Constantine the Great) அவர்களின் தாயாருமாவார். ஒரு சாதாரண குடும்பத்துப் பெண்ணாக பிறந்த இவர், கி.பி. 293ம் ஆண்டு முதல், 306ம் ஆண்டு வரை ரோமப் பேரரசை ஆண்ட பேரரசர் “கான்ஸ்டன்ஷியஸ் க்ளோரஸ்” (Roman Emperor Constantius Chlorus) என்பவரின் மனைவியானார். பிற்காலத்தில் கி.பி. 306ம் ஆண்டு முதல், 337ம் ஆண்டு வரை அரசாண்ட பேரரசர் “பெரிய கான்ஸ்டன்டைண்” (Emperor Constantine the Great) அவர்களின் தாயாரானார்.


தமது மகன் மீது தாம் கொண்டிருந்த செல்வாக்கு காரணமாக, கிறிஸ்தவ வரலாற்றிலும், உலக வரலாற்றிலும் இவர் மிக முக்கிய பிரமுகராக கருதப்படுகிறார். அவரது இறுதி ஆண்டுகளில், அவர் சிரியா பாலஸ்தீனம் (Syria Palaestina) மற்றும் ஜெருசலேம் (Jerusalem) ஆகிய நாடுகளுக்கு புனித ஆன்மீக பயணம் மேற்கொண்டார். இப்பயண காலத்தில், இவர் உண்மையான சிலுவையை கண்டுபிடித்ததாக கூறப்படுகிறது.


ஹெலெனாவின் பிறந்த இடம் உறுதியாக தெரியவில்லை. கி.பி. 6ம் நூற்றாண்டின் வரலாற்றாசிரியரான “புரோக்கோபியாஸ்” (Procopius) என்பவரின் அதிகாரபூர்வ அறிக்கையின்படி, ஹெலெனா “பித்தினியா” (Bithynia) மாகாணத்திலுள்ள “ட்ரேபனும்” (Drepanum) நகரில் பிறந்தவராவார். கி.பி. சுமார் 330ம் ஆண்டு, ஹெலெனா மரித்ததன் பின்னர், அவரது மகனும் பேரரசனுமான “பெரிய கான்ஸ்டன்டைண்”, ஹெலெனா பிறந்த நகருக்கு “ஹெலனோபொலிஸ்” (Helenopolis) எனும் பெயரை மாற்றியமைத்தார். இதுவே ஹெலெனா பிறந்த நகரம் என்பதற்கான ஆதாரமாகியது. பேரரசர், தமது புதிய தலைநகரான “கான்ஸ்டன்டினோப்பிலைச்” சுற்றிலும் தொடர்பு வலையமைப்பை வலுப்படுத்தும் முயற்சியிலிருந்தார் என்றும், நகரின் பெயரை மாற்றியமைத்ததற்கான காரணம், தமது தாயை கௌரவிப்பதற்காகவேயொழிய, அவரது பிறந்த நகரை குறிப்பதற்கல்ல என்றும், “பைசான்டைன் பேரரசின்” (Byzantine Empire) கட்டிடக்கலை (architecture) வல்லுனரும், கலை மற்றும் வரலாறு ஆகியவற்றின் பிரிட்டன் அறிஞரான (British scholar) “சிரில் அலெக்சாண்டர் மேங்கோ” (Cyril Mango) என்பவர் வாதிடுகிறார். அத்துடன், பாலஸ்தீனத்திலுள்ள “ஹெலனோபொலிஸ்” (Helenopolis in Palestine) மற்றும் “லிடியா” நாட்டிலுள்ள “ஹெலனோபொலிஸ்” (Helenopolis in Lydia) ஆகிய நகரங்களும், “போன்டஸ்” மறைமாவட்டத்திலுள்ள (Diocese of Pontus) “ஹெலெனோபோன்டஸ்” (Helenopontus) மாகாணமும் அநேகமாக கான்ஸ்டன்டைன் தாயான ஹெலெனாவின் பெயரால் பெயரிடப்பட்டவையாகும்.


பேரரசர் “கான்ஸ்டன்டைண்”, தமது தாயாருக்கு ரோம ஏகாதிபத்திய கௌரவமான (Roman imperial honorific), “அகஸ்டா இம்பெராட்ரிக்ஸ்” (Augusta Imperatrix) எனும் உயர் கௌரவத்தை அளித்திருந்தார். அத்துடன், யூத - கிறிஸ்தவ பாரம்பரியத்தின் (Judeo-Christian tradition) நினைவுச்சின்னங்களை கண்டுபிடிப்பதற்காக அரச கருவூலத்திலிருந்து வரம்பற்ற செலவு செய்யும் அதிகாரத்தை வழங்கியிருந்தார். கி.பி. 326-28ம் ஆண்டு காலத்தில், ஹெலெனா பாலஸ்தீனத்திலுள்ள புனித ஸ்தலங்களுக்கு (Holy Places in Palestine) புனித பயணம் மேற்கொண்டார்.


கி.பி. 260/265 – 339/340ம் ஆண்டு காலத்தில் வாழ்ந்திருந்த கிறிஸ்தவ வரலாற்று ஆசிரியரும், பாலஸ்தீனத்துக்கும் மற்ற கிழக்கு மாகாணங்களுக்கும் ஹெலெனாவின் புனித யாத்திரை விவரங்களை பதிவு செய்தவருமான “யூசேபிசியஸ்” (Eusebius of Caesarea) கூற்றின்படி, பெத்தலஹெமிலுள்ள கிறிஸ்துவின் பிறப்பு ஆலயமான, “நேட்டிவிட்டி ஆலயம்” (Church of the Nativity, Bethlehem) மற்றும் “ஒலிவ மலையின்” (Mount of Olives) மேலுள்ள கிறிஸ்துவின் விண்ணேற்பு ஆலயமான “எளியோனா ஆலயம்” (Church of Eleona) ஆகிய இரண்டினதும் கட்டுமானப் பணிகள் மற்றும் அழகு படுத்துதல் ஆகிய பணிகளின் பொறுப்புகளை ஹெலெனா ஏற்றிருந்தார். சினாயின் (Sinai) எரியும் புதரை (Burning Bush) அடையாளம் காண்பதற்காக, எகிப்தில் (Egypt) ஒரு தேவாலயத்தை கட்டியெழுப்ப ஹெலெனா கட்டளையிட்டதாக உள்ளூர் நிறுவன புராணக்கதைகள் கூறுகிறது. கி.பி. 330ம் ஆண்டின் “சினாய்” தீபகற்பத்திலுள்ள (Sinai Peninsula) “கேதரின் துறவு மடாலயத்திலுள்ள” (Saint Catherine's Monastery) சிற்றாலயம், “ஹெலெனா சிற்றாலயம்” (Chapel of Saint Helen) என்றே அழைக்கப்படுகிறது.


உண்மையான சிலுவையும் புனித கல்லறை தேவாலயமும்:

பாரம்பரியங்களின்படி, பல்வேறு புனித பொருட்களையும், அற்புத பொருட்களின் மிச்சங்களையும் கண்டெடுத்த ஹெலெனா, உண்மையான சிலுவையையும் கண்டெடுத்ததாக கூறப்படுகிறது. அகழ்வாராய்ச்சி தொடங்க ஒரு தளம் தேர்வு செய்து தோண்டியதில், இங்கே மூன்று வெவ்வேறு சிலுவைகள் மீட்கப்பட வழிவகுத்தது. இதில் உண்மையான சிலுவை (True Cross) எது என்பதை கண்டுபிடிக்க செய்த முயற்சிகள் வீணாயின. பின்னர், ஜெருசலேமின் ஆயர் “மகாரியஸ்” (Bishop Macarius of Jerusalem) என்பவர் மூலம், நகரின் வெளியே, மரண தருவாயிலிருந்த பெண் ஒருவரை  அழைத்து வந்தார்கள். அந்த பெண்ணை மூன்று சிலுவைகளையும் ஒவ்வொன்றாக தொடச் செய்தனர். முதல் சிலுவையையும் இரண்டாம் சிலுவையையும் தொடும்போது ஒன்றும் நேரவில்லை. ஆனால், மூன்றாம் சிலுவையை தொட்டதும் அற்புதமாக, அந்த பெண் எழுந்து குணமானார். ஆகவே, சாகும் தருவாயிலிருந்த பெண் தொட்டதும் குணமான காரணத்தால், அந்த சிலுவையே உண்மையான சிலுவை என்று ஹெலெனா அறிவித்தார். உண்மையான சிலுவை (True Cross) கண்டெடுக்கப்பட்ட இடத்தில் “புனித கல்லறை தேவாலயம்” (Church of the Holy Sepulchre) கட்ட பேரரசன் கான்ஸ்டன்டைன் உத்தரவிட்டார்.


கிறிஸ்தவ திருச்சபையின் வரலாற்று ஆசிரியரான “சோஸோமென்” (Sozomen) மற்றும் “அந்தியோக்கியா பள்ளியின்” (School of Antioch) செல்வாக்குள்ள இறையியலாளரும், பண்டைய சிரியாவின் (Ancient Syria) ஆயருமான, “தியோடோரெட்” (Theodoret) ஆகியோரின் கூற்றின்படி, சிலுவையில் அறையப்பட்ட ஆணிகள் (Nails of the Crucifixion) ஹெலெனாவால் கண்டுபிடிக்கப்பட்டன என்றும், அவற்றின் அற்புத சக்தி தமது மகனுக்கு உதவ வேண்டுமென்பதற்காக அவற்றிலொன்றை தமது மகனின் தலைக் கவசத்திலும், மற்றொன்றை அவரது குதிரையின் கடிவாலத்திலும் வைத்தார் என்றும் கூறப்படுகிறது.


ஆண்டவர் கிறிஸ்து இயேசு, சிலுவையில் அறையப்படுவதற்கு சற்று முன்னர், அவர் அணிந்திருந்த கோடுகளற்ற புனித அங்கியை (Holy Tunic), எருசலேம் பயணத்தின்போது முயன்று வாங்கிய ஹெலெனா, அதனை ஜெர்மனியிலுள்ள (Germany) “ட்ரையர்” (Trier) நகருக்கு அனுப்பினார்.


பிற இடங்களில் கட்டப்பட்டிருந்த தேவாலயங்களும் ஹெலெனாவால் கண்டுபிடிக்கப்பட்டன.


புனித ஹெலெனாவால் கண்டுபிடிக்கப்பட்ட பல நினைவுச் சின்னங்கள் இப்போது “சைப்ரஸ்” (Cyprus) தீவில் உள்ளன.


கி.பி. 327ம் ஆண்டு, எருசலேம் மற்றும் கிழக்கு பிராந்தியங்களை விட்டு ரோம் சென்ற ஹெலெனா, தாம் தமது அரண்மனையில், தமது தனிப்பட்ட சிற்றாலயத்தில் சேமித்து வைத்திருந்த, உண்மையான சிலுவை மற்றும் புனித பொருட்களின் மிச்சங்களில் பெரும்பாலானவற்றையும் எடுத்துச் சென்றார். மீதமுள்ளவற்றை இன்னமும் அவரது அரண்மனையில் காணலாம். அவரது அரண்மனை, பின்னாளில் எருசலேமிலுள்ள “புனித திருச்சிலுவை பேராலயமாக” (Basilica of the Holy Cross in Jerusalem) மாற்றியமைக்கப்பட்டது. இது நூற்றாண்டுகளாக தேவாலயத்துடன் இணைக்கப்பட்ட மடாலயத்தின் சிஸ்டர்சியன் (Cistercian) துறவிகளால் பராமரிக்கப்பட்டு வருகிறது.


ஏறத்தாழ கி.பி. 330ம் ஆண்டு மரித்த ஹெலெனா, ரோம் நகரிலுள்ள “மௌசோலியம்” (Mausoleum of Helena) எனும் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார். இக்கல்லறை, இவரது மகனும் பேரரசனுமான முதலாம் கான்ஸ்டண்டைனால் தமக்காக கட்டப்பட்டது. ஆனால், அதில் அவரது தாயாரான புனிதர் ஹெலெனா அடக்கம் செய்யப்பட்டார்.


✠ புனித ஆல்பர்ட்டோ ஹர்டடோ க்ருச்சகா ✠

(St. Alberto Hurtado Cruchaga)


இயேசு சபை குரு, வழக்கறிஞர் மற்றும் சமூக சேவகர்:

(Jesuit Priest, Lawyer and Social Worker)


பிறப்பு: ஜனவரி 22, 1901

வின டெல் மார், சிலி

(Viña del Mar, Chile)


இறப்பு: ஆகஸ்டு 18, 1952 (வயது 51)

சேன்டியாகோ, சிலி

(Santiago, Chile)


ஏற்கும் சமயம்:

ரோமன் கத்தோலிக்க திருச்சபை 

(Roman Catholic Church)


முக்திபேறு பட்டம்: அக்டோபர் 16, 1994 

திருத்தந்தை இரண்டாம் ஜான் பால்

(Pope John Paul II)


புனிதர் பட்டம்: அக்டோபர் 23, 2005 

திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட்

(Pope Benedict XVI)


பாதுகாவல்: 

சிலி, ஏழை மக்கள், தெருக்குழந்தைகள், சமூக சேவகர்கள்


நினைவுத் திருநாள்: ஆகஸ்ட் 18


புனிதர் ஆல்பர்ட்டோ ஹர்டடோ க்ருச்சகா (Saint Alberto Hurtado Cruchaga), சிலி நாட்டு இயேசு சபையின் கத்தோலிக்க குருவும் (Chilean Jesuit Priest), வழக்குரைஞரும், சமூகப் பணியாளரும், எழுத்தாளரும், 'ஹோகர் தே கிறிஸ்டோ' (Hogar de Cristo Foundation) எனும் கத்தோலிக்க நிறுவனத்தின் நிறுவனரும் ஆவார். இவர் சிலி நாட்டின் இரண்டாவது கத்தோலிக்க புனிதர் ஆவார்.


“லூயிஸ் ஆல்பர்ட்டோ ஹர்டடோ குருச்சகா” (Luis Alberto Hurtado Cruchaga) எனும் இயற்பெயர் கொண்ட இவர், மிகவும் வறுமையான ஓர் ஏழைக்குடும்பத்தில் பிறந்தவர் ஆவார். தமது நான்கு வயதிலேயே தமது தந்தையை இழந்தார். இவரது தாயார், குடும்ப கடன்களை அடைப்பதற்காக சொற்ப பணத்துக்கு மிஞ்சியிருந்த கொஞ்ச சொத்துக்களையும் விற்றார். அடிக்கடி தமது சகோதரருடன் உறவினர்களின் வீடுகளில் மாறி மாறி தங்கினார். தங்குவதற்கென்று சிறிய வீடுகூட இல்லாத ஏழையாய் வாழ்வதன் துயரங்களை அனுபவித்து உணர்ந்தார். 


கி.பி. 1909ம் ஆண்டு முதல் 1917ம் ஆண்டு வரையான காலத்தில், இயேசு சபை குரு ஒருவரின் உதவியால், “புனிதர் இக்னாசியோ, சேன்டியாகோ” (St. Ignacio, Santiago, Chile) இயேசு சபை (Jesuit school) பள்ளியில் கல்வி பயின்றார். இக்காலத்தில், அருகாமையிலுள்ள கத்தோலிக்க பங்கின் ஏழை மக்களுக்கு வேண்டிய உதவிகள் புரிந்தார். அவர்களது குழந்தைகளுக்கு கல்வி கற்பித்தார். தான் படிக்கும்போதும் விடுமுறை நாட்களிலும் தன் ஊரை சுற்றியுள்ள குடிசைகளுக்குச் சென்று, மக்களை தேற்றியும் ஆறுதல்படுத்தியும் வந்தார். சிறந்த முறையில் சமூக சேவை செய்தார். கி.பி. 1918ம் ஆண்டு முதல் 1923ம் ஆண்டு வரையான காலத்தில், (Pontificia Universidad Católica de Chile) எனும் பல்கலைக்கழகத்தின் சட்டக் கல்லூரியில் பயின்றார். தொழிலாளர் சட்டம் சம்பந்தமான தேர்வுகள் எழுதினர். இடையே, கட்டாய இராணுவ சேவை சட்டம் அவரது கல்வியில் இடையூறாய் அமைந்தது. ஆனால், கட்டாய இராணுவ சேவையையும் முடித்த அவர், தமது கல்வியை தொடர்ந்தார்.


சட்டம் பயின்று பட்டம் பெற்ற ஹர்டடோ, வழக்கறிஞர் தொழில் செய்வதை விடுத்து, 1923ம் ஆண்டு இயேசு சபையில் (Jesuit novitiate) புகுமுக பயிற்சியில் சேர்ந்தார். 1925ம் ஆண்டு, இவர் “கொர்டோபா”, “அர்ஜென்டினா” (Córdoba, Argentina) ஆகிய நாடுகளுக்கு அனுப்பப்பட்டார். அங்கே மனிதநேயம் பற்றின கல்வி கற்றார். 1927ம் ஆண்டு, தத்துவயியல் மற்றும் இறையியல் ஆகியன கற்பதற்காக “பார்சிலோனா” மற்றும் “ஸ்பெயின்” (Barcelona, Spai) ஆகிய நாடுகளுக்கு அனுப்பப்பட்டார். ஆனால், 1931ம் ஆண்டு, ஸ்பெயின் நாட்டில் ஏற்பட்டிருந்த இயேசுசபை துறவியர்களின் ஒடுக்குமுறை காரணத்தால், “பெல்ஜியம்” (Belgium) சென்று இறையியல் படிப்பை தொடர்ந்தார். 1933ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், 24ம் தேதியன்று, அங்கேயே குருத்துவ அருட்பொழிவு பெற்ற ஹர்டடோ, 1935ம் ஆண்டு “கற்பித்தல்” மற்றும் “உளவியல்” (Pedagogy and Psychology) ஆகியவற்றில் முனைவர் பட்டம் வென்றார்.


ஆழ்ந்த பக்தியுள்ள ஹர்டடோ, தொழிலாளர் மற்றும் இளைஞர்களுக்காக களைப்பற்று பணியாற்றினார். அவரது பணிகளில் அறிவார்ந்த பிரதிபலிப்பும் நடைமுறை செயல்களும் இணைந்திருந்தன. மிகவும் நம்பிக்கை மற்றும் மகிழ்ச்சிமிக்க அவர், ஒரு கவர்ச்சிகரமான ஆளுமை கொண்டவராக இருந்தார். இளைஞர்களும், வயதானவர்களும்; அறிவாளிகளும், உடலுழைப்பால் பணியாற்றும் தொழிலாளர்களுமாய், பல்வேறு மக்களை கிறிஸ்துவிலும் திருச்சபையிலும் மனம் மாற்றி அழைத்து வந்தார். எப்போதும் அவர் சமூக சிந்தனைகளை கொண்டு செயல்பட்டார். சமுதாயத்தை பற்றியும், ஏழைகளை பற்றியும் சில நூல்களை எழுதியுள்ளார். 


ஏழைகளின் நண்பரான ஆல்பர்ட்டோ, கி.பி. 1952ம் ஆண்டில் ஒருநாள், திடீரென ஏற்பட்ட அதீத வேதனை காரணமாக மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டார். அங்கே, அவர் கணைய புற்றுநோயால் (Pancreatic Cancer) பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டார். நோயால் தாக்கப்பட்ட நாளிலிருந்து இறக்கும்வரை பொறுமையோடும், மகிழ்வோடும் தன் நோயை ஏற்றுக்கொண்டார். இவர் இறந்தாலும் ஏழைகளின் மனங்களில் உயிருடன் வாழ்கிறார். நோயுடனான சுருக்கமான போருக்குப் பிறகு, அவர் “சாண்டியாகோ” (Santiago) நகரில் ஆகஸ்ட் மாதம், பதினெட்டாம் நாள் மரித்தார்.


✠ புனித ஜான் யூட்ஸ் ✠

(St. John Eudes)


கத்தோலிக்க குரு/ சபை நிறுவனர்:

(Catholic Priest and Founder)


பிறப்பு: நவம்பர் 14, 1601

ரி, நார்மண்டி, ஃபிரான்ஸ் அரசு

(Ri, Normandy, Kingdom of France)


இறப்பு: ஆகஸ்டு 19, 1680 (அகவை 78)

சேன், ஃபிரான்ஸ் அரசு

(Caen, Normandy, Kingdom of France)


ஏற்கும் சமயம்: 

ரோமன் கத்தோலிக்கத் திருச்சபை

(Roman Catholic Church)


முக்திபேறு பட்டம்: ஏப்ரல் 25, 1909

திருத்தந்தை பத்தாம் பயஸ்

(Pope Pius X)


புனிதர் பட்டம்: மே 31, 1925

திருத்தந்தை பதினோறாம் பயஸ்

(Pope Pius XI)


நினைவுத் திருநாள்: ஆகஸ்ட் 19


பாதுகாவல்:

இயேசு மரியாள் (யூடிஸ்ட்) தொண்டு நிறுவனம் (Eudists)

கருணை அன்னை சபை (Order of Our Lady of Charity)

பே-கோமியு மறைமாவட்டம் (Diocese of Baie-Comeau)

மறைப்பணியாளர்கள் (Missionaries)


புனித ஜான் யூட்ஸ், ஓரு ஃபிரெஞ்ச் மறைப்பணியாளரும், கத்தோலிக்க குருவும், “இயேசு மற்றும் மரியாளின் தொண்டு நிறுவனம் - யூடிஸ்ட்” (Congregation of Jesus and Mary - Eudists) மற்றும் “கருணை அன்னை சபை” (Order of Our Lady of Charity) ஆகியவற்றின் நிறுவனரும் ஆவார்.


ஃபிரான்ஸ் நாட்டின் “நார்மண்டி” (Normandy) என்ற இடத்தினருகேயுள்ள “ரி” (Ri) எனும் கிராமத்தில், 1601ம் ஆண்டு பிறந்த இவருடைய பெற்றோர், “ஐசாக் யூட்ஸ்” மற்றும் “மார்த்தா கோர்பின்” (Isaac Eudes and Martha Corbin) ஆவர். ஃபிரான்ஸின் வடமேற்கு பிராந்தியமான “சேன்” (Caen) எனுமிடத்தில், இயேசு சபையினரிடம் (Jesuits) கல்வி கற்ற இவர், 1623ம் ஆண்டு, மார்ச் மாதம் 25ம் தேதி, “ஃபிரெஞ்ச் ஒரேடரி” (Oratorians) என்றழைக்கப்படும் “இயேசு மற்றும் மாசற்ற மரியாளின் ஒற்றுமை” (Congregation of the Oratory of Jesus and Mary Immaculate) எனும் சபையினருடன் இணைந்தார். இவர், “பிரெஞ்ச் ஆன்மீக பள்ளியின்” (French School of Spirituality) உறுப்பினர் ஆவார். பிரெஞ்ச் ஆன்மீக பள்ளி என்பது, ஒரு அமைப்பு அல்லது தத்துவம் மட்டுமேயல்ல. மாறாக, அது ஒரு ஆவிக்குரிய உயர்ந்த கிறிஸ்தவ அணுகுமுறையும், உணர்வுகள் மூலம் வகைப்படுத்தப்படும் ஆராதனையும், இயேசுவுடனான தனிப்பட்ட உறவும், தூய ஆவியின் மறு கண்டுபிடிப்புமாகும்.


யூட்ஸ், 1625ம் ஆண்டு, டிசம்பர் மாதம், 2௦ம் தேதி குருத்துவ அருட்பொழிவு பெற்றார். குருத்துவம் பெற்றவுடனேயே நோயுற்ற இவர், கிட்டத்தட்ட ஒரு வருடம் வரை படுக்கையிலேயே இருந்தார். 1627 மற்றும் 1631 ஆகிய வருடங்களில் ஃபிரான்ஸ் முழுதும் பிளேக் எனும் கொள்ளை நோயால் தாக்குண்டபோது, தமது உடல்நிலையையும் பொருட்படுத்தாது பிளேக் நோயால் தாக்குண்டவர்களுக்கு சேவை புரிய நார்மண்டி (Normandy) சென்றார். நோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நற்கருணை ஆராதனைகள் நிகழ்த்தினார். இறந்து போனவர்களை அடக்கம் செய்வதில் உதவிகள் செய்தார்.


தமது 32 வயதில் பங்கு மறைப்பணியாளராக பொறுப்பேற்ற இவர், “நார்மண்டி, ல்லெ-டே-ஃபிரான்ஸ், பர்கண்டி மற்றும் பிரிட்டனி” (Normandy, Ile-de-France, Burgundy and Brittany) ஆகிய பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட பிரசங்கங்கள் ஆற்றினார்.


தமது பங்கு மறைப்பணிகளின்போது, வாழ்வில் வழி தவறிப்போன விபச்சாரப் பெண்களால் மிகவும் கலங்கினார். தமது பாவ வாழ்க்கையிலிருந்து மீண்டு வாழ விரும்பிய விபச்சார பெண்களுக்கு அடைக்கலம் தருவதற்காக, 1641ம் ஆண்டு, “கருணையின் அடைக்கல அன்னை” (Order of Our Lady of Charity of the Refuge) எனும் சபையை நார்மண்டியிலுள்ள “சேன்” (Caen) நகரில் நிறுவினார். “அன்னை மரியாளின் திருவருகை” (Visitation) சபையைச் சேர்ந்த மூன்று அருட்சகோதரியர் இவரது உதவிக்காக வந்தனர். கி.பி. 1644ம் ஆண்டு, சேன் நகரில் “கருணையின் அன்னை” (Our Lady of Charity) என்ற பெயரில் ஒரு இல்லம் தொடங்கினார். இவர்களது சபை, கி.பி. 1666ம் ஆண்டு, ஜனவரி மாதம், 2ம் தேதியன்று, திருத்தந்தை “ஏழாம் அலெக்சாண்டர்” (Pope Alexander VII) அவர்களால் அங்கீகரிக்கப்பட்டது.


கர்தினால் “ரிசெளியு” (Cardinal Richelieu) மற்றும் பல ஆயர்களின் ஆதரவுடன் “யூடிஸ்ட்ஸ்” என்றழைக்கப்படும் “இயேசு மற்றும் மரியாளின் தொண்டு நிறுவனத்தை” (Congregation of Jesus and Mary (Eudists) கி.பி. 1643ம் ஆண்டு, மார்ச் மாதம், 25ம் தேதியன்று, சேன் நகரில் நிறுவினார். இந்நிறுவனம், குருக்களின் கல்வி மற்றும் பங்கு மறைப்பணி ஆகியவற்றுக்கே அர்ப்பணிக்கப்பட்டதாகும்.


யூட்ஸ், இயேசுவின் திருஇருதய பக்தியையும், மரியாளின் மாசற்ற இருதய பக்தியையும் ஊக்குவித்து வளர்த்தார். மறைப்பணியின்போது, பல தியானங்கள் கொடுப்பதன் வழியாக பலருக்கு ஆறுதல்படுத்தும் பணியையும், குணமளிக்கும் பணியையும், நற்செய்திப் பணியையும் ஆற்றினார். இதன் வழியாக எண்ணிடலங்கா மக்களை இறைவழி செல்ல வழிகாட்டினார்.


நற்கருணையாண்டவர் பக்தி:

ஃபிரெஞ்ச் பள்ளி மற்றும் “புனிதர் ஃபிரான்சிஸ் டே சலேஸ்” (Saint Francis de Sales) ஆகியோரின் படிப்பினைகளின் செல்வாக்கினாலும் கடவுளின் அன்பினைப் பற்றிய உபதேசங்களாலும் ஈர்க்கப்பட்ட யூட்ஸ், நற்கருணையாண்டவரின் பக்தியில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்தார். சேன் நகரிலுள்ள குருத்துவ சிற்றாலயங்களை இயேசுவின் திருஇருதயத்திற்கு அர்ப்பணித்தார். யூட்ஸ், பல்வேறு செபங்களையும் செபமாலைகளையும் திருஇருதயத்திற்காக இயற்றினார். இவர் எழுதிய (Le Cœur Admirable de la Très Sainte Mère de Dieu) என்ற புத்தகம், திருஇருதயங்களின் பக்திக்காக எழுதப்பட்ட முதல் புத்தகமாகும். இயேசு மற்றும் மரியாளின் ஆத்மபலம் கொண்ட திருஇருதயங்களின் பக்தியை கற்பித்தார்.


அருட்தந்தை யூட்ஸ், பல்வேறு புத்தகங்களை எழுதினர். அவற்றுள் சில பின்வருமாறு:

1. இயேசுவின் வாழ்க்கை மற்றும் அரசு. (கி.பி. 1637)

(The Life and Kingdom of Jesus, 1637 AD)

2. திருமுழுக்கு மூலம் மனிதனுக்கும் இறைவனுக்கும் இடையேயான ஒப்பந்தம். (கி.பி. 1654)

(Contract of Man with God Through Holy Baptism, 1654 AD)

3. நல்ல பாவங்களை ஒப்புக்கொள்பவர் (கி.பி. 1666)

(The Good Confessor, 1666 AD)


அருட்தந்தை ஜான் யூட்ஸ், கி.பி. 1680ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், 19ம் நாள், சேன் (Caen) நகரில் மரித்தார்.


✠ க்ளேர்வாக்ஸ் நகர் புனிதர் பெர்னார்ட் ✠

(St. Bernard of Clairvaux)


மடாதிபதி, ஒப்புரவாளர், மறைவல்லுநர்:

(French Abbot, Confessor, Doctor of the Church)


பிறப்பு: கி.பி. 1090

ஃபவுன்டைன்-லெஸ்-டிஜோன், ஃபிரான்ஸ்

(Fontaine-lès-Dijon, France)


இறப்பு: ஆகஸ்டு 20, 1153 (வயது 63)

க்ளேர்வாக்ஸ், ஃபிரான்ஸ்

(Clairvaux, France)


ஏற்கும் சமயம்:

ரோமன் கத்தோலிக்க திருச்சபை

(Roman Catholic Church)

ஆங்கிலிக்கன் திருச்சபை

(Anglican Church)

லூதரன் திருச்சபை

(Lutheran Church)


புனிதர் பட்டம்: ஜனவரி 18, 1174 

திருத்தந்தை 3ம் அலெக்சாண்டர்

(Pope Alexander III)


முக்கிய திருத்தலங்கள்:

ட்ரோய்ஸ் பேராலயம், வில்லே-சௌஸ்-ல-ஃபெர்ட்,

(Troyes Cathedral, Ville-sous-la-Ferté)


நினைவுத் திருநாள்: ஆகஸ்ட் 20


பாதுகாவல்: 

சிஸ்டர்சியன் சபையினர் (Cistercians), பர்கண்டி (Burgundy), தேனீ வளர்ப்பவர்கள் (Beekeepers), மெழுகுவர்த்தி தயாரிப்பாளர்கள் (Candle makers), ஜிப்ரால்டர் (Gibraltar), அல்ஜீசிராஸ் (Algeciras), குயின்ஸ் கல்லூரி (Queens' College), கேம்பிரிட்ஜ் (Cambridge), 

ஸ்பீயர் பேராலயம் (Speyer Cathedral), நைட்ஸ் டெம்ப்ளர் (Knights Templar), பினன்கொனம் (Binangonan), ரிஸால் (Rizal)


புனித பெர்னார்ட், ஒரு ஃபிரெஞ்ச் மடாதிபதியும் (French abbot), சிஸ்டெர்சியன் சபையின் (Cistercian order) பிரதான சீர்திருத்தவாதியும், பெனடிக்டின் துறவறத்தின் (Benedictine monasticism) சீர்திருத்தங்களின் முக்கிய தலைவருமாவார்.


பெர்னார்டின் தந்தை, “டெஸ்செலின்” (Tescelin de Fontaine), “ஃபவுன்டைன்-லெஸ்-டிஜோன்” (Fontaine-lès-Dijon) பிரபு ஆவார். இவரது தாயார், “அலேத்” (Alèthe de Montbard) ஆவார். இவர்கள் இருவமே “பர்கண்டியின்” (Burgundy) பிரபுக்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.


தமது ஒன்பது வயதில் கல்வி கற்க ஆரம்பித்த பெர்னார்ட், இலக்கியத்தில் பெரும் ஆர்வம் கொண்டிருந்தார். கவிதைகள், செய்யுள் போன்றவற்றை எழுதுவதிலும் ஆர்வம் கொண்டிருந்தார். கல்வியில் அவர் கொண்ட வெற்றிகள், அவரது ஆசிரியர்களிடம் அவருக்கு பெரும் புகழை பெற்றுத்தந்தது. திருவிவிலியத்தை கற்கவும், ஆராய்வதற்காகவும், அவர் இலக்கியத்தில் சிறந்து விளங்க விரும்பினார். அவர், அன்னை கன்னி மரியாளிடம் சிறப்பு பக்தி கொண்டிருந்தார். பிற்காலத்தில், விண்ணரசி அன்னையைப் பற்றி பல்வேறு படைப்புகளை எழுதினர்.


தத்துவ அறிஞர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தெய்வீக புரிதலுக்கான பகுத்தறிவு அணுகுமுறைக்கு எதிராக, பெர்னார்ட் ஒரு உடனடி விசுவாசத்தைப் பிரசங்கித்தார், அதனை பரிந்துரை செய்தது அன்னை மரியாள் ஆவார்.


பெர்னார்டுக்கு பத்தொன்பது வயதாகையில் அவரது அன்னை மரித்துப்போனார். தமது இளமைக்காலத்தில் அவர் சோதனைகளிலிருந்து தப்பிவிடவில்லை. இச்சமயத்தில், உலக நடவடிக்கைகளிலிருந்து விடுபட்டு, தனிமை மற்றும் செப வாழ்வை தேர்ந்தெடுக்க விரும்பினார். தமது 22 வயதில், ஒரு தேவாலயத்தில் அவர் செபித்துகொண்டிருக்கையில், “சிடாக்ஸ்” (Cîteaux) நகரிலுள்ள “சிஸ்டேர்சியன்” (Cistercian Monks) துறவியர் மடத்தில் இணைய கடவுள் அழைப்பதாக உணர்ந்தார். பெர்னார்டின் நண்பர்கள், சகோதரர்கள் மற்றும் உறவினர்கள் என்று சுமார் முப்பது பேர் இவருடன் சேர்ந்து துறவு மடத்தில் இணைய பெர்னார்டின் சாட்சியம் தவிர்க்க இயலாத முக்கிய காரணியாய் அமைந்தது.


மூன்று ஆண்டுகளின் பிறகு, (Val d'Absinthe) எனப்படும் தனிமைப்படுத்தப்பட்ட ஒரு ஒடுங்கிய பள்ளத்தாக்கில் துறவு மடமொன்றை நிறுவுவதற்காக அனுப்பப்பட்டார். மரபுப்படி, கி.பி. 1115ம் ஆண்டு, ஜூன் மாதம், 25ம் நாளன்று, துறவு மடத்தை நிறுவினார். அதற்கு “கிளேர் வள்ளி” (Claire Vallée) என்று பெயரிட்டார். பின்னர் அது மருவி, “க்ளேர்வாக்ஸ்” (Clairvaux) என்றானது. அங்கே, உடனடியாக விசுவாசத்தை போதித்து பிரசங்கிக்க தொடங்கினார். அதற்கு பரிந்துரையாளராக அன்னை மரியாள் இருந்தார்.


கி.பி. 1130ம் ஆண்டு, ஃபெப்ரவரி மாதம், 13ம் நாள், திருத்தந்தை “இரண்டாம் ஹானரியல்” (Pope Honorius II) மரித்ததும், திருச்சபையில் ஒரு கலகம் வெடித்தது. ஃபிரான்ஸ் நாட்டின் அரசன் “ஆறாம் லூயிஸ்” (King Louis VI of France) “எடம்ப்ஸ்” (Étampes) எனுமிடத்தில் ஃபிரெஞ்ச் ஆயர்களின் தேசிய மகாசபையைக் கூட்டினார். திருத்தந்தைப் பதவிக்கான போட்டியாளர்களிடையே தீர்ப்பு வழங்க பெர்னார்ட் தேர்ந்தெடுக்கப்பட்டார். “எடம்ப்ஸ்” (Étampes) மகா சபையின் பின்னர், திருத்தந்தை “இரண்டாம் இன்னொசன்டிற்கான” (Pope Innocent II) அரசனின் ஒதுக்கீட்டிற்காக, பெர்னார்ட் இங்கிலாந்தின் அரசன் “முதலாம் ஹென்றியுடன்” (King Henry I of England) பேச்சு நடத்தினார். இங்கிலாந்தின் பெருமளவு ஆயர்கள், எதிர் திருத்தந்தை “இரண்டாம் அனக்லெட்டஸுக்கு” (Antipope Anacletus II) ஆதரவு தெரிவித்ததால், அரசன் நம்பிக்கையற்றிருந்தார். இன்னொசன்டுக்கு ஆதரவு அளிக்குமாறு பெர்னார்ட் அரசனை வற்புறுத்தினார். பெர்னார்டின் நண்பர் “நார்பர்ட்” (Norbert of Xanten) மூலமாக, இன்னொசன்டுக்கு ஆதரவளிக்க ஜெர்மன் முடிவு செய்தது. எனினும், தூய ரோம பேரரசர் “இரண்டாம் லோதைரை” (Lothair II, Holy Roman Emperor) சந்திக்க செல்கையில் பெர்னார்ட் உடன் வரவேண்டுமென இன்னொசன்ட் வலியுறுத்தினார். திருத்தந்தைப் பதவிக்கான மொத்த யுத்தமும் கி.பி. 1138ம் ஆண்டு, ஜனவரி மாதம், 25ம் நாளன்று, “இரண்டாம் அனக்லெட்டஸ்” (Antipope Anacletus II) இறந்ததும் முடிவுக்கு வந்தது.


முன்னர் திருச்சபைக்குள்ளே ஏற்பட்ட பிரிவினைகளுக்கு முடிவுகட்ட உதவிய காரணங்களால், பெர்னார்ட் இப்போது மதங்களுக்கு எதிரான கொள்கைகளுக்கெதிராக (Heresy) போரிட அழைக்கப்பட்டார். ஜூன் 1145ல், பெர்னார்ட் தென்-ஃபிரான்ஸ் பிராந்தியங்களுக்கு பயணித்தார். அங்கே அவரது போதனைகளும் பிரசங்கங்களும் மதங்களுக்கு எதிரான கொள்கைகளுக்கெதிராக ஆதரவை அதிகரித்தது. “எடிஸ்ஸா முற்றுகையின்” (Siege of Edessa) கிறிஸ்தவ தோல்விக்குப் பிறகு, இரண்டாம் சிலுவைப்போரைப் (Second Crusade) பிரசங்கிக்க, திருத்தந்தை அவர்கள், பெர்னார்டை நியமித்தார். சிலுவைப்போரின் தோல்விகள் காரணமாக, பெர்னார்டின் வாழ்க்கையின் இறுதி ஆண்டுகள் துன்பங்கள் நிறைந்ததாக இருந்தன. தோல்விக்கான முழு பொறுப்பும் அவர் மீதே சுமத்தப்பட்டன.


40 வருடங்கள் ஒரு துறவியாக வாழ்ந்த பெர்னார்ட், தமது 63 வயதில் மரித்தார். புனிதர்களின் நாட்காட்டியில் (Calendar of Saints) இடம் பிடித்த முதல் “சிஸ்டேர்சியன்” (Cistercian) துறவி இவரேயாவார். திருத்தந்தை “மூன்றாம் அலெக்சாண்டரால்” (Pope Alexander III) புனிதராக அருட்பொழிவு செய்விக்கப்பட்ட இவர், திருத்தந்தை “எட்டாம் பயசால்” (Pope Pius VIII) கி.பி. 1830ம் ஆண்டு திருச்சபையின் மறைவல்லுனராக (Doctor of the Church) பிரகடணம் செய்யப்பட்டார்.


✠ புனிதர் பத்தாம் பயஸ் ✠

(St. Pius X)


257வது திருத்தந்தை:

(257th Pope)


இயற்பெயர்:

குயிசெப் மேல்ச்சியோர் ஸர்டோ

(Giuseppe Melchiorre Sarto)


பிறப்பு: ஜூன் 2, 1835

ரெய்சி, ட்ரேவிசோ, லம்பர்டி-வெனிஷியா, ஆஸ்திரிய பேரரசு

(Riese, Treviso, Lombardy-Venetia, Austrian Empire)


இறப்பு: ஆகஸ்ட் 20, 1914 (வயது 79)

அப்போஸ்தலர் மாளிகை, ரோம், இத்தாலி அரசு

(Apostolic Palace, Rome, Kingdom of Italy)


ஏற்கும் சமயம்:

ரோமன் கத்தோலிக்க திருச்சபை

(Roman Catholic Church)


முக்திபேறு பட்டம்: ஜூன் 3, 1951

திருத்தந்தை பன்னிரண்டாம் பயஸ்

(Pope Pius XII)


புனிதர் பட்டம்: மே 29, 1954

திருத்தந்தை பன்னிரண்டாம் பயஸ்

(Pope Pius XII)


நினைவுத் திருவிழா: ஆகஸ்ட் 21


பாதுகாவல்:

அட்லான்டா உயர் மறைமாநிலம்; தேஸ் மொயின்ஸ், ஐயோவா மறைமாநிலம்; புது நன்மை வாங்குவோர்; கிரேட் பால்ஸ்-பில்லிங்ஸ் மறைமாநிலம்; [கோட்டயம், இந்தியா மறைமாநிலம்; திருப்பயணிகள்; சான்டா லுசிஜா, மால்டா; ஸ்பிரிங் பீல்டு, மிசூரி மறைமாநிலம்; சம்போஙா, பிலிப்பைன்சு மறைமாநிலம்


திருத்தந்தை புனிதர் பத்தாம் பயஸ், கி.பி. 1903ம் ஆண்டு முதல் 1914ம் ஆண்டு வரை கத்தோலிக்க திருச்சபையின் 257-ஆவது திருத்தந்தையாக ஆட்சி செய்தவர் ஆவார். இவர் ஐந்தாம் பயஸுக்கு பின் புனிதர் பட்டம் பெற்ற திருத்தந்தையாவார். இவர் திருச்சபையின் கொள்கைகளுக்கு நவீனத்துவ விளக்கங்கள் அளிப்பதை எதிர்த்தார். பாரம்பரிய விளக்கங்களையே ஊக்குவித்தார். இவரின் மிகமுக்கிய செயல்பாடாக கருதப்படுவது, இவர் வெளியிட்ட திருச்சபை சட்ட தொகுப்பாகும். இவ்வாறு வெளியிடப்படுவது இதுவே முதல் முறையாம். இவர் கிறிஸ்தவ ஒழுக்கங்களை தனிமனித வாழ்விலும் கடைபிடிப்பதில் ஊக்குவித்தார். இவர் பிறந்த ஊரான ரெய்சி, இவரின் பொருட்டு பின்நாளின் ரெய்சி பியோ X (இத்தாலிய ஒளி பெயர்ப்பில் இவரின் பெயர்) என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.


இவர் மரியாளிடம் பக்தி கொண்டவராக விளங்கினார். இவர் “Ad Diem Illum” என்னும் தனது சுற்றறிக்கையில், "மரியாளின் வழியாக கிறிஸ்துவில் யாவற்றையும் புதுப்படைப்பாக்க" என்னும் தனது விருப்பத்தை வெளிப்படுத்தினார். இதையே தனது ஆட்சியின் குறிக்கோளுரையாகக் கொண்டார். கி.பி. 20ம் நூற்றாண்டில் திருத்தந்தையாக இருந்தவரில் பத்தாம் பயஸ் மட்டுமே அதிக தளப்பணி செய்தவராவார். இந்த அனுபவத்தாலேயே அவரவரின் சொந்த மொழியிலேயே மறைபரப்ப தூண்டினார்.


இவரின் தொண்டு உள்ளம் வியக்கத்தக்கது. கி.பி. 1908ல் நடந்த மெசினா நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களை, இத்தாலிய அரசு உதவி புரிய ஆரம்பிக்கும் முன்பே, தாமாகவே முன்வந்து திருத்தூதரக அரண்மனையில் தங்க வைத்தார். தம் குடும்பத்திற்கு எந்தவித உதவியும் பெறவில்லை. இவரின் மிகவிருப்பமான உடன் பிறந்தவரின் மகன் கடைசிவரை கிராமத்தில் பங்கு குருவாகவே இருந்தார். மற்ற மூன்று சகோதரிகளும் ஏழ்மையிலேயே வாழ்வைக் கழித்தனர். 'நான் ஏழையாக பிறந்தேன், ஏழையாக வாழ்ந்தேன், ஏழையாகவே சாக விரும்புகிறேன்' என அடிக்கடி சொல்வார். பலர் இவரின் மரணத்தின் பின்னர், இவரை புனிதரெனக் கொண்டாடி வெளிப்படையான வணக்கம் செலுத்தினர். இதனாலேயே இவரின் புனிதர் பட்ட நிகழ்வு விரைவில் நடந்தேறியது.


கி.பி. 1878ல் மறைமாவட்ட ஆயர் சனாலியின் மரணத்திற்குப் பின், மறைமாவட்டப் பேராலய உயர்நிலைக் குருக்கள் பேரவை இவரை (மற்றொரு ஆயர் நியமிக்கப் படும் வரை) அதன் தலைவராகத் தேர்ந்தெடுத்தது. கி.பி. 1878 டிசம்பர் முதல் ஜூன் 1880 வரை இப்பொறுப்பில் அவர் இருந்தார்.


கி.பி. 1880-க்கு பின் திரிவிசோ குருமடத்தில் ஆசிரியராக பணியாற்றினார்.


கர்தினாலாகவும் மூப்பராகவும்:

கி.பி. 1893ம் ஆண்டு, ஜூன் மாதம், 12ம் நாளன்று, பதின்மூன்றாம் லியோ இவரை கத்தோலிக்க கர்தினாலாக உயர்த்தினார். சான் பெர்னாதோ அலே தெர்மியின் (பட்டம் சார்ந்த) கர்தினால் குருவாகவும், மூன்று நாட்களுக்கு பின் வெனிசின் மூப்பராகவும் திருத்தந்தை அறிவித்தார். இத்தாலிய அரசுடன் திருச்சபைக்கு இருந்த மனக்கசப்பால் கி.பி. 1894ம் ஆண்டு வரை பொறுப்பேற்க இயலவில்லை.


திருப்பீட தேர்வு:

கி.பி. 1903ம் ஆண்டு, ஜூலை மாதம், 20ம் நாளன்று, பதின்மூன்றாம் லியோ காலமானார். அதன் பின் கூடிய திருப்பீடத்தேர்வில் (en:Papal Election) கர்தினால் சார்தோ 1903ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், 4ம் நாளன்று, திருத்தந்தையாக தேர்த்தெடுக்கப்பட்டார். இவர் தன் ஆட்சிப்பெயராக பத்தாம் பயஸை தெரிவு செய்தார். 1903ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், 9ம் தேதி, முடிசூட்டு விழா நடந்தது.


திருப்பீட ஆட்சி:

இவர் கிறிஸ்தவத்தின் அடிப்படைவாத கொள்கையையுடையவர். இதனையே தம் ஆட்சிக்காலத்திலேயும் கையாண்டார். இவர் முடி சூட்டப்பட்ட தினத்தன்று இவரின் கழுத்தில் இருந்த சிலுவை முலாம் பூசப்பட்டது என்பதை அறிந்த பணியாளர்கள் அதிர்ந்தனர். ஆனால் இவர் அமைதியாக தன்னிடம் வேறு சிலுவை இல்லை எனக்கூறி அதனையே அணிந்து வந்தார். திருத்தந்தை எட்டாம் அர்பனால் கொண்டுவரப்பட்ட பழக்கமான, திருத்தந்தை தனியாக உணவருந்துதலை இவர் அழித்தார். இவர் தன் நண்பர்களைத் தன்னோடு உணவருந்த அழைப்பு விடுத்தார்.


இவர் சிறுவர்களிடம் தனிப்பட்ட அன்பு செலுத்தினார். சிறுவர்களைக் கவர எப்போதும் தன்னுடன் இனிப்புகளை எடுத்துச் செல்வார். இவர் பங்குகளில் சிறுவர்களுக்கான மறைக்கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து, சிறுவர்களை ஆன்மிக இருளிலிருந்து வெளிக்கொணர முயன்றார்.


திருச்சபை சீர்திருத்தங்களும் இறையியலும்:

கிறிஸ்தியல் மற்றும் மரியாலியலில்:

பத்தாம் பயஸ் தினசரி நற்கருணை வாங்குவதை ஊக்குவித்தார். 1904ல் வெளியிட்ட சுற்றுமடலில் (Encyclical Ad Diem Illum), "கிறிஸ்துவில் எல்லாவற்றையும் புனிதமாக்குவதில்" மரியாளுக்கு இருக்கும் பங்கினை எடுத்தியம்பினார். நாம் அனைவரும் மரியாளின் ஆன்மிகப் பிள்ளைகளாயிருப்பதால் அவருக்கு அன்னைக்குரிய வணக்கம் செலுத்தப்பட வேண்டும் என்றார். வாக்கு மனிதர் ஆனார் என கிறிஸ்துவைப்பற்றி விவிலியம் கூறுகின்றது. ஆனால் மனு உருவான அவ்வாக்கிற்கு உடல் கொடுத்ததால் அவர் கிறிஸ்துவின் அன்னையாகிறார். கிறிஸ்துவின் மறைஉடலான திருச்சபை, கிறிஸ்துவின் மனித உடலிலிருந்து வேறுபடுத்திப் பார்க்க இயலாது, ஆகவே மரியாள் திருச்சபையின் ஆன்மீக அன்னை மட்டுமல்ல, அவள் உண்மையான அன்னையும் கூட என்றார்.


திருச்சபை சட்டங்களில் சீர்திருத்தம்:

1904ம் ஆண்டு, மார்ச் மாதம், 19ம் தேதி, திருச்சபையின் சட்டத்தொகுப்பை உலகம் முழுமைக்கும் ஒரே சட்டத்தொகுப்பாக்கும்படி கர்தினால் குழாமின் ஆணையம் ஒன்றை வடிவமைத்தார். இவருக்கு முன் உலகம் முழுமைக்கும் ஒரே திருச்சபை சட்டத்தொகுப்பு இருந்ததில்லை. இவருக்குப் பின் திருத்தந்தையானவர்களுள் இருவர் (பதினைந்தாம் பெனடிக்ட் மற்றும் பன்னிரண்டாம் பயஸ்) இவ்வாணையத்தில் இருந்தனர். இவ்வாணையம் தன் பணியை பதினைந்தாம் பெனடிக்டின் ஆட்சியில் 1917ம் ஆண்டு, மே மாதம், 27ம் நாளன்று, நிறைவு செய்தது. அவை, 1918ம் ஆண்டு, மே மாதம், 19ம் நாளன்று துவங்கி, 1983ம் ஆண்டின் திருவருகை காலம் வரை நடைமுறையில் இருந்தது.


திருச்சபை சட்டத்தில் சீர்திருத்தம்:

பத்தாம் பயஸ் திருத்தந்தையின் திருப்பீடத்தின் கீழ் வரும் ஆட்சித்துறைகளை (Roman Curia) சீரமைத்தார். குறிப்பாக குருத்துவக் கல்லூரிகளை மேல்பார்வையிடும் ஆயர்களின் பணியைப் புதிய சட்டங்களால் 'Pieni L'Animo' என்னும் சுற்றுமடலின் மூலமாக திருத்தினார். பல சிறிய குருத்துவக் கல்லூரிகளை ஒன்றிணைத்து பெரிய குருமடம் உருவாக செய்தார். புதிய குருத்துவ கல்வி முறையை உருவாக்கினார். பொதுப்பணித்துறை நிறுவனங்களை குருக்கள் தலைமை தாங்கி நடத்த தடை விதித்தார்.


வாழ்நாளில் செய்ததாக கூறப்படும் புதுமைகள்:

பத்தாம் பயஸ் தன் வாழ்நாளிலேயே பல புதுமைகளை செய்துள்ளார் என்பர். முடக்கு வாதம் உற்ற குழந்தை இவர் தூக்கியதால் நலம் பெற்றது என்பர். மூளைக் காய்ச்சல் உடைய இரண்டு வயது குழந்தையின் பெற்றோர் இவரை செபிக்கும்படி கடிதம் எழுதினர். இரண்டு நாட்களில் குழந்தை குணமானது என்பர்.


காச நோயுற்றிருந்த எர்னஸ்தோ ருபின் (பின்நாளின் பலேர்மோவின் பேராயர்) இவரைக்கண்ட போது, ருபின் குணமடைந்து விடப்போவதாகவும், அதனால் குருத்துவக் கல்வியை தொடர மீண்டும் குரு மடத்திற்கு செல்ல அறிவுறுத்தியதாக குறியுள்ளார்.


பிற செயல்கள்:

பத்தாம் பயஸ் பத்து பேருக்கு முக்திபேறு பட்டமும், நான்கு பேருக்கு புனிதர் பட்டமும் அளித்துள்ளார். பத்தாம் பயஸ் 16 திருத்தூது மடல்களை வரைந்துள்ளார்; அவற்றுள் “Vehementer nos” என்னும் மடல் ஃபெப்ரவரி 11, 1906, அன்று வெளியிடப்பட்டதில் 1905ம் ஆண்டு ஃபிரான்ஸ் நாட்டின் அரசு சமயம் பிரிவினை சட்டத்தைக் கண்டித்தார்.


இறப்பும் அடக்கமும்:

1913ல், புகைப்பழக்கம் உள்ள பத்தாம் பயஸ், மாரடைப்பால் உடல் நலம் குன்றினார். 1914ல் வின்னேற்பு அன்னை திருவிழாவன்று (15 ஆகஸ்ட்) இவர் திரும்பவும் நோய்வாய்பட்டார். முதலாம் உலகப் போர் துவங்கியதால் மனம் பாதிக்கப்பட அவர், 20 ஆகஸ்ட் 1914 அன்று இயற்கை எய்தினார். பின்பு இவர் புனித பேதுரு பேராலயத்தில் அடக்கம் செய்யப்பட்டார்.


இவருக்கு முன்பு வரை திருத்தந்தையரை அடக்கம் செய்யும் முன், உடல் பதனிடும்போது உள் உறுப்புகளை நீக்குவர். ஆனால் இவர் இதை தடை செய்தார். இன்றுவரை இத்தடை அமலில் உள்ளது.


✠ ஸ்மோலென்ஸ்க் நகர் புனிதர் ஆபிரகாம் ✠

(St. Abraham of Smolensk)


ரஷிய துறவி மற்றும் குரு:

(Russian Monk and Priest)


பிறப்பு: கி.பி. 1150

ஸ்மோலென்ஸ்க், ரஷியா

(Smoensk, Russia)


இறப்பு: கி.பி. 1222

ஸ்மோலென்ஸ்க், ரஷியா

(Smoensk, Russia)


ஏற்கும் சமயம்:

ரோமன் கத்தோலிக்க திருச்சபை

(Roman Catholic Church)

கிழக்கு மரபுவழி திருச்சபை

(Eastern Orthodox Church)


புனிதர் பட்டம்: கி.பி. 1549

திருத்தந்தை மூன்றாம் பவுல்

(Pope Paul III)


நினைவுத் திருவிழா: ஆகஸ்ட் 21


பாதுகாவல்:

ஸ்மோலென்ஸ்க் (Smoensk)


புனிதர் ஆபிரகாம், ஒரு ரஷிய துறவியும் குருவும் (Russian Monk and Priest) ஆவார். “பொகாரோடிட்ஸ்காஜா” கான்வென்ட்டில் (Bogoroditzkaja convent) வசித்துவந்த இவர், அற்புதங்கள் புரிபவராக கருதப்பட்டார். விரிவான பிரசங்கங்களிலும், விவிலிய ஆய்வுகளிலும் ஈடுபட்டிருந்த இவர், மங்கோலிய ரஷியாவுக்கு முந்தைய (Pre-Mongol Russia) முக்கிய பிரமுகராக கருதப்படுகிறார்.


இப்புனிதர், கி.பி. 1150ம் ஆண்டு அல்லது 1172ம் ஆண்டில் பிரபுக்களுக்கு பிறந்ததாக கூறப்பட்டது. சிறு வயதிலேயே அனாதையான இவர், இவ்வுலக வாழ்க்கையை கைவிட்டு, மிகவும் கடினமான மற்றும் எளிய ஆன்மீக வாழ்க்கையை தேர்வு செய்ய முடிவு செய்தார். அவர் மனதில் கண்டிப்பு மற்றும் போர்க்குணமிக்க ஒரு மனிதராக விவரிக்கப்படுகிறார். இறுதி நியாயதீர்ப்பினை தமது மனதில் இருத்தியிருந்த இவர், அதனை பிறர் மனதிலும் இருத்த முயற்சித்தார். நோயுற்றவர்களுக்காகவும், கஷ்டபட்டவர்களுக்காகவும் பணிபுரிந்த அவர், உண்மையிலேயே விசுவாசமுள்ளவர்களுள் பிரபலமடைந்திருந்தார். அவருடைய உதவிக்காகவும் ஆலோசனைக்காகவும் அவரிடம் வருகிறவர்களுடன் அவர் மென்மையாக நடந்துகொண்டார். அவரது வெற்றிகள்மீது பொறாமை கொண்டிருந்த பிற குருமார்களோடு அவர் குறைவாகவே பிரபலமடைந்திருந்தார். பிற குருக்களிடையே இருந்த இந்த பதற்றம், அவருக்கு எதிரான பல தார்மீக மற்றும் இறையியல் குற்றச்சாட்டுகளுக்கு வழிவகுத்தது. இதன்காரணமாக, உள்ளூர் ஆயர் இவர் மீது நடவடிக்கை எடுத்து, இவரை பிரசங்கிக்க தடை விதித்தார். இதன் காரணமாக, இவர்மீது எப்போதும் சந்தேகம் கொண்டிருந்த குருக்களைத் தவிர்த்து, இவருக்கு நண்பர்கள் எவரும் இல்லாது போயினர்.


பின்னர், இவருக்கு எதிரான வழக்கை மீண்டும் கையிலெடுத்த உள்ளூர் ஆயர், இவர் மீதிருந்த அனைத்து குற்றச்சாட்டுக்களிலிருந்தும் இவரை விடுவித்தார். பின்னர், அப்பகுதியிலுள்ள கடவுளின் அன்னையின் சிறிய மற்றும் வறிய பள்ளியின் மடாதிபதியாக அவரை நியமித்தார்.


தமது மீதமுள்ள வாழ்க்கையை அங்கேயே வாழ்ந்த இப்புனிதர், கி.பி. 1222ம் ஆண்டு, மரித்தார்.


✠ விண்ணக அரசி அன்னை தூய கன்னி மரியாள் ✠

(Queen of Heaven Blessed Virgin Mary)


பாதுகாவல்:

பரலோகம், மனிதகுலத்திற்கு நித்திய இரட்சிப்பு, மீட்பு

(Heaven, Eternal Salvation to Humankind, Redemption)


திருவிழா நாள்: ஆகஸ்ட் 22


விண்ணக அரசி என்பது, அன்னை தூய கன்னி மரியாளுக்கு கிறிஸ்தவர்களால் குறிப்பாக கத்தோலிக்க திருச்சபை மற்றும் ஒரு சில ஆங்கிலிக்கம், கிழக்கு மரபுவழி திருச்சபைகளில் வழங்கப்படும் பட்டமாகும். 5ம் நூற்றாண்டில் நடந்த “முதலாம் எஃபேசஸ் பொதுச்சங்கத்தில்” (First Council of Ephesus) மரியாள் கடவுளின் அன்னை (Theotokos) என அறிவிக்கப்பட்டதன் விளைவாக இப்பட்டம் வழங்கப்படலாயிற்று என நம்பப்படுகின்றது.


இந்த நம்பிக்கை குறித்த கத்தோலிக்க படிப்பினை, திருத்தந்தை “பன்னிரண்டாம் பயஸின்” (Pope Pius XII) 11-10-1956 தேதியிட்ட (Ad Caeli Reginam) என்னும் சுற்று மடலில் விவரிக்கப்பட்டுள்ளது.


கன்னி மரியாள் விண்ணக அரசி என்று திருச்சபையானது ஆதியிலிருந்தே விசுவசித்து வந்திருக்கிறது. வேத புத்தகத்திலும், பரம்பரையிலும், இந்த விசுவாசத்திற்கு ஆதாரங்கள் உண்டு. என்றும் மரியாள் அரசியாக இருக்கிறார். ஏனெனில் அவர் பெற்றெடுத்த மகன் அனைத்துக்கும் அரசர்; அனைத்துக்கும் ஆண்டவர். அவர் நம்மை மீட்ட அரசரும், ஆண்டவரும் ஆனார். புனித மரியாள் மீட்பின் பணியில் இரட்சகருடன் ஒத்துழைத்தார். தனது உதரத்தில் அவர் உருவாக அன்னை அனுமதி அளித்தார். நம் மீட்பராகும்படி முழு மனதுடன் கையளித்தார். நாம் எல்லோரும் மோட்சத்துக்குப் போக வேண்டுமென்று அவர் ஆசிக்கிறார். செபிக்கிறார். பல வழிவகைகளைக் கையாளுகிறார். எனவே அவர் அரசி.


இந்த விழாவன்று, மானிட சந்ததியை மரியாளின் மாசற்ற இருதயத்திற்கு அர்ப்பணிக்க வேண்டும். அவரே மானிட சந்ததியின் நம்பிக்கை. திருச்சபை வெற்றி பெறவும், கிறிஸ்தவ அமைதி நிலவவும் அவர் துணைபுரிய வேண்டும். எல்லோரும் மிகுந்த நம்பிக்கையுடன் இந்த அன்னையின் இரக்கத்தின் சிம்மாசனத்தை அணுக வேண்டும். சங்கடங்களில் உதவியையும், இருளில் ஒளியையும், துன்ப துயரங்களில் ஆறுதலையும் அன்னையிடம் தேடி அலைவோம்.


பாவத்தின் அடிமைத்தளையிலிருந்து தங்களை விடுவித்தால் தாங்கள் கேட்ட காரியங்களை அடைவர். அந்த அன்னை உண்மையாகவே நம் அரசி; அமைதியைப் பெற்று தருவார். இயேசு நமக்கு நித்திய மகிழ்ச்சியாகவும், ஆனந்தமாகவும் இருப்பார்.


திருச்சபையினால் அதிகாரப்பூவ அனுமதி பெறுவதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே விண்ணக அரசி என்னும் பட்டம் கத்தோலிக்க மரபிலும், வேண்டுதல்களிலும், பக்தி முயற்சிகளிலும், கலையிலும் முக்கிய பங்கு வகித்து வந்தது.


✠ புனித ஆண்ட்ரூ ✠

(St. Andrew the Scot)


தலைமைக் குருவின் பெரிய உதவி அதிகாரி :

(Archdeacon)


பிறப்பு : கி.பி. 800


இறப்பு : கி.பி. 877 அல்லது 880

ஃபியசோல், இத்தாலி

(Fiesole, Italy)


ஏற்கும் சமயம் :

ரோமன் கத்தோலிக்க திருச்சபை

(Roman Catholic Church)

கிழக்கு மரபுவழி திருச்சபை

(Eastern Orthodox Church)


முக்கிய திருத்தலம் :

புனித மார்ட்டின் தேவாலயம், ஃபியசோல், இத்தாலி

(Saint Martin, Fiesole, Italy)


புனிதர் ஆண்ட்ரூ ஸ்காட் (St. Andrew the Scot), இத்தாலிய பிராந்தியமான “டுஸ்கனியின்” (Tuscany) பெருநகரான “ஃபுளோரன்ஸின்” (Metropolitan City of Florence) பகுதியான “ஃபியசோலின்” (Fiesole) ஆயரான “புனிதர் டோனடஸின்” (St. Donatus) “பெரிய உதவி அதிகாரி” (Archdeacon) ஆவார். இவர் “டஸ்கனியின் ஆண்ட்ரூ” (Andrew of Tuscany) என்றும், “ஃபியசோல் நகர ஆண்ட்ரூ” (Andrew of Fiesole) என்றும், “அயர்லாந்தின் ஆண்ட்ரூ” (Andrew of Ireland) என்றும் அறியப்படுகிறார். இவர், புனிதர் பிரிட்ஜெட்’டின் (Bridget of Fiesole) சகோதரரும் ஆவார்.


“அயர்லாந்து” அல்லது “ஸ்காட்லாந்து” (Ireland or Scotland) நாட்டில் பிறந்ததாக கூறப்படும் இவர், இத்தாலியிலுள்ள “டுஸ்கனியின்” (Tuscany) “ஃபுளோரன்ஸிலுள்ள” (Florence) “ஃபியசோல்” (Fiesole) நகரில் மரித்தார்.


ஆண்ட்ரூவும் அவரது சகோதரியும் புனிதர் டோனடஸிடம்” (St. Donatus) கல்வி கற்றனர். டோனடஸ் இத்தாலிக்கு புனித யாத்திரை சென்றபோது, ஆண்ட்ரூவும் உடன் சென்றார். டோனடஸ், ஆண்ட்ரூ இருவரும் ஃபியசோல் சென்று சேர்ந்தபோது, அங்குள்ள மக்கள், தமக்கு ஒரு ஆயரை தேர்ந்தெடுப்பதற்காக ஒன்றுகூடியிருந்தனர். அப்போது, வானிலிருந்து இறங்கி வந்த அசரீரி குரல் ஒன்று, டோனடசை சுட்டிக்காட்டி, “இவரே மரியாதைக்கு மிகவும் தகுதியுள்ளவர்” என்றது. ஆயராக நியமிக்கப்பட்டு, பொறுப்பேற்றுக்கொண்டதும், டோனடஸ் தமது “பெரிய உதவி அதிகாரியாக” (Archdeacon) ஆண்ட்ரூவை நியமித்துக்கொண்டார்.


ஃபியசோல் நகரிலிருந்தபோது, பிரபு ஒருவரின் மகள் ஒருவர் இவரால் குணமடைந்ததாக கூறப்படுகிறது. முடக்குவாத நோயால் பாதிக்கப்பட்டிருந்த சிறுமியை காப்பாற்ற மருத்துவர்களால் இயலவில்ல என்றானதும், சிறுமியின் தந்தை, ஆண்ட்ரூவை வந்து தமது மகளுக்காக செபிக்குமாறு வேண்டினார். சிறுமியின் படுக்கையருகே முழங்கால்படியிட்டு செபித்த ஆண்ட்ரூம், “உன்னை இயேசு குனமாக்கிவிட்டார்; எழுந்திரு” என்றார். அந்த சிறுமியும் எழுந்து சென்றாள். ஃபியசோல் நகரில் “பெரிய உதவி அதிகாரியாக” (Archdeacon) இருந்த காலத்தில், இதுபோல் பல அற்புதங்களை இயேசுவின் பெயரால் நிகழ்த்தியதாக கூறப்படுகின்றது. பிசாசுக்களை துரத்தினார். பார்வையற்றவர்களுக்கு பார்வை வரவழைத்தார். நோயுற்றோரை குணமாக்கினார்.


நாற்பத்தேழு வருட ஆயராக சேவையில், ஆண்ட்ரூ டோனடஸுக்கு தீவிர விசுவாசமாக பணியாற்றினார். “மென்சுலா” நகரிலுள்ள “புனித மார்ட்டின் ஆலயத்தை” (Church of San Martino di Mensula) மீட்கவும் அங்கே ஒரு துறவியர் மடத்தை உருவாக்கவும் உந்துசக்தியாக விளங்கினார். தமது கடினமான, மற்றும் எளிய வாழ்க்கைக்காகவும், ஏழைகளுக்கு இவர் ஆற்றிய எல்லையற்ற தொண்டுகளுக்காகவும் ஆண்ட்ரூ பாராட்டப்படுகிறார். இவர், தமது ஆசான் டோனடஸ் மரித்த சில காலத்திலேயே இவரும் மரித்தார். இவர் மரண படுக்கையிலிருந்தபோது, இவருக்கு உதவுவதற்காக இவரது சகோதரி புனிதர் பிரிட்ஜெட்’டை (Bridget of Fiesole) அயர்லாந்திலிருந்து ஒரு தேவதூதர் அழைத்து வந்ததாக கூறப்படுகிறது. இவர் மீட்டெடுத்த புனித மார்ட்டின் தேவாலயத்தில் (St. Martin's Church) இவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.


✠ லீமா நகர் புனித ரோஸ் ✠

(St. Rose of Lima)


கன்னியர்/ அமெரிக்க நாடுகளின் முதல் புனிதர் :

(Virgin/ First Saint born in the Americas)


பிறப்பு : ஏப்ரல் 20, 1586

லிமா, பெரு காலனியாதிக்கம், ஸ்பேனிஷ் பேரரசு

(Lima, Viceroyalty of Peru, Spanish Empire)


இறப்பு : ஆகஸ்ட் 24, 1617 (வயது 31)

லிமா, பெரு காலனியாதிக்கம், ஸ்பேனிஷ் பேரரசு

(Lima, Viceroyalty of Peru, Spanish Empire)


ஏற்கும் சமயம் : 

ரோமன் கத்தோலிக்க திருச்சபை

(Roman Catholic Church)

ஆங்கிலிக்கன் சமூகம்

(Anglican Communion)


அருளாளர் பட்டம் : ஏப்ரல் 15, 1667 அல்லது 1668

திருத்தந்தை ஒன்பதாம் கிளமென்ட்

(Pope Clement IX) 


புனிதர் பட்டம் : ஏப்ரல் 12, 1671

திருத்தந்தை பத்தாம் கிளமென்ட்

(Pope Clement X)


முக்கிய திருத்தலங்கள் : 

புனித டோமினிக் பேராலயம், லிமா, பெரு

(Basílica of Santo Domingo, Lima, Peru)


நினைவுத் திருவிழா : ஆகஸ்ட் 23


சித்தரிக்கப்படும் வகை : 

நங்கூரம், ரோசா மலர், குழந்தை இயேசு


பாதுகாவல் : 

தையல்காரர்கள்; தையல் சரிகை; தோட்டக்காரர்கள்; பூ வியாபாரிகள்; இந்தியா; லத்தீன் அமெரிக்கா; தமது பக்திக்காக தவறாக புரிந்து கொள்ளப்பட்ட, அல்லது கேவலப்படுத்தப்பட்ட மக்கள்; குடும்ப சண்டைகள் தீர்மானம்; அமெரிக்க பழங்குடி மக்கள்; பெரு; ஃபிலிப்பைன்ஸ்; கலிஃபோர்னியா; சாண்டா ரோசா, லாகுனா; ஆல்கோய்; செபு; மாயைக்கு எதிராக; லிமா; பெருவியன் காவல் படை.


அமெரிக்க நாடுகளின் முதல் புனிதரான புனிதர் ரோஸ், பெரு நாட்டில் உள்ள லிமா நகரிலுள்ள மூன்றாம் நிலை டோமினிக்கன் சபையின் (Third Order of Saint Dominic) உறுப்பினர் ஆவார். தமது தனிப்பட்ட முயற்சிகள் மூலம் நகரின் தேவைப்பட்டவர்களுக்கு உதவும் குணத்திற்காகவும், பொதுவாக மத காரணங்களுக்காக அனைத்து விதமான பழக்கவழக்கங்களையும் தவிர்த்து, கடுமையான சுய ஒழுக்கமுள்ள வாழ்க்கை வாழ்ந்ததற்காகவும் இவர் பிரபலமானவர் ஆவார். டோமினிக்கன் சபையின் பிரமாணங்கள் எடுத்துக்கொள்ளாத உறுப்பினரான (A lay member of the Dominican Order) இவர், கத்தோலிக்க திருச்சபையால் புனிதராக கௌரவிக்கப்படுகிறார்.


“இசபெல் ஃப்ளோர்ஸ் டி ஒலிவா” (Isabel Flores de Oliva) எனும் இயற்பெயர் கொண்ட இவர், ஸ்பெய்ன் நாட்டின் “பெரு காலனியாதிக்க” (Viceroyalty of Peru) “லிமா” (Lima) நகரில் பிறந்தவர் ஆவார். இவரது தந்தை “கேஸ்பர் ஃப்ளோர்ஸ்” (Gaspar Flores) ஸ்பேனிஷ் பேரரசின் இராணுவத்தின் குதிரைப்படை வீரராவார். இவரது தாயார் “மரியா டி ஒலிவா” (María de Oliva y Herrer) ஆவார். இவருக்கு ரோஸ் என்ற பெயர் வந்ததன் காரணம், இவர் சிறு குழந்தையாய் இருந்தபோது, இவரின் முகம் ரோஜா மலர் போல மாறியதை இவர் வீட்டுப் பணியாளர் பார்த்தார் என்பர். ஆகவே இவர் பெயர் ரோஸ் (Rose) என வழங்கலாயிற்று.


தமது இளம் வயதில், டோமினிக்கன் துறவியான புனிதர் “கேதரினுக்கு” (St. Catherine of Siena) சமமாக கடும் தவ முயற்சிகளை இரகசியமாக மேற்கொண்டார். வாரத்தில் மூன்று முறை உண்ணா நோன்பிருக்க தொடங்கினார்.


தம்மை ஆண்கள் கவனிப்பதை உணர்ந்த ரோஸ், மன உளைச்சலுக்கு ஆளானார். தமது அழகை உணர்ந்த இவர், தமது அழகால் பிறருக்கு பாவ சோதனை வராமல் இருக்க முயற்சிகள் மேற்கொண்டார். தமது அழகிய நீண்ட கூந்தலை வெட்டினார். தமது முகத்தில் மிளகு அரைத்து தடவி, முகத்தின் மேன்மையை போக்க முயற்ச்சித்தார்.


தமது பெற்றோரின் கண்டிப்பையும் மீறி, தினமும் அதிக நேரம் நற்கருணை ஆராதனையில் செலவிட்டார். தினமும் நற்கருணை பெற்றார். இது, அக்காலத்தில் மிகவும் அரிதான செயலாகும். ரோஸ், கற்புநிலை உறுதிப்பாடு ஏற்க தீர்மானித்தார். தமது மகள் திருமணம் செய்துகொள்ள வேண்டுமென விரும்பிய பெற்றோர், இதற்கு ஆட்சேபனை தெரிவித்தனர். தமது பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள் என, தமக்கு திருமண அறிவுரைகள் கூறிய அனைவரையும் நிராகரித்தார்.


ரோஸ், மூன்றாம் நிலை டோமினிக்கன் சபையில் இணைந்து துறவியாக விரும்பினார். ஆனால், அவருடைய தந்தையின் கடுமையான எதிர்ப்பின் காரணாமாக அவரால் அது இயலாமல் போனது. தமது இருபது வயதில், பெற்றோரின் விருப்பத்திற்கு எதிராக டொமினிகன் (Third Order of St. Dominic) சபையில் இணைந்து துறவியாவதற்குப் பதிலாக, துறவியரின் சீருடைகளை அணிந்துகொண்டு, நிரந்தர கன்னிமைக்காக சத்திய உறுதிப்பாடு ஏற்றுக்கொண்டார். இரவில் இரண்டு மணி நேரத்துக்கு மேல் உறங்க மறுத்த ரோஸ், செப காரியங்களில் அதிக நேரம் செலவிட்டார். புலால் உணவுகளை முற்றிலும் தவிர்த்தார். 11 வருட காலம் இதுபோன்ற கடும் தவமுயற்சிகள் மேற்கொண்ட ரோஸ், பரவச அனுபவங்களும் (Ecstasy) பெற்றார்.


தாம் மரிக்கப்போகும் நாளை முன்னறிவித்த ரோஸ், அதன்படியே ஆகஸ்ட் 24, 1617 அன்று மரித்தார். இவரது இறுதி ஊர்வலத்தில் அம்மறைமாவட்ட பேராயர் இரங்கல் உரை நிகழ்த்தினார்.


✠ புனித பர்த்தலமேயு ✠

(St. Bartholomew)


திருத்தூதர், மறைசாட்சி :

(Apostle and martyr)


பிறப்பு : கி.பி. முதலாம் நூற்றாண்டு

கானா, யூதேயா, ரோமப் பேரரசு

(Cana, Judaea, Roman Empire)


இறப்பு : கி.பி. முதலாம் நூற்றாண்டு

அல்பனோபோலிஸ், ஆர்மேனியா

(Albanopolis, Armenia)

ஆர்மேனியாவில் தோல் உரிக்கப்பட்டு சிலுவையில் அறையப்பட்டார்


ஏற்கும் சமயம் :

கிழக்கு அசிரிய திருச்சபை

(Assyrian Church of the East)

ரோமன் கத்தோலிக்க திருச்சபை

(Roman Catholic Church)

மரோனைட் கத்தோலிக்க திருச்சபை

(Maronite Catholic Church)

கிழக்கு மரபுவழி திருச்சபை

(Eastern Orthodox Church)

ஓரியண்டல் மரபுவழி திருச்சபை

(Oriental Orthodoxy)

ஆங்கிலிகன் சமூகம்

(Anglican Communion)

லூதரன் திருச்சபை

(Lutheran Church)

இஸ்லாமியம்

(Islam)


முக்கிய திருத்தலங்கள் : 

புனித பர்த்தலமேயு மடம், ஆர்மேனியா


நினைவுத் திருவிழா : ஆகஸ்டு 24


சித்தரிக்கப்படும் வகை : 

கத்தி, அவரது உரிக்கப்பட்ட தோல்


பாதுகாவல் : 

இறைச்சி வெட்டுநர், புத்தகம் தைப்பவர்கள், மால்ட்டா, ஆர்மேனியா, நரம்பியல் நோய்கள், செருப்பு தைப்பவர்


புனிதர் பர்த்தலமேயு முதலாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் ஆவார். யோவான் எழுதிய நற்செய்தியின் முதலாம் அதிகாரத்திலும், 21ம் அதிகாரத்திலும் நத்தனியேல் (Nathanael) என்று அடையாளம் காணப்படும் இவர், பிலிப்புவால் கிறிஸ்து இயேசுவுக்கு அறிமுகம் செய்விக்கப்படுகிறார். இவர், இயேசுவின் பன்னிரு திருத்தூதர்களுள் (அப்போஸ்தலர்களுள்) ஒருவர் ஆவார். இவரின் பெயர் "டாலமியின் (Ptolemy) மகன்" எனவும், "உழுசால் மகன்" எனவும் பொருள்படும். எனவே இது குடும்பப் பெயர் என்பர்.


இவரது நினைவுத் திருவிழா நாள் ஆகஸ்டு 24.

யோவான் நற்செய்தியின் முதல் அதிகாரத்தில் இவர் நத்தனியேல் என அழைக்கப்படுகிறார். அந்நற்செய்தியில் நத்தனியேல் தம்மிடம் வருவதை இயேசு கண்டு, 'இவர் உண்மையான இஸ்ரயேலர், கபடற்றவர்' என்று இவரைக் குறித்துக் கூறினார்.


மேலும் மத்தேயு, மாற்கு, லூக்கா நற்செய்திகளில் திருத்தூதர்கள் பட்டியலில் இவர் இடம் பெறுகிறார். திருத்தூதர் பணிகள் நூலில் இயேசுவின் விண்ணேற்பைக் கண்டவர்களுள் இவரும் ஒருவர்.


தூய ஆவியின் வருகைக்குப் பிறகு ஆர்மீனியா, இந்தியா மற்றும் பல இடங்களில் மறைப்பணி புரிந்தார் என்பது மரபுச் செய்தி. இந்தியாவில் இவர் மறைப்பணியாற்றினார் என்பதற்கான இரண்டு பண்டைய சாட்சியங்கள் உள்ளன. நான்காம் நூற்றாண்டின் தொடக்க காலத்திலிருந்த சரித்திர ஆசிரியரும், ஆயரும், இறையியலாளருமான “யூசேபியஸ்” (Eusebius of Caesarea) ஒருவர் ஆவார். அதன்பின்னர், நான்காம் நூற்றாண்டின் இறுதியில், துறவியும், திருச்சபையின் மறை வல்லுனருமான புனிதர் “ஜெரோம்” (Saint Jerome) ஆவார்.


பண்டைய நகரமான கல்யாண் (Kalyan) என்று அறியப்பட்ட கொங்கன் கடலோரப் (Konkan coast) பகுதியில் உள்ள பம்பாய் (Bombay) பகுதியே புனிதர் பர்த்தலோமின் மறைப்பணிக்கான துறை என்று அருட்தந்தை: (பெருமலில்” (Fr.C. Perumalil SJ) மற்றும் “மோராசெஸ்” (Moraes) கூறுகிறார்கள்.


பாரம்பரியபடி, இவர் ஆர்மேனியாவில் (Armenia) உள்ள “அல்பநோபிளிஸ்” (Albanopolis) எனுமிடத்தில் உயிரோடு தோலுரிக்கப்பட்டு, தலைகீழாக சிலுவையில் அறையப்பட்டு கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இவர், ஆர்மேனிய அரசனான “போலிமியஸ்” (Polymius) என்பவனை கிறிஸ்தவ மறைக்கு மனம் மாற்றியதாகவும், இதனால் ஆத்திரமடைந்த அரசனது சகோதரனான “அஸ்ட்யாஜெஸ்” (Astyages) பர்த்தலமேயுவின் மரண தண்டனைக்கு உத்தரவிட்டதாகவும் கூறப்படுகிறது.


பதின்மூன்றாம் நூற்றாண்டில், இவர் மறைசாட்சியாக மரித்த இடத்தில், பெரிய ஆர்மேனியாவின் “வஸ்புரகன்” (Vaspurakan Province) பிராந்தியத்தில் புனித பர்த்தலமேயு (Saint Bartholomew Monastery) துறவு மடம் கட்டப்பட்டது. இது தற்போது தென்கிழக்கு துருக்கியில் (Southeastern Turkey) உள்ளது.


✠ புனித ஒன்பதாம் லூயிஸ் ✠

(St. Louis IX)


ஃபிரான்ஸ் அரசர் :

(King of France)


பிறப்பு : ஏப்ரல் 25, 1214

பொய்ஸ்ஸி, ஃபிரான்ஸ்

(Poissy, France)


இறப்பு : ஆகஸ்ட் 25, 1270 (வயது 56)

டுனிஸ், வட ஆபிரிக்கா

(Tunis, North Africa)


புனிதர் பட்டம் : கி.பி. 1297 

திருத்தந்தை எட்டாம் போனிபாஸ்


புனித லூயிஸ் என பொதுவாக அறியப்படும் ஒன்பதாம் லூயிஸ், ஒரு பிரெஞ்ச் நாட்டு மன்னரும், கிறிஸ்தவ புனிதரும் ஆவார். தமது தந்தையான “எட்டாம் லூயிஸின்” (Louis VIII the Lion) மரணம் காரணமாக பன்னிரண்டு வயதிலேயே முடிசூடிக்கொண்டார். இருப்பினும், இவருக்கு வயது வரும்வரை, இவரது தாயாரான “ப்லான்ச்” (Blanche of Castile) நாட்டை ஆண்டார். “ப்லான்ச்” கலகக்கார குடிமக்களின் எதிர்ப்பை கையாண்டார்.


ஒன்பதாம் லூயிஸின் தாயார் இளவரசி “ப்லான்ச்”, தமது மகனை தலைமைக் குணங்களுடைய ஒரு நல்ல கிறிஸ்தவராக வளர்த்தார். அவர் தமது மகனிடம், “மகனே, நான் உன்னை மிகவும் அன்பு செய்கிறேன். ஒரு தாய் தமது மகனை எவ்வளவு அன்பு செய்ய இயலுமோ, அவ்வளவு அன்பு செய்கிறேன். ஆனால், ஒரு சாவான பாவமதைச் செய்வதைக்காட்டிலும், நீ என் காலடிகளிலேயே செத்துவிடுவது நல்லது” (I love you, my dear son, as much as a mother can love her child; but I would rather see you dead at my feet than that you should ever commit a mortal sin) என்று அடிக்கடி கூறுவார்.


லூயிஸ், “ப்ரோவென்ஸ்” (Provence) பிரபுவின் மகளான “மார்கரெட்டை” (Margaret of Provence) கி.பி. 1234ம் ஆண்டு, மே மாதம், 27ம் தேதி திருமணம் செய்தார். இருவரும் இனிமையாக வாழ்க்கை நடத்தினர்.


லூயிசுக்கு 15 வயது நடக்கையில், இருபது வருடங்களாக நடைபெற்று வந்த “அல்பிஜென்சியன் சிலுவைப்போரை” (Albigensian crusade), “பிரபு ஏழாம் ரேமண்ட்” (Count Raymond VII) என்பவருடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், அவரது தாயார் முடிவுக்கு கொண்டு வந்தார்.


லூயிஸ், இரண்டு சிலுவைப்போர்களில் பங்கேற்றார். கி.பி. 1248ம் ஆண்டு, 30 வயதில், “ஏழாவது சிலுவைப்போருக்கு” (Seventh Crusade) சென்றார். மீண்டும், கி.பி. 1270ம் ஆண்டு, 50 வயது நடக்கையில் “எட்டாம் சிலுவைப்போருக்கு” (Eighth Crusade) சென்றார்.


ஆட்சிப்பொறுப்பேற்ற ஒன்பதாம் லூயிஸ், “ஹக்” (Hugh X of Lusignan) மற்றும் “பீட்டர்” (Peter of Dreux) போன்ற மிகச் சக்தி வாய்ந்த அரசர்கள் மற்றும் பிரபுக்கள் சிலருடன் தொடர்ச்சியான மோதல்களை எதிர்கொண்டார். அதே நேரத்தில், இங்கிலாந்து மன்னனான மூன்றாம் ஹென்றியும் (Henry III of England) தமது கண்டம் சார்ந்த சொத்துக்களை தக்கவைத்துக்கொள்வதற்காக முயற்சித்தான். ஆனால், (Battle of Taillebourg) போரில் தோல்வி கண்டான். ஒன்பதாம் லூயிஸின் ஆட்சி, “நார்மண்டி” (Normandy), “மைன்” (Maine), மற்றும் “புரோவென்ஸ்” (Provence) போன்ற பல மாகாணங்களை இணைத்துக்கொண்டது.


ஒன்பதாம் லூயிஸ், ஒரு சிறந்த சீர்திருத்தவாதியாவார்; மற்றும் பிரெஞ்சு அரசியலமைப்பையும் நீதித்துறையையும் அபிவிருத்தி செய்தார். இதில், அரசனே உச்ச நீதியரசராவார். நாட்டின் எந்தவொரு பிரஜையும் எந்த தீர்ப்பையும் மாற்றியமைக்க விண்ணப்பிக்கும் உரிமையையும் கொடுத்தார். புராதன நடைமுறையான கடும் சோதனைகள் மூலம் வழக்கு விசாரணைகல் செய்வதை தடை செய்தார். குடும்பங்கள், வாரிசுகள், இனங்கள், சமூக குழுக்கள் ஆகியவற்றினிடையே காலம் காலமாக இருந்துவந்த சண்டைகளை தடை செய்ய முயற்சிகள் செய்தார். இந்த புதிய சட்ட முறையின் சரியான பயன்பாட்டை செயல்படுத்துவதற்கு, ஒன்பதாம் லூயிஸ் ஸ்தாபகர்களையும், உயர்நீதிமன்றங்களையும் உருவாக்கினார்.


ஒரு கடுமையான நோய்க்கு பிறகு எடுத்துக்கொண்ட உறுதிமொழியின்படி, அற்புதமாக குணமானார். சிகிச்சையின் பின்னர் உறுதிபடுத்தப்பட்ட ஒன்பதாம் லூயிஸ், ஏழாவது மற்றும் எட்டாவது சிலுவைப்போர்களில் பங்கு பெற்றார், இதில் அவர் வயிற்ருக்கடுப்பு மற்றும் வயிற்றுப்போக்கினால் மரித்தார். அவருக்குப்பின்னர், அவரது மகனான “மூன்றாம் பிலிப்” (Philip III) ஆட்சிப் பொறுப்பேற்றார்.


ஒன்பதாம் லூயிஸின் செயல்பாடுகளும் நடவடிக்கைகளும் கிறிஸ்தவ மதிப்பு மற்றும் கத்தோலிக்க பக்தியால் ஊக்கமளிக்கப்பட்டன. தெய்வ நிந்தனை, சூதாட்டம், வட்டி ஈட்டும் கடன்கள் மற்றும் விபச்சாரம் ஆகியவற்றை தடை செய்ததுடன், அவற்றில் ஈடுபடுபவர்களை தண்டிக்கவும் செய்தார். அவர் விசாரணைகளின் நோக்கங்களை விரிவுபடுத்தினார்.


✠ புனித ஜோசஃப் கலசன்ஸ் ✠

(St. Joseph Calasanz)


மறைப்பணியாளர், குரு, நிறுவனர் :

(Religious, Priest and Founder)


பிறப்பு : செப்டம்பர் 11, 1557

பெரல்டா டி ல ஸல், அரகன் அரசு

(Peralta de la Sal, Kingdom of Aragon, Crown of Aragon)


இறப்பு : ஆகஸ்ட் 25, 1648 (வயது 90)

ரோம், திருத்தந்தையர் மாநிலம்

(Rome, Papal States).


ஏற்கும் சமயம் :

ரோமன் கத்தோலிக்க திருச்சபை

(Roman Catholic Church)


முக்திபேறு பட்டம் : ஆகஸ்ட் 7, 1748

திருத்தந்தை பதினான்காம் பெனடிக்ட்

(Pope Benedict XIV)


புனிதர் பட்டம் : ஜூலை 16, 1767

திருத்தந்தை பதின்மூன்றாம் கிளமன்ட்

(Pope Clement XIII)


முக்கிய திருத்தலம் :

புனித பெண்டலோன், ரோம்

(San Pantaleone, Rome)


நினைவுத் திருநாள் : ஆகஸ்ட் 25


பாதுகாவல் : கத்தோலிக்க பள்ளிகள்


புனிதர் ஜோசஃப் கலசன்ஸ், ஒரு ஸ்பேனிஷ் குருவும், கல்வியாளரும், ஏழைக் குழந்தைகளுக்கு இலவச கல்வியளிக்கும் ஆன்மீக பள்ளிகளின் நிறுவனரும், “பியரிஸ்ட்ஸ்” (Piarists) என்றழைக்கப்படும் (The Order of Poor Clerics Regular of the Mother of God of the Pious Schools) சபையின் நிறுவனருமாவார். “ஜோசஃப் கலசேன்க்ஷியஸ்” மற்றும் ஜோசஃபஸ் அ மாட்ரெடே” (Joseph Calasanctius and Josephus a Matre Dei) ஆகிய பெயர்களாலும் அறியப்படும் இவர், கத்தோலிக்க திருச்சபையால் புனிதராக போற்றப்படுகின்றார்.


ஸ்பெயின் நாட்டின் “அரகன்” (Kingdom of Aragon) அரசின் “பெரல்டா டி ல ஸல்” (Peralta de la Sal) எனுமிடத்தில், 1557ம் ஆண்டு, செப்டம்பர் மாதம், 11ம் தேதி பிறந்த இவருடைய தந்தை ஒரு குறுநில பிரபுவும் நகர தலைவருமான “பெட்ரோ டி கலசன்ஸ்” (Pedro de Calasanz y de Mur) என்பவர் ஆவார். இவரது தாயார் பெயர், “மரிய கஸ்டன்” (María Gastón y de Sala) ஆகும்.


ஆரம்பக் கல்வியை வீட்டிலிருந்தும், பின்னர் “பெரல்டா” (Peralta) எனுமிடத்திலுள்ள பள்ளியிலும் கற்ற ஜோசஃப், 1569ம் ஆண்டு, “எஸ்டடில்லா” (Estadilla) எனுமிடத்தில், “திரித்துவ சபையின்” (Trinitarian Order) துறவியர் நடத்தும் கல்லூரியில், பண்டைய கிரேக்க இலத்தீன் கலைக்குரிய கல்வி கற்க அனுப்பப்பட்டார். அங்கே கல்வி கற்கும் காலத்தில், தமது பதினான்கு வயதில், தாம் குருத்துவம் பெறவேண்டுமென முடிவெடுத்தார். எனினும், இந்த இறை அழைப்பு, அவரது பெற்றோரின் ஆதரவைப் பெறவில்லை.


“ல்லேய்டா” பல்கலையில் (University of Lleida) உயர் கல்வி கற்ற ஜோசஃப், அங்கே தத்துவம் மற்றும் சட்டம் பயின்றார். “வாலென்சியா பல்கலைக்கழகம்” மற்றும் “கோம்ப்லுடேன்ஸ் பல்கலைக்கழகத்தில்” (The University of Valencia and at Complutense University) இறையியல் கற்றார்.


இதற்கிடையே ஜோசஃபின் தாயாரும் சகோதரர் ஒருவரும் மரித்துப் போகவே, அவரது தந்தை ஜோசஃப் திருமணம் செய்துகொண்டு குடும்ப பொறுப்பை ஏற்கவேண்டும் என விரும்பினார். ஆனால், 1582ம் ஆண்டு இவரை தாக்கிய ஒரு நோய், ஜோசஃபை கல்லறையின் விளிம்பு வரை கொண்டுவந்தது. இது, அவரது தந்தையின் கண்டிப்பாய் தணித்தது. நோயிலிருந்து மீண்ட ஜோசஃப், 1583ம் ஆண்டு, டிசம்பர் மாதம், 17ம் தேதி, “ஊர்ஜெல்” மறைமாவட்ட ஆயர் (Bishop of Urgel) “ஹுகோ அம்ப்ரோசியோ” (Hugo Ambrosio de Moncada) என்பவரால் குருத்துவ அருட்பொழிவு செய்விக்கப்பட்டார்.


ஸ்பெயின் நாட்டில் தமது ஆன்மிக பணிக்காலத்தில், ஜோசஃப் பல்வேறு பொறுப்புகளை ஏற்று செய்தார். ஏழைகளுக்கு பல்வேறு சேவையாற்றிய இவர், ஏழைகளுக்கு இலவச உணவளிக்கும் நிறுவனம் ஒன்றினையும் நிறுவி நடத்தினார்.


1592ம் ஆண்டு, தமது 35 வயதில், தமது ஆன்மிக வாழ்க்கையை மேம்படுத்தும் நம்பிக்கையிலும், சில வகையான நலன்களைப் பாதுகாக்கவும் ஜோசஃப் ரோம் பயணமானார். அவர் தமது வாழ்வின் மீதமுள்ள 56 வருடங்களை அங்கேயே வாழ்ந்தார். முக்கியமாக, பெற்றோர்களை இழந்த அனாதைச் சிறுவர்களுக்கு கல்வி கற்பிக்கும் பணி உள்ளிட்ட தொண்டுப்பணிகளாற்றக்கூடிய அற்புதமான துறையை ரோம் நகரம் இவருக்கு வழங்கியது. ஜோசஃப் “கிறிஸ்தவக் கோட்பாடுகளின் தோழமைக் கூட்டுறவு” (Confraternity of Christian Doctrine) எனும் நிறுவனத்தில் இணைந்தார். தெருக்களில் சுற்றித்திரியும் அனாதைச் சிறார்களை ஒன்றிணைத்து அழைத்து வந்து பள்ளிகளில் சேர்த்தார்.


ரோம் நகரின் “ட்ரஸ்டேவேர்” (Trastevere) பகுதியிலுள்ள (Church of Santa Dorotea) ஆலயத்தின் பங்குத்தந்தையான “அந்தோனி” (Anthony Brendani) இடமும் தந்து, கற்பிக்கும் உதவிகளும் செய்வதாக உறுதியளித்தார். கூடுதலாக இரண்டு குருக்களும் உதவுவதாக வாக்குறுதியளித்தனர். இதனைத் தொடர்ந்து, 1597ம் ஆண்டு, நவம்பர் மாதம், ஐரோப்பாவிலேயே முதல் இலவச பள்ளியை ஜோசஃப் தொடங்கினார்.


1598ம் ஆண்டு, கிறிஸ்து பிறப்பு பெருநாளன்று, இத்தாலியின் மூன்றாவது நீளமான நதியான “டிபேர்” (Tiber) நதியில் சரித்திரத்திலேயே அதிக அளவான இருபது மீட்டர் உயர (சுமார் 65 அடி) வெள்ளம் பெருக்கெடுத்தோடியது. பேரழிவு பரவலாக இருந்தது. நதியோரம் வசித்த, ஏற்கனவே ஏழைகளான நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வீடிழந்தன. உணவற்றுப் போயின. வெள்ளத்திற்கு பலியானவர்களின் எண்ணிக்கை 2,000க்கும் மேலானது. ஜோசஃப், “ஆன்மீக சகோதரத்துவம்” (Religious fraternity) எனும் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து அதிவேகமாக செயலாற்றினார். ஏழை மக்களுக்கு உதவுவதில் தம்மை அர்ப்பணித்துக்கொண்டார். நகரை சுத்தம் செய்வதிலும், மீட்பதிலும் உதவ தொடங்கினார். 1600ம் ஆண்டு, நகரின் மத்தியில் “தெய்வ பக்தியுள்ள” (Pious School) பள்ளியை தொடங்கினார். விரைவிலேயே, அந்த பள்ளி, பல கிளைகளுடன் விரிவடைந்தது.


1602ம் ஆண்டு, “தெய்வ பக்தியுள்ள பள்ளிகளின் சபை” (Order of the Pious Schools or Piarists) எனும் சபைக்கான அடித்தளமிட்டார். 1610ம் ஆண்டு, தமது சபையின் ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கான அடிப்படை ஒழுங்குகளை எழுதினர். ஜோசஃப், செப்டம்பர் 15, 1616 அன்று, “ஃப்ரஸ்கடி” (Frascati) நகரில் முதல் பொது இலவச பள்ளியை தொடங்கினார். சரியாக ஒரு வருடத்தின் பின்னர், கற்பித்தல் சேவைகளுக்காக ஆரம்பிக்கப்பட்ட முதல் ஆன்மீக நிறுவனமான (Pauline Congregation of the Poor of the Mother of God of the Pious Schools) எனும் சபையை, திருத்தந்தை “ஐந்தாம் பவுல்” (Pope Paul V) அங்கீகரித்தார். மார்ச் 25, 1617 அன்று, அவரும் அவரது பதினான்கு உதவியாளர்களும் இவர்களது புதிய சபையின் முதல் உறுப்பினர்களாகி, சீருடையைப் பெற்றனர். ஆரம்பப்பள்ளியில் கற்பிப்பதை தமது முதன்மை ஊழியமாக செய்த முதல் குருக்கள் இவர்களேயாவர்.


ஆரம்ப காலங்களிலிருந்தே ஒரு குழந்தை ஆன்மீகத்தையும் கல்வியையும் சரியாக போதித்தால், அக்குழந்தையின் வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையும் என்று நியாயமாக நம்பலாம் என்று எழுதி வைத்த ஜோசஃப், “பயத்தையல்ல – அன்பையே வலியுறுத்துங்கள்” (Emphasizing love, not fear) என்றார்.


புனிதர் ஜோசஃப் கலசன்ஸின் வாழ்க்கையின் இறுதி பத்தாண்டு காலம், மிகவும் சோதனையானதாக இருந்தது. அவரது சபையில் நேர்ந்த சில அவல நிகழ்வுகள் அவருக்கு அவப்பெயரை தேடித்தந்தது. 1642ம் ஆண்டு, அவர் கைது செய்யப்பட்டு விசாரனைக்குள்ளாக்கப்பட்டார். “நேப்பிள்ஸ்” (Naples) நகரின் பள்ளியில் தலைமையாசிரியராக இருந்த அருட்தந்தை “ஸ்டேஃபனோ செருபனி” (Father Stefano Cherubini) என்பவர் பள்ளியின் சிறுவர்களை பாலியல் ரீதியாக வல்லுறவு கொண்டதன் பின்விளைவுகள் இவரையும் பாதித்தன.


தமது மாணவர்கள், அவர்களுடைய குடும்பங்கள், சக தோழர்கள் மற்றும் ரோம் நகர மக்கள் ஆகியோரால் அவரது தூய்மைக்காகவும், தைரியத்துக்காகவும் போற்றப்பட்ட புனிதர் ஜோசஃப் கலசன்ஸ், 1648ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் 25ம் தேதி, தமது 90 வயதில் மரித்தார். “தூய பன்டேலோ” (Church of San Pantale) தேவாலயத்தில் அடக்கம் செய்யப்பட்டார்.


✠ புனித தெரெசா ஜோர்னெட் இபார்ஸ் ✠

(St. Teresa Jornet Ibars)


கன்னியர்/ நிறுவனர் :

(Virgin/ Founder)


பிறப்பு : ஜனவரி 9, 1843

அய்டோனா, ல்லேய்டா, ஸ்பெய்ன் அரசு

(Aytona, Lleida, Kingdom of Spain)


இறப்பு : ஆகஸ்ட் 26, 1897 (வயது 54)

லிரியா, வலென்சியா, ஸ்பெய்ன் அரசு

(Liria, Valencia, Kingdom of Spain)


ஏற்கும் சமயம் :

ரோமன் கத்தோலிக்க திருச்சபை

(Roman Catholic Church)


முக்திபேறு பட்டம் : ஏப்ரல் 27, 1958 

திருத்தந்தை 12ம் பயஸ்

(Pope Pius XII)


புனிதர் பட்டம் : ஜனவரி 27, 1974 

திருத்தந்தை ஆறாம் பவுல்

(Pope Paul VI)


பாதுகாவல் :

"கைவிடப்பட்ட முதியோரின் சின்னஞ்சிறு சகோதரிகள்" (Little Sisters of the Abandoned Elderly) சபை

ஆன்மீக சபைகளால் மறுக்கப்பட்ட மக்கள் (People rejected by religious orders)

முதியோர் (Elderly people)


நினைவுத் திருநாள் : ஆகஸ்ட் 26


புனித தெரெசா ஜோர்னெட் இபார்ஸ், ஸ்பேனிஷ் ரோமன் கத்தோலிக்க மறைப்பணியாளரும், "கைவிடப்பட்ட முதியோரின் சின்னஞ்சிறு சகோதரிகள்" (Little Sisters of the Abandoned Elderly) என்ற சபையின் நிறுவனரும் ஆவார்.


ஸ்பெயின் நாட்டின் “ல்லேய்டா” (Lleida) பிராந்தியத்தின் “அய்டோனா” (Aytona) எனும் சிறு நகரில், 9 ஜனவரி 1843ல் விவசாய குடும்பமொன்றில் பிறந்த இபார்ஸின் தந்தை பெயர் “ஃபிரான்சிஸ்கோ ஜோஸ் ஜோர்னேட்” (Francisco José Jornet) ஆகும். தாயாரின் பெயர், “அன்டோனியிட்டா இபார்ஸ்” (Antonieta Ibars) ஆகும்.


சிறுவயதிலிருந்தே எழைகளின்பால் தீவிர பற்று கொண்ட இவர், பல துன்பங்களுக்கு உட்படுத்தப்பட்டார். அனைத்து துன்பங்களையும் பொறுமையோடு எதிர்கொண்டார். ஏழைகளின் நிலை கண்டு எப்போதுமே கவலை கொண்டிருந்தார்.


இவர் சிறுவயதிலிருந்து, தான் ஓர் துறவியாக வேண்டுமென்று ஆசை கொண்டார். தன் விருப்பத்தை பல துறவற இல்லத்தில் தெரிவித்தார். ஆனால் இவரை, துறவறத்திற்கு சேர்த்துக்கொள்ள யாரும் முன்வரவில்லை. எந்த துறவற சபையினரும் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் ஓர் ஆசிரியராக படித்து, பின்னர் பள்ளியில் ஆசிரியர் பணியை செய்தார். தமது பத்தொன்பது வயதில் “பார்சிலோனா” (Barcelona) நகரில் ஆசிரியை பணி செய்கையில், துறவு வாழ்க்கைக்கு தாம் அழைக்கப்படுவதாக உணர்ந்தார்.


கி.பி. 1868ம் ஆண்டு, “பர்கோஸ்” (Burgos) நகருக்கு அருகேயுள்ள “எளிய கிளாரா” (Poor Clares) மடத்தில் இணைய விண்ணப்பித்தார். ஆனால் அப்போதிருந்த ஆன்மீகத்துக்கேதிரான சட்டங்கள், அவரை சபையில் இணைய தடுத்தன. அதனால், பின்னர் கி.பி. 1870ம் ஆண்டு, “மதச்சார்பற்ற கார்மேல்” (Secular Carmelites) சபையில் உறுப்பினராக இணைந்தார்.


அவரது தந்தையின் இறப்பு மற்றும் அவரைப் பீடித்த ஒரு கடுமையான நோய் காரணமாக, அவர் நீண்ட காலத்திற்கு தமது வீட்டிலேயே தங்க நேரிட்டது. பின்னர், தமது ஆன்மீக வழிகாட்டியின் ஆலோசனைகளின்படி, பிராந்தியத்திலுள்ள முதியோரை அழைத்து வந்து சரியாக அவர்களை கவனிக்க ஆரம்பித்தனர். கி.பி. 1872ம் ஆண்டு, இதற்கான முதல் இல்லத்தை “பர்பாஸ்ட்ரோ” (Barbastro) என்னும் இடத்தில் தொடங்கினார். அவரது சொந்த சகோதரியான மரியா இதற்கு உதவினார்.


நாளடைவில் தன் விருப்பத்தை, தன்னுடைய ஆன்ம வழிகாட்டியிடம் தெரிவித்தார். அவர் காட்டிய வழியில் சென்ற தெரசா, 1872ம் ஆண்டு பார்பஸ்ட்ரோ (Barbastro) என்ற ஊரில், ஒரு துறவற சபையை தொடங்கினார். இச்சபைக்கு "கைவிடப்பட்ட முதியோரின் சின்னஞ்சிறு சகோதரிகள்" (Little Sisters of the Abandoned Elderly) என்ற பெயரை சூட்டினார்.


8 மே 1873ல் “வலென்சியா” (Valencia) நகரில் தமது சபையின் தலைமை இல்லத்தை நிறுவினார். சபையின் தலைமைப் பொறுப்பையும் தாமே ஏற்றார். தமது சபையின் சகோதரிகளிடம், ஏழைகளுக்காக தமது வசதிகளை தியாகம் செய்யுமாறு கற்பித்தார். கி.பி. 1887ம் ஆண்டு, திருத்தந்தை “பதின்மூன்றாம் லியோ” (Pope Leo XIII) சபைக்கான அங்கீகாரத்தை வழங்கினார்.


கி.பி. 1897ல், ஸ்பெயின் நாட்டில் காலரா (Cholera) நோய் பரவியது. இந்நோயால் பாதிக்கப்பட்டோருக்கு உதவிட இவரும் இவரது சபையின் சகோதரிகளும் தீவிரமாக செயல்பட்டனர். இம்முயற்சிகளில் மிகவும் மனம் தளர்ந்த தெரேசா சபையின் தலைமைப் பொறுப்பிலிருந்து ஓய்வு பெற்றார். மிகவும் தளர்ச்சியடைந்த தெரெசா, காசநோய் (Tuberculosis) பாதிக்கப்பட்டு, 1897ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், 26ம் தேதி “லிரியா” (Liria) நகரில் மரணம் அடைந்தார்.


† இன்றைய புனிதர் †

(ஆகஸ்ட் 26)


✠ புனிதர் தெரெசா ஜோர்னெட் இபார்ஸ் ✠

(St. Teresa Jornet Ibars)


கன்னியர்/ நிறுவனர் :

(Virgin/ Founder)


பிறப்பு : ஜனவரி 9, 1843

அய்டோனா, ல்லேய்டா, ஸ்பெய்ன் அரசு

(Aytona, Lleida, Kingdom of Spain)


இறப்பு : ஆகஸ்ட் 26, 1897 (வயது 54)

லிரியா, வலென்சியா, ஸ்பெய்ன் அரசு

(Liria, Valencia, Kingdom of Spain)


ஏற்கும் சமயம் :

ரோமன் கத்தோலிக்க திருச்சபை

(Roman Catholic Church)


முக்திபேறு பட்டம் : ஏப்ரல் 27, 1958 

திருத்தந்தை 12ம் பயஸ்

(Pope Pius XII)


புனிதர் பட்டம் : ஜனவரி 27, 1974 

திருத்தந்தை ஆறாம் பவுல்

(Pope Paul VI)


பாதுகாவல் :

"கைவிடப்பட்ட முதியோரின் சின்னஞ்சிறு சகோதரிகள்" (Little Sisters of the Abandoned Elderly) சபை

ஆன்மீக சபைகளால் மறுக்கப்பட்ட மக்கள் (People rejected by religious orders)

முதியோர் (Elderly people)


நினைவுத் திருநாள் : ஆகஸ்ட் 26


புனிதர் தெரெசா ஜோர்னெட் இபார்ஸ், ஸ்பேனிஷ் ரோமன் கத்தோலிக்க மறைப்பணியாளரும், "கைவிடப்பட்ட முதியோரின் சின்னஞ்சிறு சகோதரிகள்" (Little Sisters of the Abandoned Elderly) என்ற சபையின் நிறுவனரும் ஆவார்.


ஸ்பெயின் நாட்டின் “ல்லேய்டா” (Lleida) பிராந்தியத்தின் “அய்டோனா” (Aytona) எனும் சிறு நகரில், 9 ஜனவரி 1843ல் விவசாய குடும்பமொன்றில் பிறந்த இபார்ஸின் தந்தை பெயர் “ஃபிரான்சிஸ்கோ ஜோஸ் ஜோர்னேட்” (Francisco José Jornet) ஆகும். தாயாரின் பெயர், “அன்டோனியிட்டா இபார்ஸ்” (Antonieta Ibars) ஆகும்.


சிறுவயதிலிருந்தே எழைகளின்பால் தீவிர பற்று கொண்ட இவர், பல துன்பங்களுக்கு உட்படுத்தப்பட்டார். அனைத்து துன்பங்களையும் பொறுமையோடு எதிர்கொண்டார். ஏழைகளின் நிலை கண்டு எப்போதுமே கவலை கொண்டிருந்தார்.


இவர் சிறுவயதிலிருந்து, தான் ஓர் துறவியாக வேண்டுமென்று ஆசை கொண்டார். தன் விருப்பத்தை பல துறவற இல்லத்தில் தெரிவித்தார். ஆனால் இவரை, துறவறத்திற்கு சேர்த்துக்கொள்ள யாரும் முன்வரவில்லை. எந்த துறவற சபையினரும் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் ஓர் ஆசிரியராக படித்து, பின்னர் பள்ளியில் ஆசிரியர் பணியை செய்தார். தமது பத்தொன்பது வயதில் “பார்சிலோனா” (Barcelona) நகரில் ஆசிரியை பணி செய்கையில், துறவு வாழ்க்கைக்கு தாம் அழைக்கப்படுவதாக உணர்ந்தார்.


கி.பி. 1868ம் ஆண்டு, “பர்கோஸ்” (Burgos) நகருக்கு அருகேயுள்ள “எளிய கிளாரா” (Poor Clares) மடத்தில் இணைய விண்ணப்பித்தார். ஆனால் அப்போதிருந்த ஆன்மீகத்துக்கேதிரான சட்டங்கள், அவரை சபையில் இணைய தடுத்தன. அதனால், பின்னர் கி.பி. 1870ம் ஆண்டு, “மதச்சார்பற்ற கார்மேல்” (Secular Carmelites) சபையில் உறுப்பினராக இணைந்தார்.


அவரது தந்தையின் இறப்பு மற்றும் அவரைப் பீடித்த ஒரு கடுமையான நோய் காரணமாக, அவர் நீண்ட காலத்திற்கு தமது வீட்டிலேயே தங்க நேரிட்டது. பின்னர், தமது ஆன்மீக வழிகாட்டியின் ஆலோசனைகளின்படி, பிராந்தியத்திலுள்ள முதியோரை அழைத்து வந்து சரியாக அவர்களை கவனிக்க ஆரம்பித்தனர். கி.பி. 1872ம் ஆண்டு, இதற்கான முதல் இல்லத்தை “பர்பாஸ்ட்ரோ” (Barbastro) என்னும் இடத்தில் தொடங்கினார். அவரது சொந்த சகோதரியான மரியா இதற்கு உதவினார்.


நாளடைவில் தன் விருப்பத்தை, தன்னுடைய ஆன்ம வழிகாட்டியிடம் தெரிவித்தார். அவர் காட்டிய வழியில் சென்ற தெரசா, 1872ம் ஆண்டு பார்பஸ்ட்ரோ (Barbastro) என்ற ஊரில், ஒரு துறவற சபையை தொடங்கினார். இச்சபைக்கு "கைவிடப்பட்ட முதியோரின் சின்னஞ்சிறு சகோதரிகள்" (Little Sisters of the Abandoned Elderly) என்ற பெயரை சூட்டினார்.


8 மே 1873ல் “வலென்சியா” (Valencia) நகரில் தமது சபையின் தலைமை இல்லத்தை நிறுவினார். சபையின் தலைமைப் பொறுப்பையும் தாமே ஏற்றார். தமது சபையின் சகோதரிகளிடம், ஏழைகளுக்காக தமது வசதிகளை தியாகம் செய்யுமாறு கற்பித்தார். கி.பி. 1887ம் ஆண்டு, திருத்தந்தை “பதின்மூன்றாம் லியோ” (Pope Leo XIII) சபைக்கான அங்கீகாரத்தை வழங்கினார்.


கி.பி. 1897ல், ஸ்பெயின் நாட்டில் காலரா (Cholera) நோய் பரவியது. இந்நோயால் பாதிக்கப்பட்டோருக்கு உதவிட இவரும் இவரது சபையின் சகோதரிகளும் தீவிரமாக செயல்பட்டனர். இம்முயற்சிகளில் மிகவும் மனம் தளர்ந்த தெரேசா சபையின் தலைமைப் பொறுப்பிலிருந்து ஓய்வு பெற்றார். மிகவும் தளர்ச்சியடைந்த தெரெசா, காசநோய் (Tuberculosis) பாதிக்கப்பட்டு, 1897ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், 26ம் தேதி “லிரியா” (Liria) நகரில் மரணம் அடைந்தார்.


✠ புனிதர் அகஸ்டீன் ✠

(St. Augustine of Hippo)



ஆயர், மறைவல்லுநர்:

(Bishop, Doctor of the Church)


பிறப்பு : நவம்பர் 13, 354

தகாஸ்ட், நுமீடியா 

(தற்போதைய சூக் அஹ்ராஸ், அல்ஜீரியா)

(Thagaste, Numidia (Now Souk Ahras, Algeria)


இறப்பு : ஆகஸ்ட் 28, 430 (வயது 75)

ஹிப்போ ரீஜியஸ், நுமீடியா 

(தற்போதைய அன்னபா, அல்ஜீரியா)

(Hippo Regius, Numidia (Now modern-day Annaba, Algeria)


ஏற்கும் சமயம் : 

புனிதர்களை ஏற்கும் அனைத்து கிறிஸ்தவ சபைகள்

(All Christian denominations which venerate saints)


முக்கிய திருத்தலங்கள் : 

புனித பியெட்ரோ தேவாலயம், சியேல் டி’ஓரா, பவீயா, இத்தாலி

(San Pietro in Ciel d'Oro, Pavia, Italy)


நினைவுத் திருவிழா : ஆகஸ்ட் 28


சித்தரிக்கப்படும் வகை : 

குழந்தை; புறா; எழுதுகோல்; சங்கு; குத்தப்பட்ட இதயம்; 

சிறுகோவிலைத் தாங்கும் புத்தகத்தைப் பிடித்திருத்தல்; 

ஆயரின் ஊழியர்கள், ஆயரின் தொப்பி


பாதுகாவல் : 

குடிபானம்; அச்சுப்பொறிகள்; இறையியலாளர்கள்; பிரிட்ஜ்போர்ட் (Bridgeport), கனெக்டிகட் (Connecticut); ககாயன் டி ஓரோ (Cagayan de Oro); ஃபிலிப்பைன்ஸ் (Philippines); சான் அகஸ்டின் (San Agustin); இசபெலா (Isabela)



புனிதர் ஹிப்போவின் அகஸ்டீன், கத்தோலிக்க திருச்சபையாலும், பிற பல கிறிஸ்தவ சபைகளாலும் பெரிதும் போற்றப்படுகின்ற தலைசிறந்த இறையியல் அறிஞர் ஆவார். இவர் இன்றைய அல்ஜீரியாவில் அமைந்திருந்த “ஹிப்போ ரீஜியஸ்” (Hippo Regius) என்னும் நகரத்தின் ஆயராக இருந்ததால் ஹிப்போ நகர் அகஸ்டீன் என அழைக்கப்படுகின்றார்.


இலத்தீன் மொழி பேசிய மெய்யியலாளரும், இறையியலாளருமான அகஸ்டீன் ரோமப் பேரரசின் பகுதியாக இருந்த வட ஆபிரிக்க மாகாணத்தில் வாழ்ந்தார். திருச்சபைத் தந்தையருள் ஒருவராகப் போற்றப்படும் இவர், மேலை நாட்டுக் கிறிஸ்தவத்தின் வளர்ச்சிக்கு முக்கிய பங்களித்தார். இளமைப் பருவத்தில் இவர் “மானி” (கி.பி. சுமார் 216-276) என்பவரால் தொடங்கப்பட்ட "மனிக்கேயிச" (Manichaeism) கொள்கையால் பெரிதும் கவரப்பட்டார். பின்னர் “புளோட்டினஸ்” என்னும் மெய்யியலாரின் கொள்கையிலிருந்து பிறந்த "நியோ-பிளேட்டோனிசம்" (neo-Platonism) என்னும் கொள்கையைத் தழுவினார்.


இக்கொள்கைகளால் அகஸ்டீனின் மெய்யியல் தேடலை நிறைவுசெய்ய இயலவில்லை. எனவே, கி.பி. 387ம் ஆண்டு, அகஸ்டீன் திருமுழுக்குப் பெற்று கிறிஸ்தவ சமயத்தைத் தழுவினார்.


கிறிஸ்தவர் ஆன பின்பு அகஸ்டீன் கிறிஸ்தவ மெய்யியல் மற்றும் இறையியல் கொள்கைகளை விரித்துரைப்பதில் ஈடுபட்டு, பல நூல்களை இயற்றினார். மனிதருக்கு சுதந்திரம் உண்டு என்று ஏற்றுக்கொண்ட அகஸ்டீன் கடவுளின் அருள் இன்றி மனித சுதந்திரம் செயல்பட இயலாது என்று கற்பித்தார். கிறிஸ்தவ சமயத்தின் ஒரு முக்கிய கொள்கையாகிய பிறப்புநிலைப் பாவம் (Original Sin) என்பது பற்றியும், போரில் ஈடுபடுவதற்கான நிபந்தனைகள் பற்றி நீதிப்போர் கொள்கை (Just War Theory) என்னும் தலைப்பிலும் அகஸ்டீன் எடுத்துக் கூறிய கருத்துருக்கள் கிறிஸ்தவத்தில் செல்வாக்குப் பெற்றன.


மேல்நாட்டில் ரோமப் பேரரசு குலைவடையத் தொடங்கிய காலத்தில், அகஸ்டீன் தாம் எழுதிய "கடவுளின் நகரம்" (City of God) என்னும் நூலில், திருச்சபை என்பது கடவுளை வழிபடுகின்ற சமூகம் என்பதால் ஆன்மிக முறையில் கடவுளின் நகரமாக உள்ளது என்றும், இது உலகம் என்னும் பொருண்மைசார் நகரத்திலிருந்து வேறுபட்டது என்றும் ஒரு கருத்தை முன்வைத்தார். இவரது சிந்தனைகள் மத்தியகால கலாச்சாரத்திலும் உலகநோக்கிலும் தாக்கம் கொணர்ந்தன.


கத்தோலிக்க திருச்சபையும், ஆங்கிலிக்கன் திருச்சபையும் புனித அகஸ்டீனைப் பெரிதும் போற்றுகின்றன. இச்சபைகளால் அவர் புனிதர் என்றும் தலைசிறந்த "திருச்சபைத் தந்தை" (Church Father) என்றும் மதிக்கப்படுகிறார். புனித அகஸ்டீனின் திருநாள் ஆகஸ்ட் மாதம், 28ம் நாள் கொண்டாடப்படுகிறது. அவர் இறந்த அந்நாள் அவர் விண்ணகத்தில் பிறந்த நாளாகக் கருதப்படுகிறது.


அகஸ்டீன் மனிதரின் மீட்புப் பற்றியும் கடவுளின் அருள் பற்றியும் அளித்த சிறப்பான போதனைகளின் காரணமாக, பல எதிர் திருச்சபைகள், குறிப்பாக "கால்வின் சபை" அவருக்குச் சிறப்பு மரியாதை அளிக்கின்றன; அவரை "திருச்சபை சீர்திருத்தத்தின் ஒரு முன்னோடி" என்று போற்றுகின்றன. கிழக்கு மரபு சபை அகஸ்டீனை "முக்திப்பேறு பெற்றவர்" என்று ஏற்று அவருடைய திருநாளை ஜூன் 15ம் நாள் கொண்டாடுகிறது.


அகஸ்டீனுடைய தந்தை, ரோம சமயத்தைச் (Pagan) சார்ந்த “பேட்ரீசியஸ்” (Patricius) ஆவார். இவர், தமது மரணப் படுக்கையில் கிறிஸ்தவராக மனம் மாறினார். அகஸ்டீனுடைய தாயார் பெயர், மோனிக்கா (Monica) ஆகும். இவர், ஒரு கிறிஸ்தவ பெண்மணியாவார்.


அகஸ்டீனின் தாயார் மோனிக்கா கிறிஸ்தவராக இருந்து தம் மகனைக் கிறிஸ்தவ சமயத்தில் வளர்த்த போதிலும், அகஸ்டீன் “மனிக்கேய” (Manichaeism) கொள்கையைத் தழுவி தம் தாயாரை மனம் நோகச் செய்தார்.


அகஸ்டீன் எழுதிய தன்வரலாறு நூலாகிய "Confessions" என்னும் புத்தகத்தில் தம் இளமைக்கால அனுபவங்களையும் தாம் தவறான வழியில் சென்றதையும் விரிவாக வடித்துள்ளார்.


அந்நூலில் காண்பதுபோல, அகஸ்டீன் கார்த்தேஜ் நகரில் ஓர் இளம் பெண்ணோடு தொடர்புவைத்து, அவரை முறைப்படி மணந்து கொள்ளாமலே பதினைந்து ஆண்டுகள் கழித்தார். அந்த உறவின் பயனாக அவருக்கு ஓர் ஆண்மகவு பிறந்தது. அக்குழந்தைக்கு அகஸ்டீன் "அடேயோடாடஸ்" (Adeodatus) என்னும் பெயரிட்டார்.


மோனிக்கா தம் மகன் அகஸ்டீனோடு மிலனுக்குச் சென்றிருந்தார். அங்கு தம் மகனுக்குப் பொருத்தமான ஒரு பெண்ணை மணமுடித்து வைக்க வேண்டும் என அவர் விரும்பினார். ஆனால் அகஸ்டீன் தாம் முதலில் அன்பு செய்த பெண்ணை மறக்கவில்லை. எனவே வேறொரு பெண்ணை மணக்க தயங்கினார். பின்னர் மண ஒப்பந்தம் ஆனது. ஆனால் அது முறிந்தது.


386ம் ஆண்டு கோடைகாலத்தில் அகஸ்டீன் புனித வனத்து அந்தோனியார் (Saint Anthony of the Desert) என்னும் துறவியின் வாழ்க்கையைப் படித்தார். அதிலிருந்து தாமும் தூய வாழ்வு நடத்த வேண்டும் என்றும், தவறான கொள்கைகளைக் கைவிட வேண்டும் என்றும், கிறிஸ்தவத்தைத் தழுவ வேண்டும் என்றும் முடிவுசெய்தார். அம்முடிவோடு தம் ஆசிரியப் பணிக்கு முற்றுபுள்ளி வைத்தார். திருமணம் செய்யும் எண்ணத்தைக் கைவிட்டார். கடவுளுக்கே தம்மை முற்றிலும் அர்ப்பணிக்கத் தீர்மானித்தார்.


ஒருநாள் தோட்டத்தில் நடந்துகொண்டிருந்தபோது அகஸ்டீன் ஒரு குழந்தையின் குரலைக் கேட்டார். அக்குரல் அவரிடம் "எடுத்து வாசி" என்று கூறியது. முதலில் அக்குரலின் பொருளை அவர் உணரவில்லை. பிறகு, புனித வனத்து அந்தோனியாரின் வாழ்வில் ஏற்பட்ட அனுபவம் தம் வாழ்விலும் உண்மையாவதை அவர் உணர்ந்தார். "எடுத்து வாசி" என்னும் குரல் உண்மையாகவே கடவுளிடமிருந்து வந்ததாகவும், கடவுளுடைய வார்த்தை அடங்கிய திருவிவிலியத்தை எடுத்து வாசித்தால் தம் வாழ்வின் பொருளை அறிந்து கொள்ளலாம் எனவும் அவர் உள்ளூர உணர்ந்தார்.


உடனேயே திரும்பிச் சென்று விவிலியத்தைத் திறந்து வாசித்தார். அப்போது அவர் கண்களில் பட்டது தூய பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்தில் ஒரு பகுதி இதோ:


"களியாட்டம், குடிவெறி, கூடா ஒழுக்கம், காமவெறி, சண்டைச்சச்சரவு, ஆகியவற்றைத் தவிர்ப்போமாக! தீய இச்சைகளைத் தூண்டும் ஊனியல்பின் நாட்டங்களுக்கு இடம் கொடுக்க வேண்டாம். இயேசு கிறிஸ்துவை அணிந்து கொள்ளுங்கள்." 

~ உரோமையர் 13:13-14


இச்சொற்களை வாசித்த அகஸ்டீன், தம் வாழ்வில் அடிப்படையான மாற்றம் தேவை என்பதை உணர்ந்தார். கடவுளே தம் உள்ளத்தில் பேசுகிறார் என்பதையும் அறிந்தார். தம் தாய் மோனிக்கா கடவுளிடம் வேண்டிய மன்றாட்டுகள் வீண் போகவில்லை என்பதை அகஸ்டீன் உணர்ந்ததோடு, மிலான் நகர ஆயராகிய அம்புரோசு விவிலியத்தை விளக்கியுரைத்த பாணியாலும் கவரப்பட்டார். கிறிஸ்தவ சமயத்தில் கடவுளின் உண்மை உள்ளது என்று ஏற்றுக் கொண்டார்.


எனவே, மிலான் நகர ஆயராகிய அம்புரோசை அணுகி, தமக்குத் திருமுழுக்கு அளித்து தம்மைக் கிறிஸ்தவ சமயத்தில் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று கேட்டுக்கொண்டார். அம்புரோசும் அதற்கு இணங்கி அகஸ்டீனுக்கும் அவருடைய மகன் ஆதோயோதாத்துசுக்கும் அகஸ்டீனின் நெருங்கிய நண்பரும் அவருக்குக் கிறிஸ்தவத்தில் ஆர்வத்தை எழுப்பியவருமாகிய அலீப்பியுஸ் (Alypius) என்பவருக்கும் திருமுழுக்கு அளித்து அவர்களைக் கிறிஸ்தவ சபையில் ஏற்றுக் கொண்டார்.

✠ புனித கருப்பரான மோசே ✠

(St. Moses the Black)


துறவி, குரு, துறவு தந்தை :

(Monk, Priest and Monastic Father)


பிறப்பு : கி.பி. 330

எத்தியோப்பியா

(Ethiopia)


இறப்பு : கி.பி. 405

ஸ்கேடீஸ், எகிப்து

(Scetes, Egypt)


ஏற்கும் சமயம் :

ரோமன் கத்தோலிக்க திருச்சபை

(Roman Catholic Church)

கிழக்கு மரபுவழி திருச்சபை

(Eastern Catholic Churches)

ஆங்கிலிக்கன் ஒன்றியம்

(Anglican Communion)

லூதரனியம்

(Lutheranism)

ஒரியண்டல் மரபுவழி திருச்சபை

(Oriental Orthodoxy)

 

முக்கிய திருத்தலம் :

பரோமேயோஸ் மடம், ஸ்கேடீஸ், எகிப்து

(Paromeos Monastery, Scetes, Egypt)


நினைவுத் திருவிழா : ஆகஸ்ட் 28


பாதுகாவல் : ஆப்பிரிக்கா, அறப் போராட்டம்


“கருப்பரான புனிதர் மோசே” (Saint Moses the Black) அல்லது, “கொள்ளைக்காரான மோசே” (Abba Moses the Robber) என்று அழைக்கப்படும் இவர், நான்காவது நூற்றாண்டில், எகிப்து நாட்டில் வாழ்ந்து, கடும் தவம் செய்த துறவியும், கத்தோலிக்க குருவும், குறிப்பிடத்தக்க பாலைவனத் தந்தையருள் (Desert Father) ஒருவரும் ஆவார். இவர் “அறப் போராட்ட திருத்தூதர்” (Apostle of Non-Violence) எனவும் அழைக்கப்படுகின்றார்.


மோசே, ஒரு எகிப்திய (Egypt) அரசு அதிகாரியின் பணியாளாக இருந்தவர் ஆவார். திருடியதாகவும், கொலை செய்ததாகவும் சந்தேகிக்கப்பட்டு, இவர் பணிநீக்கம் செய்யப்பட்டார். பின்னர் இவர் கொள்ளைக்காரர்கள் (Bandits) கும்பல் ஒன்றின் தலைவர் ஆனார். நைல் பள்ளத்தாக்கில் (Nile Valley) பயங்கரவாத வன்முறை செயல்களில் ஈடுபட்டு வந்தார். இவர் வடிவில் மிகவும் பெரியதாயும் ஆதிக்கம் செலுத்துபவராகவும் இருந்தார்.


ஒரு சமயம், கொள்ளை நடத்த சென்ற இடத்தில் ஒரு நாய் குரைத்ததால் மோசே தனது திட்டத்தினை நிரைவேற்ற இயலவில்லை. அதனால் அவர் அதன் உரிமையாளர் மீது பழிவாங்கும் நோக்கோடு அவரது வீட்டினை கொள்ளை இட மீண்டும் முயன்றார். நாய் மீண்டும் தடுக்கவே, தனது கோபத்தை தணிக்க அவரது ஆடுகளில் சிலவற்றை கொன்றார். ஒருமுறை உள்ளூர் அதிகாரிகளிடமிருந்து தப்பிக்கும் முயற்சியாக அலெக்சாந்திரியாவுக்கருகே (Alexandria) இருந்த “ஸ்கேடீஸ்” (Scetes) என்னும் பாலைவனத்தில் வாழ்ந்துவந்த துறவிகளிடம் அடைக்கலம் புகுந்தார். அங்கு இருந்த துறவியரின் அர்ப்பண வாழ்வு, அவர்களின் அமைதி மற்றும் மனநிறைவு ஆகியவை மோசேவிடம் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தியது. அதன் விளைவாக அவர் விரைவில் தனது பழைய வாழ்க்கையினை கைவிட்டு, ஒரு கிறிஸ்தவராக திருமுழுக்கு பெற்று, அத்துறவியர்களின் குழுவில் ஒரு துறவியாக இணைந்தார்.


துறவு வாழ்வு இவருக்கு முதலில் கடினமாகவே அமைந்தது. இவரின் முரட்டு குணம் இவரை அடிக்கடி மனம் தளர வைத்தது. எனினும் தொடர்ந்து தனது ஆன்மீக வாழ்வில் முன்னேறி பல கடும் தவ முயற்சிகளில் ஈடுபட்டார். பின்னாட்களில் இவர் வட ஆபிரிக்காவின் மேற்கு பாலைவனத்தில் (Western Desert) இருந்த வனவாசிகளுக்கு ஆன்மீக தலைவரானார். அப்போது இவர் ஒரு குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார்.


இவருக்கு 75 வயதானபோது, கி.பி. 405ம் ஆண்டு, “பெர்பர்களின்” (Berbers) ஒரு குழு மடத்தினை தாக்கி அதனை சூறையாட திட்டமிட்டிருப்பதாக இவருக்கு செய்தி வந்தது. இம்மடத்தில் இருந்த பிற துறவிகள் அவர்களை எதிர்த்து போராட விரும்பினாலும், இவர் அதற்கு அனுமதி வழங்கவில்லை. அம்மடத்தில் இருந்த ஏழு துறவிகளைத்தவிர மற்ற எல்லோரையும் பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பிவிட்டு படையெடுப்பாளர்களை கைவிரித்து வரவேற்றார். இவரும் இவருடன் மடத்தில் இருந்த எழுவரும் அப்படையெடுப்பாளர்களால் ஜூலை மாதம், 1ம் தேதியன்று, கொல்லப்பட்டனர். இவர் ஒரு மறைசாட்சியாக கருதப்படுகின்றார்.


✠ புனித திருமுழுக்கு யோவானின் தலை துண்டிக்கப்படுதல் ✠

(Beheading of St. John the Baptist)


ஏற்கும் சமயங்கள் :

ரோமன் கத்தோலிக்க திருச்சபை

(Roman Catholic Church)

கிழக்கு கத்தோலிக்க திருச்சபைகள்

(Eastern Catholic Churches)

மரபுவழி திருச்சபை

(Orthodox Church)

ஓரியண்டல் மரபுவழி திருச்சபைகள்

(Oriental Orthodox Churches)

ஆங்கிலிக்கன் சமூகம்

(Anglican Communion)

இஸ்லாம்

(Islam) 


நினைவுத் திருநாள் : 

ஆகஸ்ட் 29 (ரோமன் கத்தோலிக்கம்)


திருமுழுக்கு யோவானின் கொடிய மரணம் :

ஒரு மன்னன் போதையில் செய்த சத்தியமும், அவனுடைய மரியாதைக்குரிய ஆழமற்ற உணர்வும், ஒரு பெண்ணின் மயக்கும் நடனமும், ஒரு ராணியின் வெறுப்பு சூழ்ந்த இருதயமும் இணைந்து, திருமுழுக்கு யோவானின் மறைசாட்சியத்துக்கு வழிகோலியது.


திருமுழுக்கு யோவான் சாதாரண மக்களின் தவறுகளை மட்டுமின்றி, அதிகாரத்திலும் பதவியிலும் இருந்தவர்களின் நெறிகேடானச் செயல்களையும் கடவுளின் பெயரால் கண்டித்தார். அவ்வாறே, “கலிலேயாவின்” (Galilee) குறுநில அரசன் “ஹெராட்” (Herod Antipas), “நபடேயா” அரசன் “அரேடாசின்” (King Aretas of Nabataea) மகளான தமது மனைவி “ஃபசேலிசை” (Phasaelis) விவாகரத்து செய்துவிட்டு, தமது சகோதரன் “முதலாம் ஹெராட் பிலிப்பின்” (Herod Philip I) மனைவி “ஹெரோடியாவை” (Herodias) மனைவியாக சேர்த்துக் கொண்டிருந்ததையும் யோவான் கண்டித்து வந்தார்.


ஹெராட், ஹெரோடியாவின் பொருட்டு ஆளனுப்பி யோவானைப் பிடித்துக் கட்டிச் சிறையில் அடைத்திருந்தான். இருப்பினும், யோவான் நேர்மையும் தூய்மையும் உள்ளவர் என்பதை ஹெராட் அறிந்து அஞ்சி, அவருக்குப் பாதுகாப்பு அளித்து வந்தான். அவர் சொல்லைக் கேட்டு மிகக் குழப்பமுற்ற போதிலும், அவருக்கு மனமுவந்து செவிசாய்த்தான். இதனால் ஹெரோடியா யோவான் மீது காழ்ப்புணர்வு கொண்டு, அவரைக் கொலை செய்ய விரும்பி காத்திருக்கலானாள்.


ஒரு நாள் ஹெரோடியாவுக்கு நல்ல வாய்ப்பு ஒன்று கிடைத்தது. ஹெராட் தன் பிறந்த நாளில் அரசவையினருக்கும், ஆயிரத்தவர் தலைவர்களுக்கும் கலிலேய முதன்மைக் குடிமக்களுக்கும் ஒரு விருந்து படைத்தான். அவ்விருந்தில், ஹெரோடியாவின் மகள் “சலோமி” (Salome), ஹெராட் மற்றும் விருந்தினர் முன்னிலையில் நடனமாடி அகமகிழச் செய்தாள். 


போதையிலிருந்த அரசன் ஹெராட் சலோமியிடம், "உனக்கு என்ன வேண்டுமானாலும் கேள், தருகிறேன்" என்றான். அவள் வெளியே சென்று, "நான் என்ன கேட்கலாம்?" என்று தன்தாயை வினவினாள். அவள், "திருமுழுக்கு யோவானின் தலையைக் கேள்" என்றாள். உடனே சிறுமி அரசனிடம் விரைந்து வந்து, "திருமுழுக்கு யோவானின் தலையை ஒரு தட்டில் வைத்து இப்போதே எனக்குக் கொடும்" என்று கேட்டாள். 


இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அரசன் மிகவும் வருந்தினான். இருப்பினும், விருந்தினர்முன் தாம் உறுதியளித்ததை மறுக்க விரும்பவில்லை. தயக்கத்துடனேயே, அரசன் ஒரு காவலனை அனுப்பி யோவானுடைய தலையைக் கொண்டுவருமாறு பணித்தான். அவன் சென்று சிறையில் அவருடைய தலையை வெட்டி, அதை ஒரு தட்டில் கொண்டுவந்து சலோமியிடம் கொடுக்க, அவளும் அதை வாங்கி தன் தாயிடம் கொடுத்தாள்.


இதைக் கேள்வியுற்ற யோவானுடைய சீடர்கள் வந்து அவருடைய உடலை எடுத்துச் சென்று ஒரு கல்லறையில் வைத்தார்கள்.


ஜெலாசியன் திருத்தந்தைக்கு உரித்தாக்கப்படுகின்ற முற்கால வழிபாட்டு புத்தகத்தில் கண்டுள்ளபடி இன்றைய திருநாளின் பெயர், "புனித திருமுழுக்கு யோவானின் பாடுகள்" என்றும், "புனித திருமுழுக்கு யோவானின் தலை வெட்டுண்டது" என்றும் அழைக்கப்படுகின்றது.


✠ ரோம் நகர் புனித சபீனா ✠

(St. Sabina of Rome)


மறைசாட்சி :

(Martyr)


பிறப்பு : கி. பி. முதலாம் நூற்றாண்டு

ரோம்

(Rome)


இறப்பு : கி. பி. 125

ரோம்

(Rome)


ஏற்கும் சமயம்:

ரோமன் கத்தோலிக்க திருச்சபை

(Roman Catholic Church)

கிழக்கு மரபுவழி திருச்சபை

(Eastern Catholic Churches)


முக்கிய திருத்தலம் :

தூய சபீனா ஆலயம், அவன்டினா குன்று, ரோம்

(Santa Sabina on the Aventine Hill, Rome)


நினைவுத் திருநாள் : ஆகஸ்ட் 29


புனிதர் சபீனா, ரோம் (Rome) நகரின் மருத்துவமனையொன்றின் தலைமை செவிலியும், மறைசாட்சியுமாவார். இவர், “ஹெராட் மெடல்லரியஸ்” (Herod Metallarius) என்பவரின் மகளும், “அதிகார சபை அங்கத்தினரான” (Senator) “வேலண்டைனஸ்” (Valentinus) என்பவரின் கைம்பெண்ணுமாவார்.


முன்பொருமுறை சபீனாவிடம் அடிமைப்பெண்ணாக இருந்த “புனிதர் செரபியா” (Saint Serapia) என்ற பெண் இவரை கிறிஸ்தவராக மனமாற்றம் செய்வித்தார். ரோம கடவுளர்களை பூஜிக்க மறுத்த காரணத்தால் “ரோமப்பேரரசன்” (Roman Emperor) “ஹட்ரியான்” (Hadrian) என்பவனால் கண்டிக்கப்பட்ட “செரபியா”, துன்புறுத்தப்பட்டு, தலை துண்டிக்கப்பட்டு, மறைசாட்சியாக கொல்லப்பட்டார். (பின்னாளில் செரபியா “ரோமன் கத்தோலிக்க திருச்சபை” மற்றும் :கிழக்கு மரபுவழி திருச்சபை” ஆகியவற்றால் புனிதராக அருட்பொழிவு செய்விக்கப்பட்டார்.)


தமது அடிமைப்பெண்ணின் உடலை மீட்டெடுத்த சபீனா, அதனை தமது குடும்ப கல்லறையில் (Family mausoleum) அடக்கம் செய்தார்.


இதனால், “எல்பிடியோ” (Elpidio) எனும் நிர்வாக அலுவலரால் (Prefect) கண்டிக்கப்பட்ட சபீனா, அவர் ஒரு கிறிஸ்தவர் என்ற காரணத்தால் குற்றம் சாட்டப்பட்டார். இத்தாலியின் “ஊம்ப்ரியா” (Umbria) மாநிலத்தின் “வின்டேனா” (Vindena) நகரில், கி.பி. 125ம் ஆண்டு, மறைசாட்சியாக கொல்லப்பட்டார்.


கி.பி. 430ம் ஆண்டு, சபீனாவின் உடல் “அவன்டைன்” (Aventine Hill) குன்றின்மேல், இவரது வீட்டினருகேயுள்ள “ஜூனோ கோயில்” (Temple of Juno) அருகே விசேடமாக கட்டப்பட்டு, இவரது பெயரில் அர்ப்பணிக்கப்பட்ட “தூய சபீனா பேராலயத்திற்கு” (Basilica— Santa Sabina) கொண்டு செல்லப்பட்டது.


பின்னர், புனிதராக அருட்பொழிவு செய்விக்கப்பட்ட புனிதர் சபீனாவின் நினைவுத் திருநாள், ஆகஸ்ட் மாதம், 29ம் தேதி கொண்டாடப்படுகிறது.


✠ புனித யூப்ரேசியா எலுவத்திங்கல் ✠

(St. Euphrasia Eluvathingal)


இந்திய கார்மேல் சபை அருட்சகோதரி:

(Indian Carmelite Nun)


பிறப்பு : அக்டோபர் 17, 1877

காட்டூர், திரிச்சூர் மாவட்டம், கேரளம், இந்தியா

(Kattoor, Aranattukara, (Mother House), Thrissur, Kerala, India)


இறப்பு : ஆகஸ்ட் 29, 1952

ஒல்லூர், திரிச்சூர், கேரளம், இந்தியா

(Ollur, Thrissur, Kerala, India)


ஏற்கும் சமயம் :

கத்தோலிக்க திருச்சபை, சீரோ மலபார் வழி

(Syro-Malabar Church/ Eastern Catholic Church)


அருளாளர் பட்டம் : டிசம்பர் 3, 2006

கர்தினால் வர்க்கி விதயத்தில்

(Cardinal Mar Varkey Vithayathil)


புனிதர் பட்டம் : நவம்பர் 23, 2014

திருத்தந்தை ஃபிரான்சிஸ்

(Pope Francis)


முக்கிய திருத்தலங்கள் :

சீரோ மலபார் புனித மரியா கோவில், ஒல்லூர்


நினைவுத் திருவிழா : ஆகஸ்ட் 29


புனித யூப்ரேசியா எலுவத்திங்கல் அல்லது, புனிதர் யூப்ரேசியா, என்று அழைக்கப்படுகின்ற இப்புனிதர், கத்தோலிக்க திருச்சபையில் சீரோ மலபார் (Syro-Malabar Church) வழிபாட்டு முறையைச் சார்ந்தவர் ஆவார்.


1887ம் ஆண்டு, அக்டோபர் மாதம், 17ம் தேதி, இந்தியாவின் கேரள மாநிலத்தில், திரிச்சூர் (Thrissur district) மாவட்டத்தின், காட்டூர் (Kattoor) என்னும் ஊரில் உள்ள, “சிரோ மலபார் கத்தோலிக்க நஸ்ரானி” (Syro-Malabar Catholic Nasrani) குடும்பத்தில் பிறந்த யூப்ரேசியம்மாவுக்குத் திருமுழுக்கின்போது வழங்கப்பட்ட பெயர், “ரோஸ் எலுவத்திங்கல்” என்பதாகும். அவருடைய தந்தையின் பெயர், சேர்ப்புக்காரன் அந்தோனி (Cherpukaran Antony) ஆகும். தாயார், குஞ்ஞத்தி (Kunjethy) என்பர். ரோசின் தாய், அன்னை மரியாளின் மீது மிகுந்த பக்தி கொண்டவர். அவருடைய பக்தி வாழ்க்கை ரோசின் வாழ்க்கையிலும் பெரிய தாக்கத்தைக் கொணர்ந்தது.


லீமா நகர ரோஸ் என்னும் புனிதரின் பெயரைத் தாங்கிய ரோஸ் எலுவத்திங்கலுக்கு, அவருடைய தாயார் அப்புனிதரின் வாழ்க்கை வரலாற்றை விரிவாக எடுத்துரைப்பதுண்டு. மேலும் பல புனிதர்களின் வாழ்க்கையைப் பின்பற்றி ரோஸ் நல்ல கிறிஸ்தவ வாழ்க்கை வாழ்ந்திட வேண்டும் என்று தாய் அறிவுறுத்திவந்தார்.


சிறுவயதிலேயே ரோஸ் ஆன்மீக காரியங்களில் ஆர்வம் காட்டினார். அவருக்கு 9 வயது நிகழ்கையில் அன்னை மரியாளின் திருக்காட்சி அவருக்குக் கிடைத்ததாக அவரே சான்று கூறியுள்ளார். அச்சிறு வயதிலேயே ரோஸ் தனது வாழ்க்கையை இயேசுவுக்குக் கையளித்தார். ரோசின் தந்தை அந்தோனி தன் மகளுக்குத் திருமணம் செய்துவைக்க எண்ணியபோது, ரோஸ் அவரிடத்தில் தாம் ஒரு கன்னிகையாகத் துறவற சபையில் சேர விரும்புவதாகக் கூறினார். கடவுளை நோக்கி உருக்கமாக வேண்டினார். அப்போது ரோசின் தங்கை நோய்வாய்ப்பட்டு இறந்தார். இப்பின்னணியில் அந்தோனியின் மனமும் மாறியது. அவர் தம் மகள் ரோஸ் கன்னியாகத் துறவறம் புக இசைவு அளித்தார்.


ரோசை அழைத்துக்கொண்டு அந்தோனி கூனம்மாவு (Koonammavu) ஊரில் இருந்த கார்மேல் அன்னை கன்னியர் மடம் சென்று சேர்த்தார். அங்கு ரோஸ் துறவியாக வாழத்தொடங்கினார். ஆனால் அவர் நோயினால் துன்புற்றார். எனவே பிற கன்னியர் அவரை வீட்டிற்கு அனுப்பிவிட எண்ணினார்கள். அப்போது ரோசுக்கு இயேசு, மரியா, யோசேப்பு ஆகியோர் (திருக்குடும்பம்) காட்சியளித்து, ரோசின் நோயைக் குணப்படுத்தினர். இதுபற்றியும் ரோஸ் சான்றுபகர்ந்துள்ளார்.


துறவற சபையில் உறுப்பினர் ஆன வேளையில் (மே 10, 1897) அவர் ஏற்ற பெயர் “இயேசுவின் திரு இதயத்தின் யூப்ரேசியா” (Sister Euphrasia of the Sacred Heart of Jesus) என்பதாகும். மக்கள் அவரை “யூப்ரேசியம்மா” என்று அழைத்தனர். அவர் 1898ம் ஆண்டு, ஜனவரி மாதம், 10ம் நாள் கார்மேல் துறவியரின் சீருடையை அணியத் தொடங்கினார்.


யூப்ரேசியம்மா பல நற்பண்புகள் கொண்டவராக விளங்கினார். தாழ்ச்சி, பொறுமை, அன்பு, ஒறுத்தல், புனித வாழ்க்கையில் ஆர்வம் போன்றவற்றைக் கொண்டிருந்தார். இயேசுவின் அன்னை மரியா மீது மிகுந்த பக்தி அவரிடத்தில் துலங்கியது. நோய்கள் வந்த போதும், வாழ்க்கையே இருண்டது போன்ற அனுபவம் ஏற்பட்டபோதும் அவருடைய உள்ளத்தில் மகிழ்ச்சி நிறைந்திருந்தது.


அருட்சகோதரி யூப்ரேசியம்மா 1900ம் ஆண்டு, மே மாதம், 24ம் நாள், தம்மை நிரந்தரமாகத் துறவறத்திற்கு அர்ப்பணித்தார். அவர் இயேசுவைத் தம் மணவாளனாகக் கருதி வாழ்ந்தார்.


1904-1913 ஆண்டுக் காலத்தில் யூப்ரேசியம்மா புகுமுக துறவியருக்குப் பயிற்சி அளிக்கும் பொறுப்பை ஆற்றினார். அவர் தனிமையில், ஒரு மறைந்த வாழ்வு வாழ்வதற்கு விரும்பியபோதிலும், ஒல்லூர் (Ollur) கன்னியர் மடத்திற்குத் தலைவியாக நியமிக்கப்பட்டார். தனது கடமைகளைப் பொறுமையோடும் தாழ்ச்சியோடும் ஆற்றினார். மடத்திற்கு உண்மையான தலைவராக இருப்பவர் இயேசுவே என்பதை வலியுறுத்தும் வகையில் மடத்தின் பொது இடத்தில் இயேசுவின் திருஇருதய திருஉருவத்தை நிறுவினார். அவர் மடத்தின் தலைவியாக 1913-1916 ஆண்டுகளில் பணியாற்றினார்.


இவ்வாறு சுமார் 48 ஆண்டுகள் யூப்ரேசியம்மா புனித மரியாள் கன்னியர் இல்லத்திலேயே வாழ்ந்தார். புனித வாழ்க்கை நடத்தி, எப்போதும் இறைவேண்டலில் ஈடுபட்டிருந்தார். இதனால் மக்கள் அவரை “செபிக்கும் அன்னை” என்று அழைத்தனர். சிலர் அவரை “நடமாடும் கோவில்” என்றனர். ஏனென்றால் அவருடைய உள்ளத்தில் குடிகொண்ட இறைவனின் ஒளி அவரிடமிருந்து சென்று மக்களின் வாழ்க்கையை ஒளிர்வித்தது.


கன்னியர் மடம் புகுந்த நாளிலிருந்தே யூப்ரேசியம்மாவுக்கு வழிகாட்டியாக இருந்தவர் ஆயர் “மார் ஜான் மேனச்சேரி” (Mar John Menachery) என்பவர். அவர் யூப்ரேசியம்மாவின் வாழ்க்கை ஆன்மிகத்தில் தோய்ந்திருந்ததை உணர்ந்தார். எனவே, யூப்ரேசியா தமது ஆன்ம அனுபவங்கள் அனைத்தையும் அப்படியே தமக்கு எழுதி அனுப்பும்படி கேட்டுக்கொண்டார். தாம் எழுதியவற்றை அழித்துவிட வேண்டும் என்று யூப்ரேசியம்மா கேட்டுக்கொண்ட போதிலும் ஆயர் அக்கடிதங்களை அப்படியே பாதுகாத்து வைத்தார். அக்கடிதங்களிலிருந்து யூப்ரேசியம்மாவின் ஆன்ம அனுபவ ஆழம் தெரிய வருகிறது.


கன்னியர் மடத்தைத் தேடி வந்து யாராவது உதவி செய்தால் யூப்ரேசியம்மா அவர்களிடம் “இறந்தாலும் மறக்கமாட்டேன்” என்று கூறுவாராம்.


யூப்ரேசியம்மாவை நோக்கி வேண்டியதன் பயனாக அதிசயமான விதத்தில் குணம் கிடைத்ததாகப் பலர் சான்று பகர்ந்துள்ளனர். இப்புதுமைகளை ஆய்ந்து, அவை இறையருளால் நிகழ்ந்தவை என்றும், யூப்ரேசியாவின் மன்றாட்டின் பயனே அது என்றும் திருச்சபை அதிகாரிகள் ஒப்புதல் அளித்தனர்.


யூப்ரேசியம்மாவுக்குப் புனிதர் பட்டம் வழங்குவதற்கான முதன்முயற்சிகள் 1986ம் ஆண்டு, தொடங்கின. 1987ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், 29ம் நாள், அவருக்கு “இறை ஊழியர்” நிலை வழங்கப்பட்டது.


தாமஸ் தரகன் (Thomas Tharakan) என்பவருடைய உடலிலிருந்து ஒரு புற்றுநோய் கட்டி அற்புதமான விதத்தில் மறைந்தது பற்றிய தகவல் ரோம் (Rome) நகருக்கு அனுப்பப்பட்டது.


திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் (Pope Benedict XVI) அளித்த ஆணையின்படி, “கர்தினால் வர்க்கி விதயத்தில்” (Cardinal Mar Varkey Vithayathil) யூப்ரேசியம்மாவுக்கு “அருளாளர்” பட்டம் வழங்கினார். அந்நிகழ்ச்சி, திரிசூர் பகுதியில் ஒல்லூரில் புனித அந்தோனியார் கோவிலில் நிகழ்ந்தது.


2014ம் ஆண்டு, ஏப்ரல் மாதம், 23ம் நாள், கிறிஸ்து அரசர் பெருவிழாவின்போது திருத்தந்தை ஃபிரான்சிஸ் (Pope Francis) யூப்ரேசியம்மாவுக்குப் புனிதர் பட்டம் வழங்கினார். அச்சிறப்பு நிகழ்ச்சி வத்திக்கான் நகரில் (Vatican City) தூய பேதுரு பெருங்கோவில் சதுக்கத்தில் (St Peter's Square) நிகழ்ந்தது.


✠ புனிதர் நர்ஸிசா டி ஜீசஸ் ✠

(St. Narcisa de Jesús)



பொதுநிலைப் பெண்மணி :

(Laywoman)


பிறப்பு : அக்டோபர் 29, 1832

நோபோல், குவாயஸ், ஈகுவேடார்

(Nobol, Guayas, Ecuador)


இறப்பு : டிசம்பர் 8, 1869 (வயது 37)

லிமா, பெரு

(Lima, Peru)


ஏற்கும் சமயம் :

ரோமன் கத்தோலிக்க திருச்சபை

(Roman Catholic Church)


முக்திபேறு பட்டம் : அக்டோபர் 25, 1992

திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுல்

(Pope John Paul II)


புனிதர் பட்டம் : அக்டோபர் 12, 2008

திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட்

(Pope Benedict XVI)


முக்கிய திருத்தலம் :

சேன்ச்சுவரியோ டி தூய நர்ஸிசா டி ஜீசஸ் மார்டில்லோ மோரன், ஈகுவேடார்

(Santuario de Santa Narcisa de Jesus Martillo Morán, Ecuador)


நினைவுத் திருநாள் : ஆகஸ்ட் 30


புனிதர் நர்ஸிசா டி ஜீசஸ் மார்டில்லோ மோரன் (Saint Narcisa de Jesús Martillo Morán), தென் அமெரிக்காவிலுள்ள (South America) “ஈகுவேடார்” (Ecuador) நாட்டைச் சேர்ந்த ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் ஒரு பொதுநிலைப் பெண்மணியாவார். இயேசு கிறிஸ்துவின்பால் தாம் கொண்டிருந்த கடுமையான பக்தி மற்றும் தர்மசிந்தை காரணமாக இவர் அறியப்படுகிறார். ஏறத்தாழ ஒரு துறவியைப் போல ஒதுங்கி வாழ்ந்த இவர், இயேசுவின் விருப்பம் அறிந்து தம்மையே அர்ப்பணித்து வாழ்ந்தார்.


அவருடைய பெற்றோரின் மரணம், தையல்காரராக வேலை செய்வதற்காக அவரை இடமாற்றம் செய்யத் தூண்டியது. அதே நேரத்தில் தமது உடன்பிறந்த சகோதரர்களின் தேவைகளுக்காகவும், ஒரு மறைக்கல்வி போதிப்பவராகவும், ஒரு கல்வியாளராகவும் அவரது பணிகளை இரட்டிப்பாகியது. ஆனால் கடவுள் மீதான அவருடைய பக்தி வலுவானது. அது, "பெரு" (Peru) நகரில் உள்ள டொமினிகன் சபை துறவியரிடையே வாழ வழிவகுத்தது. அங்கு அவர் இறப்பதற்கு முன்பு தமது இறுதி காலத்தை அங்கேதான் செலவிட்டார்.


நர்ஸிசா, "ஈக்வடார்" (Ecuador) நாட்டிலுள்ள "நோபோல்" (Nobol) நகரில் அருகேயுள்ள "சான் ஜோஸ்" (San José) என்ற சிறிய கிராமத்தில், நில உரிமையாளர்களான "பெட்ரோ மார்டிலோ" (Pedro Martillo) மற்றும் "ஜோசஃபினா மோரன்" (Josefina Morán) ஆகிய பெற்றோருக்கு பிறந்த ஒன்பது குழந்தைகளில் ஆறாவது குழந்தையாக, கி.பி. 1832ம் ஆண்டு, அக்டோபர் மாதம், 29ம் நாளன்று, பிறந்தார். புனிதர் "மரியானா டி ஜீசஸ்" (St. Mariana of Jesus de Paredes) மற்றும் "போலந்தின் புனிதர் ஹ்யாசிந்த்" (Hyacinth of Poland) ஆகியோர் மீது பக்தி கொண்டிருந்த இவரது தந்தை கடுமையாக உழைத்து, கணிசமான செல்வத்தை குவித்து வைத்திருந்தார்.


கி.பி. 1838ம் ஆண்டு, இவரது ஆறு வயதில், இவரது தாயார் இறந்தார். இதன் விளைவாக வீட்டு வேலைகளை அவர் மேற்கொண்டார். அதே நேரத்தில், இவரது ஒரு மூத்த சகோதரியும், ஆசிரியை ஒருவரும், இவருக்கு எழுத படிக்கவும், கிதார் வாசிக்கவும், பயன்படுத்தவும் கற்றுக் கொடுத்தனர். அவர், தையல் மற்றும் சமையல் வேலைகளையும் கற்றுக்கொண்டார். சிறுமி நர்ஸிசா, தனது வீட்டில் இருந்த ஒரு சிறிய அறையை வீட்டு சிற்றாலயமாக மாற்றினார். அவர், கி.பி. 1839ம் ஆண்டு, செப்டம்பர் மாதம், 16ம் நாளன்று, தனது உறுதிப்பூசுதல் அருட்சாதனம் பெற்றார்.


மார்ட்டிலோ தனது வீட்டிற்கு அருகில் ஒரு சிறிய வனத்தில், தனிமையில் தியானம் செய்ய அடிக்கடி சென்றார். அவர் சென்ற இடத்தினருகேயிருந்த கொய்யா மரம் இருந்த ஒரு இடம், இப்போது ஒரு பெரிய திருயாத்திரை இடமாக உள்ளது. புனிதர் "மரியானா டி ஜீசஸ்" (St. Mariana of Jesus de Paredes) என்பவரை தமது பாதுகாவல் புனிதராக தெரிந்துகொண்ட இவர், தனது சொந்த வாழ்க்கையில் அவரை பின்பற்ற முயன்றார். அமைதியான, மற்றும் தாராள மனப்பான்மையுடனும், இனிமையாகவும், சிந்தனையுடனும் அறியப்பட்ட மார்ட்டிலோ, தன்னைச் சுற்றியுள்ளவர்களுக்கு கீழ்ப்படிந்த பெண்ணாகவும் வாழ்ந்தார். அவருடைய கிராமத்தில் அவர் நன்கு அறியப்பட்ட அவர், அங்குள்ளோரால் நேசிக்கப்பட்டார். நல்ல உயரமான அவர், பிரகாசமான நீல நிற கண்களைக் கொண்டிருந்த மார்ட்டிலோ, பொன்னிறமாக இருந்தார். மேலும் வலிமையாகவும் சுறுசுறுப்பாகவும் இருந்தார்.


கி.பி. 1852ம் ஆண்டு, ஜனவரி மாதம், நிகழ்ந்த அவரது தந்தையின் மரணம், குயாகுவில்" (Guayaquil) நகருக்கு இவரை இடம் பெயரத் தூண்டியது. அங்கு அவர் முக்கிய பிரபுக்களுடன் வசித்து வந்தார். ஏழைகளுக்கும் நோயுற்றவர்களுக்கும் உதவுவதும், கைவிடப்பட்ட குழந்தைகளைப் பராமரிப்பதுமாக, தனது பணிகளைத் தொடங்கினார். தமது சமூக சேவை பணிகளுக்கான செலவினங்களுக்காகவும், தனது எட்டு சகோதர சகோதரிகளுக்கு ஆதரவளிப்பதற்காகவும் அவர் தையல் பணியை தேர்ந்தெடுத்தார்.


ஆனால் அவர் விரைவில் சில மாதங்களுக்கு "குயெங்கா" (Cuenca) நகருக்கு சென்றார். அங்கு அவர் வீடு வீடாகச் சென்று - மறைப்பணியாளர் "அருளாளர் மெர்சிடிஸ் டி ஜீசஸ் மோலினா" (Mercedes de Jesús Molina) உட்பட - அவரை அழைத்துச் செல்லும் எவருடனும் வசித்து வந்தார், அமைதியான சிந்தனைகளுக்கும் தவத்திற்கும் அதிக நேரம் செலவிட்டார்.


கி.பி. 1865ம் ஆண்டில் நோயுற்ற அவரது ஆன்மீக வழிகாட்டி, 1868ம் ஆண்டு, இறந்தார். அந்த நேரத்தில் உள்ளூர் ஆயர், இவரை கார்மலைட்டுகளுடன் வாழ அழைத்தார். ஆனால், இவர், இந்த வாய்ப்பை மறுத்துவிட்டார். கி.பி. 1868ம் ஆண்டு, ஜூன் மாதம், தனது புதிய ஃபிரான்சிஸ்கன் ஆன்மீக வழிகாட்டி "பெட்ரோ குவால்" (Pedro Gual) என்பவரது ஆலோசனையின் பேரில், பெரு (Peru) நாட்டிலுள்ள லிமா (Lima) நகருக்கு இடம் பெயர்ந்தார். அங்கு அவர், தாம் ஒரு கன்னியாஸ்திரி இல்லை எனினும், "பேட்ரோசினியோ" (Patrocinio) நகரிலுள்ள டொமினிகன் கான்வென்ட்டில் தங்கி வசித்து வந்தார். அங்கே அவர், தினமும் தொடர்ந்து எட்டுமணி நேரம் அமைதியான மற்றும் தலைமையிலான தியானங்களில் ஈடுபட்டார். கூடுதலாக, அவர் தினமும் இரவின் நான்கு மணிநேரங்களை, முள் கிரீடம் அணிவது, மற்றும் பல்வேறு வகையான தம்மைத்தாமே வருத்திக்கொள்ளும் செயல்களில் அர்ப்பணித்தார். தமது உணவைப் பொறுத்தவரை, அவர் ரொட்டி மற்றும் தண்ணீர் மட்டுமே உட்கொண்டு, உண்ணாவிரதம் இருந்தார். நற்கருணை மட்டுமே தமது முழு உணவாக எடுத்துக் கொண்டார். அதே நேரத்தில் அவர் சில சமயங்களில் பரவச நிலையிலும் காணப்பட்டார்.


கி.பி. 1869ம் ஆண்டு, செப்டம்பர் மாதத்தின் பிற்பகுதியில், அவருக்கு அதிக காய்ச்சல் ஏற்பட்டது. அதற்கான மருத்துவ சிகிச்சைகள் பெரிதாக ஒன்றும் பலனளிக்கவில்லை. இதன் விளைவாக, கி.பி. 1869ம் ஆண்டு, டிசம்பர் மாதம், 8ம் தேதி, நள்ளிரவுக்கு முன்பு அவர் இறைவனில் மரித்தார். அவரது மரணத்தின்போது, மார்ட்டிலோ இருந்த அறையில், ஒரு பரவசமான மற்றும் இனிமையான வாசனை நிரம்பியிருந்ததாக ஒரு கன்னியாஸ்திரி அறிவித்தார். முதலாவது வத்திக்கான் சபை (First Vatican Council) திறக்கப்பட்ட காலத்தில் அவர் இறந்தார்.


1998ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், 22ம் நாளன்று, அவரது திருஉடலின் மிச்சங்கள் பாதுகாக்கப்படும் "நோபோல்" (Nobo) நகரில் அவரது பெயரில் ஒரு திருத்தலம் அர்ப்பணிக்கப்பட்டது.

✠ புனித ஜீன் ஜூகன் ✠

(St. Jeanne Jugan)


மறைப்பணியாளர், சபை நிறுவனர்:

(Religious and Foundress)


பிறப்பு: அக்டோபர் 25, 1792

கன்கேல், இல்-எட்-விலைன், ஃபிரான்ஸ்

(Cancale, Ille-et-Vilaine, France)


இறப்பு: ஆகஸ்ட் 29, 1879 (வயது 86)

செயின்ட்-பேர்ன், இல்-எட்-விலைன், ஃபிரான்ஸ்

(Saint-Pern, Ille-et-Vilaine, France)


ஏற்கும் சமயம்:

ரோமன் கத்தோலிக்க திருச்சபை

(Roman Catholic Church)


முக்திப்பேறு பட்டம்: அக்டோபர் 3, 1982

திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுல்

(Pope John Paul II)


புனிதர் பட்டம்: அக்டோபர் 11, 2009

திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட்

(Pope Benedict XVI)


முக்கிய திருத்தலம்:

ல டூர் புனிதர் ஜோசஃப், புனித பெர்ன், இல்-எட்-விலைன், ஃபிரான்ஸ்

(La Tour Saint-Joseph, Saint-Pern, Ille-et-Vilaine, France)


நினைவுத் திருநாள்: ஆகஸ்ட் 30


பாதுகாவல்: ஆதரவற்ற முதியோர்


“சகோதரி சிலுவையின் மேரி” (Sister Mary of the Cross) என்ற பெயரிலும் அறியப்படும் புனிதர் ஜீன் ஜூகன், தமது வாழ்நாள் முழுவதையும் ஆதரவற்ற முதியோருக்கு சேவை செய்வதில் அர்ப்பணிப்புடன் செலவிட்ட ஒரு ஃபிரெஞ்ச் பெண்மணியாவார். அவரது அளப்பற்ற சேவையின் விளைவாக “எளியோரின் சின்னஞ்சிறு சகோதரிகள்” (Little Sisters of the Poor) எனும் அநாதரவான முதியோருக்கு சேவையாற்றும் நோக்கில், ரோமன் கத்தோலிக்க ஆன்மீக சேவை நிறுவனம் நிறுவப்பட்டது. இந்நிறுவனம், ஃபிரெஞ்ச் நகரங்களின் தெருக்களில் அநாதரவாக விடப்பட்ட முதியோர்களுக்கு சேவை செய்யும் நோக்கத்திற்காகவே நிறுவப்பட்டது.


இவர், 1792ம் ஆண்டு, அக்டோபர் மாதம் 25ம் தேதி, ஃபிரான்ஸ் நாட்டின் வடமேற்கு பிராந்தியமான “பிரிட்டனி” (Brittany) எனும் இடத்திலுள்ள “கன்கேல்” (Cancale) எனும் துறைமுக நகரில் பிறந்தார். “ஜோசஃப்” மற்றும் “மேரி ஜுகன்” (Joseph and Marie Jugan) தம்பதியரின் எட்டு குழந்தைகளில் ஆறாவது குழந்தையாக பிறந்தவர் ஆவார். அரசியல் மற்றும் மத எழுச்சிகளின் ஃபிரெஞ்ச் புரட்சி நடந்த காலத்தில் இவர் வளர்ந்தார். ஜீனுக்கு நான்கு வயதானபோது, மீனவரான இவரது தந்தை கடலில் காணாமல் போனார். கத்தோலிக்க எதிர்ப்புத் துன்புறுத்தல்கள் பரவலாக இருந்த அக்காலத்தில், பிள்ளைகளுக்கு உணவளிக்கவும், இரகசியமாக சமய கல்வி அளிப்பதற்காகவும் ஜீனின் தாயார் போராடினார்.


சிறு வயதிலேயே கால்நடை மேய்க்கும் பணிகளை செய்த ஜீன் ஜுகன், ஆடைகள் நெய்யும் மற்றும் கம்பளி பின்னும் பணிகளைக் கற்றுக்கொண்டார். எழுதவும் படிக்கவும் மட்டுமே அவரால் இயன்றது. தமது 16 வயதில், (Viscountess de la Choue) எனும் பிரபுக்கள் குடும்பத்தில் சமையலறைப் பணிப்பெண்ணாக சேர்ந்தார். அந்த பிரபுக்கள் குடும்ப தலைவி, ஒரு பக்தியுள்ள கத்தோலிக்க பெண்மணியாதலால், ஏழைகளுக்கும் நோயுற்றோர்க்கும் உதவ போகும்போதெல்லாம் ஜுகனையும் உடன் அழைத்துச் செல்வார். 18 வயதிலும், மீண்டும் ஆறு வருடங்களின் பின்னரும், தமக்காக திருமணத்துக்கு ஏற்பாடு செய்த தமது தாயாரிடம் மறுத்துப் பேசினார். தமக்கான இறைவனின் திட்டம் வேறு எதோ ஒன்று உள்ளது என்றும், அது என்னவென்று இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றும் கூறினார்.


ஜுகனுக்கு இருபத்தைந்து வயதாகையில், “புனிதர் ஜான் யூட்ஸ்” (St. John Eudes) அவர்கள் தொடங்கிய “இயேசு மற்றும் மரியாள்” (Congregation of Jesus and Mary) சபையில் உதவியாளராக இணைந்தார். நகரத்திலுள்ள “புனித-செர்வன்” (Saint-Servan) மருத்துவமனையில் செவிலியராகவும் பணி புரிந்தார். ஓய்வின்றி கடுமையாக உழைத்த ஜுகன், ஆறு வருடங்களின் பின்னர், தமது சொந்த உடல் நலமின்மை காரணமாக மருத்துவமனையை விட்டு சென்றார். அதன்பின்னர், “யூடிஸ்ட் மூன்றாம் நிலை” (Eudist Third Order) சபையில் ஒரு பெண்ணின் உதவியாளராக பன்னிரண்டு வருடங்கள் பணியாற்றினார். இக்காலத்தில், ஜுகனும் அந்த பெண்ணுமாய், நகரிலுள்ள சிறுவர்களுக்கு மறைக்கல்வி போதிக்க தொடங்கியிருந்தனர். அத்துடன் ஏழைகள் மற்றும் நோயுற்றோர்க்கும் சேவை புரிய தொடங்கியிருந்தனர்.


கி.பி. 1837ம் ஆண்டு ஜுகனும், 72 வயது நிரம்பிய “ஃபிரான்கோய்ஸ்” (Françoise Aubert) என்ற பெண்மணியும் இணைந்து, ஒரு குடிலின் பாகத்தை வாடகைக்கு எடுத்தனர். பின்னர், “வெர்ஜினி” (Virginie Tredaniel) என்ற பதினேழு வயது அனாதைப் பெண்ணும் இவர்களுடன் இணைந்தார். இந்த மூன்று பெண்களும் இணைந்து, மறைக்கல்வி கற்பிப்பதற்காகவும், ஏழைகளுக்கு உதவவும், ஒரு செப சமூகத்தை உருவாக்கினார்கள்.


கி.பி. 1839ம் ஆண்டின் குளிர்காலத்தில், “அன்னி” (Anne Chauvin) எனும் வயதான பார்வையற்ற பெண்ணை சந்தித்து தமது இல்லத்துக்கு அழைத்துவந்து, அவருக்கு வேண்டிய சேவைகளை செய்தார். விரைவிலேயே இன்னும் இரண்டு வயோதிக பெண்மணிகள் வந்து சேர்ந்தனர். ஒரு டஜன் என்றான வயோதிகர்களின் எண்ணிக்கை, 40 என்றானது. பயன்பாட்டிலில்லாத பள்ளிக்கூடமொன்றையும் வாடகைக்கு எடுத்தார். இந்நிலையில், “எளியோரின் சின்னஞ்சிறு சகோதரிகள்” (Little Sisters of the Poor)  எனும் பெண்களுக்கான ரோமன் கத்தோலிக்க ஆன்மீக சேவை நிறுவனம் நிறுவி, ஆதரவற்ற முதியோர்களுக்கு சேவை புரிய தொடங்கினார். அவரும் அவரது உதவியாளர் பெண்களும் தினமும் நகரின் வீடு வீடாக சென்று உணவுப்பொருட்கள் மற்றும் ஆடைகள் போன்ற முதியோருக்கு அவசியமானவற்றை தானமாக பெற்று வந்தனர். இவரது சேவையில் இன்னும் அதிக இளம்பெண்கள் இணைந்தனர். தெருத்தெருவாக, வீடு வீடாக தானம் வாங்கியே, மேலதிகமாக நான்கு இல்லங்களை ஜீன் வாங்கினார். கி.பி. 1850ம் ஆண்டு, நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் சபையில் இணைந்தனர்.


உள்ளூர் ஆயரால் இச்சபையின் “உயர் தலைமைப்” (Superior General) பொறுப்பிற்கு நியமிக்கப்பட்ட மடாதிபதியும் அருட்பணியாளருமான “அகஸ்ட் லீ பைல்லூர்” (Auguste Le Pailleur) என்பவர், ஜீன் ஜுகணை சபையின் தலைமைப் பொறுப்பிலிருந்து அகற்றினார். அந்த குருவானவர், ஜீனின் உண்மையான குணநலன்களை நசுக்குவதற்கான வெளிப்படையான முயற்சிகளில் இறங்கினார். சபையின் நிறுவனரான அவருக்கு, தெருத்தெருவாக, வீடு வீடாக சென்று பிச்சை எடுக்கும் பணியே அளிக்கப்பட்டது. இதுவே ஜுகனின் வாழ்க்கையாகிப் போனது. அடுத்த 27 வருடங்கள், இதேபோன்று, முதியோருக்காக, தெருத்தெருவாக அலைந்தார். அவரது இறுதி வருடங்களில், அவரது உடல் நலம் குன்றி, கண்பார்வையும் மங்கிப்போனது.


கி.பி. 1879ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், 29ம் தேதி, ஜீன் ஜுகன் மரித்தபோது, அவர்தாம் இச்சபையின் நிறுவனர் என்ற பெரும்பாலோருக்கு தெரியாமலேயே போனது. அவர் மரித்து பதினோரு வருடங்களின் பின்னர், 1890ம் ஆண்டு, நடந்த விசாரணையின் பின்னர், குரு “அகஸ்ட் லீ பைல்லூர்” (Auguste Le Pailleur) பணி நீக்கம் செய்யப்பட்டார். இறுதியில், ஜீன் ஜுகன் அவர்களது நிறுவனராக ஒப்புக்கொள்ளப்பட்டார்.


இவர்களது சபையின் தலைமை இல்லம், ஃபிரான்ஸ் நாட்டின் “செயின்ட்-பேர்ன்” (Saint-Pern) எனும் இடத்திலுள்ளது. “எளியோரின் சின்னஞ்சிறு சகோதரிகள்” (Little Sisters of the Poor) எனும் இவர்களது சபை, உலக அளவில், 31 நாடுகளில் இன்று பரவியுள்ளன. 2014ம் ஆண்டு, ஜனவரி மாதம், 1ம் தேதி நிலவரப்படி, 234 இல்லங்களுடனும், 2,372 உறுப்பினர்களுடனும், இச்சபை கத்தோலிக்க திருச்சபையின் மிகப்பெரும் சபைகளில் ஒன்றாக கருதப்படுகின்றது.

✠ அரிமத்தியா புனித யோசேப்பு ✠

(St. Joseph of Arimathea)


இயேசு கிறிஸ்துவின் இரகசிய சீடர்:

(Secret Disciple of Jesus)


பிறப்பு: ----


இறப்பு: ----

பழைய எருசலேம் நகரிலுள்ள “தூய செபுல்ச்ர்”, சிரியாக் மரபுவழி சிற்றாலயம்

(Syriac orthodox Chapel in Holy Sepulchre)


ஏற்கும் சமயம்:

ரோமன் கத்தோலிக்க திருச்சபை

(Roman Catholic Church)

கிழக்கு மரபுவழி திருச்சபை

(Eastern Orthodox Church)

ஆங்கிலிக்கன் ஒன்றியம்

(Anglican Communion)

லூதரனியம்

(Lutheranism)

ஓரியண்டல் மரபுவழி திருச்சபை

(Oriental Orthodox Church)


நினைவுத் திருவிழா: ஆகஸ்ட் 31


பாதுகாவல்: நீத்தோர் இறுதி சடங்கினை வழிநடத்துவோர்


அரிமத்தியா ஊரைச் சேர்ந்த புனிதர் யோசேப்பு என்பவர், நற்செய்திகளின்படி, இயேசுவின் மரணத்தின் பின்னர், அவரை அடக்கம் செய்தவர் ஆவர். இவர் நான்கு திருமுறை நற்செய்திகளிலும் குறிப்பிடப்பட்டுள்ளார். 


மாற்கு 15:43 இவரை மதிப்புக்குரிய தலைமைச் சங்க உறுப்பினர் எனவும், இறையாட்சியின் வருகைக்காகக் காத்திருந்தவர் எனவும் குறிக்கின்றது.

மத்தேயு 27:57 இவர் இயேசுவுக்குச் சீடராய் இருந்தார் எனக்குறிக்கின்றது.

யோவான் 19:38 இவரை இயேசுவின் சீடர்களுள் ஒருவர் எனவும் யூதருக்கு அஞ்சியதால் தம்மைச் சீடர் என்று வெளிப்படையாகக் காட்டிக்கொள்ளாதவர் எனவும் குறிக்கின்றது.


இதன்படி இவர் இயேசுவின் உடலை எடுத்துக் கொண்டுபோகப் பிலாத்துவிடம் (Pilate) அனுமதி கேட்டார். பிலாத்து நூற்றுவர் தலைவரிடமிருந்து கேட்டு இயேசுவின் இறப்பை உறுதி செய்தபின்பு யோசேப்பிடம் இயேசுவின் உடலை அளித்தான்.


“நிக்கதேம்” (Nicodemus) துணையோடு “கொல்கொதாவில்” (Golgotha) இவர் இயேசுவின் உடலை சிலுவையிலிருந்து இறக்கி யூத அடக்க முறைப்படி நறுமணப் பொருட்களுடன் துணிகளால் சுற்றிக் கட்டினார். ஒரு புதிய கல்லறை ஒன்றில் அவரின் உடலை அடக்கம் செய்தார் என விவிலியம் கூறுகின்றது.


கத்தோலிக்க திருச்சபை, கிழக்கு மரபுவழி திருச்சபை, லூதரனியம் மற்றும் சில ஆங்கிலிக்கம் சபைகள் இவரை புனிதர் என ஏற்கின்றன.

✠ புனித நிக்கதேம் ✠

(St. Nicodemus)


கிறிஸ்துவின் பாதுகாவலன்:

(Defender of Christ)


பிறப்பு: கி.மு. முதலாம் நூற்றாண்டு


இறப்பு: கி.பி. முதலாம் நூற்றாண்டு

யூதேயா 

(Judea)


ஏற்கும் சமயம்:

ரோமன் கத்தோலிக்க திருச்சபை

(Roman Catholic Church)

கிழக்கு மரபுவழி திருச்சபை

(Eastern Orthodox Church)

ஆங்கிலிக்கன் ஒன்றியம்

(Anglican Communion)

லூதரனியம்

(Lutheranism)

ஓரியண்டல் மரபுவழி திருச்சபை

(Oriental Orthodox Church)


நினைவுத் திருவிழா: ஆகஸ்ட் 31 


பாதுகாவல்: ஆர்வமுள்ளவர்களின் (Curious)


புனித நிக்கதேம் என்பவர் விவிலியத்தின்படி, இயேசுவின் சீடராவார். இவர் ஒரு “பரிசேயரும்” (Pharisee), யூதத் தலைவர்களுள் ஒருவரும், ஆவார். 


இவர் யோவான் நற்செய்தியில் மூன்று முறை குறிக்கப்பட்டுள்ளார்:


முதல் முறையாக, இவர் ஓர் இரவில் இயேசுவிடம் வந்து உரையாடியதாக யோவான் நற்செய்தி குறிக்கின்றது. (யோவான் 3:1-21)

இரண்டாம் முறையாக, இவர் இயேசுவுக்காக தலைமைக் குருக்களிடமும் பரிசேயர்களிடமும் “ஒருவரது வாக்குமூலத்தைக் கேளாது, அவர் என்ன செய்தாரென்று அறியாது ஒருவருக்குத் தீர்ப்பளிப்பது நமது சட்டப்படி முறையாகுமா?” என்று கேட்டு இவர் பரிந்து பேசியதாக கூறுகின்றது. (யோவான் 7: 50-51)


இறுதியாக, அரிமத்தியா யோசேப்புவுக்கு (Joseph of Arimathea) இயேசுவின் உடலை அடக்கம் செய்ய இவர் உதவியதாக கூறுகின்றது. (யோவான் 19:39-42)


இவர் முதலில் இயேசுவை இரவில் சந்தித்து உரையாடிய பகுதியில் உள்ள விவிலிய வரிகள் மிகவும் புகழ் பெற்றதாகும். குறிப்பாக யோவான் 3:16 நற்செய்தியின் சுறுகம் என அழைக்கப்படுகின்றது. மேலும் பல கிறிஸ்தவ பிரிவுகளில் மீள்பிறப்புக் கொள்கை (Born again) இவ்வுரையாடலிலிருந்தே பெறப்படுகின்றது.


4ம் நூற்றாண்டின் மையத்தில் எழுதப்பட்ட திருமுறையினை சாராத “நிக்கதேம் நற்செய்தி” (Gospel of Nicodemus) என்னும் நூல் இவரால் எழுதப்பட்டதாக கூறுகின்றது. ஆயினும் இது பின்னாட்களில் எழுதப்பட்ட போலி என்பது அறிஞர் கருத்து.


கிறிஸ்தவ மரபுப்படி இவர் 1ம் நூற்றாண்டில் மறைசாட்சியாக கொல்லப்பட்டார் என்பர்.

✠ புனித ரேமண்ட் நொன்னட்டஸ் ✠

(St. Raymond Nonnatus)


மறைப்பணியாளர், குரு, ஒப்புரவாளர்:

(Religious, Priest and confessor)


பிறப்பு: கி.பி. 1204

போர்டெல், செகர்ர, பார்செலோனா, அரகன், (தற்போதைய ஸ்பெயின்)

(Portell, County of Segarra, Principality of Catalonia, Crown of Aragon, (Current Spain)


இறப்பு: ஆகஸ்ட் 31, 1240

கார்டோனா கோட்டை, பார்செலோனா, அரகன், ஸ்பெயின்

(Castle of Cardona, County of Cardona, Principality of Catalonia, Crown of Aragon, (Current Spain)


ஏற்கும் சமயம்:

ரோமன் கத்தோலிக்க திருச்சபை

(Roman Catholic Church)


புனிதர் பட்டம்: கி.பி. 1657 

திருத்தந்தை 7ம் அலெக்சாண்டர்

(Pope Alexander VII)


நினைவுத் திருநாள்: ஆகஸ்ட் 31


பாதுகாவல்: 

பைத்தோவா (Baitoa); டொமினிக்கன் குடியரசு (Dominican Republic); குழந்தைப் பிறப்பு; கர்ப்பிணி பெண்கள்; பிறந்த குழந்தைகள்; குழந்தைகள்; மகப்பேறு மருத்துவர்கள்; தாதிகள்; காய்ச்சல்; பொய்யான குற்றச்சாட்டு; ஒப்புதல் வாக்குமூலம்


புனிதர் ரேமண்ட், ஸ்பெயின் (Spain) நாட்டின் “கட்டலோனியா” (Catalonia) நகரைச் சேர்ந்த ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் புனிதர் ஆவார். இவரது தாயார், இவரை பிரசவிக்கும்போதே மரித்து போனார். அதனால் அறுவை சிகிச்சை (Caesarean) செய்துதான், தாயின் வயிற்றிலிருந்து இவரை எடுத்தனர்.


நன்கு கல்வி கற்றிருந்த இவரது தந்தை, இவருக்கு நல்லதோர் எதிர்காலத்தை உருவாக்கி தர முனைந்தார். “அரகன்” அரசின் (Kingdom of Aragon) அரசவையிலே சிறந்ததோர் உத்தியோகம் அவரைத் தேடி வந்தது. ஆனால், இவரது எண்ணங்களோ கிறிஸ்துவின் மீதும் அவர்தம் இரக்கத்தின் மீதுமே இருந்தது. அயலாரிடம் அன்பு காட்டுவதிலும் சிறந்தவராய் திகழ்ந்தார். இதனால், தமது பண்ணைகளிலொன்றினை நிர்வகிக்க அறிவுறுத்தியிருந்தார். சிறு வயது பிராயத்திலிருந்தே தமது வீட்டினருகேயிருந்த “தூய நிக்கோலஸ்” (St. Nicholas) சிற்றாலயத்தில் செபிக்கும் வழக்கம் கொண்டிருந்தார்.


பின்னர், “பார்சிலோனா” (Barcelona) நகரிலிருந்த “மெர்சிடரியன்” (Mercedarians) துறவற மடத்தின் சீருடைகளை ஏற்க ரேமண்டை அனுமதித்தார். “மெர்சிடரியன்” (Mercedarians) சபை, வட ஆபிரிக்காவின் முகம்மதியர்களிடம் (Moors of North Africa) பிடிபட்டிருந்த கிறிஸ்தவர்களை மீட்பதற்காக நிறுவப்பட்டதாகும். ரேமண்ட், அச்சபையின் நிறுவனரான “தூய பீட்டர் நோலாஸ்கோவிடம்” (St. Peter Nolasco) பயிற்சி பெற்றார். 1222ம் ஆண்டு குருத்துவ அருட்பொழிவு பெற்ற இவர், பின்னர் அச்சபையின் தலைமை (Master General) பொறுப்பேற்றார்.


பின்னர் வலென்சியா (Valencia) நாட்டிற்கு மறைப்பணியாற்ற சென்ற ரேமண்ட், மிகச் சிறப்பான முறையில் மறைப்பணியை ஆற்றினார். அந்நாட்டில் அடிமைகளாக பிடிக்கப்பட்டிருந்த சுமார் 140 கிறிஸ்தவர்களை அடிமைத்தளையிலிருந்து மீட்டார். 


அதன்பிறகு, ரேமண்ட் வட ஆப்ரிக்காவில் மறைப்பணியாற்ற சென்றார். அங்கும் அடிமைகளாக இருந்த 250 கிறிஸ்தவர்களை “அல்ஜியர்ஸ்” (Algiers) எனுமிடத்திலிருந்து மீட்டார். அதன்பிறகு “டுனிஸ்” (Tunis) என்ற நகருக்கு சென்றார். அங்கே, மிகச் சிறந்த முறையில் மறை பரப்புப் பணியை ஆற்றிய இவர், அந்நாட்டு முகம்மதிய மக்களால் சிறைபிடிக்கப்பட்டு அடிமைப்படுத்தப்பட்டார். 


சிறையில் இருக்கும்போது அவரின் உதடுகள் இரண்டையும் இழுத்து பிடித்து, உதடுகளின் நடுவே பளுத்த இரும்பினால் துளை போட்டு, இரும்பு பூட்டைக்கொண்டு, இவரின் வாயை பூட்டினர். அப்போது அக்கொடியவர்கள் ரேமண்ட்டை மறைபரப்பு பணியை ஆற்ற முடியாமல் செய்து வதைத்தனர். அங்கு அவர் பல துன்பங்களை அனுபவித்தார். பின்னர் அவரது சபையினரால் மீட்கப்பட்ட ரேமண்ட், கி.பி. 1239ம் ஆண்டு ஸ்பெயின் நாட்டுக்கு சென்றார்.


“பார்சிலோனா” (Barcelona) நகரிலிருந்து அறுபது மைல் தூரத்திலுள்ள “கர்டோனா கோட்டையில்” (Castle of Cardona) ரேமண்ட் மரித்தார். கி.பி. 1657ம் ஆண்டு, திருத்தந்தை ஏழாம் அலெக்சாண்டரால் (Pope Alexander VII) புனிதர் பட்டமளிக்கப்பட்ட ரேமண்ட் அவர்களின் நினைவுத் திருவிழா ஆகஸ்ட் மாதம் 31ம் தேதி ஆகும்.