திருவருகைக்கால இரண்டாம் வார வெள்ளி
சாமுவேல்
வாசகம்: 1 சாமுவேல் 3:1-21, 7:1-8:22, 9:15-10:9, 16:1-13
சிந்தனை:கடவுள் அன்னாவின் மன்றாட்டைக் கேட்டு அவருக்கு ஒரு ஆண் பிள்ளையை அளித்ததன் நன்றிக் கடனாக இறைப்பணிக்கென அவனை அர்ப்பணித்தார். அவர் தான் சாமுவேல். சிறுவனாக இருந்தபோது, சாமுவேல் குரு ஏலியின் பராமரிப்பில் கோவிலில் வசித்து வந்தார். ஓர் இரவு, கடவுள் தன்னை பெயர் சொல்லி அழைப்பதை சாமுவேல் கேட்டார். முதலில் கடவுளின் குரலை அவர் அடையாளம் காணவில்லை என்றாலும், பின் குரு ஏலியின் அறிவுரைக்கு ஏற்ப அவர் பணிவாகவும் வெளிப்படையாகவும் 'ஆண்டவரே, பேசும், உமது அடியான் கேட்கிறான்' (1 சாமுவேல் 3:10) என்று பதிலளித்தார்.
சாமுவேல் வளர்ந்து பெரியவனாகி ஓர் இறைவாக்கினராகவும், நீதித்தலைவராகவும், கடவுளின் உண்மையுள்ள ஊழியராகவும் திகழ்ந்தார்;. சவுலை முதல் அரசராகவும் அதன் பின் இஸ்ரயேலின் மிகப் பெரிய அரசரான தாவீதையும் திருப்பொழிவு செய்ததன் வழியாக வரலாற்றில் முக்கியமான பங்கு வகித்தார் இவர். சாமுவேலின் கீழ்ப்படிதலும் இறைக்குரலக்கு செவிமடுப்பதன் முக்கியத்துவத்தையும் நம் வாழ்வில் பின்பற்ற வேண்டும் என்பதை நமக்கு நினைவூட்டுகிறது.
அனைவரிலும் உயர்ந்த இறைவாக்கினரும், முதன்மையான குருவும், இணையிலா அரசருமான இயேசுவை சாமுவேலின் வாழ்வு சுட்டிக்காட்டுகிறது. சாமுவேலைப் போன்று இறைவனின் குரலுக்கு செவிமடுத்து ஆழ்ந்த நம்பிக்கையோடு அவருக்கு கீழ்ப்படிய அழைக்கப்படுகிறோம்.
செபம்:
ஆண்டவரே, உமது அழைப்பிற்கு செவிசாய்த்து உமக்கு உண்மையாக சேவை செய்த சாமுவேலின் முன்மாதிரியான வாழ்வுக்காக நன்றி. எங்கள் வாழ்வில் உமது குரலைக் கேட்கவும், திறந்த இதயத்துடன் பதிலளிக்கவும் எங்களுக்கு உதவி புரியும். ஒவ்வொரு நாளும் உமது சித்தத்தைப் பின்பற்ற எங்களுக்கு வழிகாட்டும். ஆமென்.
