Wednesday, 10 March 2021

புனித யோசேப்பு செபமாலை

 புனித யோசேப்பு செபமாலை

(சாதாரண செபமாலை வடிவத்தில்)

தந்தை மகன் தூய ஆவியாரின் பெயராலே. ஆமென்


புனித யோசேப்பை நோக்கி மன்றாட்டு

புனித யோசேப்பே! உமது அடைக்கலம் மிகவும் மேன்மையானது, வல்லமை மிக்கது. இறைவனின் முன்னிலையில் உடனடி பலனளிக்க வல்லது. எனவே, என் ஆசைகள், என் எண்ணங்கள் அனைத்தையும் உமது பாதத்தில் சமர்ப்பிக்கிறேன். உமது வல்லமைமிக்கப் பரிந்துரையால் உம் திருமகனும் எங்கள் ஆண்டவருமாகிய இயேசு கிறிஸ்துவிடம் எங்களுக்குத் தேவையான எல்லா ஆன்ம நலன்களையும் பெற்றுத் தாரும். இதன் வழியாக மறு உலகில் உமக்குள்ள ஆற்றலைப் போற்றி எல்லாம் வல்லத் தந்தையாகிய இறைவனுக்கு நன்றியும், ஆராதனையும் செலுத்துவேன்.

புனித யோசேப்பே! உம்மையும் உமது திருக்கரத்தில் உறங்கும் இயேசுவையும் எக்காலமும் எண்ணி மகிழ நான் தயங்கியதில்லை. இறைவன் உமது மார்பில் சாய்ந்து தூங்கும் வேளையில் அவரைத் தொந்தரவு செய்ய விரும்பவில்லை. என் பொருட்டு, உமது மார்போடு அவரை இணைத்து அணைத்துக் கொள்ளும். என் பெயரால் அவருக்கு நெற்றியில் முத்தமிடும். நான் இறக்கும் வேளையில் அந்த முத்தத்தை எனக்குத் தரும்படியாகக் கூறும். இறந்த விசுவாசிகளின் ஆன்மாவின் காவலனே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். ஆமென்.


மூவேளை மன்றாட்டு

தலைவர்: ஆண்டவருடைய தூதர் யோசேப்புக்கு கனவில் தோன்றினார்
எல்  : யோசேப்பே தாவிதின் மகனே! மரியாவை உன் மனைவியாக ஏற்றுக்கொள்ள அஞ்ச வேண்டாம்

தலைவர்: ஏனெனில் மரியா தூய ஆவியாரால் கருத்தரித்தாள்
எல்  : அவள் ஒரு ஆண் மகனைப் பெற்றெடுப்பார்

தலைவர்: நீர் அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர்
எல்  : ஏனெனில் அவரே தம் மக்களை பாவத்திலிருந்து விடுவிப்பார்

மன்றாடுவோமாக:

இறைவா! தேவ தூதர் அறிவித்தபடியே உம்முடைய திருமகன் இயேசுகிறிஸ்து மனிதனானதை நாங்கள் அறிந்துள்ளோம். அவருடைய பாடுகளினாலும், சிலுவையினாலும் நாங்கள் அவருடைய உயிர்ப்பின் மேன்மையை அடையும் பொருட்டு எங்கள் உள்ளங்களில் உமது அருளைப் பொழிய வேண்டுமென்று எங்கள் ஆண்டவராகிய அதே இயேசுகிறிஸ்து வழியாக மன்றாடுகிறோம் - ஆமென்.

செபமாலை தொடங்குமுன் (சிலுவையில்)

இறைவா! புனித யோசேப்பின் உன்னத நிலைக்கான மாண்பினை அளித்து, அவருக்கு மாட்சியின் மணிமுடி சூட்டும் பொருட்டு அவரை உடலோடும் ஆன்மாவோடும் விண்ணகத்திற்கு எடுத்துக் கொண்டீரே! அவரது விண்ணக மண்ணக மாட்சியை குறிக்கும் விதமாய் உம்முடைய வளர்ப்புத் தந்தையை உமது உடைமைகளுக்கெல்லாம் உன்னத பொறுப்பாளர் ஆக்கினீர்.உமது தாயின் கற்பு நெறி பிறழா கணவராம் புனித யோசேப்பின் உதவியால் நாங்கள் தன்னிலே முயன்று பெறாததை அவருடைய பரிந்துரையால் பெற்றுக் கொள்வோமாக. தந்தையாம் இறைவனோடும் தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் ஆட்சி செய்கின்றவர் நீரே. ஆமென்.

திருத்தூதர்களின் நம்பிக்கை அறிக்கை

விண்ணகத்தையும் மண்ணகத்தையும் படைத்த எல்லாம் வல்ல தந்தையாகிய கடவுளை நம்புகிறேன். அவருடைய ஒரே மகனாகிய நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை நம்புகிறேன். இவர் தூய ஆவியால் கருவுற்று, கன்னி மரியாவிடமிருந்து பிறந்தார். பொந்தியு பிலாத்தின் அதிகாரத்தில் பாடுபட்டுச் சிலுவையில் அறையப்பட்டு, இறந்து, அடக்கம் செய்யப்பட்டார். 
பாதாளத்தில் இறங்கி, மூன்றாம் நாள் இறந்தோரிடமிருந்து  உயிர்த்தெழுந்தார். விண்ணகத்துக்கு எழுந்தருளி, எல்லாம் வல்ல தந்தையாகிய கடவுளின் வலப்பக்கத்தில் வீற்றிருக்கிறார். அங்கிருந்து வாழ்வோருக்கும் இறந்தோருக்கும் தீர்ப்பு வழங்க வருவார். தூய ஆவியாரை நம்புகிறேன். புனித கத்தோலிக்கத் திருஅவையை நம்புகிறேன். புனிதர்களின் உறவு ஒன்றிப்பை நம்புகிறேன். பாவ மன்னிப்பை நம்புகிறேன். உடலின் உயிர்ப்பை நம்புகிறேன். நிலைவாழ்வை நம்புகிறேன். -ஆமென். 

இயேசு கற்றுக்கொடுத்த செபம்

விண்ணுலகில் இருக்கின்ற எங்கள் தந்தையே, உமது பெயர் தூயது எனப் போற்றப் பெறுக. உமது ஆட்சி வருக. உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல, மண்ணுலகிலும் நிறைவேறுக. எங்கள் அன்றாட உணவை இன்று எங்களுக்குத் தாரும். எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோரை நாங்கள் மன்னிப்பது போல, எங்கள் குற்றங்களை மன்னியும். எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும். தீமையிலிருந்து எங்களை விடுவித்தருளும் - ஆமென்.

தூய யோசேப்பு செபம் (மங்கள வார்த்தை செபம்)

தாவீதின் மகனாகிய சூசையே வாழ்க! ஆண்டவர் உம்முடனே, ஆண்களுள் ஆசீர்வதிக்கப்பட்டவர் நீரே, நீர் வளர்த்த தெய்வீக குழந்தை இயேசுவும் ஆசி பெற்றவரே!
புனித சூசையப்பரே! இறைவனின் வளர்ப்புத் தந்தையே! பாவிகளாயிருக்கிற எங்களுக்காக இப்பொழுதும் எப்பொழுதும் எங்கள் இறப்பின் வேளையிலும் வேண்டிக் கொள்ளும். ஆமென்

பாத்திமா செபம்

ஓ என் இயேசுவே! எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும். நரக நெருப்பிலிருந்து எங்களை மீட்டருளும். எல்லாரையும் விண்ணுலக பாதையில் நடத்தியருளும். உமது இரக்கம் யாருக்கு அதிக தேவையோ அவர்களுக்கு சிறப்பான உதவி புரியும். 

மகிழ்ச்சி நிறை மறையுண்மைகள்

1.  கபிரியேல் வானதூதர் யோசேப்புக்கு மீட்பின் திட்டத்தை அறிவித்ததைக் குறித்து தியானிப்போம் (மத் 1:21)
2.  இயேசு பிறந்ததை; குறித்து தியானிப்போம் (லூக் 2:7)
3.  இயேசுவுக்கு விருத்தசேதனம் செய்து பெயர் சூட்டியதை குறித்து தியானிப்போம் (மத் 1:20-21)
4.  இயேசுவை கோயிலில் காணிக்கையாக ஓப்புக்கொடுத்ததை குறித்து தியானிப்போம் (லூக் 2:32-33)
5.  காணமல் போன இயேசுவை கோயிலில் கண்டெடுத்ததைக் குறித்து தியானிப்போம். (லூக் 2:48, 51)

அமைதியின் நிறை மறையுண்மைகள்

1.  யோசேப்புக்கும் மரியாவுக்கும் திருமண ஒப்பந்தமானதைக் குறித்து தியானிப்போம்.(மத் 1:18)
2.  நேர்மையாளரான புனித யோசேப்பு மரியாவை இகழ்ச்சிக்கு உள்ளாக்காமல் கனிவுடன் நடந்து கொண்டதைக் குறித்து தியானிப்போம்.(மத் 1:19)
3.  மரியாவை ஏற்றுக்கொள்ள வானதூதர் யோசேப்பை பணித்ததைக் குறித்து தியானிப்போம். (மத் 1:20)
4.  யோசேப்பு மரியாவையும் இயேசுவையும் கூட்டிக் கொண்டு எகிப்திற்கு சென்றதைக் குறித்து தியானிப்போமாக. (மத் 2:13-14)
5.  இயேசு ஞானத்திலும், உடல் வளர்ச்சியிலும் மிகுந்து கடவுளுக்கும், மனிதருக்கும் உகந்த வாழ்வு வாழ யோசேப்பு துணை நின்றதைக் குறித்து தியானிப்போம். (லூக் 2:52)

துயர் நிறை மறையுண்மைகள்

1.  மரியாள் கணவனை அறியாது கருவுற்றிருந்ததை எண்ணி துயரமடைந்ததைக் குறித்து தியானிப்போம்.(மத் 1:18) 
2.  பெத்லகேமுக்கு சென்ற போது இயேசுவை பெற்றெடுக்க விடுதியில் இடம் கிடைக்காத மாட்டுத் தொழுவத்தில் அவர் பிறந்த துயரத்தைக் குறித்து தியானிப்போம். (லூக் 2:5-7)
3.  இயேசு அடையப்போகும் துயரத்தைக் குறித்தும் அன்னை மரியாளின் வியாகுலத்தைக் குறித்து சிமியோன் இறைவாக்கினர் முன்னறிவித்தபோது ஏற்பட்ட துயரத்தைக் குறித்து தியானிப்போம். (மத் 2:34)
4.  எருசலேமில் இயேசு காணாமல் போன துயரத்தைக் குறித்து தியானிப்போம். (லூக் 2:43)
5.  யோசேப்பின் இறப்பைக் குறித்து தியானிப்போம்.

மகிமை நிறை மறையுண்மைகள்

1.  இயேசுவின் உயிர்ப்புக்கு பின் புனித யோசேப்பு விண்ணேற்பு அடைந்ததைக் குறித்து தியானிப்போம்.
2.  உழைப்பாளர்களின் பாதுகாவலராகிய புனித யோசேப்பைக் குறித்து தியானிப்போம்
3.  அகில உலக திருஅவையின் பாதுகாவலராக புனித யோசேப்பு ஏற்படுத்தப்பட்டதைக் குறித்து தியானிப்போம்.
4.  குடும்பங்களின் பாதுகாவராகிய புனித யோசேப்பைக் குறித்து தியானிப்போம்.
5.  நல்மரணத்தின் பாதுகாவலராகிய புனித யோசேப்பைக் குறித்து தியானிப்போம்.

செபிப்போமாக

எல்லாம் வல்ல இறைவா, மனித மீட்பு மறைநிகழ்வுகளின் தொடக்கமாகிய இயேசுவைப் புனித யோசேப்பின் நம்பிக்கைக்கு உரிய காவலில் ஒப்படைத்தீNர் அவருடைய பரிந்துரையால் உமது திரு அவை அந்த மீட்புப் பணியைத் தொடர்ந்து ஆற்றச் செய்வீராக. உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்.

புனித யோசேப்பு மன்றாட்டு மாலை

ஆண்டவரே இரக்கமாயிரும்...
கிறிஸ்துவே இரக்கமாயிரும்...
ஆண்டவரே இரக்கமாயிரும்...
கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டைக் கனிவாய்க் கேட்டருளும்.
விண்ணகத் தந்தையாகிய இறைவா... (எங்கள் மேல் இரக்கமாயிரும்)
உலகை மீட்ட திருமகனாகிய இறைவா...
தூய ஆவியாராகிய இறைவா...
மூவொரு கடவுளாகிய இறைவா...
புனித மரியாயே... (எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்)
தூய யோசேப்பே...
தாவீது அரசரின் தலைமுறையில் உதித்தத் திருமகனே... 
முதுபெரும் தந்தையரின் மாட்சிமையே...
இறையன்னையின் துணையாளரே...
மீட்பரின் பாதுகாவலரே...
கன்னி மரியாவின் கற்புள்ளக் காவலரே...
இறை மகனின் வளர்ப்புத் தந்தையே...
கிறிஸ்துவின் நம்பிக்கைக்குரிய பாதுகாவலரே...
கிறிஸ்துவின் பணியாளரே...
மீட்பின் பணியாளரே...
திருக்குடும்பத்தின் தலைவரே...
நேர்மையாளரான புனித யோசேப்பே...
கற்புள்ளவரான புனித யோசேப்பே...
விவேகமுள்ளவரான புனித யோசேப்பே...
வலிமை மிக்கவரான புனித யோசேப்பே...
கீழ்ப்படிதலுள்ளவரான புனித யோசேப்பே...
பிரமாணிக்கமுள்ளவரான புனித யோசேப்பே...
பொறுமையின் கண்ணாடியே...
ஏழ்மையின் அன்பரே...
தொழிலாளர்களின் முன்மாதிரியே...
இல்லற வாழ்க்கையின் அணிகலனே...
கன்னியர்களின் காவலரே...
குடும்பங்களின் ஆதரவே...
கடினமான காலத்தில் ஆதரவே...
துன்புறுவோரின் ஆறுதலே...
நோயாளிகளின் நம்பிக்கையே...
தஞ்சம் புகுவோரின் பாதுகாவலரே...
துயருறுவோரின் பாதுகாவலரே...
ஏழைகளின் பாதுகாவலரே...
இறப்பவர்களின் பாதுகாவலரே...
சாத்தானை நடுநடுங்கச் செய்பவரே...
புனிதத் திருஅவையின் பாதுகாவலரே...
உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியான இயேசுவே - 3 
- எங்கள் பாவங்களைப் மன்னித்தருளும்
- எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்
- எங்கள் மேல் இரக்கமாயிரும்
முதல்: ஆண்டவர் அவரை தம் வீட்டின் தலைவராக ஏற்படுத்தினார்.
எல்: அவரது உடைமைகளுக்கெல்லாம் அதிகாரியாக ஏற்படுத்தினார்.

செபிப்போமாக
இறைவா, சொல்லற்கரிய உமது பேரருளினால் நீதிமானாகியப் புனித யோசேப்பைக் உம் திருமகனின் அன்னையாம் கன்னி மரியாவுக்குக் கணவராகத் தேர்ந்தெடுக்க திருவுளமானீர். அவருடைய பிரமாணிக்கமுள்ள பாதுகாவலில்தான் மனித மீட்பின் ஊற்றாகிய கிறிஸ்துவை ஒப்படைத்தீர். அந்தப் புனிதரின் உதவியால் நாங்கள் தூய உள்ளத்தோடு அந்த மீட்புப் பணியை தொடர்ந்து செய்ய உமது அருட்கொடைகளை வழங்குமாறு எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.
எல்: ஆமென்.

(புனித யோசேப்பின் இம்மன்றாட்டுமாலை 1909ஆம் ஆண்டு திருத்தந்தை புனித பத்தாம் பயஸ் அவர்களால் அங்கீகரிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு அளிக்கப்பட்டது. இம்மன்றாட்டுமாலையுடன் சில சிறப்பு நிறைபேறு பலன்களும் அருளப்பட்டுள்ளது)


புனித யோசேப்பின் மிகவும் இரக்கமுள்ள செபம்

மிகவும் இரக்கமுள்ள புனித யோசேப்பே! கன்னி மரியாவின் மிகத்தூய்மையான துணைவரே, உமது உதவியை வேண்டி, உமது பரிந்துரையை நாடிவந்த எவரும், உம்மால் கைவிடப்பட்டதாக ஒரு போதும் சொல்லக் கேள்விப்பட்டதில்லையென்று நினைத்தருளும். உமது வல்லமையில் மிகுந்த நம்பிக்கை கொண்டு உமது மேலான பாதுகாப்பை வேண்டி, இறைஞ்சி மன்றாடுகிறேன். எங்கள் மீட்பரின் பாதுகாவலரே, என் தாழ்மையான மன்றாட்டைப் புறக்கணியாமல் உம் அளவற்ற இரக்கத்தால் கேட்டு அருள் புரிந்தருளும்.ஆமென்.

(ஒவ்வொரு நாளும் சொல்லும் போது 300 நாட்களுக்கான சிறப்பு நிறை பலன் கிடைக்கும் - திருத்தந்தை 9ஆம் பயஸ், 26.06.1863)

செபமாலை முடிந்த பிறகு மன்றாட்டு

ஓ  புனித யோசேப்பே, உமது தூய துணைவியாகிய மரியாவின் உதவியை வேண்டிய பின்னர்,  எங்களது துன்ப நெருக்கடியில்   உமது ஆதரவையும் நாங்கள் நம்பிக்கையுடன் வேண்டுகிறோம். கடவுளின் மாசற்ற  கன்னித்தாயாருடன்  உன்னத அன்பினால் ஒன்றிணைக்கப் பெற்றதோடு, குழந்தை இயேசுவை தந்தைக்குரிய அன்புடன் தழுவிக்கொண்டதன் வழியாக, இயேசுவின் இரத்தத்தினால் மீட்கப்பெற்று உரிமையாக்கப்பெற்றிருக்கும் எங்களது அவசர தேவைகளில், உமது ஆற்றலாலும் வலிமையாலும் எங்களுக்கு உதவிடுமாறு தாழ்மையுடன் இறைஞ்சி  மன்றாடுகிறோம். 
திருக்குடும்பத்தின்  மிகவும் உன்னதமான  பாதுகாவலரே, இயேசுவால் தேர்ந்து கொள்ளப்பெற்ற பிள்ளைகளைப் பாதுகாத்தருளும். ஓ மிகவும் அன்பான தந்தையே! எங்களைத் தொற்றியிருக்கும் குறைபாடுகளையும் ஊழல் சூழல்களையும் நீக்கியருளும். 
ஓ எங்களின் மிகவும் வலிமையான காவலரே!  இருளின் அதிகாரத்துடன் போராடும் எங்களுக்கு நீர் விண்ணிலிருந்து  உதவியருளும். ஒருமுறை குழந்தை இயேசுவை பேராபத்திலிருந்து மீட்டது போல, கடவுளின் புனித திருஅவையை அதன் எதிரியின் வலைகளிலிருந்தும் எல்லா துன்பங்களிலிருந்தும் பாதுகாத்தருளும். 
உமது நிலையான பாதுகாப்பால் எங்கள் ஒவ்வொருவருக்கும் நீர் கேடயமாக இருப்பதோடு, உமது முன்மாதிரியாலும் ஆதரவாலும் நாங்கள் பக்தியோடு வாழ்ந்து, தூய நிலையில் மரித்து, விண்ணகத்தில் நிலையான மகிழ்ச்சியை பெற்றுக்கொள்வோமாக. ஆமென்.

(மேலே உள்ள  'ஓ புனித யோசேப்பே என்ற செபம் திருத்தந்தை 13ஆம் சிங்கராயரால் இயற்றப்பட்டு ஒவ்வொரு முறையும் செபமாலை முடிந்த பிறகு அதை செபிக்குமாறு அவர் 1889ஆம் ஆண்டில் வெளியிட்ட தன்னுடைய 'எவ்வாறிருப்பினும்...' என்ற சுற்றுமடல் வழியாக கட்டiளாயாக கொடுக்கப்பட்டது.)