Monday, 27 February 2023

இயேசு மரம் 7 - சீடர்களை அழைத்தல்

 இயேசு மரம் 7

சீடர்களை அழைத்தல்

தவக்காலத்தின் முதல் வார செவ்வாய்


 

விவிலிய வாசகம்: 

இயேசு கலிலேயக் கடலோரமாய்ச் சென்றபோது சீமோனையும் அவர் சகோதரரான அந்திரேயாவையும் கண்டார். மீனவர்களான அவர்கள் கடலில் வலை வீசிக்கொண்டிருந்தார்கள். இயேசு அவர்களைப் பார்த்து, 'என் பின்னே வாருங்கள்; நான் உங்களை மனிதரைப் பிடிப்பவர் ஆக்குவேன்' என்றார். உடனே அவர்கள் வலைகளை விட்டுவிட்டு அவரைப் பின்பற்றினார்கள். பின்னர், சற்று அப்பால் சென்றபோது செபதேயுவின் மகன் யாக்கோபையும் அவர் சகோதரரான யோவானையும் இயேசு கண்டார். அவர்கள் படகில் வலைகளைப் பழுது பார்த்துக் கொண்டிருந்தார்கள். உடனே இயேசு அவர்களையும் அழைத்தார். அவர்களும் தங்கள் தந்தை செபதேயுவைக் கூலியாள்களோடு படகில் விட்டுவிட்டு அவர் பின் சென்றார்கள். (மாற் 1: 16-20)

இயேசு அங்கிருந்து சென்ற போது மத்தேயு என்பவர் சுங்கச்சாவடியில் அமர்ந்திருந்ததைக் கண்டார்; அவரிடம், 'என்னைப் பின்பற்றி வா' என்றார். அவரும் எழுந்து இயேசுவைப் பின்பற்றிச் சென்றார். (மத் 9:9)

இயேசு கலிலேயாவுக்குச் செல்ல விரும்பினார். அப்போது அவர் பிலிப்பைக் கண்டு, 'என்னைப் பின்தொடர்ந்து வா' எனக் கூறினார். (யோவா 1:43)

சிந்தனை: 

    இயேசு கரையோரத்திலும் மரத்தடியிலும் இருந்து அழைப்பது போன்ற அடையாளம் நம் வழியாக இறைவன் தனது பணியைச் செய்ய ஆவல் கொண்டுள்ளார் என்பதை நினைவூட்டுகிறது.

    இயேசு பல்வேறு நிலையில் இருப்போரை பல்வேறு தொழில் செய்வோரை பலவிதமாக அழைப்பதை நாம் பார்க்கிறோம். பேதுரு, அந்திரேயா ஆகியோரை கடலில் மீன் பிடிக்கும் போதும், யாக்கோபு, யோவான் ஆகியோரை தங்கள் வலைகளை பழுது பார்த்துக் கொண்டிருக்கும் போதும், மத்தேயுவை சுங்கச்சாவடியில் இருந்தும், நத்தானியேலை அத்திமரத்தின் அடியில் அமர்ந்து இறைத்தியானம் செய்யும் போதும் என பலவாறு அழைக்கிறார்.

    இயேசுவுக்கு சீடர்களின் உதவி தேவையா என்ன? நிச்சயம் இல்லை. இயேசு முழு மனிதன் மட்டுமல்ல முழு கடவுளும் ஆவார் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அவரால் எதையும் செய்து முடிக்க முடியும். இருப்பினும் அவர் சீடர்களைத் தேர்ந்தெடுத்து அவர்கள் வழியாக செயலாற்றுகிறார். ஏன்? அவர் நம் வழியாகவும் செயலாற்றுகிறார்.

    எவ்வாறு கடவுள் நம் வழியாக செயலாற்ற இயலும்? நாம் சிறியவர்கள் குறையுள்ளவர்கள் அல்லவா? அவ்வாறிருப்பின் சீடர்களும் குறைபாடு உடையவர்கள்தான்.

    பேதுரு ஒரு முன்கோபக்காரர் - இயேசுவை மறுதலித்தவர், அந்திரேயாவும் யாக்கோபும் அவரை விட்டுவிட்டு ஓடிச்சென்றனர், யூதாசு இஸ்காரியோத்து அவரைக் காட்டிக்கொடுத்தான், தோமா அவரை சந்தேகப்பட்டார். இவர்கள் அனைவரும் பல அற்புதங்களை கண்டிருந்தும் அவரை முழுமையாக நம்பவில்லை.

    இத்தகைய குறைபாடுகளுக்கு மத்தியிலும் இயேசு பொறுமையோடு எவ்வாறு வாழ வேண்டும் என்றும், எவ்வாறு சிந்திக்க வேண்டும் என்றும், எவ்வாறு அவரை அன்பு செய்ய வேண்டும் என்றும் கற்றுக்கொடுத்தார். இதன் வழியாகவே அவர் உலகை மீட்க வந்தார்.

செபம்:

ஓ இயேசுவே! நீர் எம் வழியாக செயலாற்றுகிறீர் என்ற நம்பிக்யோடு உமது அழைப்பிற்கு செவிமடுக்கவும், நீர் காட்டும் வழியில் நடக்கவும் உதவியருளும். ஆமென்.


Sunday, 26 February 2023

இயேசு மரம் 6 - இயேசு சோதிக்கப்படுதல்

இயேசு மரம் 6

இயேசு சோதிக்கப்படுதல்

தவக்காலத்தின் முதல் வார திங்கள்

 


விவிலிய வாசகம்: 

இயேசு அலகையினால் சோதிக்கப்படுவதற்காகப் பாலை நிலத்திற்குத் தூய ஆவியால் அழைத்துச் செல்லப்பட்டார். அவர் நாற்பது நாள் இரவும் பகலும் நோன்பிருந்தார். அதன் பின் பசியுற்றார். சோதிக்கிறவன் அவரை அணுகி, 'நீர் இறைமகன் என்றால் இந்தக் கற்கள் அப்பமாகும்படிக் கட்டளையிடும்' என்றான். அவர் மறுமொழியாக் ''மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல் மாறாக, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் வாழ்வர்' என மறைநூலில் எழுதியுள்ளதே' என்றார். பின்னர் அலகை அவரை எருசலேம் திருநகரத்திற்குக் கூட்டிச் சென்றது. கோவிலின் உயர்ந்த பகுதியில் அவரை நிறுத்தி, ';நீர் இறைமகன் என்றால் கீழே குதியும்; 'கடவுள் தம் தூதருக்கு உம்மைக் குறித்துக் கட்டளையிடுவார். உமது கால் கல்லில் மோதாதபடி அவர்கள் தங்கள் கைகளில் உம்மைத் தாங்கிக் கொள்வார்கள்' என்று மறைநூலில் எழுதியுள்ளது' என்று அலகை அவரிடம் சொன்னது. இயேசு அதனிடம்: ''உன் கடவுளாகிய ஆண்டவரைச் சோதிக்கவேண்டாம்' எனவும் எழுதியுள்ளதே' என்று சொன்னார். மறுபடியும் அலகை அவரை மிக உயர்ந்த ஒரு மலைக்குக் கூட்டிச் சென்று உலக அரசுகள் அனைத்தையும், அவற்றின் மேன்மையையும் அவருக்குக் காட்டி, அவரிடம், 'நீர் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து என்னை வணங்கினால், இவை அனைத்தையும் உமக்குத் தருவேன்' என்றது. அப்பொழுது இயேசு அதனைப் பார்த்து, 'அகன்று போ, சாத்தானே,'உன் கடவுளாகிய ஆண்டவரை வணங்கி, அவர் ஒருவருக்கே பணி செய்' என்றும் மறைநூலில் எழுதியுள்ளது' என்றார். பின்னர் அலகை அவரை விட்டு அகன்றது. உடனே வானதூதர் வந்து அவருக்குப் பணிவிடை செய்தனர். (மத் 4:1-11)

சிந்தனை: 

பாலை வனத்தில் சாத்தான் இருப்பது போன்ற அடையாளமானது பிசாசு இருப்பது உண்மை என்றும் அது நம்மை இறைநம்பிக்கையை இழக்கச் செய்யும் என்றும் நினைவூட்டுகிறது. 

திருமுழுக்கு பெற்ற உடனேயே இயேசு தூய ஆவியாரால் பாலைவனத்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறார். அங்கு அவர் சாத்தானால் சோதிக்கப்படுகிறார். பலர் சாத்தானைப் பற்றி பேச விரும்புவதில்லை. சாத்தான் என்பவன் இல்லை உன்று பலர் எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் சாத்தான் என்பவன் இருக்கிறான். அவன் இயேசுவையும் சோதித்தான் என்பது தெளிவாகத் தெரிகிறது. 

சாத்தான் இயேசுவை உணவின் மூலமும், தன்னுடைய மகிமையை வெளிப்படுத்தும்படி தற்பெருமை பாராட்டும் தன்மை மூலமும் இறுதியில் அவருடைய வல்லமையைக் குறித்தும் சோதிக்கிறான்.

ஆனால் இச்சோதனைகள் அனைத்திற்கும் இயேசு திருவிவிலியப் பகுதிகளை மேற்கோள் காட்டி பதிலளிக்கிறார். இவ்விடத்தில் இயேசு தன்னுடைய அறிவையோ அல்லது மனித பலத்தையோ பயன்படுத்தாமல் இறைவார்த்தைகளைப் பயன்படுத்தி சாத்தானை வெற்றிக் கொள்கிறார். அதன் முடிவில் சாத்தான் அவரை விட்டு அகன்று போனது.

இதன் மூலம் சாத்தானையும் அவனுடைய எல்லா சோதனைகளைக் காட்டிலும் கடவுள் வலிமையானவர் என்பதை இயேசு எடுத்தியம்புகிறார். மேலும் கடவுள் மீது கொண்டுள்ள அளவில்லா அன்பின் பொருட்டு நமக்கு ஏற்படும் பசி, தாழ்த்தப்படுதல், பலமின்மை போன்றவை நன்மைக்கே என்பதையும் இதிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.

செபம்:

ஓ இயேசுவே! சோதனைகள் வரும்போது கடவுள்மீதுள்ள நம்பிக்கையை அதிகரிக்கச் செய்தருளும். சாத்தானின் தீவினைகளிலிருந்தும் கண்ணிகளிலிருந்து என்னைக் காத்தருளும். ஆமென்.

Saturday, 25 February 2023

இயேசு மரம் 5 - இயேசுவின் திருமுழுக்கு

   இயேசு மரம் 5

இயேசுவின் திருமுழுக்கு

தவக்காலத்தின் முதல் ஞாயிறு

 


விவிலிய வாசகம்: 

அக்காலத்தில் இயேசு கலிலேயாவிலுள்ள நாசரேத்திலிருந்து வந்து யோர்தான் ஆற்றில் யோவானிடம் திருமுழுக்குப் பெற்றார். அவர் ஆற்றிலிருந்து கரையேறிய உடனே வானம் பிளவுபடுவதையும் தூய ஆவி புறாவைப் போல் தம்மீது இறங்கிவருவதையும் கண்டார். அப்பொழுது, 'என் அன்பார்ந்த மகன் நீயே, உன்பொருட்டு நான் பூரிப்படைகின்றேன்' என்று வானத்திலிருந்து ஒரு குரல் ஒலித்தது. உடனே தூய ஆவியால் அவர் பாலைநிலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார். (மாற் 1:9-12)

சிந்தனை: 

    நீரின்மீது புறா இருப்பது போன்ற அடையாளமானது நாம் கடவுளின் பிள்ளைகள் என்பதையும் மனம் மாறி அவரை நாட வேண்டும் என்கிற அவரது ஏக்கத்தையும் நினைவூட்டுகிறது.

இயேசுவின் உறவினரான திருமுழுக்கு யோவான் ஒரு வித்தியசமான மனிதர். ஒட்டக முடியால் ஆன ஆடையயை அணிந்து கொண்டு, வெட்டுக் கிளியையும் காட்டுத் தேனையும் தன் உணவாகக் கொண்டு, பல மணி நேரம் பாவத்தைப் பற்றியும் அதிலிருந்து மனம் மாற வேண்டும் என்பது பற்றியும் பேசி வந்தார்.

மனமாற்றம் என்றால் என்ன? நாம் பாவம் செய்துவிட்டோம், அதனால் இறைஉறவுக்கு கேடு விளைவித்துவிட்டோம் என்று அறியும்போது ஏற்படுவதே மனமாற்றம். அப்போது நமது மனங்களையும் இதயங்களையும் இறைவன் மீது செலுத்தி அவர் தரும் மன்னிப்பை ஏற்று இனி பாவம் செய்யாமல் இறைவனை இன்னும் அதிகமாக அன்பு செய்ய வேண்டும். 

இவற்றை இயேசு தன் பணி வாழ்வில் நுழைந்த தருணத்தில் திருமுழுக்கு யோவான் கற்பித்து வந்தார். யோவான் இயேசு இறைமகன் என்றும், அவர் பாவமில்லாதவர் என்றும், தன்னிடம் திருமுழுக்குப் பெற வேண்டிய அவசியம் இல்லாதவர் என்றும் அறிந்திருந்தார். இருப்பினும் இயேசுவின் சொற்களுக்கு கீழ்ப்படிந்து அவருக்குத் திருமுழுக்குக் கொடுத்தார். 

அப்போது வானம் திறந்தது. இறைஆவியார் புறா வடிவில் வர 'என் அன்பார்ந்த மகன் இவரே. இவர் பொருட்டு நான் பெருமகிழ்வடைகிறேன்' என்னும் விண்ணகத் தந்தையின் குரல் அசரீரியாய் ஒலித்தது. நாமும் மனம் மாறி இறைத்திருவுளத்தை நிறைவேற்றும் போது நம்மிடமும் இறைவன் இதே வார்த்தைகளைக் கூறுவார்.

செபம்:

ஓ இயேசுவே! என் பாவத்தை நான் இனங்கண்டு மனம்மாற கற்பியும். இதனால் உமது இரக்கத்திற்கு உளம் திறக்கவும், உமது அன்புப் பிள்ளைகளாய் வாழவும் அருள்புரியும். ஆமென்.