Wednesday, 30 November 2022

ஈசாய் மரம் - திருவருகைக் கால முதல் வார வியாழன்

திருவருகைக் கால முதல் வார வியாழன்

ஈசாக்கு

வாசகம்: தொடக்க நூல் 22: 1 - 19 

சிந்தனை:

ஆபிரகாமும் சாராவும் நீண்டகாலமாக எதிர்பார்த்த மகனான ஈசாக்கு, ஆபிரகாமை பல நாடுகளுக்கு தந்தையாக்கும் இறைவாக்குறுதி நிறைவேற்றப்பட்டதை அடையாளப்படுத்துகிறார். கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை என்பதைக் காட்டும் அவரது பிறப்பு ஒரு அதிசயம். ஈசாக்கின் வாழ்க்கை கடவுளின் உண்மைத்தன்மையை உணரவும் அவர் மீது நம்பிக்கைக் கொள்ளவும் நம்மை அழைக்கிறது.

கடவுள் ஆபிரகாமின் நம்பிக்கையைச் சோதித்தப் பார்க்க ஈசாக்கை பலியிடுமாறு கேட்டார். இது ஈசாக்கினுடைய வாழ்வில் நடந்த முக்கியமான நிகழ்வுகளில் ஒன்று. தன்னைத் தான் தன் தந்தை பலியிடப் போகிறார் என்பதை அறியாமலேயே பலியிடுவதற்குத் தேவையான விறகு கட்டைகளை ஈசாக்கு மோரியா மலைமீது சுமந்து சென்றார்.  

ஆபிரகாம் கடவுள் மீத முழுமையான நம்பிக்கை வைத்தார். அவருடைய திட்டத்தை நம்பினார். ஆகையால் கடவுள் இறுதியில் ஈசாக்கிற்கு பதிலாக ஆட்டுக்கிடாயை பலியிடுமாறு பணித்தார். இந்நிகழ்வு சிலுவை மரத்தை சுமந்து உலகின் பாவங்களுக்கு இறுதி பலியாக மாறிய கடவுளின் ஆட்டுக்குட்டியான இயேசுவை முன்னறிவிக்கிறது. ஈசாக்கு செய்யவீருந்த தியாகம் கடவுளின் அன்பையும் பராமரிப்பையும் சுட்டிக்காட்டுகிறது, இது அவருடைய மகன் மூலம் மனிதகுலத்தை மீட்பதற்கான அவரது திட்டத்தின் ஆழத்தை நமக்கு நினைவூட்டுகிறது.

செபம்:

கருணைக் கடலே இறைவா! ஆபிரகாமுக்கும் ஈசாக்கிற்கும் உமது பராமரிப்பை நல்கி உமது வாக்குறுதியை நிறைவேற்றியதற்காக உமக்கு நன்றி கூறுகின்றோம். உமது திட்டங்களில் நம்பிக்கை வைத்து உமது ஆசீர்வாதங்களை எங்கள் வாழ்வில் காண எங்களுக்கு உதவு புரியும். ஆமென்.