Monday, 31 August 2020

செப்டம்பர் மாத புனிதர்கள்

செப்டம்பர் மாத புனிதர்கள் (Click the Name)

✠ புனிதர் கைல்ஸ் ✠

(St. Giles)



மடாதிபதி:

(Abbot)


பிறப்பு: கி.பி. 650

ஏதென்ஸ், அச்செயா, கிழக்கு ரோமப் பேரரசு

(Athens, Achaea, Eastern Roman Empire)


இறப்பு: செப்டம்பர் 1, 710

செப்டிமேனியா, விஸிகோத் அரசு, (தென் ஃபிரான்ஸ்)

(Septimania, Kingdom of the Visigoths (Languedoc, Southern France)


ஏற்கும் சமயம்:

ரோமன் கத்தோலிக்க திருச்சபை

(Roman Catholic Church)

கிழக்கு மரபுவழி திருச்சபை

(Eastern Orthodox Church)

ஆங்கிலிக்கன் சமூகம்

(Anglican Communion)


முக்கிய திருத்தலங்கள்:

புனிதர் கைல்ஸ் துறவு மடம், ஃபிரான்ஸ்

புனிதர் கைல்ஸ் தேவாலயம், எடின்பர்க், ஸ்காட்லாந்து

(Abbey of Saint-Gilles (Saint-Gilles, France) 

St. Giles' Cathedral (Edinburgh, Scotland)


பாதுகாவல்: 

பிச்சைக்காரர்கள்; கொல்லர்கள்; மார்பக புற்றுநோய்; தாய்ப்பால் ஊட்டுதல்; புற்றுநோயாளிகள்; ஊனமுற்றோர்; எடின்பர்க் (ஸ்காட்லாந்து); வலிப்பு; காடுகள்; துறவிகள்; குதிரைகள்; தொழு நோயாளிகள்; மன நோய்; தீயவர்கள்; ஏழை மக்கள்; ஆட்டுக்கடா; தூண்டுகோல் தயாரிப்போர்; மலட்டுத்தன்மை.


நினைவுத் திருநாள் : செப்டம்பர் 1


புனிதர் கைல்ஸ், ஏதேன்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒரு கிரேக்க துறவியும் கிறிஸ்தவ புனிதரும் ஆவார். இவரது சரிதம், “புரோவென்ஸ்” (Provence) மற்றும் “செப்டிமீனியா” (Septimania) பிராந்தியங்களை மையமாக கொண்டதாகும். “தூய கைல்ஸ்-டு-கர்ட்” (Saint-Gilles-du-Gard) எனுமிடத்தில் இவர் நிறுவிய துறவு மடம், இவரது சமாதியாகவும் பிரபல திருயாத்திரை ஸ்தலமாகவும் விளங்குகின்றது. இவர், பதினான்கு தூய (Fourteen Holy Helpers) உதவியாளர்களில் ஒருவராவார்.


கைல்ஸ் ஆரம்பத்தில் இன்றைய தென் ஃபிரான்ஸ் நாட்டின் “செப்டிமானியாவில்” (Septimania) “கர்ட்” நதி (River Gard) மற்றும் “ரோன்” (Rhône) நதிகளின் முகத்துவாரத்தில் வசித்தார். இவர், “ஏதென்ஸ்” (Athens) நாட்டின் அரசனான “தியோடோர்” (King Theodore) மற்றும் அரசி “பெலஜியா” (Queen Pelagia) ஆகியோரின் மகன் என்ற கூற்று முற்றிலும் ஜோடிக்கப்பட்ட கற்பனையே என்று ஆரம்பகால சரித்திர ஆசிரியர்கள் கூறுகின்றனர். இறுதியில், “நிமேஸ்” (Nîmes) பிராந்தியத்தினருகேயுள்ள அடர்ந்த காடுகளின் உட்பகுதிகளுக்கு பின்வாங்கிச் சென்ற இவர், பல ஆண்டு காலம் அங்கேயே தீவிர தனிமையில் வாழ்ந்தார். அவருக்கு துணையாக ஒரு மான் மட்டுமே எப்போதும் உடன் இருந்தது என்பர். பலவேளைகளில், தமது பால் தந்து இவரது பசியாற்றியதாகவும் கூறப்படுகிறது.


கைல்ஸ், புலால் உணவு உண்பதை முற்றிலும் தவிர்த்திருந்தார். இந்த பின்வாங்கல், அரசனின் வேட்டைக்காரர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. அவர் தஞ்சம் அடைந்த இடத்திலேயே அடைக்கலம் புகுந்தார். ஒருமுறை, இவரது மானை நோக்கி வீசப்பட்ட அம்பு ஒன்று, இவரை தைத்தது. இவர் காயமடைந்தார். இதனால், பின்னாளில் இவர் ஊனமுற்றோரின் பாதுகாவலர் ஆனார்.


வரலாற்று அமைப்பின் காரணமாக, “விசிகோத்” (Visigoth) அரசனான “வம்பா” (Wamba) ஒரு கபடமற்றவனாக சித்தரிக்கப்பட்டிருக்கிறார். அரசன் “வம்பா”, துறவி கைல்சை அவரது பணிவின் காரணமாக, மிகவும் மரியாதையாக நடத்தினார். அரசன் வம்பா, இவருக்காக பள்ளத்தாக்கில் “புனிதர் கைல்ஸ் துறவு மடம்” (Saint-Gilles-du-Gard) எனும் துறவு மடத்தை கட்டி கொடுத்தார். கைல்ஸ், துறவு மடத்தில் “பெனடிக்டைன்” (Benedictine rule) ஒழுங்கு விதிகளை அமல்படுத்தினார்.


கைல்ஸ், தமது துறவு மடத்திலேயே, புனிதத்தன்மை மற்றும் அற்புதங்களின் மிக உயர்ந்த புகழுடன் 8ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மரித்தார்.


இங்கிலாந்தில், பல பண்டைய தேவாலயங்கள் மற்றும் மருத்துவமனைகள் கைல்ஸுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளன. “புருஸ்ஸல்ஸ்” (Brussels) நகரின் ஒரு பகுதிக்கு அவரது பெயரிடப்பட்டுள்ளது. ஜெர்மனியில், 14 பரிசுத்த உதவியாளர்கள் என அழைக்கப்படுபவர்களுள் ஒருவராக கைல்ஸ் உட்படுத்தப்பட்டுள்ளார். நோயிலிருந்து மீள்வதற்காகவும், மரண வேளையில் வல்லமைக்காகவும் இந்த பரிசுத்த உதவியாளர்களை நோக்கி செபிக்கப்படுகிறார்கள். குறிப்பாக ஜேர்மனி, ஹங்கேரி மற்றும் சுவீடன் ஆகிய நாடுகளில் "பரிசுத்த உதவியாளர்களுக்கான" பக்தி தீவிரமாக உள்ளது. அத்தகைய பக்தியால் அவரது புகழ் பரவியது. கைல்ஸ் விரைவிலேயே ஏழைகள் மற்றும் ஊனமுற்றோரின் பாதுகாவலரானார்.


கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்:

தூய கைல்ஸின் நினைவுத் திருநாளைக் கொண்டாடும் நாம், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.


தூய கைல்ஸின் வாழ்க்கை வரலாற்றை வாசித்துப் பார்க்கின்றபோது மேலே சொல்லப்பட்ட தலைப்புதான் நம்முடைய நினைவுக்கு வருகின்றது. அவர் அரச குடும்பத்தில் பிறந்தாலும் எளிமையை நாடுபவராகவே இருந்தார். பிற்காலத்தில் பிலாவியஸ் மன்னன் தன்னுடைய அரண்மனைக்கு அழைத்தபோதும், “எனக்கு அந்த வாழ்க்கை வேண்டாம், நான் இப்படியே வாழ்ந்துகொள்கின்றேன்” என்பதுதான் அவருடைய பதிலாக இருந்தது. இவ்வாறு அவர் அவராகவே இருந்தார். யாரையும் போன்று அவர் வாழ விரும்பவில்லை. நாம் நாமாக வாழ ஆசைப்படுகின்றோமா? அல்லது மற்றவரைப் பார்த்து அவரைப் போன்ற வாழ முயற்சிக்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.


நாம் நாமாக, நம்முடைய தனித்தன்மையோடு இருப்பதே சிறப்பு. ஆகவே, தூய கைல்ஸின் நினைவு நாளைக் கொண்டாடும் நாம், அவர் எப்படி அவராக வாழ்ந்தாரோ, அதுபோன்று நாம் நாமாக வாழ முயற்சிப்போம். எப்போதும் இறைவழியில் நடப்போம். இறையருள் நிறைவாய் பெறுவோம்.

† ஆமென் †



✠ அருளாளர் ஜான் ஃபிரான்சிஸ் புர்ட் மற்றும் தோழர்கள்✠

(Blessed John Francis Burté and Companions)



மறைசாட்சிகள்:

(Martyres)


பிறப்பு: ----


இறப்பு: செப்டம்பர் 2, 1792 மற்றும் ஜனவரி 21, 1794


ஏற்கும் சமயம்:

ரோமன் கத்தோலிக்க திருச்சபை

(Roman Catholic Church)


நினைவுத் திருநாள்: செப்டம்பர் 2


இந்த குருக்கள் ஃபிரெஞ்ச் புரட்சியால் பாதிக்கப்பட்டவர்கள் ஆவர். மறைசாட்சியாக மரித்த இவர்கள் அனைவரும் வெவ்வேறு காலகட்டங்களில் மரித்திருந்தாலும், இவர்களது ஒரே சிந்தனை, இலட்சியம் மற்றும் கொள்கையால் திருச்சபையின் நினைவில் நிற்கின்றனர். 1791ம் ஆண்டு, பிரெஞ்ச் தேசத்தின் சிவில் அரசியலமைப்பானது, கிறிஸ்தவ குருக்களை கிறிஸ்தவ விசுவாசத்திற்கு மாறாக சத்திய பிரமாணம் எடுத்துக்கொள்ள வலியுறுத்தியது. ஆனால், இதனை மறுதலித்த குருக்கள் அனைவரும் தூக்கிலடப்பட்டனர்.


தமது பதினாறு வயதினிலேயே ஃபிரான்சிஸ்கன் சபையில் குருத்துவம் பெற்ற ஜான் ஃபிரான்சிஸ் புர்ட்டே, இளம் துறவியருக்கு இறையியல் கற்பித்தார். பின்னர், கைது செய்யப்பட்டு அங்குள்ள கார்மேல் சபையின் பள்ளியில் சிறை வைக்கப்படும்வரை, பாரிஸ் நகரின் பழம்பெரும் துறவியர் மடத்தின் பாதுகாவலராக இருந்தார்.


1739ம் ஆண்டு, ஸ்விட்சர்லாந்து (Switzerland) நாட்டில் பிறந்த “அபொல்லினரிஸ்” (Appolinaris of Posat) என்பவர் “கபுச்சின்” (Capuchins) சபையில் இணைந்தார். இவர், மறைபோதனை, ஒப்புரவு, அருட்பணியாளர்களுக்கு கற்பித்தல் ஆகியவற்றில் புகழ் பெற்று சிறந்து விளங்கினார். தூரகிழக்கு நாடுகளுக்கு மறைப்பணியாளராக செல்வதற்காக நியமிக்கப்பட்டிருந்த இவர், அதற்கான ஆயத்த பணிகளில் ஈடுபட்டிருந்தார். பாரிஸ் நகரில் “கீழ்த்திசை மொழிகளை” (Oriental languages) கற்றுக்கொண்டிருக்கையில் ஃபிரெஞ்ச் புரட்சி வெடித்தது. கிறிஸ்தவ விசுவாசத்திற்கு மாறாக சத்திய பிரமாணம் எடுத்துக்கொள்ள மறுத்த இவர் உடனடியாக கைது செய்யப்பட்டு கார்மேல் சபையின் பள்ளியில் சிறை வைக்கப்பட்டார்.



“மூன்றாம் நிலை சபையின்” (Third Order Regular) உறுப்பினரான குருவானவர் “செவெரின் கிரௌல்ட்” (Severin Girault) என்பவர், பாரிஸ் நகரில் அருட்சகோதரியர் குழுவொன்றிற்கு குருவாக இருந்தார். இவரும் கைது செய்யப்பட்டு கார்மேல் சபையின் பள்ளியில் அடைக்கப்பட்டார். கார்மேல் பள்ளியில் நடந்த வதையில், முதல் நபராக கொல்லப்பட்டவரும் இவரேயாவார்.


மேற்கண்ட மூவருடன், பல்வேறு ஆயர்கள், மறைப்பணியாளர்கள், மறைமாவட்ட குருக்கள், உள்ளிட்ட 182 பேர் 1792ம் ஆண்டு, செப்டம்பர் மாதம் இரண்டாம் தேதி, பாரிஸ் நகரிலுள்ள கார்மேல் சபையின் பள்ளியில், படுகொலை செய்யப்பட்டனர். 1926ம் ஆண்டு, அவர்கள் அருளாலர்களாக அருட்பொழிவு செய்விக்கப்பட்டனர்.



1737ம் ஆண்டு பிறந்த பிரான்சிஸ்கன் மறைப்பணியாளர் “ஜான் பாப்டிஸ்ட் ட்ரிகுரி” (John Baptist Triquerie), மூன்று நகரங்களில் இருந்த “எளிய கிளாரா” (Poor Clare monasteries) துறவற மடங்களில் குருவாகவும், ஒப்புரவாளராகவும், பணியாற்றினார். கிறிஸ்தவ விசுவாசத்திற்கு மாறாக சத்திய பிரமாணம் எடுத்துக்கொள்ள மறுத்த காரணத்திற்காக இவர் கைது செய்யப்பட்டார். இவரும், இவருடன் மறைமாவட்ட குருக்கள் பதின்மூன்று பேரும், 1794ம் ஆண்டு, ஜனவரி மாதம் 21ம் தேதி, “லாவல்” (Laval) நகரில் மறைசாட்சியாக கொல்லப்பட்டனர். அவர்களனைவரும் 1955ம் ஆண்டு, அருளாலர்களாக அருட்பொழிவு செய்விக்கப்பட்டனர்.



✠ அருளாளர் கிளாடியோ கிரன்ஸோட்டோ ✠

(Blessed Claudio Granzotto)



மறைப்பணியாளர்:

(Religious)


பிறப்பு: ஆகஸ்ட் 23, 1900

சான்ட்டா லூசியா டி பியாவ், ட்ரெவிசோ, இத்தாலி அரசு

(Santa Lucia di Piave, Treviso, Kingdom of Italy)


இறப்பு: ஆகஸ்ட் 15, 1947 (வயது 46)

பதுவை, இத்தாலி

(Padua, Italy)


ஏற்கும் சமயம்:

ரோமன் கத்தோலிக்க திருச்சபை

(Roman Catholic Church)


முக்திபேறு பட்டம்: நவம்பர் 20, 1994

திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுல்

(Pope John Paul II)


பாதுகாவல்: சிற்பிகள், கலைஞர்கள்


நினைவுத் திருநாள்: செப்டம்பர் 2


அருளாளர். கிளாடியோ கிரன்ஸோட்டோ, “இளம் துறவியர் சபையைச் (Order of Friars Minor) சேர்ந்த ஒரு இத்தாலிய மறைப்பணியாளரும், பிரபல சிற்பியும் ஆவார். இவரது படைப்புகள், அவரது மத வெளிப்பாடுகளுக்கு ஒரு வடிகாலாக இருந்தன. மற்றும், பிறருக்கு நற்செய்தி அறிவிப்பதில் சிற்ப கலையை பயன்படுத்தியதில் அவரது அர்ப்பணிப்பு பிரதிபலித்தது.


“ரிக்கர்டோ கிரன்ஸோட்டோ” (Riccardo Granzotto) எனும் இயற்பெயர் கொண்ட இவர், “ஆன்டனியோ கிரன்ஸோட்டோ” (Antonio Granzotto) மற்றும் “ஜியோவன்னா ஸ்கொட்டோ” (Giovanna Scottò) தம்பதியருக்குப் பிறந்த ஒன்பது குழந்தைகளில் கடைசி குழந்தை ஆவார். செப்டம்பர் மாதம், 2ம் தேதி, திருமுழுக்கு பெற்ற இவருக்கு, திருமுழுக்கு பெயராக “ரிக்கர்டோ விட்டரியோ” (Riccardo Vittorio) என்ற பெயர் இடப்பட்டது.


ஏழை விவசாயிகளான இவருடைய பெற்றோர்களுக்கு உதவுவதற்காக, இவரும் விவசாய நிலங்களில் வேலை செய்யவேண்டியிருந்தது. தீவிர பக்தியும் இறை விசுவாசமும் கொண்டிருந்த இவரது பெற்றோர், தங்கள் பிள்ளைகளுக்கு அவர்களுடைய விசுவாசத்தைப் பற்றிய பலமான அறிவைக் கொடுத்திருந்தார்கள். இவருக்கு ஒன்பது வயதானபோது இவரது தந்தையார் மரித்துப்போனார். முதலாம் உலகப் போர் (World War I) வெடித்த போது, கி.பி. 1915ம் ஆண்டு, இத்தாலிய இராணுவப் படைகளில் அவர் சேர்ந்து 1918ம் ஆண்டு வரை பணியாற்றினார். அதற்குள் போரும் முடிவுக்கு வந்தது.


இத்தாலிய இராணுவ சேவையிலிருந்து விடுவிக்கப்பட்ட அவர், தமது கல்வியை தொடர்ந்தார். அத்துடன், ஒரு கலைஞராகவும், சிற்பியாகவும் தமது திறமைகளை வளர்த்துக்கொண்டார். “வெனிஸ்” (Venice) நகரிலுள்ள (Accademia di Belle Arti di Venezia) எனும் பல்கலையில் இணைந்து கல்வி கற்று 1929ம் ஆண்டு பட்டம் பெற்றார். அவரது மூத்த சகோதரர் “ஜியோவன்னி” (Giovanni) மற்றும் பங்குத்தந்தை “விட்டோரியோ மொரண்டோ” (Vittorio Morando) ஆகியோர் தந்த ஊக்கத்தில் பணியாற்றினார். அவரது முக்கிய கருப்பொருளில் ஒன்று, ஆன்மீகத்தில் கலை ஆகும். 1932ம் ஆண்டில் ஃபிரான்சிஸ்கன் குருவான “அமடியோ ஒலிவியரோ” (Amadio Oliviero) என்பவரை சந்தித்ததன் பிறகு, விரைவில் ஒரு ஆன்மீக வேலைப்பாட்டை (Religious Vocation) உணர்ந்தார். (இவர்களிருவரும் நல்ல நண்பர்களானார்கள்.) அத்துடன், அவர் தொழில்முறை மறைப்பணியாளராக முடிவெடுத்தார். அதன் பிறகு, 1933ம் ஆண்டு, டிசம்பர் மாதம், 7ம் நாளன்று, “ஃபிரான்சிஸ்கன் இளம் துறவியர்” (Order of Friars Minor) சபையில் இணைந்தார்.


1935ம் ஆண்டு, இவர் தமது புகுநிலை துறவுப் பயிற்சியை (Novitiate) தொடங்கினார். 1936ம் ஆண்டு, தமது உறுதிப்பாடு பிரமாணம் ஏற்றபோது, “கிளாடியோ” (Claudio) என்ற பெயரை தமது ஆன்மீக பெயராக ஏற்றுக்கொண்டார். குருத்துவ அருட்பொழிவு பெற விரும்பாத கிளாடியோ, “பதுவை” (Padua) நகரிலுள்ள “தூய மரியா டெல்லா பியேவ்” ஃபிரான்சிஸ்கன் (Franciscan convent of Santa Maria della Pieve) பள்ளியில், ஒரு முழுமையான துறவு வாழ்க்கை வாழ்ந்தார். நற்செய்தி பற்றிய சிந்தனைகளுக்காக தமது வாழ்க்கையை அர்ப்பணித்தார். ஏழைகளுக்கு சேவை செய்வதுடன், தமது கலைப் பணிகளின் மூலம் தமது விசுவாசத்தை வெளிப்படுத்த இயலும் என்று நம்பினார். அவருடைய படைப்புகளில் பெரும்பாலானவை இயேசு கிறிஸ்து மற்றும் புனிதர்கள் பற்றின சித்தரிப்புகள் ஆகும்.


1945ம் ஆண்டு, அவரது மூளையில் உருவான ஒரு கட்டி, அவரை நீண்ட நாட்கள் வாழ சம்மதிக்கவில்லை. கிறிஸ்துவின் சிலுவைப்பாடுகளை எண்ணியபடியே நோயினால் ஏற்பட்ட துன்பங்களையும், வேதனைகளையும் தழுவிக்கொண்ட அவர், தூய அன்னை மரியாளின் விண்ணேற்பு பெருவிழா தினமான 1947ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், 15ம் நாளன்று, கிறிஸ்துவில் மரித்தார்.


இவரது நினைவுத் திருநாள், அவர் மரித்த தேதியான ஆகஸ்ட் 15ம் தேதிக்குப் பதிலாக, செப்டம்பர் 2ம் தேதியன்று, நிர்ணயம் செய்யப்பட்டது.



✠ புனிதர் முதலாம் கிரகோரி ✠

(St. Gregory I)



64வது திருத்தந்தை/ மறைவல்லுனர்:

(64th Pope/ Doctor of the Church)


பிறப்பு: கி.பி. 540 

ரோம் நகரம், பைசன்டைன் பேரரசு

(Rome, Byzantine Empire)


இறப்பு: மார்ச் 12, 604 (அகவை 64) 

ரோம் நகரம், பைசன்டைன் பேரரசு

(Rome, Byzantine Empire)


ஏற்கும் சமயம்:

கத்தோலிக்க திருச்சபை

(Catholic Church)

கிழக்கு மரபுவழி திருச்சபை

(Eastern Orthodox Church)

ஆங்கிலிக்கன் சமூகம்

(Anglican Communion)

லூதரனியம்

(Lutheranism)


நினைவுத் திருவிழா: செப்டம்பர் 3


பாதுகாவல்:

இசையமைப்பாளர்கள், பாடகர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள்


திருத்தந்தை முதலாம் கிரகோரி, பொதுவாக புனிதர் பெரிய கிரகோரி (Saint Gregory the Great) என்று அழைக்கப்படுகிறார். இவர் கத்தோலிக்க திருச்சபையின் திருத்தந்தையாக 590ம் ஆண்டு, செப்டம்பர் மாதம், 3ம் தேதி முதல் தமது மரணம் வரை ஆட்சியில் இருந்தவர் ஆவார். இவர், தமக்கு முன்பிருந்த திருத்தந்தையர்களைக் காட்டிலும் தமது இலக்கிய படைப்புகளுக்காக மிகவும் அறியப்படுகின்றார். ரோம் நகரில், பேகன் இன மக்களை பெரிய அளவில் கிறிஸ்தவ மதத்திற்கு மனமாற்றம் செய்ய தூண்டும் பணியில் புகழ் பெற்றவர் ஆவார்.


இவர் கிறிஸ்தவ வழிபாட்டினை சீரமைத்து ஒழுங்கு படுத்தியதால் நடுக்காலம் முழுவதும் இவர் கிறிஸ்தவ வழிபாட்டின் தந்தை என அழைக்கப்பட்டார்.


இவரே துறவற மடங்களில் வாழ்ந்த அனுபவமுடைய முதல் திருத்தந்தை ஆவார். இவர் மறைவல்லுநராகவும் (Doctor of the Church), இலத்தீன் தந்தையர்களுல் (Latin Fathers) ஒருவராகவும் கருதப்படுகின்றார். கத்தோலிக்க திருச்சபை, கிழக்கு மரபுவழி திருச்சபை, ஆங்கிலிக்க ஒன்றியம் மற்றும் சில லூதரனிய திருச்சபைகளில் இவர் புனிதர் என ஏற்கப்படுகின்றார். இவர் இறந்த உடனேயே மக்களின் பலத்த ஆதரவால் புனிதர் பட்டம் பெற்றார். 


எதிர் சீர்திருத்தத் திருச்சபையினைச் (Protestant reformer) சேர்ந்த “ஜான் கேல்வின்” (John Calvin) இவரைப் பற்றிக் கூறும்போது, இவரே கடைசியாக இருந்த நல்ல திருத்தந்தை எனக்கூறுகின்றார்.


இவரது சரியான பிறந்த தேதி தெரியவில்லையெனினும், இவர் பிறந்த வருடம் 540 என அறியப்படுகிறது. இவரது பெற்றோர் இவருக்கு “கிரகோரியஸ்” (Gregorius) என பெயரிட்டனர். திருச்சபைக்கு நெருங்கிய தொடர்புகலுள்ள “பேட்ரிஷியன்” (Patrician) குடும்பத்தில் பிறந்த இவரது தந்தை “கோர்டியானஸ்” (Gordianus) “அதிகார சபை அங்கத்தினராகவும்” (Senator) பின்னர், ரோம் நகரின் நிர்வாக அலுவலராகவும் (Prefect) இருந்துள்ளார். கிரகோரியின் தாயார் “சில்வியா” (Silvia) ஆவார்.


கல்வியில் சிறந்த கிரகோரி, இலக்கணம், அணியிலக்கணம், அறிவியல், சட்டம், சரித்திரம், கணிதம், சங்கீதம் ஆகியவற்றில் சிறப்பான தேர்வு கண்டிருந்தார்.


கிரகோரியின் தந்தையின் மரணத்தின் பின்னர், இவர் தமது குடும்ப இல்லத்தை துறவற மடமாக மாற்றி, அதனை அப்போஸ்தலர் புனிதர் ஆண்ட்ரூசுக்கு (Apostle Saint Andrew ) அர்ப்பணித்தார். (கிரகோரியின் மரணத்தின் பின்னர், அது “புனித கிரகோரி மேக்னோ அல் செலியோ” (San Gregorio Magno al Celio) என்று மறு அர்ப்பணம் செய்யப்பட்டது.)


கிரகோரி கோப குணம் கொண்டவர் என்றும் குற்றங்களையும் பாவங்களையும் எப்போதுமே மன்னிக்கும் குணமற்றவர் என்றும் அறியப்படுகிறது. உதாரணத்துக்கு, ஒருமுறை மரணப் படுக்கையிலிருந்த துறவி ஒருவர், தாம் முன்னர் ஒருமுறை, மூன்று தங்கத் துண்டுகளை திருடிய குற்றத்துக்காக பாவமன்னிப்பு வேண்டினார். கிரகோரியோ, அந்த துறவியை நண்பர்களற்று தன்னந்தனியாக மரிக்கும் நிலைக்கு தள்ளினார். அவரது உடலையும், தங்கக் காசுகளையும் ஒரு உரக்குவியலில் எரியச் சொன்னார். உன் தங்கக் காசுகளை நீயே உன் நரகத்துக்கு கொண்டுபோ என்றார். பாவத்துக்கான தண்டனைகள், ஒரு மனிதனின் மரணப்படுக்கையிலிருந்தே ஆரம்பிக்கவேண்டும் என கிரகோரி நம்பினார். இவ்வளவு செய்த கிரகோரி, அந்த துறவியின் மரணத்தின் பின்னர், இறுதித் தீர்ப்பில் உதவுவதற்காக, அவருக்காக 30 திருப்பலிகளை நிறைவேற்றினார்.


கிரகோரி, துறவு வாழ்க்கையில் ஆழ்ந்த மதிப்பு வைத்திருந்தார். ஒரு துறவி, இறைவனின் பார்வையை தீவிரமாக தேடிச் செல்பவராக இருக்கவேண்டும் என நினைத்தார்.


கி.பி. 604ம் ஆண்டு, மார்ச் மாதம், 12ம் தேதி மரித்த திருத்தந்தை முதலாம் கிரகோரி, தூய பேதுருவின் பேராலயத்தில் (St. Peter's Basilica) அடக்கம் செய்யப்பட்டார்.



✠ புனித ரோசலியா ✠

(St. Rosalia of Palermo)



கன்னியர்:

(Virgin)


பிறப்பு: கி.பி. 1130

பலேர்மோ, சிசிலி அரசு

(Palermo, Kingdom of Sicily)


இறப்பு: கி.பி. 1166

மவுண்ட் பெலேக்ரினோ, சிசிலி அரசு

(Mount Pellegrino, Kingdom of Sicily)


ஏற்கும் சமயம்:

ரோமன் கத்தோலிக்க திருச்சபை

(Roman Catholic Church)


புனிதர்பட்டம்: ஜூலை 15, 1625 

திருத்தந்தை 8ம் அர்பன் 

(Pope Urban VIII)


பாதுகாவல்: 

பலேர்மோ, மான்ட்டேரி, கலிஃபோர்னியா (Monterey, California) ஆகிய இடங்களைச் சேர்ந்த இத்தாலிய மீனவர்கள்


நினைவுத் திருநாள்: செப்டம்பர் 4


இத்தாலியின் பலெர்மோ நகரைச் சேர்ந்த புனிதர் ரோசலியா, ஒரு கத்தோலிக்க புனிதர் ஆவார்.


“சார்லமக்னேயின்” (Charlemagne) வம்சாவளியைச் சேர்ந்த ஒரு உன்னத நார்மன் (Norman) குடும்பத்தில் ரோசலியா பிறந்தார்.


“சினிபால்ட் (Sinibald) என்பவரின் மகளான இவரின் இதயம் இளம் வயதிலிருந்தே இறைவனை மட்டுமே நாடியது. விவிலிய வார்த்தைகளால் தன் இதயத்தை நிரப்பினார். இறைவன் மட்டுமே தன் வாழ்வின் மையமாக இருக்க வேண்டுமென்று எண்ணினார். இறை இயேசுவின் பாதையில் தன் வாழ்வை அமைத்தார். 


தன் வீட்டைவிட்டு வெளியேறி, “பெல்லேக்ரினோ” (Mount Pellegrino) மலையிலுள்ள ஒரு குகைக்கு சென்று தனிமையில் வாழ்ந்தார். பாரம்பரியப்படி, அவரை இரண்டு சம்மனசுக்கள் வழிநடத்தி குகைக்கு அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. உலக வாழ்விலிருந்து தன்னை மறைத்து வாழ்ந்த இவர், இதயம் என்னும் அவரின் வீட்டில் கடவுளுக்கு மட்டுமே இடம் கொடுத்து வாழ்ந்தார்.


அவர் வசித்த குகையின் சுவர்களில், “சினிபால்டின் மகளான ரோசலியா எனும் நான், என் ஆண்டவரான இயேசு கிறிஸ்துவின் அன்புக்காக வாழ்வதென்று தீர்மானித்துள்ளேன்” என்று எழுதப்பட்டிருந்தது.


ரோசலியா, அந்த குகையிலேயே தனிமையிலே கி.பி. 1166ம் ஆண்டு மரித்தார்.


கி.பி. 1624ம் ஆண்டு, பலெர்மோ நகரில் பிளேக் நோய் பரவியது. இத்துன்ப காலத்தில், ஒரு நோயாளிப்பெண்ணுக்கும், ஒரு வேட்டைக்காரனுக்கும் காட்சியளித்த புனிதர் ரோசலியா, தமது எலும்புகள் கிடக்கும் இடத்தைக் குறிப்பிட்டுச் சொன்னார். தமது எலும்புகளை நகருக்குள் ஊர்வலமாகக் கொண்டுவர கூறினார். மலையேறிச் சென்ற வேட்டைக்காரன், அவர் கூறியது போலவே அங்கே எலும்புகள் கிடக்கக் கண்டான். அவர் கூறியதுபோலவே மும்முறை அவரது எலும்புகளை ஊருக்குள் ஊர்வலமாக கொண்டு சென்றதும் பிளேக் நோய் முற்றிலுமாக நீங்கியது. இச்சம்பவத்தின் பிறகு, புனிதர் ரோசலியா பலெர்மோ நகரின் பாதுகாவலராக அறிவிக்கப்பட்டார். இவரது எலும்புகள் காணப்பட்ட குகையில் இவரது நினைவுச் சரணாலயம் அமைக்கப்பட்டது.



✠ விடெர்போ நகர் புனிதர் ரோஸ் ✠

(St. Rose of Viterbo)


கன்னியர்/ துறவி:

(Virgin and Recluse)


பிறப்பு: கி.பி. 1233

விடெர்போ, திருத்தந்தையர் மாநிலம்

(Viterbo, Papal States)


இறப்பு: மார்ச் 6, 1251

விடெர்போ, திருத்தந்தையர் மாநிலம்

(Viterbo, Papal States)


ஏற்கும் சமயம்: 

ரோமன் கத்தோலிக்க திருச்சபை

(Roman Catholic Church)


புனிதர் பட்டம்: கி.பி. 1457

திருத்தந்தை மூன்றாம் கல்லிஸ்ட்டஸ் 

(Pope Callistus III)


முக்கிய திருத்தலம்:

புனிதர் ரோஸ் ஆலயம், விடேர்போ, இத்தாலி

(Church of St. Rose, Viterbo, Italy)

புனிதர் ரோஸ் டி விடேர்போ கத்தோலிக்க ஆலயம், லோங்வியு, வாஷிங்டன்

(Saint Rose de Viterbo Catholic Church, Longview, Washington)


நினைவுத் திருநாள்: செப்டம்பர் 4


பாதுகாவல்:

நாடுகடத்தப்பட்டவர்கள், சமய சபைகளால் நிராகரிக்கப்பட்ட மக்கள், ஃபிரான்சிஸ்கன் சபை இளைஞர்கள் (Franciscan youth), விடெர்போ (Viterbo), இத்தாலி


விடெர்போ நகர் புனிதர் ரோஸ், ஒரு கத்தோலிக்க புனிதராவார். இத்தாலியின் விடெர்போ நகரில் பிறந்த ஒரு இளம்பெண்ணான இவர், திருத்தந்தையருக்கு ஆதரவாக வெளிப்படையாக பேசி வந்தவர் ஆவார். பின்னாளில் தனிமையான துறவியாக மாறிய இவர், எதிர்காலம் பற்றி தீர்க்கதரிசனம் கூறுமளவுக்கு சக்தி படைத்தவராக இருந்தார்.

இவரது வாழ்க்கை சம்பவங்களின் காலம் நிச்சயமற்றதாக இருந்தது. காரணம், இவரது புனிதர் பட்டத்திற்கான தயாரிப்புகள் உள்ளிட்ட பிற நிகழ்வுகள் எவற்றினதும் காலங்கள் எங்கும் குறிப்பிடப்படவில்லை. பெரும்பாலான அறிஞர்களின் கூற்றுப்படி, இவர் கி.பி. 1233ம் ஆண்டில் பிறந்தவர் என நம்பப்படுகிறது.


தெய்வ பக்தியுள்ள, ஏழைப் பெற்றோருக்கு பிறந்த ரோஸ், சிறு வயதிலேயே செபிப்பதிலும் ஏழைகளுக்கு உதவுவதிலும் பெரும் ஆர்வம் கொண்டிருந்தார். மூன்று வயதிலிருந்து தமது தாய்வழி அத்தையிடம் வளர்ந்ததாக கூறப்படுகிறது. பாவிகளின் மனமாற்றத்திற்காக அதிகம் செபித்த இவர், தம்மை ஆன்மீக வாழ்வில் அர்ப்பணித்துக்கொண்டார். பதினெட்டே ஆண்டுகள் வாழ்ந்திருந்த ரோஸின் வாழ்க்கை புனிதம் பெற்றது. சிறு பெண்ணாயினும், ரோஸ் ஜெப வாழ்விலும் வறியோருக்கு உதவுவதிலும் மகிழ்வு கொண்டிருந்தார்.


பெற்றோரின் வீட்டில் இருந்தபோதே, மிகவும் இளம் வயதிலேயே இவரது தவ வாழ்வு தொடங்கியது. மிகவும் கடின வாழ்க்கை வாழ்ந்த ரோஸ், எழைகளின்பால் தாராள மனம் கொண்டிருந்தார்.


இவருக்கு பத்து வயதாகுமுன்னர், தேவ அன்னை கன்னி மரியாள் இவருக்கு தோன்றி, மூன்றாம் நிலை ஃபிரான்சிஸ்கன் (Third Order of St. Francis) சபையில் இணைந்து, விடேர்போ நகரில் தவ முயற்சிகளை போதிக்குமாறு அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. அக்காலத்தில், தூய ரோம பேரரசர் (Holy Roman Emperor) “இரண்டாம் ஃபிரடேரிக்” (Frederick II) ஆட்சியில் இருந்தார்.


விரைவிலேயே ஃபிரான்சிஸ்கன் சபையில் இணைந்த இவர், சபையின் சீறுடையான சாதாரண அங்கியை அணிந்துகொண்டார். தெருக்களிலே நடக்கையில் கைகளில் சிலுவையோன்றினை ஏந்தியபடி செல்லும் இவர், கத்தோலிக்க திருச்சபைக்கு விசுவாசமாக இருக்கும்படி பிறருக்கு அறிவுறுத்தியபடி செல்வார். பாவங்கள் பற்றியும் இயேசுவின் பாடுகள் பற்றியும் போதிக்க தொடங்கினார்.


தமது 15 வயதில், ஒரு துறவற மடம் ஒன்றினை தொடங்க முயற்சித்த இவர், அம்முயற்சி தோல்வியுறவே, தமது தந்தையின் வீட்டுக்கு திரும்பி, அங்கேயே தனிமையில் செப, தவ முயற்சிகளில் ஈடுபட்டார். ஒவ்வொரு முறையும் தமது தனிமையிலிருந்து வெளிவரும்போதும், மக்களை தவம் செய்ய தூண்டினார். அவரது இந்த மறைப்பணி இரண்டு வருடம்வரை நீடித்தது.


கி.பி. 1250ம் ஆண்டு ஜனவரி மாதம், ரோஸின் சொந்த ஊரான விடெர்போ நகரில் திருத்தந்தைக்கு எதிராக கிளர்ச்சி நடந்தபோது, இவர் திருத்தந்தைக்கு ஆதரவாகவும் பேரரசருக்கு எதிராகவும் செயல்பட்டார். இதன் காரணமாக இவரும் இவரது குடும்பத்தினரும் நகரிலிருந்து கடத்தப்பட்டனர். இவர்கள் மத்திய இத்தாலியின் “லாஸியோ” (Lazio) பிராந்தியத்திலுள்ள “சொரியானோ நெல் சிமினோ” (Soriano nel Cimino) எனும் நகரில் தஞ்சம் புகுந்தனர். திருத்தந்தையின் தரப்பு வென்றதன் பிறகு, இவரும் இவரது பெற்றோரும் நகருக்குள் திரும்பி வர அனுமதிக்கப்பட்டனர்.


கி.பி. 1250ம் ஆண்டு, டிசம்பர் மாதம், ஐந்தாம் தேதியன்று, பேரரசர் விரைவிலேயே இறந்துபோவார் என்று ரோஸ் முன்னறிவித்தார். அவரது தீர்க்கதரிசனம் டிசம்பர் 13ம் நாளன்று நிறைவேறியது. பேரரசர் இறந்துபோனார்.


ரோஸ், விடெர்போ நகரிலுள்ள “தூய மரியாளின் எளிய கிளாரா” (Poor Clare Monastery of St. Mary) துறவு மடத்தில் இணைய விரும்பினார். ஆனால், அவரிடம் அதற்காக தரவேண்டிய தட்சினை இல்லாத ஏழ்மை காரணத்தால் அவர் நிராகரிக்கப்பட்டார். அவர்களது நிராகரிப்பை ஏற்றுக்கொண்ட அவர், ஆயினும் அவரது இறப்புக்குப் பிறகு மடாலயத்திற்கு அவள் அனுமதி அளிப்பதாக முன்னறிவித்தார்.


இவரது முயற்சி தோல்வியடையவே, இவர் தமது தந்தையின் வீட்டிலேயே ஜெப, தவ வாழ்வினைத் தொடர்ந்தார். அங்கேயே, தமது பதினெட்டாம் வயதிலே ரோஸ் மரணமடைந்தார்.


✠ புனித  அன்னைதெரேசா ✠

(St. Mother Teresa of Calcutta)



அர்ப்பணிக்கப்பட்ட மறைப்பணியாளர், கன்னியர்:

(Consecrated Religious, Nun)


பிறப்பு: ஆகஸ்ட் 26, 1910

உஸ்குப், கொசோவோ விலயெட், ஒட்டோமன் பேரரசு

(Üsküp, Kosovo Vilayet, Ottoman Empire)


இறப்பு: செப்டம்பர் 5, 1997 (வயது 87)

கொல்கத்தா, மேற்கு வங்காளம், இந்தியா

(Calcutta, West Bengal, India)


ஏற்கும் சமயம்: 

ரோமன் கத்தோலிக் திருச்சபை

(Roman Catholic Church)


துறவற சபைகள்: 

லொரெட்டோ சகோதரிகள் (Sisters of Loreto - 1928–1950)

பிறர் அன்பின் பணியாளர் சபை (Missionaries of Charity - 1950–1997)


அருளாளர் பட்டம்: அக்டோபர் 19, 2003

திருத்தந்தை இரண்டாம் ஜான் பால்

(Pope John Paul II)


புனிதர் பட்டம்: செப்டம்பர் 4, 2016

திருத்தந்தை ஃபிரான்சிஸ்

(Pope Francis)


முக்கிய திருத்தலம்:

தாய் இல்லம், மிஷினரீஸ் ஆஃப் சேரிட்டி, கல்கத்தா, மேற்கு வங்காளம், இந்தியா

(Mother House of the Missionaries of Charity, Calcutta, West Bengal, India)


நினைவுத் திருநாள்: செப்டம்பர் 5


பாதுகாவல்: 

உலக இளைஞர் தினம்

கருணை இல்லங்கள்



புனிதர் அன்னை தெரேசா, ஒரு அல்பேனியன் – இந்திய (Albanian-Indian) ரோமன் கத்தோலிக்க அருட்சகோதரியும், மறைப்பணியாளருமாவார். அன்னையின் இயற்பெயர், “ஆக்னஸ் கோன்ஜா போஜாஜியூ” (Anjezë Gonxhe Bojaxhiu) ஆகும். (கோன்ஜா என்பதற்கு அல்பேனிய மொழியில் "ரோஜா அரும்பு" என்று பொருள்).


தற்போதைய “மசெடோனியா குடியரசின்” (Republic of Macedonia) தலைநகரும், அன்றைய ஒட்டோமன் பேரரசின் “கொசோவோ விலயெட்” (Kosovo Vilayet) எனுமிடத்தில் பிறந்த அன்னை, தமது பதினெட்டு வயதுவரை அங்கே வாழ்ந்தார். பின்னர் அயர்லாந்துக்கும், அதன்பின்னர் இந்தியாவுக்கும் சென்றார்.


ஒரு “கொசோவர் அல்பேனியன்” (Kosovar Albanian family) குடும்பத்தில் பிறந்த ஆக்னஸுக்கு எட்டு வயதானபோது, அவரது தந்தை மரணமடைந்தார். பின்னர், அவரது தாயார் அவரை நல்லதொரு கத்தோலிக்க பெண்ணாக வளர்த்தார். தமது பதினெட்டாம் வயதில் வீட்டை விட்டு வெளியேறி, "லொரேட்டோ சகோதரிகளின்" (Sisters of Loreto) சபையில் மறைப் பணியாளராகத் தம்மை இணைத்துக் கொண்டார். அதற்குப் பிறகு தமது தாயையோ அல்லது உடன்பிறந்த சகோதரியையோ மீண்டும் சந்திக்கவில்லை.


ஆக்னஸ், இந்தியாவின் பள்ளிக் குழந்தைகளுக்குக் கல்வி கற்பிக்க லொரேட்டோ சகோதரிகள் பயன்படுத்தும் மொழியான ஆங்கிலத்தைக் கற்பதற்காக, அயர்லாந்தின் “ரத்ஃபர்ன்ஹாமில்” (Rathfarnham) உள்ள லொரேட்டோ கன்னியர் (Sisters of Loreto Abbey) மடத்திற்கு முதலில் சென்றார். 


1929ம் ஆண்டு அவர் இந்தியா வந்தடைந்து இமயமலை அருகே உள்ள டார்ஜீலிங்கில் தமது துறவற புகுநிலையினருக்கான பயிற்சியினை ஆரம்பித்தார். தனது முதல் நிலை துறவற உறுதிமொழியினை அவர் 1931 மே 24 அன்று அளித்தார். அச்சமயம், மறைப்பணியாளரின் பாதுகாவலரான “லிசியே நகரின் புனிதர் தெரேசாவின்” (Thérèse de Lisieux) பெயரைத் தேர்ந்தெடுத்துக் கொண்டார். கிழக்குக் கல்கத்தாவின் லொரேட்டோ கன்னியர் மடப் பள்ளியில் தனது இறுதி துறவற உறுதிமொழியினை 1937, மே மாதம், 14ம் தேதி அளித்தார்.


பள்ளிக்கூடத்தில் கற்பிக்கும் பணியை தெரேசா விரும்பினாலும் கல்கத்தாவில் அவரைச் சூழ்ந்துள்ள பகுதிகளின் வறுமை நிலை அவரை அதிகமாய் கலங்கச் செய்தது. 1943ம் ஆண்டின் பஞ்சம், துயரத்தையும் சாவையும் அந்நகரத்துக்குக் கொணர்ந்தது என்றால் 1946ம் ஆண்டின் இந்து - முஸ்லிம் வன்முறை அந்நகரத்தை நம்பிக்கையின்மையிலும் அச்சத்திலும் ஆழ்த்தியது.



பிறர் அன்பின் பணியாளர் சபை:

செப்டம்பர் 10, 1946ல் ஆண்டு தியானத்திற்காகக் கல்கத்தாவிலிருந்து, டார்ஜீலிங்கின் லொரேட்டோ கன்னிமடத்திற்கு தெரேசா பயணம் செய்தபொழுது அவருக்கு நேர்ந்த உள்ளுணர்வை அவர் பின்நாட்களில் "அழைப்பினுள் நிகழ்ந்த அழைப்பு" என அழைத்தார். "நான் கன்னியர் மடத்தை விட்டு வெளியேறி, ஏழைகள் மத்தியில் வாழ்ந்து கொண்டே அவர்களுக்கு உதவ வேண்டும். அது ஒரு கட்டளை. அதனைத் தவறுவது (இறை) நம்பிக்கையை மறுதலிப்பதற்கு ஒப்பானது." என்றார் அவர். 1948ம் ஆண்டில் ஏழைகளுடனான தமது சேவையை ஆரம்பித்தார். 


லொரேட்டோ துறவற சபையின் சீருடைகளைக் களைந்து, நீல நிற கரையிட்ட சாதாரண வெண்ணிற பருத்தி புடவையை சீருடையாய் அணிந்தவராய், இந்திய குடியுரிமையினைப் பெற்றுக்கொண்டு குடிசை பகுதிகளுக்குள் சேவை செய்தார். தொடக்கத்தில் மோதிஜில்லில் பள்ளிக்கூடம் ஆரம்பித்த அவர் பின்னர் ஆதரவற்றோர் மற்றும் பசியினால் வாடுவோரின் தேவைகளை நிறைவேற்றத் தொடங்கினார். அவரது முயற்சிகள் விரைவிலேயே பிரதமர் உட்பட இந்தியாவின் உயர் அதிகாரிகளின் கவனத்தை அவர் பக்கம் ஈர்த்து அவர்களது பாராட்டுதல்களைப் பெற்றுத்தந்தன.


தெரேசா தனது நாட்குறிப்பில், தனது முதல் வருடம் துன்பங்கள் நிறைந்ததென்றும், வருமானமில்லாத காரணத்தால் உணவுக்காகவும், ஏனைய பொருட்களுக்காகவும் யாசிக்க நேர்ந்ததென்றும், ஆரம்ப நாட்களில் சந்தேகமும், தனிமையும், கன்னிமடத்தின் வசதிகளுக்குத் திரும்பும் சலனமும் ஏற்பட்டதென்றும் தனது நாட்குறிப்பில் எழுதினார்.


1950 அக்டோபர் 7ம் தேதி, பிறர் அன்பின் பணியாளர் சபையை மறைமாவட்ட அளவில் துவக்க தெரெசாவுக்கு கத்தோலிக்க திருச்சபையில் அனுமதி அளிக்கப்பட்டது. அச்சபையின் குறிக்கோளாக அவர் கூறியது, "உண்ண உணவற்றவர்கள், உடுத்த உடையற்றவர்கள், வீடற்றவர்கள், முடமானவர்கள், குருடர்கள், தொழு நோயாளிகள் போன்றோர்களையும், தங்களை சமூகத்திற்கே தேவையற்றவர்களெனவும், அன்பு செய்யப்படாதவர்களெனவும், கவனிக்கப் படாதவர்களெனவும் எண்ணிக் கொண்டிருப்பவர்களையும், சமூகத்திற்கே பெரும் பாரமென்று எண்ணப்பட்டு அனைவராலும் புறக்கணிக்கப் பட்டவர்களையும் கவனித்தலே ஆகும்."


கொல்கத்தாவில் 13 உறுப்பினர்களைக் கொண்ட சிறியதொரு அமைப்பாக ஆரம்பிக்கப்பட்ட இச்சபை, இன்று 6000க்கும் மேலான அருட்சகோதரிகளால் நடத்தப்படும் அனாதை இல்லங்களையும், எய்ட்ஸ் நல்வாழ்வு மையங்களையும், தொண்டு மையங்களையும் தன்னகத்தே கொண்டு அகதிகள், குருடர், ஊனமுற்றோர், முதியோர், மது அடிமைகள், ஏழை எளியோர், வீடற்றோர், வெள்ளத்தினாலும், தொற்றுநோயாலும் பஞ்சத்தாலும் பாதிக்கப்பட்டவர்கள் போன்றவர்களைக் கவனிக்கும் இடமாகவும் இருக்கிறது.


இவர், சிறந்த சமூக சேவகர் எனவும், ஏழைகளுக்கும் ஆதரவற்றோருக்கும் பரிந்து பேசுபவர் என்றும் உலகம் முழுவதும் புகழப்பட்டார்.


1950ம் ஆண்டு, இந்தியாவின் கொல்கத்தாவில் "பிறர் அன்பின் பணியாளர்" என்ற கத்தோலிக்க துறவற சபையினை நிறுவினார். நாற்பத்தைந்து வருடங்களுக்கும் மேலாக ஏழை எளியோர்களுக்கும், நோய்வாய்ப்பட்டோருக்கும், அனாதைகளுக்கும், இறக்கும் தறுவாயிலிருப்போருக்கும் சேவை செய்து தொண்டாற்றியவர் இவர். முதலில் இந்தியா முழுவதும், பின்னர் வெளிநாடுகளுக்கும் "பிறர் அன்பின் பணியாளர் சபை"யினை நிறுவினார்.


இவர் 1979ல் அமைதிக்கான நோபல் பரிசினையும், 1980ல் இந்தியாவின் சிறந்த குடிமக்கள் விருதான பாரத ரத்னா விருதினையும் பெற்றார்.


அன்னை தெரேசாவின் "பிறர் அன்பின் பணியாளர் சபை", அவர் மறைந்தபோது 123 நாடுகளில் 610 தொண்டு நிறுவனங்களுடன் இயங்கிக்கொண்டிருந்தது. இதில் எய்ட்ஸ், தொழு நோய் மற்றும் காசநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நல்வாழ்வு மையங்கள், இலவச உணவு வழங்குமிடங்கள், குழந்தைகள் மற்றும் குடும்பத்திற்கான ஆலோசனைத் திட்டங்கள், அனாதை இல்லங்கள், பள்ளிக்கூடங்கள் ஆகியவை அடங்கும்.


அன்னை அவர்களைப் பற்றி எழுதுவதானால், நிறைய எழுதிக் கொண்டே போகலாம். அன்னையின் கடைசி காலம், மிகவும் கடினமானதாக இருந்தது. இதயக் கோளாறுகளால் அவதிப்பட்டார். ஏப்ரல் 1996ல் அன்னை தெரேசா கீழே விழுந்து அவரது காறை எலும்பு முறிந்தது. ஆகஸ்ட் மாதம், மலேரியாவினாலும், இதய கீழறைக் கோளாறினாலும் அவதிப்பட்டார். இதய அறுவை சிகிச்சைக்குட்பட்ட போதிலும் அவரது உடல்நிலை மோசமாகிக் கொண்டிருந்தது. அன்னை 1997ம் ஆண்டு, செப்டம்பர் மாதம், ஐந்தாம் தேதி மரணமடைந்தார்.


செப்டம்பர் 1997ல் இறுதிச்சடங்கிற்கு முன்னதாக ஒரு வார காலம் அன்னை தெரேசாவின் உடல் கொல்கத்தாவின் புனித தோமையார் ஆலயத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. அனைத்து மத ஏழைகளுக்கும் அவர் ஆற்றிய தொண்டுக்குப் பரிகாரமாக, இந்திய அரசின் அரசு மரியாதையுடன் கூடிய இறுதிச்சடங்கு செய்யப்பட்டது.


அவரது செயல்களையும், சாதனைகளையும் பகுத்தாய்ந்த திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர், "மானுட சேவையில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தத் தேவையான பலனும் விடாமுயற்சியும் அன்னை தெரெசாவுக்கு எங்கிருந்து வந்தது? அவர் அதனைப் பிரார்த்தனையிலும் இயேசு கிறிஸ்துவையும் அவரது இறைவார்த்தையையும், அவரின் திருஇருதயதையும் தியானிப்பதிலிருந்து பெற்றுக் கொண்டார்." என்றார். தனிப்பட்ட முறையில் அன்னை தெரேசா தனது மத நம்பிக்கைகளில் அநேக சந்தேகங்களையும் போராட்டங்களையும் கொண்டிருந்தார். இது ஏறத்தாழ ஐம்பது வருடங்கள் அவரது வாழ்க்கையின் முடிவு வரை நீடித்தது.


2003ம் ஆண்டு, அக்டோபர் மாதம், 19ம் தேதி, திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்கள், அன்னை தெரேசாவிற்கு அருளாளர் பட்டமளித்தார்.


2016ம் ஆண்டு, செப்டம்பர் மாதம், நான்காம் தேதி, திருத்தந்தை ஃபிரான்சிஸ் அவர்கள் அன்னை தெரெசாவை புனிதராக அருட்பொழிவு செய்வித்தார்.



Under Construction

Under Construction

Under Construction

Under Construction

Under Construction

Under Construction

Under Construction

Under Construction

Under Construction

Under Construction

Under Construction

Under Construction

Under Construction

Under Construction

Under Construction

Under Construction

Under Construction

Under Construction

Under Construction

Under Construction

Under Construction

Under Construction

Under Construction

Under Construction

Under Construction

Under Construction

Under Construction

Under Construction

Under Construction

Under Construction

Under Construction

Under Construction

Under Construction

Under Construction

This is the upper section.

This is the middle section.

This is the lower section.

This is the upper section.

This is the middle section.

This is the lower section.

This is the upper section.

This is the middle section.

This is the lower section.

This is the upper section.

This is the middle section.

This is the lower section.

This is the upper section.

This is the middle section.

This is the lower section.

This is the upper section.

This is the middle section.

This is the lower section.