மூன்று ஞானிகளின் வருகை
சாம்பல் புதனுக்குப் பின் வரும் வெள்ளி
ஏரோது அரசன் காலத்தில் யூதேயாவிலுள்ள பெத்லகேமில் இயேசு பிறந்தார். அப்போது கிழக்கிலிருந்து ஞானிகள் எருசலேமுக்கு வந்து, யூதர்களின் அரசராகப் பிறந்திருக்கிறவர் எங்கே? அவரது விண்மீன் எழக் கண்டோம். அவரை வணங்க வந்திருக்கிறோம் என்றார்கள். இதைக் கேட்டதும் ஏரோது அரசன் கலங்கினான். அவனோடு எருசலேம் முழுவதும் கலங்கிற்று. பின்பு ஏரோது யாருக்கும் தெரியாமல் ஞானிகளை அழைத்துக்கொண்டுபோய் விண்மீன் தோன்றிய காலத்தைப் பற்றி விசாரித்து உறுதி செய்து கொண்டான். மேலும் அவர்களிடம். நீங்கள் சென்று குழந்தையைக் குறித்துத் திட்டவட்டமாய்க் கேட்டு எனக்கு அறிவியுங்கள். அப்பொழுது நானும் சென்று அக்குழந்தையை வணங்குவேன் என்று கூறி அவர்களைப் பெத்லகேமுக்கு அனுப்பி வைத்தான். அரசன் சொன்னதைக் கேட்டு அவர்கள் புறப்பட்டுப் போனார்கள். இதோ! முன்பு எழுந்த விண்மீன் தோன்றிக் குழந்தை இருந்த இடத்திற்கு மேல் வந்து நிற்கும்வரை அவர்களுக்கு முன்னே சென்று கொண்டிருந்தது. அங்கே நின்ற விண்மீனைக் கண்டதும் அவர்கள் மட்டில்லாப் பெரு மகிழ்ச்சி அடைந்தார்கள். வீட்டிற்குள் அவர்கள் போய்க் குழந்தையை அதன் தாய் மரியா வைத்திருப்பதைக் கண்டார்கள்; நெடுஞ்சாண்கிடையாய் விழுந்து குழந்தையை வணங்கினார்கள்; தங்கள் பேழைகளைத் திறந்து பொன்னும் சாம்பிராணியும் வெள்ளைப் போளமும் காணிக்கையாகக் கொடுத்தார்கள். (மத் 2:1-3, 7-11)
சிந்தனை:
மூன்று ஞானியர்களின் அடையாளம் நாம் அனைவரும் இயேசுவை நோக்கியப் பயணத்தில் ஈடுபடவேண்டும் என்றும், நம்மிடம் உள்ளதை அவருக்கு எளிய காணிக்கையாக அளிக்க வேண்டும் என்றும் நினைவூட்டுகின்றது. அந்த மூன்று ஞானிகளும் பெத்லகேமுக்கு வரும் வழியில் என்னென்ன சவால்களைச் சந்தித்து இருப்பார்கள் என்று நாம் என்றாவது எண்ணிப்பார்த்ததுண்டா? பாலை வனப்பாதையில் பல நாட்கள் ஒட்டகத்தின் முதுகில் ஏறிப் பயணம் செய்தது மட்டுமல்ல மாறாக வழியில் ஏரோதைப் போன்ற ஆபத்தான ஆட்களையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது.
அம்மூன்று ஞானிகளைப் பற்றி மக்கள் என்ன நினைத்திருப்பார்கள் என்று சிந்தித்துப் பார்ப்போம். மக்கள் அவர்களை முட்டாள்கள் என்று நினைத்திருக்கக்கூடும். ஒரு விண்மீனைப் பின் தொடர்ந்து, அதன் முடிவில் தங்களுடைய விலைமதிப்பற்ற பரிசுகளை ஒரு சிறிய குழந்தையின் முன் தொழுவத்தில் வைப்பது போன்றவை பைத்தியக்காரத்தனமாகத் தோன்றியிருக்கலாம்.
ஆயினும் கூட மூன்று ஞானிகள் தங்கள் தேடலில் உறுதியாக இருந்தனர். அதே போல் நாமும் நமது தேடலில் உறுதியாக இருந்து இயேசுவுக்கு மாட்சி அளிக்க வேண்டும்.
நாம் நன்கு அறிந்திருப்பவர்களையும் அன்பு செய்பவர்களையும் விட இயேசுவை அதிகமாகத் தேடிக் கண்டடைவதன் மூலம் நம் வாழ்க்கைக்கு ஒரு புதிய திசையை அடையலாம். பிறர் பார்வையி; அது முட்டாள்தனமாகத் தோன்றினாலும் அம்மூன்று ஞானிகளைப் போல நம் தேடலைக் கைவிடவோ அதிலிருந்து பின் வாங்கவோ கூடாது. நம்மிடம் உள்ளதை இயேசுவின் பாதத்தில் வைத்துவிட்டு அவரைப் புகழ்ந்து போற்றுவோம். ஏனெனில் அதைக் காட்டிலும் வேறு எதுவும் முக்கியமானதல்ல.
செபம்:
ஓ இயேசுவே! ஒவ்வொரு நாளும் உமது அருகில் நெருங்கி வர உதவியருளும். ஞானிகள் உம்மைக் கண்டடையும் நோக்கில் விண்மீனில் தங்கள் பார்வையைப் பதிய வைத்தது போல நாங்களும் உம்மில் எங்கள் பார்வையைப் பதியச் செய்தருளும். ஆமென்.
