திருவருகைக் கால முதல் வார ஞாயிறு
படைப்பு
வாசகம்: தொடக்க நூல் 1:1 - 2:3
சிந்தனை:
ஈசாய் மர பக்தி முயற்சி படைப்போடு தொடங்குகிறது. நாம் கண்டு அனுபவிக்கிற அனைத்தும் கடவுளின் உன்னதமான படைப்பு என்பதை இது உணர்த்துகிறது. தொடக்கத்தில் கடவுள் விண்ணகத்தையும், மண்ணகத்தையும் அனைத்து உயிரினங்களையும் படைத்த, அவை அனைத்தும் நல்லது எனக் கண்டார். ஒழுங்கின்மையிலிருந்து இணக்கத்தை உருவாக்கி, மனித குலத்திற்கு தன் மூச்சுக் காற்றை அளித்து தன்னுடைய சாயலில் மனிதர்களைப் படைத்த கடவுளின் அன்புச் செயலை எடுத்துரைக்கிறது. இது கடவுளின் கொடைத் திறனையும், அக்கறையையும் பிரதிபலிக்கிறது. உலகின் ஒவ்வொரு பகுதியும் ஒரு இலக்குடனும், அழகுடனும், படைக்கப்பட்டு மனிதர்களின் ஆளுமைக்குக் கொடுக்கப்பட்டது. இது படைப்பின் மீது நமக்குள்ள பொறுப்பையும் இறைத் திருவுளத்திற்கேற்ப இணக்கமாக வாழ்வு வாழவும் நமக்கு நினைவூட்டுகிறது.
செபம்:
விண்ணகத் தந்தையே இறைவா! அழகாக இவ்வுலகைப் படைத்து அதில் உம் சாயலில் எங்களையும் படைத்ததற்காக நன்றி. எங்களைச் சுற்றியுள்ள உலகில் உமது மாட்சியைக் காணவும், பூமியை நீர் எங்களிடம் ஒப்படைத்ததைப் போல பராமரிக்கவும் எங்களுக்கு உதவி புரியும். ஆமென்.
