Tuesday, 4 March 2025

இயேசு மரம் - சாம்பல் புதன்

சாம்பல் புதன்

 விவிலிய வாசகம்: மத் 6: 1-6

சிந்தனை: 

நாம் பெற்றுக்கொண்ட அழைப்பிற்கு ஏற்ப எவ்வாறு வாழ வேண்டும் என்பதை இயேசுவை இவ்வுலகிற்கு மனிதனாகப் பிறந்து வாழ்ந்து காட்டினார் என்கிற மறையுண்மையை இந்த சாம்பல் நமக்கு நினைவூட்டுகிறது. அவருடைய ஒவ்வொரு சொல்லும் ஒவ்வொரு செயலும் நாம் அவரைப் போன்று இருப்பதற்கும் அவரைப் பின்தொடர்வதற்குமான அழைப்பாகும்.

நாம் தவக்காலத்தின் தூண்களான இறைவேண்டல், நோன்பு மற்றும் ஏழைகளுக்கு உதவுதல் போன்றவைகளை பற்றி இயேசு தன் சீடர்களுக்கு அறிவுறுத்துகிறார். அவற்றைச் செயல்படுத்துதல் மட்டும் போதாது மாறாக அவற்றை எதற்காக செய்கிறோம்? என்ன மனநிலையோடு செய்கிறோம் என்பவையே முக்கியமானதாகும். 

நாம் தேவையில் இருக்கும் ஏழைகளுக்கு உதவும்போது அவர்கள் மீது உண்மையான அன்பு கொண்டு உதவுகிறோமா? அல்லது தற்பெருமை கொண்டு பிறர் நம்மை நல்லவர்கள், தாராள குணமுடையவர்கள் என்று பாராட்ட வேண்டும் என்பதற்காகச் செய்கிறோமா?

நாம் இறைவேண்டல் செய்யும் போது இறைவனிடத்தில் உண்மையான அன்பினாலும் அவரோடு இருக்க வேண்டும் என்கிற ஆவலாலும் இறைவேண்டல் செய்கிறோமா? அல்லது நாம் இறைவேண்டல் செய்வதைப் பிறர் கண்டு வியப்படைய வேண்டும் என்பதற்காகச் செய்கிறோமா?

இத்தவக்காலத்தில் உலகப் பொருள்கள் மீதுள்ள ஆசையை விடுத்து, இறைவன் நம் வாழ்க்கைக்கு நல்வழியைக் காட்டுவார் என்கிற உண்மையான எதிர்நோக்கு கொண்டு நோன்பிருக்கிறோமா? அல்லது நமது குடும்பத்தில் உள்ளோரும் நண்பர்களும் நாம் நோன்பிருப்பதைக் கண்டு நம்மை மெச்சுகிறார்கள் என்பதற்காக நோன்பிருக்கிறோமா?

செபம்:

ஓ இயேசுவே! உம்மை முன்மாதிரியாகக் கொண்டு எங்கள் வாழ்வை அமைத்துக் கொள்ள எங்களுக்குக் கற்றுத்தாரும். உலகோரின் கருத்துக்கள் முக்கியமானதல்ல என்பதை எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ள உதவியருளும். உம்மை மட்டுமே நாங்கள் மகிழ்விக்க முயலுவோமாக. ஆமென்.