திருவருகைக்காலம் ஒரு முன்னோட்டம்
திருவழிபாட்டு ஆண்டு என்பது திருவழிபாட்டிற்காக திருநாட்களையும் சடங்குகளையும் கணித்து, வகுத்து திரு அவை ஏற்படுத்தியிருக்கும் காலச் சுழற்சி ஆகும். ஓர் ஆண்டு காலச் சுழற்சிக்குள் இயேசு கிறிஸ்துவின் பிறப்பு, வாழ்வு, பாடுகள், இறப்பு, உயிர்ப்பு, விண்ணேற்றம் ஆகிய மீட்பளிக்கும் பாஸ்கா மறைநிகழ்வுகள் நினைவு கூரப்பட்டு கொண்டாடப்படுகின்றன.
திருவழிபாட்டு ஆண்டானது ஆறு முக்கிய பிரிவுகளாக பிரிக்கப்படுகின்றன. இவை முறையே: திருவருகைக்காலம், கிறிஸ்து பிறப்பு காலம், திருக்காட்சிப் பெருவிழாவுக்குப் பின்வரும் பொதுக்காலம், தவக்காலம், பாஸ்கா காலம், ஆண்டின் பொதுக்காலம். இது திருவருகைக்கால முதல் ஞாயிறு அன்று தொடங்கி கிறிஸ்து அரசர் பெருவிழாவுக்குப் பின்வரும் சனிக்கிழமை அன்று முடிவடைகின்றது.
திருவருகைக் காலம் என்றால் என்ன?
திருவருகைக்காலம் என்ற வார்த்தை 'யுனஎநவெ' என்ற ஆங்கில வார்த்தையின் தமிழாக்கமாகும். இது 'வருகை' எனப் பொருள்படும் 'யுனஎநவெரள' (அத்வெந்துஸ்)' என்கிற லத்தின் வார்த்தையிலிருந்து பிறந்தது. இதனை பழைய தமிழ் வழக்கில் 'ஆகமன காலம்' என்பர்.
திருவருகைக் காலத்துக்கு இரு பண்புகள் உள்ளன: இறைமகன் மனிதரிடையே முதல் முறை வந்ததை நினைவுகூரும் கிறிஸ்து பிறப்புப் பெருவிழாக் கொண்டாட்டங்களின் தயாரிப்புக் காலம் ஆகும்; அவ்வாறே காலத்தின் நிறைவில் நிகழும் கிறிஸ்துவின் இரண்டாம் வருகையை எதிர்பார்த்திருக்க உள்ளங்கள் தூண்டப்படும் காலமும் அதுவே. இவ்விரு காரணங்களால் திருவருகைக் காலம் இறைப்பற்றும் மகிழ்ச்சியும் நிறைந்த எதிர்பார்ப்பின் காலமாக விளங்குகின்றது. இது நவம்பர் 30-ஆம் நாளில் அல்லது அதற்கு அண்மையில் வரும் ஞாயிற்றுக்கிழமை, முதல் மாலைத் திருப்புகழோடு தொடங்கி, கிறிஸ்து பிறப்பு விழாவின் முதல் மாலைத் திருப்புகழுக்குமுன் முடிவடையும். (வழிபாட்டு பொது விதிமுறை எண். 39, 40)
திருவருகைக்காலம் என்பது இயேசு கிறிஸ்துவின் பிறப்புப் பெருவிழாவுக்கு முந்தைய நான்கு வார காலமாகும். கிறிஸ்தவ திருஅவையின் புது வருடம் திருவருகைக்கால முதல் ஞாயிற்றுக்கிழமையிலிருந்து தொடங்குகிறது. இது இயேசு கிறிஸ்துவின் பிறப்புப் பெருவிழாவிற்காக தகுதியான முறையில் நம்மை தயாரித்து கொண்டாட அழைக்கும் காலம். இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையை நினைவுபடுத்தி அதை எதிர்நோக்கி நம்மை தயாரித்துக் கொள்ள இது நம்மைத் தூண்டுகிறது.
கத்தோலிக்கத் திரு அவையின் மறைக்கல்வி நூல் திருவருகைக் காலத்தின் இரு நோக்கங்களை இவ்வாறு எடுத்துரைக்கிறது:
'ஒவ்வொரு ஆண்டும் திரு அவை திருவருகைக்கால வழிபாட்டைக் கொண்டாடும் போது முற்காலத்தில் மெசியாவின் வருகைக்காக மக்கள் கொண்டிருந்த எதிர்பார்ப்பை நம் கண்முன் நிறுத்துகிறது. மீட்பரின் முதல் வருகைக்கான தயாரிப்பில் பங்கேற்பதன் வாயிலாக கிறிஸ்தவ நம்பிக்கையாளர்கள் இயேசுவின் இரண்டாம் வருகைக்கான தங்கள் ஆர்வத்தைப் புதுப்பித்துக் கொள்கிறார்கள்' (க.தி.ம. எண் 524).
கிறிஸ்துமஸ் - பெயர்க்காரணம்
மத்திய காலத்திலிருந்து தான் கிறிஸ்துவின் பிறந்த நாள் கொண்டாட்டத்தை ஒரு சிறப்புத் திருப்பலி மூலம் நள்ளிரவில் நிறைவேற்றும் வழக்கம் ஆரம்பித்தது. நள்ளிரவில் திருப்பலி நடத்துவது கிறிஸ்து பிறப்பு நாளில் மட்டுமே கொண்டாடப்பட்டது. இந்த திருப்பலியை 'ஊhசளைவ ஆயளள' அதாவது 'கிறிஸ்துவின் திருப்பலி' என்று அழைக்கப்பட்டது. இதுவே நாளடைவில் 'கிறிஸ்துமஸ்' ஆக மருவியது.
கிறிஸ்துமஸ்: ஒரு வரலாற்றுப் பார்வை
கிறிஸ்துமஸ் தோன்றிய வரலாற்றை பற்றி அலசிப் பார்க்கும் பொழுது பல விதமான யூகங்கள் இடர்பட்டாலும் இயேசு இவ்வுலகில் மனிதராக பிறந்தார் என்பது ஒரு சரித்திர சான்று, அதை யாராலும் மறுக்க இயலாது.
உரோமை அரசர் அவூரேலியுஸ் என்பவர் கி.பி. 274ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25ஆம் தேதியை சூரிய கடவுளுக்கான விழாவாக கொண்டாட ஆணையிட்டான். நான்காம் நூற்றாண்டில் அரசர் கான்ஸ்டன்டைன் கிறிஸ்தவ மதத்தை உரோமை அரச மதமாக மாற்றியதன் காரணமாக அக்காலத்தில் வாழ்ந்த அனைத்து புற இன மக்களின் விழாக்களும் கிறிஸ்தவ சாயலை ஏற்றன. அதன்படி, சூரியப் பெருவிழாவான டிசம்பர் 25ஆம் தேதி இயேசுவின் பிறப்பு விழாவாக மாற்றங்கண்டு 336ஆம் ஆண்டில் முதன் முதலில் கிறிஸ்துமஸ் விழாவானது கொண்டாடப்பட்டது.. அதனை திருத்தந்தை முதலாம் ஜீலியஸ் அவர்கள் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.
ஆனால் 'உரோமையர்களின் கலைக்களஞ்சியம்' என்ற நூலில், அகுஸ்துஸ் சீசர் பேரரசராக இருந்தபோது டிசம்பர் மாதம் 25-ம் நாள், அதாவது அம்மாவாசையிலிருந்து 15 நாட்களுக்கு பிறகு வந்த வெள்ளியன்று இயேசு பிறந்தார் என குறிப்பிடப்படுகின்றது. பல நூல்கள் தரும் விளக்கங்களை பார்க்கும் பொழுது கான்ஸ்டன்டைன் காலத்திற்கு முன்பாகவே கிறிஸ்துமஸ் விழா டிசம்பர் மாதம் 25-ம் நாள் கொண்டாடப்பட்டது என கருதப்படுகிறது.
உரோமை ஆயர் லிபெரியஸ் என்பவர் கி.பி. 354-இல் கிறித்தவர்களுக்கு விடுத்த ஆணையில் டிசம்பர் 25-ஆம் தேதியை இயேசுவின் பிறந்த நாளாக கொண்டாட வேண்டும் என்று கட்டளைப் பிறப்பித்தார். இவ்வாறாக, உரோமை குலதெய்வங்களின் வழிபாட்டிற்குப் போட்டியாக, அதே நாளில் அதாவது டிசம்பர் 25-ஆம் நாளன்று இவ்விழாவைச் சிறப்பிக்க திரு அவை தீர்மானித்தது. எகிப்து, பாலஸ்தீனம், எருசலேம் ஆகிய திரு அவைகளும் காலப்போக்கில் இதனை ஏற்றுக்கொண்டன.
ஏன் டிசம்பர் 25?
உரோமையர்கள், கிரேக்கர்கள் தங்களின் அரசர்களுக்கும் ஆளுநர்களுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் பிறந்தநாள் கொண்டாடுவது மரபு. இதற்குச் சான்று ஏரோதின் பிறந்த நாள் விழா (மத் 14:6). ஒவ்வோர் ஆண்டும் உரோமையில் 'சூரியனின் பிறப்பு விழா' டிசம்பர் 25-ஆம் நாளில் கிறிஸ்தவர்கள் அல்லாத உரோமையர்களால் கொண்டாடப்பட்டு வந்தது. அப்போது உரோமையை ஆண்டு வந்த அரசர் அவூரேலியுஸ் என்பவர் பால்மியூரா மன்னனை வெற்றி கொண்டதின் நினைவாக, கி.பி. 274ஆம் ஆண்டு சூரியக் கடவுளை பாதுகாவலாக அறிக்கையிட்டு, டிசம்பர் மாதம் 25ஆம் தேதியை சூரிய கடவுளுக்கான விழாவாக கொண்டாட ஆணையிட்டான். கிறிஸ்து மட்டுமே உண்மையான 'உலகின் ஒளி' (யோவா 8:12) என்று நம்பிய கிறிஸ்தவர்களுக்கு இது ஈர்ப்பைக் கொடுத்தது. அதிலிருந்து கிறிஸ்தவர்களை காக்க உரோமை திரு அவையானது கிறிஸ்து பிறப்பு விழாவை அந்நாளிலேயே கொண்டாடத் தொடங்கியது.
வரலாற்று ஏடுகளை பார்க்கிறபோது, புனித ஜான் கிறிஸ்சோஸ்தோம் கிறிஸ்து உண்மையில் டிசம்பர் 25-இல் பிறந்தார் என்று குறிப்பிடுகிறார். இவரது ஆய்வுப்படி, செக்கரியா ஆலயத்தில் பணி செய்து கொண்டிருந்த நாள், பாவப் பரிகார நாள் (Day of Atonement), செப்டம்பர் 24, அன்றுதான் கோடைக்கால சூரியனுக்கு விழாவும் கொண்டாடப்பட்டது. இன்று பகல் குறைந்திருக்கும் ஆதலால், ஜான் கிறிஸ்சோஸ்தோம் கூற்றை அடித்தளமாக வைத்து, 'அவர் வளரவும், நாள் குறையவும்' என்பதற்கொப்ப, செப்டம்பர் 24-இல் திருமுழுக்கு யோவான் கருவாகி ஜூன் மாதம் 24-இல் பிறந்தார். திருமுழுக்கு யோவான் பிறந்த நாளிலிருந்து ஆறு மாதங்கள் கணக்கிட்டால் டிசம்பர் 25. ஏனெனில், மரியாவுக்கு தூதர் வாழ்த்துக் கூறி சம்மதம் கேட்டபோது, எலிசபெத்திற்கு ஆறாம் மாதம் (லூக் 1:36).
மேலும் திரு அவையின் தந்தையர்கள் மார்ச் மாதம் 25-ம் தேதி கபிரியேல் தூதர் மரியாளுக்கு தூதுரை சொல்லியிருக்க வேண்டும் என்று பதிவு செய்கிறார்கள். அந்நாளை யூதச் சமூகத்தினர் சிலரும், முதல் கிறிஸ்தவ பாரம்பரியங்களும், படைப்பின் முதல் நாளாக கருதி வந்ததுமுண்டு. ஆகவே அந்நாளிலிருந்து சரியாக ஒன்பது மாதங்கள் கழிந்து அதாவது டிசம்பர் 25ம் தேதி இயேசு பிறந்திருக்க வேண்டும் என கருதினார்கள்.
ஆனால் வரலாற்றை சிறிது அலசிப் பார்க்கும் போது கிழக்கத்திய திரு அவையினர் இன்றும் இயேசுவின் பிறப்பை சனவரி ஆறாம் தேதி கொண்டாகின்றனர்.
- திருவருகைக் காலத்தின் முதல் ஞாயிறு முதல் டிசம்பர் 16 வரை இயேசுவின் இரண்டாம் வருகையை இறைவேண்டல்களும் விவிலிய வாசகங்களும் நமக்கு நினைவுட்டுகின்றன.
- டிசம்பர் 17 தொடங்கி 24 முடிய உள்ள நாட்கள் இயேசு கிறிஸ்துவின் பிறப்புப் பெருவிழாவின் தயாரிப்புக் காலமாக உள்ளது. இதில் பெரும்பாலும் இயேசுவை இவ்வுலகிற்கு கொண்டு வர தன் கருப்பையை ஆலயமாக்கிய அன்னை மரியா மையப்பொருளாகிறார்.
- இயேசுவின் பிறப்பு எனும் முதல் வருகை (வரலாற்று வருகை)
- கிறிஸ்தவ நம்பிக்கையாளர்களின் இதயங்களில் இயேசுவின் வருகை (வாழ்வில் வருகை)
- இயேசுவால் வாக்களிக்கப்பட்ட அவரது இரண்டாம் வருகை (மாட்சிமிகு வருகை)
| வாரம் | மையக்கருத்து | நினைவு |
|---|---|---|
| 1 | எதிர்நோக்கு | மூதாதையர் |
| 2 | அமைதி | இறைவாக்கினர் |
| 3 | மகிழ்ச்சி | திருமுழுக்கு யோவான் |
| 4 | அன்பு | இயேசுவின் தாய் மரியா |
| - | உலகின் ஒளி | இயேசு கிறிஸ்து |
