Wednesday, 5 August 2020

செபமாலை (புதிய மொழி பெயர்ப்பில்)

தூய ஆவியார் செபம்:
தூய ஆவியாரே எழுந்தருளி வாரும். விண்ணகத்திலிருந்து உமது பேரொளியின் அருள் சுடர் எம் மீது அனுப்பிடுவீர். எளியோரின் தந்தையே வந்தருள்வீர். நன்கொடை வள்ளலே வந்தருள்வீர். இதய ஒளியே வந்தருள்வீர் உன்னத ஆறுதல் ஆனவரே, ஆன்ம இனிய விருந்தினரே, இனிய தன்மைத் தருபவரே, உழைப்பின் களைப்பைத் தீர்ப்பவரே, வெம்மைத் தணிக்கும் குளிர் நிழலே, அழுகையில் ஆறுதல் ஆனவரே, உன்னதப் பேரின்ப ஒளியே, உம்மை நம்புவோருடைய இதயத்தின் ஆழம் நிரப்பிடுவீர். உமது அருள் ஆற்றல் இல்லாமல் மனிதரில் எதுவும் இல்லை. நல்லது அவனில் எதுவும் இல்லை. மாசு கொண்டதைக் கழுவிடுவீர். வரட்சியுற்றதை நனைத்திடுவீர். காயப்பட்டதை ஆற்றிடுவீர். வணங்காதிருப்பதை வளைத்திடுவீர். குளிரானதை குளிர் போக்கிடுவீர். தவறிப் போனதை ஆண்டருள்வீர். இறைவா உம்மை நம்பும் அனைவருக்கும், உமது ஏழு கொடைகளையும் வழங்கிடுவீர். புண்ணியப் பலன்களையும் வழங்கிடுவீர். இறுதியில் மீட்பை அளித்து அளவில்லாத இன்பமும் அருள்வீரே. -ஆமென்.

செபமாலையின் தொடக்க செபம்:
எல்லா நன்மைகளும் நிறைந்த அன்பு இறைவா, கெட்ட மனிதரும், நன்றி இல்லாதப் பாவிகளுமாய் இருக்கிற எங்கள் மீது, அளவில்லாத மாட்சி கொண்டிருக்கின்ற உம்முடைய திருச்சந்நிதியிலே இருந்து செபம் செய்யத் தகுதி அற்றவர்களாய் இருந்தாலும், அளவில்லாத இரக்கத்தை நம்பிக் கொண்டு, உமது மாட்சிக்காகவும், அன்னை மரியாவின் புகழ்ச்சிக்காகவும் ஐம்பத்து மூன்று மணி செபமாலை தொடுக்க ஆசையாய் இருக்கிறோம். இந்த செபத்தை பக்தியோடு செய்து, எவ்வித கவனச் சிதறல்களும் இல்லாமல் முடிக்க உம்முடைய அருளை எங்களுக்குத் தந்தருளும். –ஆமென்

திருத்தூதர்களின் நம்பிக்கை அறிக்கை:
விண்ணகத்தையும் மண்ணகத்தையும் படைத்த எல்லாம் வல்ல தந்தையாகிய கடவுளை நம்புகிறேன்.
அவருடைய ஒரே மகனாகிய நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை நம்புகிறேன்.
இவர் தூய ஆவியால் கருவுற்று, கன்னி மரியாவிடமிருந்து பிறந்தார்.
பொந்தியு பிலாத்தின் அதிகாரத்தில் பாடுபட்டுச் சிலுவையில் அறையப்பட்டு,
இறந்து, அடக்கம் செய்யப்பட்டார்.
பாதாளத்தில் இறங்கி, மூன்றாம் நாள் இறந்தோரிடமிருந்து உயிர்த்தெழுந்தார்.
விண்ணகத்துக்கு எழுந்தருளி, எல்லாம் வல்ல தந்தையாகிய
கடவுளின் வலப்பக்கத்தில் வீற்றிருக்கிறார்.
அங்கிருந்து வாழ்வோருக்கும் இறந்தோருக்கும் தீர்ப்பு வழங்க வருவார்.
தூய ஆவியாரை நம்புகிறேன். புனித கத்தோலிக்கத் திருஅவையை நம்புகிறேன்.
புனிதர்களின் உறவு ஒன்றிப்பை நம்புகிறேன்.
பாவ மன்னிப்பை நம்புகிறேன்.
உடலின் உயிர்ப்பை நம்புகிறேன்.
நிலைவாழ்வை நம்புகிறேன். -ஆமென்.

 
இயேசு கற்றுக்கொடுத்த செபம்:
விண்ணுலகில் இருக்கின்ற எங்கள் தந்தையே, உமது பெயர் தூயது எனப் போற்றப் பெறுக. உமது ஆட்சி வருக. உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல, மண்ணுலகிலும் நிறைவேறுக.

எங்கள் அன்றாட உணவை இன்று எங்களுக்குத் தாரும். எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோரை நாங்கள் மன்னிப்பது போல, எங்கள் குற்றங்களை மன்னியும். எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும். தீமையிலிருந்து எங்களை விடுவித்தருளும் - ஆமென்.


மங்கள வார்த்தை செபம் :
அருள் நிறைந்த மரியே வாழ்க ஆண்டவர் உம்முடனே பெண்களுள் ஆசி பெற்றவர் நீரே உம்முடைய திருவயிற்றின் கனியாகிய இயேசுவும் ஆசி பெற்றவரே.

புனித மரியே இறைவனின் தாயே பாவிகளாய் இருக்கிற எங்களுக்காக இப்பொழுதும் எங்கள் இறப்பின் வேளையிலும் வேண்டிக் கொள்ளும் - ஆமென்


மூவொரு இறைவனுக்குப் புகழ்:
தந்தைக்கும், மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாகுக

தொடக்கத்தில் இருந்தது போல இப்போதும், எப்போழுதும் என்றென்றும் இருப்பதாக - ஆமென்


ஒவ்வொறு மறைஉண்மை முடிவிலும் பாத்திமா அன்னையின் செபம்:
ஓ, என் இயேசுவே! எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும் எங்களை நரக நெருப்பிலிருந்து மீட்டருளும் எல்லாரையும் விண்ணுலகப் பாதையில் நடத்தியருளும், உமது இரக்கம் யாருக்கு அதிகத் தேவையோ, அவர்களுக்கு சிறப்பான உதவி புரியும்.

நான்கு மறை உண்மைகள்

மகிழ்ச்சி நிறை மறை உண்மைகள்

1. கபிரியேல் வானதூதர் கன்னிமரியாவுக்கு கிறிஸ்து பிறப்பை முன்னறிவித்ததைத் தியானித்து, தாழ்ச்சி என்னும் வரத்தைக் கேட்டுச் செபிப்போமாக! 
 
2. கன்னி மரியா எலிபெத்தைச் சந்தித்ததைத் தியானித்து, பிறரன்பு என்னும் வரத்தைக் கேட்டு செபிப்போமாக. 
 
3. இயேசு பிறந்ததைத் தியானித்து, எளிமை என்னும் வரத்தைக் கேட்டு செபிப்போமாக! 

4. இயேசுவை கோயிலில் காணிக்கையாக அர்ப்பணித்ததைத் தியானித்து, இறைவனின் திருவுளத்துக்குப் பணிந்து நடக்கும் வரத்தைக் கேட்டு செபிப்போமாக! 
 
5. காணாமற் போன இயேசுவைக் கண்டடைந்ததை தியானித்து, நாம் அவரை எந்நாளும் தேடும் வரத்தைக் கேட்டு செபிப்போமாக!

ஒளியின் மறை உண்மைகள்

1. இயேசு யோர்தான் ஆற்றில் திருமுழுக்கு பெற்றதை தியானித்து, தூய ஆவியாரின் அருட்பொழிவை வேண்டி செபிப்போம். 
 
2. கானாவூர் திருமணத்தில் இயேசு தண்ணீரை திராட்சை இரசமாக மாற்றியதை தியானித்து, நம்மில் இறையன்பு பெருகிட வேண்டி செபிப்போம். 
 
3. இயேசு விண்ணரசைப் பறைசாற்றியதை தியானித்து, இறையாட்சி யின் விழுமியங்களுக்கு சாட்சிகளாக வாழ வேண்டி செபிப்போம். 
 
4. இயேசு தாபோர் மலையில் உருமாற்றம் பெற்றதை தியானித்து, தீயவற்றிலிருந்து மனமாற்றம் பெற வேண்டி செபிப்போம். 
 
5. இயேசு கடைசி இரா விருந்துண்டதையும் நற்கருணையை ஏற்படுத்தியதையும் தியானித்து, இறைபக்தி என்னும் வரம் வேண்டி செபிப்போம்.

துயர் நிறை மறை உண்மைகள்

1. இயேசு கெத்சமனித் தோட்டத்தில் இரத்தம் வியர்த்ததைத் தியானித்துத் துன்பங்களை ஏற்கும் வரத்தைக் கேட்டு செபிப்போம்! 
 
2. இயேசு கற்றூணில் கட்டுண்டு அடிக்கப்பட்டதைத் தியானித்து உடலின் புலன்களை அடக்கி வாழும் வரத்தைக் கேட்டு செபிப்போம்! 
 
3. இயேசுவுக்கு முள்முடி சூட்டப்பட்டதை தியானித்து அவமானங்கள், தாழ்த்தப்படுதல் போன்றவற்றை திடமனத்துடன் ஏற்கும் வரத்தைக் கேட்டு செபிப்போம்! 
 
4. இயேசு சிலுவை சுமந்ததை தியானித்து வாழ்வின் சிலுவைகளை இயேசுவோடு சேர்ந்து சுமக்கும்வரத்தைக் கேட்டு செபிப்போம். 
 
5. இயேசு சிலுவையில் உயிர்விட்டதை தியானித்து தீமை செய்தவர்களை மன்னிக்கும் வரத்தைக் கேட்டு செபிப்போம்!

மாட்சி நிறை மறை உண்மைகள்

1. இயேசு உயிர்த்தெழுந்ததைத் தியானித்து, உயிருள்ள விசுவாசத்துடன் வாழ செபிப்போமாக! 
 
2. இயேசுவின் விண்ணேற்றத்தைத் தியானித்து, நம்பிக்கையுடன் விண்ணக வாழ்வைத் தேடும் வரம் கேட்போமாக! 
 
3. தூய ஆவியாரின் வருகையைத் தியானித்து, நாம் அனைவரும் ஆவியாரின் ஒளியையும் அன்பையும் பெற செபிப்போமாக! 
 
4. இறையன்னையின் விண்ணேற்பைத் தியானித்து, நாமும் விண்ணக மகிமையில் பங்குபெற செபிப்போமாக! 
 
5. இறையன்னை விண்ணக மண்ணக அரசியாக மணிமுடி சூட்டப் பெற்றதைத் தியானித்து, நம் அன்னையின் மீது ஆழ்ந்த பக்தி கொள்ள செபிப்போமாக!


இறுதி செபம்: 

அதிதூதரான தூய மிக்கேலே, வானதூதர்களான தூய கபிரியேலே, இரஃபேலே திருத்தூதர்களான தூய பேதுருவே, பவுலே, யோவானே, யாக்கோபே, நாங்கள் எத்தனை பாவிகளாய் இருந்தாலும், நாங்கள் மன்றாடிய இந்த ஐம்பத்து மூன்று மணி செபத்தையும் உங்கள் புகழ்ச்சியோடு ஒன்றாகச் சேர்த்துத் புனித அன்னை மரியாவின் திருப்பாதத்தில் காணிக்கையாக வைக்க உங்களை மன்றாடுகிறோம் – ஆமென்


கிருபை தயாபத்து செபம் 

கிருபை தயாபத்துக்கு மாதாவாயிருக்கிற எங்கள் இராக்கினியே வாழ்க! எங்கள் ஜீவியமே, எங்கள் தஞ்சமே, எங்கள் மதுரமே வாழ்க! பரதேசிகளாயிருக்கிற நாங்கள் ஏவையின் மக்கள், உம்மைப் பார்த்து கூப்பிடுகிறோம். இந்தக் கண்ணீர்க் கணவாயிலே நின்று பிரலாபித்தழுது, உம்மையே நோக்கிப் பெருமூச்சு விடுகிறோம். ஆதலால் எங்களுக்காக வேண்டி மன்றாடுகிற தாயே, உம்முடைய தயாளமுள்ள திருக்கண்களை எங்கள் பேரில் திருப்பியருளும். இதன்றியே நாங்கள் இந்தப் பரதேசம் கடந்த பிற்பாடு உம்முடைய திருவயிற்றின் கனியாகிய இயேசுநாதருடைய பிரத்தியட்சமான தரிசனத்தை எங்களுக்குத் தந்தருளும். கிருபாகரியே, தயாபரியே, பேரின்ப இரக்கமுள்ள கன்னிமரியாயே! - 

இயேசு கிறிஸ்து நாதருடைய வாக்குறுதிகளுக்கு நாங்கள் தகுதி உள்ளவர்களாகும்படி 

- இறைவனின் தூய அன்னையே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். -ஆமென். 

செபிப்போமாக
என்றும் வாழும் எல்லாம் வல்ல இறைவா! அருள் மிகப் பெற்ற கன்னித்தாயான மரியாயினுடைய ஆன்மாவும் உடலும் தூய ஆவியாரின் கருணையால் உம்முடைய திருமகனுக்கு உகந்த தூய பீடமாயிருக்க ஏற்கெனவே நியமித்தருளினீரே. அந்த புனித தாயை நினைத்து மகிழ்கிற நாங்கள் அவளுடைய இரக்கமுள்ள மன்றாடினாலே இவ்வுலகில் அனைத்து தீமைகளினின்றும் முடிவில்லா இறப்பினின்றும் மீட்கும்படி அருள்புரிந்தருளும். இந்த மன்றாட்டுக்களையெல்லாம் எங்கள் ஆண்டவராகிய இயேசுநாதருடைய திருமுகத்தைப் பார்த்து எங்களுக்குத் தந்தருளும். -ஆமென். 


புனித பெர்னார்து கன்னிமரியிடம் வேண்டின ஜெபம்: 

மிகவும் இரக்கமுள்ள தாயே! தூய கன்னி மரியே! இதோ.. உம்முடைய அடைக்கலமாக ஓடிவந்து சரணடைந்து உமது அருட்காவலை மன்றாடிய ஒருவரையும் நீர் கைவிட்டதாக உலகில் ஒருபோதும் சொல்லக் கேள்விப்பட்டதில்லை என்பதை நினைத்தருளும் கன்னியருடைய அரசியான கன்னியே தயையுள்ள தாயே! இப்படிப்பட்ட நம்பிக்கையால் நான் தூண்டபெற்று அடியேன் உம் திருப்பாதம் அண்டி வருகிறேன். பாவியாகிய நான் உம் திருமுன் துயரத்தோடு உமது இரக்கத்திற்காக காத்து நிற்கிறேன். மனுவுருவான திருமகனின் தாயே! எம் மன்றாட்டைப் புறக்கணியாமல் எனக்காக தயவாய் வேண்டிக்கொள்ளும். -ஆமென்

ஜென்ம பாவமில்லாமல் உற்பவித்த புனித மரியாயே பாவிகளுக்கு அடைக்கலமே இதோ உமது அடைக்கலமாக ஓடிவந்தோம். எங்கள் பேரில் இரக்கமாயிரும் எங்களுக்காக உம்முடைய திருக்குமாரனை வேண்டிக்கொள்ளும். - அருள் நிறைந்த மரியே... (3-முறை)


மரியன்னை மன்றாட்டு மாலை

ஆண்டவரே இரக்கமாயிரும் 
 கிறிஸ்துவே இரக்கமாயிரும் 
 ஆண்டவரே இரக்கமாயிரும் 

கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் 
கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டைக் கனிவாகக் கேட்டருளும் 

 விண்ணகத்திலிருக்கிற தந்தையாகிய இறைவா - எங்கள் மேல் இரக்கமாயிரும் 
 உலகத்தை மீட்ட திருமகனாகிய இறைவா 
 தூய ஆவியாராகிய இறைவா 
 தூய்மைமிகு மூவொரு இறைவா 

 புனித மரியே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் 
 இறைவனின் புனித அன்னையே 
 கன்னியருள் புனித கன்னியே 
 கிறிஸ்துவின் அன்னையே 
 திருஅவையின் அன்னையே 
 இரக்கத்தின் அன்னையே 
 இறையருளின் அன்னையே 
 எதிர்நோக்கின் அன்னையே 
 தூய்மைமிகு அன்னையே 
 கன்னிமை குன்றா அன்னையே 
 மாசு இல்லாத அன்னையே 
 பாவக் கறையில்லா அன்னையே 
 அன்புக்குரிய அன்னையே 
 வியப்புக்குரிய அன்னையே 
 படைத்தவரின் அன்னைய 
 மீட்பரின் அன்னையே 
 பேரறிவுமிகு கன்னியே 
 வணக்கத்திற்குரிய கன்னியே 
 போற்றுதற்குரிய கன்னியே 
 வல்லமையுள்ள கன்னியே 
 பரிவுள்ள கன்னியே 
 நம்பிக்கைக்குரிய கன்னியே 
 நீதியின் கண்ணாடியே 
 ஞானத்திற்கு உறைவிடமே 
 எங்கள் மகிழ்ச்சியின் காரணமே 
 ஞானப் பாத்திரமே 
 மாட்சிக்குரிய பாத்திரமே 
 பக்தி நிறைந்த பாத்திரமே 
 மறைபொருளின் ரோசா மலரே 
 தாவீது அரசரின் கோபுரமே 
 தந்த மயமான கோபுரமே 
 பொன் மயமான கோவிலே 
 உடன்படிக்கையின் பேழையே 
 விண்ணகத்தின் வாயிலே 
 விடியற்கால விண்மீனே 
 நோயுற்றோரின் ஆரோக்கியமே 
 பாவிகளுக்கு அடைக்கலமே 
 புலம்பெயர்ந்தோருக்கு ஆறுதலே 
 துயருறுவோருக்குத் ஆறுதலே 
 கிறிஸ்தவர்களின் துணையே 
 வானதூதர்களின் அரசியே 
 முதுபெரும் தந்தையரின் அரசியே 
 இறைவாக்கினர்களின் அரசியே 
 திருத்தூதர்களின் அரசியே 
 மறைசாட்சிகளின் அரசியே 
 இறையடியார்களின் அரசியே 
 கன்னியர்களின் அரசியே 
 அனைத்துப் புனிதர்களின் அரசியே 
 அமல உற்பவியான அரசியே 
 விண்ணேற்பு அடைந்த அரசியே 
 திருச்செபமாலையின் அரசியே 
 குருக்களின் அரசியே 
 குடும்பங்களின் அரசியே 
 அமைதியின் அரசியே 
 இந்திய நாட்டின் அரசியே

உலகத்தின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே-3 
 
எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும் 
 # எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் 
 # எங்களைத் தயை செய்து மீட்டருளும்

இறைவனுடைய புனித அன்னையே, இதோ உம்மிடம் அடைக்கலம் நாடி ஓடிவந்தோம். எங்கள் தேவைகளில் எங்களை புறக்கணியாதேயும்.  மாட்சிக்குரிய கன்னியே! விண்ணுலகப் பேறுபெற்ற அரசியே! அனைத்துத் துன்பங்களிலிருந்தும் எங்களை காத்தருளும்.

கிறிஸ்துவின் வாக்குறுதிகளுக்கு நாங்கள் தகுதி பெறும்படி 
 # இறைவனின் தூய அன்னையே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

மன்றாடுவோமாக
இறைவா, முழுமனதுடன் உம் திருத்தாள் பணிந்திருக்கும் இக்குடும்பத்தைக் கண்ணோக்கியருளும். எப்பொழுதும் கன்னியான புனித மரியாவின் பரிந்துரையால், பகைவர் அனைவரின் தாக்குதலிலிருந்து எங்களை மீட்டருளும். எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம். ஆமென்.


நற்கருணை நாதரை ஆராதிக்க: 
நிலையான புகழுக்குரிய தூய இறை நன்மைக்கே, எல்லா காலமும், தொழுகையும் புகழும் போற்றியும் மாட்சிமையும் உண்டாகக் கடவது.