திருவருகைக்கால முதல் வார வெள்ளி
யாக்கோபு
வாசகம்: தொடக்க நூல் 28:10-22
சிந்தனை:
இன்று நாம் யாக்கோபின் ஏணியை அடையாளமாக ஈசாய் மரத்தில் சேர்க்கிறோம். இது விண்ணகத்தைப் பற்றியும் இறைஉறவினைப் பற்றியும் யாக்கோபு கண்ட கனவினை நமக்கு நினைவூட்டுகிறது. யாக்கோபு தன் அண்ணனை ஏமாற்றி அவனது உரிமையை தான் பறித்துக் கொண்டாலும் கடவுள் அவரை இஸ்ரயேலின் 12 குலங்களுக்கு தந்தையாக ஆக்கினார்.
யாக்கோபு தான் கண்ட கனவில் வானதூதர்கள் மேலே ஏறுவதும் கீழே இறங்குவதுமான காட்சி இறை மனித உறவையும் அவர் நமது வாழ்வில் தொடர்ந்து செயலாற்றுகிறார் என்பதையும் அடையாளப்படுத்துகிறது. இந்த ஏணி இயேசுவையும் அடையாளப்படுத்துவதாகக் கொள்ளலாம். இயேசு கிறிஸ்து மனிதராகப் பிறந்து விண்ணுக்கும் மண்ணுக்கும் இடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் ஒரு இணைப்பாலமாக மாறினார். நாம் செல்லும் பாதை நிச்சயமற்றதாய் இருப்பினும் கடவுளின் வாக்குறுதியின் மீது தொடர் நம்பிக்கை கொண்டு பயணிக்க யாக்கோபின் வாழ்வு நமக்கு அழைப்பு விடுக்கிறது. கடவுளின் அருள் நமது பலவீனங்களையும் அவருடைய மாட்சிக்கான வாய்ப்புகளாக மாற்றும் என்பதை இது நமக்கு நினைவூட்டுகிறது.
செபம்:
ஆண்டவரே, உமது திட்டத்தை நிறைவேற்ற யாக்கோபை போன்ற குறைவுள்ளோரைத் தேர்ந்தெடுத்து செயல்படுவதற்காக நன்றி. நீர் எப்போதும் எங்களுடன் இருந்து உம்மை நோக்கி எங்களை வழிநடத்துகிறீர் என்பதை அறிந்து, உம்முடைய இருப்பின்மீதும் உமது வாக்குறுதிகளின் மீதும் நம்பிக்கை வைக்க எங்களுக்கு உதவி செய்வீராக. ஆமென்.
