முன்னுரை
அப: அன்பார்ந்த சகோதரர்களே, எல்லாம் வல்ல இறைவனாகிய ஆண்டவர், இக்குழந்தை(களு)க்கு நீரினாலும், தூய ஆவியாராலும் புதுவாழ்வு அளித்தருளுமாறு செபிப்போமாக.
நீரின் மீது ஆசியுரை
(பாஸ்கு காலத்திற்குப் புறம்பே)
அப: இறைவா, கண்ணுக்கு புலப்படாத வல்லமையால் அருளடையாளங்கள் பயனளிக்க வியத்தகு முறையில் முறையில் செயலாற்றுகின்றீர். படைப்புப் பொருளாகிய தண்ணீர் திருமுழுக்கு அருளைக் குறித்துக்காட்டுவதற்குப் பலவகையில் அதைத் தயாரித்தீர். இறைவா, உலகின் ஆரம்பத்திலேயே தண்ணீர் ஆசீரளிக்கும் வல்லமை பெறுவதற்காக உம்முடைய ஆவியானவர் அப்போதே நீரின்மீது அசைவாடிக் கொண்டிருந்தார்.
இறைவா, தண்ணீரையே புதுப்பிறப்பின் அடையாளமாக வைத்து, அந்த ஒரே பொருளின் மறைவான செயலினாலே, பாவத்திற்கு முடிவும், பேறுபலன்களுக்குத் தொடக்கமும் உண்டாகச் செய்தீர்.
இறைவா, பாரவோனின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற்ற ஆபிரகாமின் மக்களை, செங்கடலைக் கால் நனையாமல் கடக்கச் செய்து, திருமுழுக்குப் பெற்ற மக்களுக்கு முன் அடையாளமாயிருக்கச் செய்தருளினீர்.
இறைவா, உம் திருமகன் யோர்தான் நீரிலே திருமுழுக்கு யோவான் கையால் திருமுழுக்குப் பெற்று, தூய ஆவியாரால் அருள்பொழிவு செய்யப்பட்டார். சிலுவையிலே தொங்கிய பொழுது, இரத்தத்தோடு நீரையும் தமது விலாவிலிருந்து வழிந்தோடச் செய்தார். தாம் உயிர்த்தபின், 'நீங்கள் போய் எல்லா இனத்தாரையும் சீடராக்குங்கள். தந்தை மகன் தூய ஆவியாரின் பெயரால் அவர்களுக்குத் திருமுழுக்குக் கொடுங்கள்' என்று சீடர்களுக்குக் கட்டளையிட்டார். உமது திரு அவையைக் கண்ணோக்கி, அதற்கு திருமுழுக்கு ஊற்றைத் திறந்ததாலும், உமது சாயலாகப் படைக்கப்பட்ட மனிதன் திருமுழுக்கு எனும் அருளடையாளத்தினால் பழைய அழுக்கெல்லாம் கழுவப்பெற்று, நீரினாலும், தூய ஆவியாராலும் புதுப்பிறப்பு அடைந்து எழுமாறு, இந்த நீர் உமது ஒரே மகனின் அருளைத் தூய ஆவியாரினின்று பெற்றுக்கொள்வதாக.
(குரு வலது கரத்தால் நீரைத் தொடுகிறார்)
ஆண்டவரே, இந்த (களையத்திலுள்ள) தொட்டியிலுள்ள நீர் முழுவதிலும் தூய ஆவியாரின் வல்லமை உம் திருமகன் வழியாய் இறங்குவதாக. இவ்வாறு, திருமுழுக்கினால் கிறிஸ்துவோடு இறப்புக்குள் புதைக்கப்பட்ட அனைவரும் அவரோடு வாழ்வுக்கு உயிர்த்தெழ வேண்டுமென்று எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.
எல்: ஆமென்.
பாஸ்கு காலத்தில்
(மந்திரிக்கப்பட்ட நீர் இருப்பினும்)
அப: இரக்கம் மிகுந்த தந்தையே, உம் மக்களுக்குரிய புதுவாழ்வு திருமுழுக்குத் தொட்டியிலிருந்து எம்மில் பொங்கி வழியச் செய்தீர்.
எல்: இறைவா, உம்மை வாழ்த்துகின்றோம்.
அப: நீரினாலும், தூய ஆவியாராலும் திருமுழுக்குப் பெற்றவர் அனைவரும் உம் திருமகன் இயேசு கிறிஸ்துவில் ஒரே மக்களாக ஒன்று சேர்த்தருளுவீர்.
எல்: இறைவா, உம்மை வாழ்த்துகின்றோம்.
அப: நாங்கள் உமது அமைதியைப் பெற்று மகிழும்படி எங்கள் இதயங்களில் உமது அன்பின் ஆவியாரைப் பொழிந்து எங்களை மீட்கின்றீர்.
எல்: இறைவா, உம்மை வாழ்த்துகின்றோம்.
அப: எல்லா இனத்தவர்க்கும் கிறிஸ்துவின் நற்செய்தியை மகிழ்ச்சியுடன் எடுத்துரைக்க திருமுழுக்குப் பெற்றவர்களைத் தேர்ந்தெடுக்கின்றீர்.
எல்: இறைவா, உம்மை வாழ்த்துகின்றோம்.
அப: முடிவில்லா வாழ்வுபெற உம் அடியார்கள் இவர்களைத் திரு அவையின் நம்பிக்கையால் புதுப்பிறப்பைத் தரும் முழுக்கிற்கு அழைத்துள்ளீர்!
புனிதப்படுத்தப்பட்ட இந்த நீரின் மறைபொருளினால் இவர்களை ஆன்ம மறுபிறப்பிற்குக் கொண்டு சேர்த்தருள (அல்லது நீர் புனிதப்படுத்தப்படவேண்டுமாயின்: இவர்கள் திருமுழுக்கு அளிக்கப் பயன்படும் இந்த நீரை இப்பொழுது ஆசீர்வதித்தருளும்) எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.
எல்: ஆமென்.
அப: அன்பார்ந்த பெற்றோரே, ஞானத்தாய் தந்தையரே, திருமுழுக்கு எனும் அருளடையாளம் வழியாக நீங்கள் அர்ப்பணித்த இக்குழந்தை(கள்) அன்புள்ள இறைவனிடமிருந்து நீரினாலும், தூய ஆவியாராலும் புதுவாழ்வு பெறப்போகின்றார்(கள்). இவரி(ர்களி)ல் இந்த இறைவாழ்வு பாவநோயிலிருந்து பாதுகாக்கப் பெற்று நாளுக்கு நாள் வளர்ச்சியடையுமாறு இவரை(ர்களை) நீங்கள் நம்பிக்கையில் வளர்க்க முயல வேண்டும்.
ஆகவே. உங்கள் நம்பிக்கையினால் தூண்டப்பெற்று, இந்தப்பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டுமானால் உங்கள் திருமுழுக்கை நினைவில்கொண்டு பாவத்தை விட்டு விடுங்கள். இயேசு கிறிஸ்துவின் மீதுள்ள நம்பிக்கையை அறிக்கையிடுங்கள். அதுவே திருஅவையின் நம்பிக்கை. அதிலேதான் இக்குழந்தை(கள்) திருமுழுக்குப் பெறுகின்றனர்.
சாத்தானை விட்டுவிடுதல்
அப: இறைமக்களுக்குரிய விடுதலையுடன் வாழ, நீங்கள் பாவத்தை விட்டுவிடுகிறீர்களா?
எல்: விட்டுவிடுகிறேன்.
அப: பாவம் உங்கள் மீது ஆட்சி செலுத்தாமலிருக்க நீங்கள் பாவத்தின் மாய இன்பங்களை விட்டுவிடுகிறீர்களா?
எல்: விட்டுவிடுகிறேன்
அப: பாவத்திற்குக் காரணனும், தலைவனுமாகிய சாத்தானை விட்டுவிடுகிறீர்களா?
எல்: விட்டுவிடுகிறேன்
நம்பிக்கை அறிக்கை
அப: விண்ணகத்தையும் மண்ணகத்தையும் படைத்த எல்லாம் வல்ல தந்தையாகிய இறைவனை நம்புகிறீர்களா?
எல்: நம்புகிறேன்
அப: அவருடைய ஒரே மகனும், கன்னிமரியிடமிருந்து பிறந்து, பாடுபட்டு, அடக்கம் செய்யப்பட்டு, இறந்தோரில் நின்று உயிர்த்தெழுந்து, தந்தையின் வலது பக்கம் விற்றிருப்பவருமான நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை நம்புகிறீர்களா?
எல்: நம்புகிறேன்
அப: தூய ஆவியாரையும், புனித கத்தோலிக்கத் திருஅவையையும், புனிதர்களின் உறவு ஒன்றிப்பையும், பாவ மன்னிப்பையும் உடலின் உயிர்ப்பையும், நிலை வாழ்வையும் நம்புகிறீர்களா?
எல்: நம்புகிறேன்
அப: இதுவே நமது நம்பிக்கை. இதுவே திருஅவையின் நம்பிக்கை. இதை நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவில் அறிக்கையிடுவதில் பெருமை கொள்கிறோம்.
எல் : ஆமென்.
திருமுழுக்கு அளித்தல்
அப: ஆகவே உங்களோடு சேர்ந்து இப்பொழுது நாமெல்லாரும் அறிக்கையிட்ட திருஅவையின் நம்பிக்கையில் (பெயர் அல்லது இவர்கள்) திருமுழுக்குப் பெறுவதை நீங்கள் விரும்புகிறீர்களா?
பெற். ஞாபெ.: விரும்புகிறேன்
அப: (மும்முறை தண்ணீர் ஊற்றி) தந்தை, மகன், தூய ஆவியாரின் பெயரால் நான் உன்னைக் கழுவுகிறேன்.
திருத்தைலம் பூசுதல்
அப: நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் தந்தையாகிய எல்லாம் வல்ல இறைவன் உம்மை(ங்களை)ப் பாவத்திலிருந்து விடுவித்து, நீரினாலும், தூய ஆவியாராலும் உம(ங்களு)க்கு மறுபிறப்பு அளித்துள்ளார். இப்பொழுது அதே கிறிஸ்து உம்(ங்கள்)மீது மீட்பின் எண்ணெய் பூசுகிறார். எனவே, நீர்(ங்கள்) இறைமக்களோடு இணைக்கப்பெற்று, அருள்பணியாளரும், ஆசிரியரும் அரசருமாகிய கிறிஸ்துவின் உறுப்புக்களாய் நிலைத்திருந்தது, நிலைவாழ்வு பெறுவீர்களாக.
(பிறகு அருள்பணியாளர் கிறிஸ்மா (Chrisma) எனும் புனித எண்ணெயை திருமுழுக்குப் பெற்ற ஒவ்வொருவரின் உச்சந்தலையில் அமைதியாகப் பூசுகிறார்.)
வெண்ணிற ஆடை அணிவித்தல்
அப: (திருமுழுக்கு வெண்ணிற ஆடையை ஒவ்வொருவருக்கும் கொடுத்து) நீர்(ங்கள்) புதுப்படைப்பாக மாறி, கிறிஸ்துவை அணிந்திருக்கிறீர்(கள்). இந்த வெண்ணிற ஆடை உம(ங்கள)து மேன்மையின் அடையாளமாய் இருப்பதாக. உம(ங்கள்)து உறவினரின் சொல்லாலும், முன்மாதிரிகையாலும் நீர்(ங்கள்) உதவப்பெற்று, இதை கறைபடாமல் நிலைவாழ்வுக்குக் கொண்டுபோய்ச் சேர்ப்பீர்h(களா)க.
எல் : ஆமென்.
எரியும் மெழுகுதிரி கொடுத்தல்
அப: (பாஸ்கா திரியை கையில் தொட்டவாறு) கிறிஸ்துவின் ஒளியைப் பெற்றுக்கொள்ளுங்கள்.
(குழந்தை(களி)யின் தந்தை(யர்) பாஸ்கா திரியிலிருந்து (தத்) தம் குழந்தையின் சார்பில் திரியைப் பற்ற வைக்கின்றார்(னர்))
அப: பெற்றோர்களே, ஞானத்தாய் தந்தையரே உங்கள் குழந்தை(களின்)யின் உள்ளத்தில் அணையாது காக்கும்பொருட்டு உங்களிடம் இந்த ஒளி ஒப்படைக்கப்படுகிறது. கிறிஸ்துவினால் ஒளிபெற்று இக்குழந்தை(கள்) ஒளியின் பிள்ளையாய் (மக்களாய்) என்றும் வாழ்வார்களாக. நம்பிக்கையில் இவர்(கள்) நிலைத்திருந்து ஆண்டவர் வரும்போது புனிதர் அனைவரோடும், விண்ணகத்தில் அவரை எதிர்கொண்டு செல்லத் தகுதிபெறுவாரா(ர்களா)க.
எப்பேத்தா (திறக்கப்படு)
அப: காது கேளாதோர் கேட்கவும், வாய் பேச இயலாதோர் பேசவும் ஆண்டவர் இயேசு செய்தருளினார், நீர்(ங்கள்) விரைவில் அவரது வார்த்தையை தந்தையாகிய இறைவனின் புகழும், மாட்சியும் விளங்கக் காதால் கேட்கவும், அந்நம்பிக்கையை நாவினால் அறிக்கையிடவும் அவரே செய்தருள்வாராக.
எல்: ஆமென்.
(திருப்பலியில் பெற்றோர், ஞானப்பெற்றோர் காணிக்கைப் பொருட்கள் எடுத்துச்சென்று அருள்பணியாளரிடம் அளிக்கலாம்)
இயேசு கற்றுத்தந்த இறைவேண்டல்
அப: அன்பார்ந்த சகோதரர்களே, திருமுழுக்கினால் மறுபிறப்பு அடைந்து இறைவனின் பிள்ளையா(மக்களா)கவே இருக்கும் இக்குழந்தை(கள்) உறுதிபூசுதலால் தூய ஆவியாரின் நிறைவைப் பெறுவார்(கள்). ஆண்டவரின் பீடத்தை அணுகி வந்து, அவரது திருப்பலி விருந்தில் பங்குகொள்வார்(கள்). திருஅவையில் இறைவனைத் தந்தையென அழைப்பார்(கள்). நாம் அனைவரும் பெற்றுக்கொண்ட இறைப் பிள்ளைகளுக்குரிய உணர்வுடன், ஆண்டவர் நமக்குக் கற்றுத் தந்து போல் இக்குழந்தை(களின்)யின் பெயரால் இப்போது ஒன்றாய்ச் சேர்ந்து செபிப்போம்.
எல்: விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே, உமது பெயர் தூயது எனப் போற்றப்பெறுக! உமது ஆட்சி வருக! உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல மண்ணுலகிலும் நிறைவேறுக! எங்கள் அன்றாட உணவை இன்று எங்களுக்குத் தாரும். எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோரை நாங்கள் மன்னிப்பது போல எங்கள் குற்றங்களை மன்னியும். எங்களை சோதனைக்கு உட்படுத்தாதேயும். தீயோனிடமிருந்து எங்களை விடுவித்தருளும். ஆமென்.