Tuesday, 4 March 2025

இயேசு மரம் 1 - வார்த்தை மனிதரானார்

வார்த்தை மனிதரானார்

சாம்பல் புதன்

விவிலிய வாசகம்:  யோவா 1: 1-14

சிந்தனை: 

    தொடக்கத்தில் வாக்கு இருந்தது. அவ்வாக்கு கடவுளோடு இருந்தது. அவ்வாக்கு கடவுளாயும் இருந்தது... வாக்கு மனிதரானார் நம்மிடையே குடிகொண்டார். (யோவா 1: 1-14)

மனித உடலேற்பு என்பது நம்முடைய நம்பிக்கையின் மையம். கடவுள் தாமே மனித வரலாற்றில் நுழைந்து, நமது இயல்பை ஏற்றுக்கொண்டு, நம்மிடையே வாழ்கிறார். இயேசு இறையன்பின் தூதுவர் மட்டுமல்ல, மாறாக அவர் அன்பே உருவானவர், அன்பின் வெளிப்பாடு அவர். அவர் வானத்திற்கும் பூமிக்கும் இடையிலான எல்லையற்ற இடைவெளியைக் குறைத்து, நமது இருள் நிறைந்த வாழ்வில் தெய்வீக ஒளியைக் கொண்டு வருகிறார்.

நாம் இந்த தவக்காலத்தில் பயணிக்கும்போது, இந்த மறைப்பொருளைப் பற்றி சிந்திக்க அழைக்கப்படுகிறோம். கடவுள் நம்மை விட்டு விலகி இருக்க விரும்பவில்லை. மாறாக, நம்மோடு இணைந்திருக்கவே இந்நிலையைத் தேர்ந்தெடுத்தார். படைப்பபை உருவாக்கிய வார்த்தையானவர் நம்மை மீட்க நம்மில் ஒருவராக ஆனார். இது ஒரு மாபெரும் வரம். இதற்கு நாம் எவ்வாறு பதிலளிக்கப் போகிறோம் என்பதற்காக இந்த தவக்காலம் நம்மை அழைக்கிறது. மனித உடலேற்ற இறைவார்த்தையாகிய இயேசு நம்மில் குடிகொள்ள அனுமதிக்கிறோமா? அவருடைய பிரசன்னத்திற்கு நம் இதயங்களைத் திறந்து, அவருடைய உண்மை நம் எண்ணங்கள், வார்த்தைகள் மற்றும் செயல்களை வடிவமைக்க அனுமதிக்கிறோமா?


செபம்:

ஓ இயேசுவே! நீர் எதை மதிப்புள்ளதாகக் கருதுகிறீரோ அதையே நாங்களும் ஏற்றுக்கொண்டு வாழ எங்களுக்குக் கற்றுத்தாரும். ஆமென்.