திருவருகைக்கால மூன்றாம் வார புதன்
எரேமியா
வாசகம்: எரேமியா 1:4-10, 2:4-13, 7:1-15, 8:22 - 9:11
சிந்தனை:
'அழுது புலம்பும் இறைவாக்கினர்' என்றழைக்கப்படும் எரேமியா, தேசிய நெருக்கடியிலும் வரவிருந்த நாடுகடத்தலின் போதும் யூதா மக்களுக்கு கடினமான செய்திகளை வழங்குவதற்காக கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடவுள் அவரிடம், 'தாய் வயிற்றில் உன்னை நான் உருவாக்கு முன்பே அறிந்திருந்தேன்ளூ நீ பிறக்குமுன்பே உன்னைத் திருநிலைப்படுத்தினேன்ளூ' (எரேமியா 1:5) என்று கூறினார். எரேமியாவால் முடியாது என்ற நிலை வந்த போதும், 'அஞ்சாதே. ஏனெனில், உன்னை விடுவிக்க நான் உன்னோடு இருக்கின்றேன்.' (எரேமியா 1:8) என்று கடவுள் அவருக்கு உறுதியளித்தார்.
மக்களை மனந்திரும்பி வாழ அழைப்பதும், கடவுளை விட்டு விலகிச் செல்வதால் ஏற்படும் விளைவுகளைப் பற்றி எச்சரிப்பதும் எரேமியாவின் பணியாக இருந்தது. அவரது வாழ்வில் குயவன் களிமண்ணை வடிவமைக்கும் காட்சி மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்று. (எரேமியா 18:1-10) இது கடவுள் தம்முடைய திருவுளத்தின்படி தம் மக்களை வடிவமைத்து மாற்றியமைக்க முடியும் என்பதைக் காட்டுகிறது. நிராகரிப்பையும், சிறை தண்டனையையும், துன்பங்களையும் எதிர்கொண்ட போதிலும், எரேமியா உண்மையுள்ளவராக இருந்தார்.
எச்சரிக்கைகளுக்கு மத்தியில், எரேமியாவும் எதிர்நோக்கை அளித்தார். ஒரு புதிய உடன்படிக்கையைப் பற்றி அவர் பேசினார் (எரேமியா 31:33). ஆதில் கடவுளுடைய சட்டம் மக்களின் இதயங்களில் எழுதப்படும். இந்த புதிய உடன்படிக்கை இயேசு கிறிஸ்துவின் மூலம் நிறைவேற்றப்பட்டது, அவர் நம்பிக்கைக் கொள்கிற அனைவருக்கும் மன்னிப்பையும் மனமாற்றத்தையும் வழங்குகிறார்.
செபம்:
ஆண்டவரே, எரேமியாவின் தைரியத்திற்கும் நம்பிக்கை நிறைந்த வாழ்வுக்கும் நன்றி. உமது திட்டங்கள் கடினமாக இருந்தாலும் அதில் நம்பிக்கை வைக்க எங்களுக்கு உதவு புரியும். உமது உண்மையை எங்களுக்குள் பொறித்து உம்மைப் பின்தொடர எங்கள் இதயங்களை வடிவமைத்தருளும். ஆமென்