திருவருகைக்கால மூன்றாம் வார செவ்வாய்
எசாயா
வாசகம்: எசாயா 1: 10-20, 2:3-14, 6: 1-13, 8: 11 - 9:7
சிந்தனை:
பழைய ஏற்பாட்டின் முக்கியமான இறைவாக்கினர்களுள் எசாயா இறைவாக்கினரும் ஒருவர். அறமும் ஆன்மிகமும் வீழ்ச்சியடைந்து கொண்டிருந்த போது யூத மக்களிடம் பேச கடவுளால் அழைக்கப்பட்டவர். ஆற்றல் வாய்ந்த கடவுளின் மாட்சியைக் காட்சியாகக் கனவில் கண்டதும் 'ஐயோ நான் அழிந்தேன். ஏனெனில் தூய்மையற்ற உதடுகளைக் கொண்ட மனிதன் நான்' என்று கூறி தன்னுடைய தகுதியற்ற நிலையை எண்ணி தன்னையே தாழ்த்திக் கொண்டார். ஆனால் கடவுள் பலி பீடத்திலிருந்து நெருப்புப் பொறி ஒன்றைக் குறட்டால் எடுத்து அவரை மன்னித்து தூய்மைப்படுத்தும் விதமாக அவருடைய உதட்டினை சுட்டார். (எசாயா 6:5-7)
தீர்ப்பு, எதிர்நோக்கு, மீட்டுக் கொணர்தல் போன்றவற்றைப் பற்றி தைரியமாக அறிவித்தார். வரப்போகும் மெசியாவைப் பற்றி பல இறைவாக்குகளை உரைத்திருக்கிறார். அவற்றுள்,
• காரிருளில் நடந்துவந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள்ளூ (எசாயா 9:2)
• அவர் திருப்பெயரோ 'வியத்தகு ஆலோசகர், வலிமைமிகு இறைவன், என்றுமுள தந்தை, அமைதியின் அரசர்' (எசாயா 9:6)
• நம் துன்பங்களை சுமக்கும் துன்புறும் ஊழியரைப் பற்றி இவர் பேசினார் (எசாயா 53) – அது மீட்புக்காக இயேசு செய்த உயிர்த் தியாகத்தை தெளிவாக முன்னறிவிக்கிறது.
எசாயாவின் வார்த்தைகள் நம்மை மனமாற்றத்திற்கும், எதிர்நோக்கு கொள்ளவும், இறைத்திட்டத்தில் நம்பிக்கை கொள்ளவும் அழைக்கிறது. உலகிற்கு ஒளியையும் மீட்பையும் கொண்டு வரும் இயேசு கிறிஸ்துவில் மீட்பரைப் பற்றிய கடவுளின் வாக்குறுதி நிறைவேற்றப்பட்டது என்பதை அவருடைய இறைவாக்குகள் நமக்கு நினைவூட்டுகின்றன.
செபம்:
ஆண்டவரே, இயேசுவின் வருகையை சுட்டிக்காட்டிய எசாயா இறைவாக்குகளுக்காக நன்றி. எங்கள் பாவங்களை விட்டு விலகி, உமது மீட்பின் நம்பிக்கையிலும் ஒளியிலும் வாழ எங்களுக்கு உதவு புரியும். ஆமென்.