திருவருகைக் கால முதல் வார திங்கள்
ஆதாம் - ஏவாள்
வாசகம்: தொடக்க நூல் 3:1-7
சிந்தனை:
இன்று ஆதாம் ஏவாளின் கதை நமக்கு நினைவூட்டப்படுகிறது. படைப்புச் செயலில் ஆதாமும் ஏவாளும் கடவுளோடு மனித இனம் கொண்ட தனித்துவமான உறவு நிலையின் மைய அடையாளங்கள். இவர்கள் இயேசுவின் வழிமரபில் முதன்மையான முன்னோர்கள். கடவுளின் சாயலில் படைக்கப்பட்டு, அவருடைய உயிர் மூச்சின் மூலம் உயிர் பெற்று, அவருடன் இணக்கமாக வாழ ஏதேன் தோட்டத்தில் வைக்கப்பட்டவர்கள்.
இவர்களுடைய கீழ்ப்படிதலின்மையால் விலக்கப்பட்ட மரத்தின் கனியை உண்டனர். அதனால் பாவத்தை இவ்வுலகிற்கு கொண்டு வரப்பட்டு துன்பமும் இறப்பும் இவ்வுலகில் அறிமுகப்படுத்தப்பட்டது. எனினும், கடவுள் அவர்களுடைய தோல்வியிலும்கூட, அவர்களைக் கைவிடவில்லை. அவர்களை உடுத்தி, உணவளித்து, ஒரு மீட்பரை வாக்களித்தார் (தொநூ 3:15), இதன் மூலம் இயேசு கிறிஸ்துவின் வழி வரும் இறுதிகால மீட்பை முன்னறிவித்தார்.
ஆதாம்-ஏவாளின் கதை பாவத்தின் விளைவுகளை நமக்கு நினைவூட்டுகிறது. ஆயினும் கடவுளின் இரக்கத்தையும் இழந்ததை மீட்டெடுக்கும் அவரது விருப்பத்தையும் நினைவூட்டுகிறது. புதிய ஆதாமான இயேசு, பாவத்தையும் இறப்பையும் வென்று நம்மை மீண்டும் இறை உறவிற்குள் கொண்டுவருவதற்கான மீட்பின் திட்டத்திற்கான அரங்கை அமைக்கிறது.
செபம்:
விண்ணகத் தந்தையே இறைவா! நாங்கள் தோல்வியுற்ற போதும் நீர் காட்டிய இரக்கத்திற்காகவும் அன்பிற்காகவும் நன்றி கூறுகின்றோம். நாங்கள் பாவத்திலிருந்து விலகி, நீர் எங்களுக்காக அமைத்துள்ள பாதையில் செல்லவும், உமது மீட்பின் வாக்குறுதியில் நாங்கள் எப்போதும் நம்பிக்கை கொள்ளவும் உதவி புரிய வேண்டுமென்று எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வழியாக மன்றாடுகின்றோம். ஆமென்.
